Thursday, December 14, 2006

125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா?

பறக்கும் அணிலப் பத்தி ஒரு கட்டுரை எழுதணுமின்னு ரொம்ப நாட்களாக திட்டமிட்டிருந்தேன். ஆனா, பாருங்க, 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பே ஒரு பறக்கும் பாலூட்டி இருந்ததாக வந்த ஒரு செய்தியைப் படித்தவுடன் முதலில் ஒரு அறிமுகம் கொடுