Thursday, May 11, 2006

இப்படியும் நிப்பேனே...: Buttressed Trees...!

அதிகமாக மழை பெறும் மலைப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் நல்ல நெடுக வளர்ந்தானாக நெடு நெடுன்னு நல்ல உயரமாக ஒரு 50 அல்லது 60 அடி உயரத்திற்கே கூட வளர்ந்துவிடலாம்.

இதுக்கென்ன காரணமாக இருக்கலாம், அப்படின்னு கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சுப் பார்த்தா ஒரு விசயம் டக்கின்னு உதயமானுச்சு... இது எங்க வச்சுன்னா, ஒரு முறை நாங்க கலக்காடு-முன்டந்துரையில விலங்குகள் கணக்கீட்டுக்காக போயிருந்தப்ப எங்களுக்கு உதயமானது.

Western Ghats_Rainforest

எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் வந்து செங்கல்தேரிங்கிற இடங்க. சூப்பரான லொகேஷங்க...! ஒரு நாள் சுத்தமா எடுத்துகிச்சு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து செங்கல்தேரி போயி அங்கிருந்து ட்ரெக்கிங் ட்ரெக்கிங்தான், மழைக்காடுகளிடத்தே புகுந்து. போற வழியெங்கும் புலியோட பாதச் சுவடுகள் தெளிவா கிடைக்கிற எடத்தில பிளாஸ்டோ பாரிஸ் கரைச்சு ஊத்தி அப்படியே அலக்கா பேர்த்து வைச்சுக்கணும், பின்னால கணக்குப் போட்டு எத்தனை புலிகள் அந்த காட்டுக்குள்ள இருக்கலாம் அப்படின்னு தோராயம கணக்கு போட ஏதுவா இருக்குமின்னு.

அப்படிப் போகும் போதுதான், அந்த மலைகளின் கம்பீரமும், அழகும் பிடிபட ஆரம்பித்தது. மப்பும் மந்தாரமும் 2000 அடிக்கும் மேல உயரத்தில நின்னுகிட்டு கீழே விரித்துப் போட்ட ஜமுக்காளம் போல ஏற்ற இறக்கமாக உருண்டு கிடக்கும் மலைகளின் அழக ஆயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் முழுமையாக பருகிவிட முடியாதுங்க. அவ்ளோ அழகு!

அங்குதான் நான் சொன்ன மாதிரி அந்த மரங்களின் உயரத்திற்கு லாஜிக்கலா விடை கிடைத்தது. அப்படி சரிவா பள்ளத்தாக்குகளில் இருக்க கூடிய மரங்களுக்கு விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் சூரிய ஒளி கிடைக்கிறதில்ல ஏன் அப்படின்னா, மேட்டுப் பகுதியில இருந்து சூரியன் மீண்டு உயர வரதுக்குள்ள பள்ளத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும், இல்லையா?

அப்படி இருந்தாலும் அவைகளுக்கும் சூரிய ஒளி ரொம்ப அவசியமில்லையா, அதினால அவைகளும முட்டி மோதி முதல் சூரிய ஒளியை பெறுவதற்கு எவ்வி வளர வேண்டியிருக்கு. அதுவும் ஒரு காரணம் ஏன் அந்த மாதிரி, மழைக் காடுகளில் இருக்கிற மரங்கள் ரொம்ப உயரமா இருக்கு அப்படிங்கிறத்துக்கு.

அப்படி உயரமா வளர்ந்த அந்த நெடுக வளர்ந்தவனை யாரு தரையில தாங்கி இருப்பான்னு பிடிச்சுக்கிறது, வேருகள்தானே? ஏற்கெனவே, மழைக்காடுகள் உள்ளே போயி பார்த்தோம்னா ரொம்ப அடர்த்தியா இருக்கும்; நிறைய சின்னதும் பெரிசுமா செடிகளும், மரங்களும், கொடிகளுமா...

அப்படியிருக்கையில் மழைவேற சும்மா தொண தொணன்னு பேஞ்சுகிட்டே இருக்குமா, எனவே இருக்கிற இடத்துக்குள்ள நம்ம நெடுக வளர்ந்தவனுங்க ஸ்ட்ராங்க தரைய பிடிச்சிகிட்டு, நல்ல சத்தும் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கணும். இந்த சூழ்நிலையில்தான், இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க எப்படின்னும் பார்ப்போம் இப்ப.

தரையில நல்லா ஊன்றி நிக்கறதுக்காக அதோட அடிப்பகுதியை ஒரு ராக்கெட்டெ செங்குத்தா நிக்கவைச்சா எப்படி இருக்கும், ராக்கெட் இறக்கைகள் தரையோட நல்ல அகலமா இருக்குமில்லே, அது போலவே இந்த நெடும் பசங்கள ஊன்றிப் பிடிச்சிக்கிறத்துக்காக அதே மாதிரியே நல்ல அகலமா மரத் தோட அடிப்பகுதியாகிடுது. இது மாதிரி எல்லா மரங்களும் இருப்பதில்லை, ஒரு சில ஆட்கள் மட்டுமே இந்த ட்ரிக்க பயன்படுத்துறாங்க.

இப்படி இருக்கிறதாலே நிறைய நல்ல விசயங்கள் அந்த நெடும் பசங்களுக்கு கிடைக்கிது. ஒண்ணு, நிறைய மழை பெய்யும் பொழுது மண் அரிப்புனால சாஞ்சுட மாட்டானுங்க. இரண்டு, காஞ்ச சருகு இதெல்லாம் பிடிச்சு வைசுக்கலாம், அப்படி வச்சுக்கும் போது அந்த சருகெல்லாம் மச்சு திரும்ப தனக்கே உரமா வந்திடுமில்லையா, அதான்.

என்ன ட்ரிக் பாருங்க. இந்த பசங்களுக்கு. நாமெல்லாம் நினைக்கிறோம் என்ன மரம் தானேன்னு, ஆனா, இவனுகூட யோசிச்சு தனக்கு வேணுங்கிறதை கேட்டு காலப் போக்கில வாங்கிக்கிறாங்க நம்மை போலவே. ஆனா, என்ன கொஞ்சம் சத்தமில்லாம இங்கே வேலை நடக்குது, அவ்ளோதான் வித்தியாசம்.

ஒரு மரத்த நாங்க டேப் வச்சு சுத்தி பிடிச்சோம் பாருங்க 10 மீட்டரை சாதாரணமா சுத்திக்கிச்சு தன்னைச் சுத்தி. அப்படின்னா எவ்ளோ பெரிய மரம் பாருங்க!

சரிங்க, மரத்தப் பத்தி பேசிகிட்டு இருக்கோம் இன்ன ஒண்ணும் சொல்லிப்புடறேன். ஒரு நாள் அவ்ளோ பெரிசா இருக்கேன்னு, தரையில படுத்துகிட்டு பார்த்தா எப்படி இருக்குன்னு மல்லாக்க படுத்திட்டு பார்தேங்க, ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு ஒரு மரப்பைய இன்னொரு பக்கத்தில நிக்கிற பையனோட கிளைகளோட முட்டிக்காம உரசிக்காம அழக வரைஞ்சு வச்ச மாதிரி ஒரு இரண்டு அடி இடம் விட்டு கிளை பரப்பி நிக்கிதுங்க (நான் சொல்றது மர நுனியைப் பத்தி - Canopy).

அவ்ளோ அண்டர்ஸ்டண்டிங் ஒருத்தருக்கொருத்தர். ஆச்சர்யம் தானே!? ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?

Tuesday, May 09, 2006

அபூர்வக் காதல் : சிம்பயோசிஸ்(Symbiosis)

நம் உலகில் நமக்குத் தெரிந்தோ அல்லது சினிமாவிலோ பார்த்திருக்கலாம்; ஒடிப் பஸ்ஸில் ஏறிய லாவகத்தைக் கண்டதும் காதல், தலைக் கேசத்தைக் கோதிவிடும் அழகில் மயங்கிக் காதல், அப்புறம் பார்க்காம காதல், தொலை பேசியிலேயே காதல், ஒரு பார்வைப் பார்த்துட்டா காதல், அட ஏங்க காய்கறி கடையிலே நீங்க வெண்டைக்கா உடைச்சு வாங்கிறதப் பார்த்துட்டு உங்க மேல காதல் வந்ததாகக் கூட காதல் பண்ண வைச்சு மக்கள வியர்வை சிந்த படமும் பார்க்க வைச்சாச்சு.

ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப் போற காதல், "எதையும் தாண்டிப் புனிதமாக," காலங்களையும் பரிணாமச் சுழற்சியையும் தாங்கி, எந்த வேதிப் பொருளுமோ அல்லது இனக் கவர்ச்சியின்பால் உந்தப்பட்டோ இயற்கை இவர்களுக்கிடையில் அந்த காதலைப் பற்ற வைக்காமல், பற்ற வைத்திருக்கிறது. அது எப்படி இனக் கவர்ச்சி இல்லாத காதல், வாங்க எந்த மாதிரி அபூர்வக் காதலா அது இருக்க முடியும் அப்படிங்கிறதா பார்த்துடுவோம்.

இயற்கையில் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நம்மால் பார்த்த, தெளிந்த, இன்னும் நமது சிந்தனை ஓட்டத்தில் இருக்கக் கூடிய விசயங்களை மட்டுமே நாம் கிரகித்து அதனை வார்த்தைகளின் மூலம் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், நமக்கு நமது சிறு மூளைக்கு எட்டாத கோணங்களில் இயற்கை இன்னும் எத்தனையோ விசயங்களை கொட்டி வைத்திருக்கிறது.

எல்லமே இங்குதான், நம்மைச் சுற்றிதான் இருக்கிறது. எப்பொழுது ஒரு தனி மனித சிந்தனை அவ்வாறு சிதறிச் தெரித்துள்ள விசயங்களை உராய்விச் சொல்கிறதோ, அங்குதான் பிறக்கிறது ஒரு புதிய கண்டுபிடிப்போ, கோட்பாடோ, அல்லது ஒரு சிக்கலான விசயத்திற்கு தீர்வோ.

எது எப்படியோ, நாமும் எதனையும் புதிதாக கண்டுபிடித்து விடுவது கிடையாது. வெளிக் கொணர்கிறோம் விசயங்கள் முன்பே இங்கு இருப்பதை நமது விழிப்புணர்வின் மூலமாக. அவ்வளவே!

அடடா, சொல்ல வந்த விசயத்தை விட்டுட்டு சுரையில ஆராய ஆரம்பிச்சுட்டனே! அப்படின்னு இன்னேரம் யோசிக்க ஆரம்பிச்சியிருப்பீங்க. சரிங்க, நாம பேசப் போற விசயம் "இயற்கையா எப்படி இரு வேறு வகை உயிரினங்கள் ஒருத்தருக்கு ஒருத்தரு நகமும் சதையுமா, பிண்ணிப் பிணைந்து இருக்கிறாங்க" அப்படிங்கிற விசயம்தான்.

இத பரிணாம உயிரியியல்ல சிம்பயோசிஸ் (Symbiosis) அப்படின்னு சொல்றோம். இப்ப இது இயற்கையில எப்படி நடந்தேறுது அப்படிங்கிறதெ நமக்கு வெளியில (நமக்குள்ளேயும் தான்) பார்க்கிற மாதிரி நடக்கிற விசயங்களை கொண்டு புரிஞ்சுக்குவோம்.

ஆஃப்பிரிக்காவில நமக்கெல்லாம் தெரிஞ்ச வரிக்குதிரை, காண்டாமிருகம், அப்புறம் ஒரு வகை எருமை மாடுங்க இவங்களுக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரா ஆக்ஸ்பெக்கர்-ங்கிற (எருமைக் கொத்தி - நம்மூர் மைனா மாதிரி) பறவை அவங்க மேல உட்காத்துக்கிட்டு ஓசிச் சவாரி பண்ணிக்கிட்டே, அந்த விலங்குகள் மேல இருக்கிற உண்ணி, அட்டை மற்றும் ஏனைய ஒண்டுண்ணிகளெ கொத்தி சுத்தம் செய்து விடுகிறது.

அப்படி பண்ணும் போது நல்லா கவனிச்சுப் பார்த்தா ரெண்டு பேருமே ரொம்ப நெருங்கிய சொந்தக் காரங்க மாதிரி தோணல? ஆக்ஸ்பெக்கருக்கு வயிறும் நிரம்புது, விலங்குகளுக்கு க்ளீன் உடம்பும் கிடைச்சுது.

அது போலவே நைல் முதலையும் எஷிப்தியன் ப்ளொவெர் பறவையும் இவ்வுறவில பிணைந்து வாழ்றாங்க; அப் பறவை முதலையின் பல் ஈரலை சுத்தம் செய்கிறது மாமிச துண்டுகளை அகற்றி உண்ணுவதன் மூலம்... அங்கும் இருவருமே வின்னர்ஸ்.

நம்ம ஊருலும் பார்த்திருக்கலாம் கால்நடைங்க மேஞ்சுகிட்டு இருக்கும் போது கரைச்சான் குருவி (Drango), அப்புறம் மைனா எல்லாம் அதே மாதிரி செய்வதனை.

இப்ப பெரிச விட்டுட்டு இன்னும் கொஞ்சம் சிறிய உலகத்துக்குள்ள போவோம். இது வண்டுகளும், வவ்வால்களும் பண்ற பூக் காதல் பூக்களிடத்தே. எப்படின்னா, வண்டுகள் உடம்புல நிறைய சின்னச் சின்னதா முடிகள் இருக்கு அதே மாதிரிதான் வவ்வால் மூக்குலயும் (அட மூஞ்சிதாங்க) இருக்கு. இவங்கெல்லாம், பூக்கள்ல அமர்ந்து ச்சூஸ் (தேனு) குடிக்கும் போது நாம பீச்சில ஈரத்தோட படுத்து உருண்டா மண்ணு உடம்பு முழுக்க ஒட்டிக்கிட்டு வரமாதிரி, அதுங்களோட உடம்புல இருக்கிற முடில அந்த பூக்கள்ல இருக்கிற மகரந்தத் தூள் ஒட்டிக்கிது.

அந்த தூளோட நம்மவர்கள் அடுத்த பூவுக்கு விஜயம் பண்ணும் போது அங்க இருக்கிறவங்க எடுத்துக்குவாங்க. அதனை நாம "மகரந்தச் சேர்க்கை" அப்படிங்கிறோம். பாத்தீங்களா ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தரு அண்ணன் தம்பியா (எங்க இப்ப இருக்கிறாங்க அப்படிங்கிறீங்கா...எல்லாம் ஒரு பேச்சுக்குத் தாங்க) இருந்து உதவி பண்ணிகிறாங்க.

இப்போ இன்னும் சிறிய உலகம் ஏன் வெளியயெல்லாம் போய் தேடிக்கிட்டு நமக்குள்ளேயே ஒரு சிம்பயோசிஸ் உலகம் இயங்கிட்டு இருக்குது... எப்படிடான்னு பயந்துட்டீங்களா?

நம்மோட சிறு குடல்ல ஒரு வகை பாக்டீரிய இருக்குங்க, அதுங்க நாம் ஏன் எதுக்குன்னு கேள்வி கேப்பாடு இல்லாம நிறைய சாப்பிட்டோமின்னு வைச்சுக்கோங்க அந்த மிச்சம் செரிக்காத உணவை இவங்கதான் டைசினா-ஆ இருந்து உதவி பண்ணி அடுத்த வேளை ரவுண்ட்க்கு நம்மை ரெடி பண்ணுதுங்க. இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு அன்னியமா இருந்தாலும் இது நம் கூடவே இருந்து கடைசி வரைக்கும் நம்கூடவே வருது (ஓண்ணும் உடம்பு ரிஜெக்ட் பண்ணிடறடதில்லை இவைகளை).

இந்த பாக்டீரியா மட்டுமில்லை நான் மெக்டெனால்ஸ்-அ சாப்பிடற வேகத்துக்கு நிரந்தரமா ஹாஸ்பிடல்லதான் இருக்கணும்.

சரி வந்துட்டீங்க இவ்வளவு தூரம் பொறுமையாவும் படிச்சு வைச்சுட்டீங்க, அப்படியே சொல்லிட்டு போங்க பயனுள்ளதா இருந்துச்சான்னு...

Saturday, May 06, 2006

பிள்ளையார சந்திச்சப்போ: யானை விரட்டு..!

இது ஒரு சுவாரசியமான உண்மைக் கதைங்க! உண்மையிலேயே காட்டுக்குள்ள ஒரு ஒத்தக் கொம்பு ஆண் யானையை நேருக்கு நேரா பார்த்த அனுபவத்தை உங்ககூட இன்னிக்கு பிச்சிக்கப் போறேன்.

அன்னிக்குன்னு என்னைக்குமில்லாமல் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்துருச்சு எப்பொழுதும் போல குளிக்காம ஒரு காக்கி கலரு அழுதுவடியர மேல் சட்டையும், லைட் பச்சை கலரு பேண்ட்ஸ்ம் போட்டுகிட்டு என் ட்ராக்கர்-வோட எப்பொழுதும் மாடு (அதான் காட்டெருமை) மேய்க்கிற எடத்துக்கு போறதா கிளம்பிக்கிட்டு இருந்தோம்.

அன்னைக்குன்னு எனது சக ஆராய்ச்சி நண்பனும், நானும் உன் கூட வரேன்டா அப்படின்னு என்னோட சேர்ந்துகிட்டான். மூணு பேருமா சேர்ந்து நடக்க ஆரம்பிச்சோம். போற வழி நெடுக முடிஞ்ச அளவுக்கு புதுசா ஏதாவது பறவைங்க கண்ணுல காதுல தட்டுப் படுதான்னும் பார்த்துக்கிட்டெதான்.

அது ஒரு மாதிரியான சுகங்க! சொன்னா புரியாது. அனுபவிச்சு பார்த்ததான் முழு பரிமாணமும் பிடிபடும். நாங்க நோக்கி போயிகிட்டு இருக்கிற இடம் ஒரு புல் மேடுங்க அதுக்குப் பேரே 110 ஏக்கர் புல் மேடுதான்.

அங்கதான் இந்த காட்டெருமைங்க கூட்டமா வந்து மேஞ்சுகிட்டும், படுத்து ரெஸ்ட் எடுத்துகிட்டும் இருப்பானுங்க. விடியகாத்தால சீக்கிரமா அந்த எடத்துகிட்டே போயாச்சுன்னா கொஞ்சம் பேரயாவது நாம கண்டிப்பா பிடிச்சுருலாம் அங்க வச்சு.

ஏன்னா, அவனுங்க ராத்திரி நேரத்தில ஒய்வுவெடுக்க அப்படி திறந்த வெளி மைதானம இருக்கிறதத் தான் விரும்புறாங்க. ஒரு சேஃப்டிக்காக! அதான், நாங்களும் அத புரிஞ்சுகிட்டு அங்க போயி அவங்க எல்லாம் கிளம்பி இடத்த மாத்துறத்துக்குள்ள பிடிச்சுட்டா அவங்கள பின்னாலேயே வால் பிடிச்சுகிட்டு அலையலாம் பாருங்க.

இப்ப நம்ம கதைக்கு வருவோம். அன்னிக்கு ஒரு குறுக்கு வழியை (என்ன குறுக்கு வழி நேர் வழி காட்டுக்குள்ள வேண்டி கிடக்கு அப்படிங்கிறீங்க) பிடிச்சிகிட்டு லேட் ஆவுறத்துகுள்ள போயிடுவோம்மின்னு ஒரு அடர்ந்து இருக்கிற மூங்கில் தோப்புக்குள்ள புகுந்து நடக்க ஆரம்பிச்சோம்.


ஒரு 15 நிமிஷம் நடந்திருப்போம், எங்களோட ட்ராக்கர் யானை அந்த வழியா நடந்துப் போனதிற்கான சில அறிகுறிகளெ கவனிச்சுட்டாரு நல்லா துலாவிப்பார்த்துட்டு; சார், இந்த வழியா ஒரு யானை போயிருக்கிற மாதிரி தெரியுது, ஆனா, எப்பொழுதுன்னு தெரியாலயே சார் அப்படின்னு சொன்னார். இன்னும்மொரு 10 நிமிஷ நடை சடச் சடன்னு ஒரு மரக்கிளை ஒடைஞ்சுப் போன சத்தம்.

எல்லாம் அப்படியே ஒரு நிமிஷம் சொல்லி வைச்ச மாதிரி உறைஞ்சுப் போயி காத மட்டியும் தீட்ட ஆரம்பிச்சாச்சு எந்த பக்கமிருந்து சத்தம் வந்ததுச்சு அப்படின்னு பார்க்க. கொஞ்ச நேரம் அப்படியே ஒருத்தரும் பேசாம, ட்ராக்கர் சமிக்கை கொடுக்கிற வரைக்கும் பொறுத்துருந்துப்புட்டு, திரும்ப கொஞ்ச தூரம் நடந்திருப்போம்...அவ்ளோதான்.

அங்கே நிக்கிறார் நம்ம பிள்ளையாரு அப்படியே சிலையாட்டம் அலர்ட் ஆகி காதெல்லாம் விடைச்சுகிட்டு வால தூக்கிட்டு எங்கள நோக்கி உர்ர்ர்ன்னு கோபத்தோட பார்த்துகிட்டு இருக்கிறார்.

எங்களுக்கு வேற சிவ்வுன்னு அட்ரீனலின் எகிற ஆரம்பிச்சுடுச்சு. ஏன்னா, அந்த பிள்ளையாரு வேறத் தனியாளு (கூட்டத்தோட இருந்தா அவ்ளோ பயமில்ல), ஒரு 15-20 வயசுக்குள்ளதான் இருப்பாரு, இப்பவே வலது தந்தத்தோட முனைவேற ஒடைஞ் போயிருக்கு, முதல் முறையா காதல் கிறுக்கு பிடிச்சியிருக்கவும் வாய்ப்பு அதிகம். இந்த மாதிரியான நேரத்தில நம்ம பிள்ளையாருக்கு டக் டக்குன்னு கோபம் வேற வரும், சின்ன புள்ளைக்கு வர மாதிரி (அவன் சின்னப் புள்ளைதானே...).

இப்ப என்ன பண்றது, அப்படின்னு பேசாம பேசணும், உடம்ப ஆட்டி கீட்டி வைச்சு அவன உசுப்பு ஏத்த வேறக் கூடாது. நாமும் அப்படியே நிக்கிறோம் அவனும் நிக்கிறான்.

கடைசியா நம்ம ட்ராக்கர் சன்னமான குரலில், சார், கடைசியா நிக்கிற சார்... (என் நண்பந்தான் கடைசியா நின்றான்) நான் ஒரு ஆக்டு வுடப் போரேன் அவன் பயந்து ஓடினா ஓடட்டும் இல்லென்னா அப்படியே பின்னால திரும்பி ஓட ஆரம்பிச்சுடுங்க அப்படின்னு சொல்லிட்டார்.

நாங்களும் ரெடியாகிட்டோம் சூட்டுக்கு காதெல்லாம் தக தகன்னு கொதிக்குது. இப்ப நம்மாளு பயங்கரமான ஒரு சத்தத்தோட கையில வைச்சிருந்த அருவாள தூக்கிபோட்டு கத்தினாரா அவ்ளோதான் நம்ம பிள்ளையாரு அதுக்காகவே வெயிட் பண்ணிகிட்டுருந்த கணக்கா பிளிருனாரு பாருங்க ஒரு அடி முன்னே வைச்சு, நாங்க வந்த திசை திரும்பி ஓட்டமின்னா அப்படி ஒரு ஓட்டம் நம்மூரு பி.ட்டி உஷா அன்னிக்கு அப்ப எங்ககிட்ட தோத்துருப்பாரு அப்படி ஒரு ஓட்டம்.

கண்ண மூடிக்கிட்டு போனா, பின்னால வந்து யாரோ தொட்ட மாதிரி ஒரு உணர்வு எனக்கு கொஞ்சம் பயம் கழுத்த திருப்பி ஓடிக்கிட்டேதான் பார்த்தா, பிள்ளையாரு! ஒரு மூங்கில இழுத்து போட்டுருக்காரு அது வந்து சாய்ந்து அதோட நுனி நம்ம மேல பட்டிருக்கு அப்படின்னு தெரிஞ்சவுடன், அடப் போங்கப்பா அப்படின்னு இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி ஓடினா, அப்பத்தான் நாம நிஜ பிள்ளையாரு ஒரு பெரிய பள்ளத்த காமிச்சு உள்ளே பசங்களா தாவி ஓடி பிழைசுக்கங்டான்னு வழிய காமிச்சாரு.

யானை கொஞ்சம் சைஸ்ல பெரிசு இல்லையா, நல்ல சறிவான அல்லது மேட்டுப் பாங்கான இடமா இருந்தா நல்லா யோசிச்சுத்தான் கால எடுத்து வைப்பாரு சறிக்கி விட்டுடும் அப்படிங்கிற பயத்தில. ஆனா, நாம சின்ன உடம்பு பாலன்ஸ் பண்ணிகிடுவோம் அந்த மாதிரி சமயத்தில அதுவும் உயிர் பயம் வேற இல்லையா, குதிச்சுட்டோம்.

நல்ல சறுக்கான பள்ளம் நிறைய குத்துச் செடி கொடிகளோட அதில வேற ஒரு வகை முள்ளுச் செடி wait-a-bit_ன்னே பேரு கோத்து பிடிச்சு நிக்க வைக்கும், இந்த நேரத்தில நின்னு எடுத்து விடவா முடியும் நல்லா கிழிச்சு வைக்க ஓரே ஓட்டந்தான்.

பிள்ளையாரு மேல நின்னு ஒரே ஆர்ப்பாட்டம். மண்ணெ உதைச்சு தள்ளிக்கிட்டு பிளிரிகிட்டு நிக்கிறான். நாங்க ஒரு 300 அடி தூரத்தில போயி நின்னுதான் திரும்பியே பார்த்தோம். அப்பாட நல்ல வேளை கீழே இறங்க ஆயத்தப்படலே அப்படின்னு நாம நிஜ பிள்ளையாருக்கும் ஒரு நன்றிய சொல்லிப்புட்டு, வேற பக்கமா நடையைக் கட்டி, மிச்ச மிருந்த நேரத்தை பறவைங்கள பார்க்கிறதில சிலவு செஞ்சோம்.

என்ன இருந்தாலும் அன்னிக்கு நடந்ததெ எங்கள்ல யாருமே கண்டிப்பா எப்பவுமே மறக்க முடியாது இல்லீங்களா? அது ஒரு சுவையான இன்ப அதிர்ச்சி, உங்ககிட்ட பகிர்ந்துக்கிற அளவுக்கு.

Tuesday, May 02, 2006

சாப்பிடலாம் வாங்க..! : காலிஃப்ளோரி (Cauliflory)

ஹும்ம்...நான் ஒரு பலாப் பழ ரசிகன் (jack fruit-யாருப்பா இப்படி ஒரு பேர வச்சது) ! ஒரு முறை நாங்க ஒரு கோடை விடுமுறையப்ப என்ன செய்தோமுன்னு முதல்ல சீரியாச விசயத்துக்குள்ள நுழையறத்துக்குள்ள நாம டைம் ட்ராவல் பின்னோக்கி பயணிச்சு ஒரு 15 வருடங்கள், போயிட்டு வந்துருவோம், சரியா. எல்லோரும் சீட் பெல்ட் போட்டாச்சா...ரெடியா இருந்தாலும் சரி, இல்லென்னாலும் சரி...வண்டி ஆன் த மூவ்...

நாங்க ஒரு நாலு பேருங்க இரண்டு மிதி வண்டிய வாடகைக்கு எடுத்துகிட்டு எங்களோட இன்னொரு பள்ளிகூட நண்பரின் வீட்டுக்குப் போயி அவனோட சேர்ந்து அவங்க தோட்டத்துக்கு போரதா திட்டம். அங்க போனவுடன், எங்ககிட்ட இருந்த பைசாவெல்லாம் ஒண்ணா சேர்த்தோம் ஒரு 15-20 ரூபாய்க்குள் தேறிச்சு. எங்களோட நண்பரின் அப்பா அந்த பலாப் பழம் விக்கிற தொழில்தான் பண்றாருன்னு தெரியும். அதாம் நாங்க ஈ மாட்டம் அந்த நண்பருக்கிட்ட ஒட்டிகிட்டோம். நண்பரின் அப்பாவும் ஒரு அருவா, கோணிப்பை சகிதமா கூடவே வந்தாரு.

அந்த மரம் நல்ல அடர்த்தியா பச்சை பசேல்னு நிறைய கிளைகளோட அடி மரத்தில ஆரம்பிச்சு ஒவ்வொரு கிளை உடம்புலேயும் பலா... பலாதான்... நம்ம தலைவரு ஒரு ஆறு அடி ஏறி இருப்பாரு, என்னமோ ஏற்கெனவே பார்த்து வைச்சமாதிரி, ஒரு பழத்தை தட்டி பார்த்தாரு, படக்குன்னு இடுப்புல சொருகி இருந்த அருவாள எடுத்து காம்புல நங்குன்னு ஒரு போடு போட்டு, பழத்தையும் பிடிச்சுகிட்டுதான், எங்கள கூப்பிட்டாரு "பசங்களா அந்த கோணிப்பை இங்கன கொண்டு வந்து பிடிச்சுக்கங்கட" அப்படின்னார். நாங்களும் அவருக்கு நேர் கீழே நின்னுகிட்டு நம்மூருல 'கிரிக்கேட்டு' விளையாடுவாங்களே கையில பந்தை லாபகமா அடிச்சு கொடுத்தா, குட்டு கேச்சுன்னு கத்திக்கிட்டு ஓடுவாங்கள்ள அது மாதிரியே, சும்மா நாலு அடி உயரத்தில இருந்து நேரா சாக்குக்கு இறக்கின பழத்தை பிடிச்சுட்டோம்.

அப்புறம்மென்ன, அப்பா வெட்டி கொடுக்க நாங்க எல்லா நாட்டியமும் ஆடிக்கிட்டே ஒரு முழுப் பழத்தையும் திண்ணுப்புட்டு அங்கே படுத்து உருண்டு வயித்தோட சைஸ்சயும் குறைச்கிட்டு சாயந்திரமா கெளம்பி வீடு வந்தோம். ஆனா, அன்னிக்கு எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு ஏன் பலா மரம் மத்த மரங்கள் மாதிரி இலைக் காம்புகளிடத்தேயும், மற்ற சிறு கிளைகள்ளேயும் காய்க்கிறது இல்ல அப்படின்னு, பின்னாளில் நான் மலைக் காடுகளில் அலைஞ்சப்பவும், பார்த்தும், படிச்சும் தெரிஞ்சு கிட்டத உங்க கிட்டயும் பதிலா பகிர்ந்துக்க போறேன்.

கொஞ்சம் இந்த கட்டுரையோட நீளம் அதிகமாக போச்சு. நம்ம கதையைப் பத்தி சொல்லப் போக... அதுவும் ஒரு காரணமாத்தான் சொன்னென். இந்த காலத்துப் பசங்க எங்க டி.வி_யையும், கேம் மிசினையும் விட்டு கண்ணெ எடுக்கிறாய்ங்க... அவனுகளுக்காகத்தான் அது! சரி, நாம நம்ம வேலையை பார்ப்போம்.

இந்த மாதிரி மழைக் காடுகளில் நிறைய இன மர வகைகள் அடிமரத்தில பூ பூத்து, பழமிடும் பழக்கமுள்ளதாக இருக்கிறது. பை த வே, ஒரு, சிறு செய்தி, பலா மரமும் ஒரு மழைக்காட்டு மர வகைதான். ஊட்டி, கொடைக்கானல் பஸ்ல பயணிச்சுருந்தா பார்த்தீருப்பீர்களே. இந்த மாதிரி பழக்கமுள்ள முறைக்கு தாவரவியல்ல காலிஃப்ளோரி (Cauliflory) அப்படின்னு சொல்றோம். சரி, இதுனால என்ன பயன் அப்படிங்கிறது நம்மோட இரண்டாவது கேள்வி. இந்த வகை மரங்கள் சில ஆண்டுகள் பூவே பூக்காமலும் இருக்கலாம், இல்ல சுத்தமா காயே காய்க்காமலும் இருக்கலாம். அதாவது நம்ம ஊரு ஸ்டைல்ல சொல்லனுமின்னா "வச்சா குடுமி, செரைச்சா மொட்டை."

அப்படி காய்க்கிற சமயத்தில (திடீர்னு எப்பயாவது ஒரு சீசன்ல மட்டும்), இதோட இனப் பரவல் (seed dispersal) பழமுண்ணும் விலங்குகள் மூலமாத்தான் நடக்குது அப்படின்னும் ஒண்ணு இருக்கில்ல அதையும் பார்க்கணுமில்ல, அது அப்படி இருக்கும் போது, இந்த பழங்களோட காம்பு வேற ரொம்ப ஸ்ராங்கா இருக்குதா ரொம்ப உயரத்திலிருந்து நல்லா பழுத்திருந்தாலும் பொத்னு கீழேயும் விழுகாது. அப்படியே அங்கேயே இருந்து அழுகி போக வேண்டியதுதான்.

இதெல்லாம் பார்த்துபுட்டு, நம்மாளுங்க பரிணாமத்தை கைப்புடியா பிடிச்சு, யாப்பா, என் பிரட்சினை இதான், எனக்கு என் அடி மரத்திலேயே பழங்கள் எல்லாம் காய்ச்சுடற மாதிரி என்ன மாத்திக்க போறேன், ஏன்னா அப்ப தான் சும்மா கால்நடையா நடந்து போற மானு, யானை மாதிரி மத்த ஜீவாராசிகளுக்கும் நான் பிரயோசனமா இருந்து என் வம்சத்தையும் பெருக்கிக்க முடியும் கொஞ்சம் பார்த்து உதவி செய்யப்பான்னு அதுக்கின்னு ஒரு சிறப்பான தகவமைப்பை வாங்கித் தக்க வச்சுகிட்டு, பொழப்ப மத்த தாவரங்கள்லேருந்து வித்தியாசமா அமைச்சுகிட்டு நீடுழி காலமா நம்மளோடவே கூடவே வாழ்ந்துகிட்டு வருதுக.

நல்ல இருந்துச்சா இல்லையான்னு சொல்லிபுட்டு போங்க...இல்லைன்னா வேறு ஏதாவது ஒரு ஊரு "காதலி தப்பி" ஓடிய கதையை பத்தி கதைப்போம்...

Monday, May 01, 2006

காதலிக்க நேரமில்லை...! : Great Indian Pied Hornbill

அடடா, இப்படி ஒரு தலைப்ப நான் தேர்வு செய்றதுக்குள்ள மண்டையிலிருந்த அந்த நாலு முடியும் கையோட வந்திருச்சுங்க... சரி வாங்க இப்படியே நடந்துகிட்டே பேசுவோம். நம்ம இருவாட்சிப் பறவை பற்றி (சரியான தமிழ் பேருதானன்னு ஞாபகமில்ல, இருந்தாலும் இந்தாங்க சரியான ஆங்கிலப் பேரு Great Indian Pied Hornbill - Buceros bicornis) . இந்த தேவதைங்களை காட்டுக்குள்ள நான் பார்த்து அதிசியத்து போனதுக்கு அப்புறமாத்தான், பறவைகளை பார்க்கிறது மேலேயே எனக்கு ஒரு அலாதி பிரியம் வந்துச்சு அப்படின்னா பார்த்துக்கோங்க இந்த ஆட்களின் ஆழகும் அதன் வாழ்வு முறையும்.

நான் ஒரு முறை காட்டுக்குள்ள காட்டெருமையை (Indian Bison) எப்பொழுதும் வாடிக்கையா பார்க்கிற எடத்தில வைச்சு பார்க்கிறத்துக்காக வேகமா ஒரு முதுகுப் பையும், ஒரு பைனாகுலரு சகிதமா அந்த எருமை பசங்க அந்த எடத்து விட்டு கிளம்பி போரத்துக்கு முன்னாலேயே பிடிக்கிறதுக்காக ஓட்டமும் நடையுமா போயிகிட்டு இருந்தேங்க (என்னது எதுக்கா... எல்லாம் காட்டெருமை மேய்க்கத்தான்) அப்ப சும்மா தலைக்கு மேல ஒரு சின்ன சைஸ் 'ஹெலிகாப்டர்' ஒண்ணு சொய்ங்.. சொய்ங்.. சத்தத்தோட பறக்கிர மாதிரி ஒரு மிரள வைக்கிற சத்தம்.

என்னடான்னு கொஞ்சம் நேரம் அங்கன நின்னு மேலே பாராக்கு பார்த்துகிட்டே இருந்தா ஒரு பெரிய்ய்ய நம்ம பருந்து சைஸ்விட இன்ன்ன்ன்னும் பெரிசா ஒரு பறவை சத்தம்மின்னா அப்படி ஒரு சத்தம் அது இறக்கையை மேலே கீழே இறக்கி அடிக்கும் போதே. அப்ப, டாப் சிலிப்ல (Top Slip) வைச்சு பிடிச்சது தாங்க இயற்கையில வச்சு பறவை பாக்கிற பைத்தியம் அது இன்னமும் தொடருது. நம்ம வீட்டு குட்டி பசங்கள எல்லாம் எப்பயாவது ஒரு ஞாயித்து கிழமை தெரு காட்டுப் பக்கமா டி.வி பெட்டிகிட்ட விடாம கூட்டிடு போயி முயற்சி பண்ணுங்களேன், கண்டிப்பா அவங்களுக்கு பிடிச்சுருக்கும், இந்தக் ஹாபி!

சரி விசயத்துக்கு போவோம். அந்த படத்த பார்த்தா தெரிஞ்சுருக்குமே அதோட அலகு ரெண்டு அடுக்கா ரொம்ம்ப நீளளளளமா இருக்கும். ரொம்ப ஈசியா கண்டுபிடிச்சுடுலாம் இதனை. சுமாருக்கு ஒரு மூன்று அடி நீளமும் மூன்று கிலோ கறியோட முழுக்க முழுக்க கருமையும் பழுப்பு நிற உடம்போட இருப்பானுங்க. ஆனா, கழுத்து மட்டும் வெள்ளை. என்ன பையன் தலைப்ப விட்டுட்டு கதை ஏதோ வுட்டுட்டு இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ரொம்ப முக்கியமான பாடம் நமக்கெல்லாம் இவரு காட்டுகுள்ள இருந்துகிட்டு கத்துகொடுத்துட்டு இருக்கார். வாழ்கையையில ஒரு நல்ல புருஷன் பொஞ்சாதியா நல்ல அப்பாவா எப்படி வாழ்றதுன்னு.

சரிங்க இப்ப நேரடியா விசயத்துக்குள்ள போயிடுவோம். நீங்க அடப் போங்கப்பான்னு பறந்து போரத்துக்குள்ள. இவங்க குடும்ப வாழ்க்கைதாங்க ரொம்ப அழகும் ஆச்சர்யமும் கொண்டது. பொண்டாட்டிகிட்ட கொஞ்சி முடிச்சுபுட்டு, இருக்கிறதிலேயே, பெரிய செத்துப் போன மரமா, ஆனா, இன்னமும் நிக்கிற மரமா, இல்லேன்னா அதே சைஸ் உயிரோட இருக்கிற மரமா இருந்தாலும், ஒகே, ஆனா, அதில ஒரு பொந்தும் இருக்கணும். ரொம்ப பிக்கிதானே! அதுவும் இப்ப இருக்கிற மழைக் காடுங்கள்ள இப்படி துலாவித் துலாவி தேடினா, கிடைக்குமா?

சரி அப்படி ஒரு வீடு கெடைச்ச வுடனேயே கணவரு அவரு பார்ட்னர வீட்டுகுள்ள வைச்சு அட முட்டைங்கலோடதான் வைச்சுப்புட்டு, பறந்து தரைக்குப் போயிப் போயி கிடைக்கிற மண்ணு தெருப்புழுதியெல்லாம் முழுங்கனமாதிரி முழுங்கி, வீட்டு வாசல்ட்ட வந்து எல்லாத்தையும் எச்சியோட கக்கி வாசல கொத்தனார்கணக்கா ஒத்த ஆள தன் மூக்கு மட்டும் உள்ள போர அளவுக்கு விட்டுட்டு நல்ல சீல் பண்ணீடுவாரு.

சரி, கணவனோட வேளை இதொட முடிஞ்சு போச்சான்னா இல்ல, அதுக்கப்பரம்தான், கண்ணும் கருத்துமா, டாஸ்மார்க் பக்கமெல்லாம் போகாம, "தங்கமணி" ஊருக்கு போயிட்டா அப்படின்னு நடிகர் ஜனகராஜ் ஒரு படத்தில தன் பொண்டாட்டி ஊருக்கு பஸ் ஏறுனவுடன் கத்துற மாதிரியெல்லாம் கத்தி உற்சாகம்கொள்ளாம, ஒரு 6-8 வாரம், ரொம்ப பொறுப்பா மழைக் காட்டுக்குள்ள ஆலமரம் மாதிரி (ஆல மர வகைதான்) பழங்கள் இருக்கிற மரமா தேடி அப்படி கண்டுபிடிச்ச மரத்திலருந்து ஒரே நேரத்தில எவ்ளோ பழங்கள் முழுங்கி வைக்க முடியுமோ அவ்ளொத முழுங்கிட்டு, நேரா சைஸடுல கியிடுல டாவடிக்கமா அடுத்து வீடுதான். வீட்டுக்கு வந்து பொண்டாடிக்கும் தனது பிள்ளைங்களுக்கும் முழுங்கி வைச்ச ஆலத்தை வெளியில எடுத்திட்டு வந்து ஒவ்வொண்ணாக தன் அலக உள்ளே நுழைச்சு சாப்பிட கொடுத்து அழகு பார்ப்பாரு.

உங்களுக்கு தெரியுமா, ஒரு தடவை இவனுகளோட வீட்டை கண்டுபிடிச்சுட்டோம். ஆனா, அங்கிருந்து பக்கத்தில இருக்கிற ஆல மரத்தினுடைய தூரம் 12 கிலோ மீட்டர், எங்களுக்கு அரை நாள் எடுத்துகிச்சு அந்த மரத்துகிட்டப் போயி சேர. இப்படி தினமும் நம்ம காவிய அப்பா நீண்ட தூரம் அலைஞ்சு அலைஞ்சு, அம்மா, பிள்ளைகளோட வெளியே எட்டிபார்க்க ஆரம்பிக்கையில, அப்பா உயிரோட இருந்தா பிள்ளைங்க வெளியே வந்து 'தாங்யூ டாடி" அப்படின்னு சொல்ல வாய்ப்பிருக்கும். இல்லைன்னா 'ச்சே' அப்படின்னு ஏமாத்தமா போயிடும். சில நேரத்தில அப்படித்தானாம், கடுமையான உழைப்பு இல்லையா, மண்டைய போட்டுடுமாம்!

இந்த காவியக் காதலுக்கும் பரிணாம சேட்டைகளுக்கும் நாமதான் வைக்கிறோம் ஆப்பு (கேள்விபட்ட வார்தையா இருக்கேன்னு பார்க்கிறீங்களா)? எப்படின்னா, அந்த மாதிரி எந்த ஒரு மரமும் அவ்ளோ பெரிய சைஸா வார வரைக்கும் நாம காட்டுக்குள்ள விட்டுவைப்தில்லையே. பச்ச மரமா இருந்தாலும் சரி, செத்துப் போன மரமா இருந்தாலும் சரி, கட்டிலு, பீரோன்னு செய்ய அறுத்து கொண்டு போயிடுறது.

அது அப்படி இருக்கையில, நம்ம பசங்களோ ரொம்ப பிக்கின்னு சொல்லிருந்தேன் வீடு பார்க்கிறதில, இல்லையா? அப்ப என்னாகும், வீடு கிடைக்காம கண்ட எடத்திலயும் வீடு புடிச்சி மத்த பறவைகளுக்கும் சிறு பாலூட்டிகளுக்கும் முட்டையை பலி கொடுத்துப் புட்டு இவனுங்க இனம் ரொம்ம்ம்ம்ம்ப்பா வேகமா காணாம போயிகிட்டு இருக்குது, நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைகளில். மழைக் காடுகள் ரொம்ப முக்கியம்ங்க நமக்கும் அவனுகளுக்கும், ஏன் இந்த பூமிக்கே!

சரி தள்ளிக்கங்க நான் இலவச டி.வி வாங்கப் போகணும்.

நேசி, கொல்லாமல் கொன்னுப்புட்டைய்யா...அப்படின்னு யாருங்க அங்கன சொன்னது...
Related Posts with Thumbnails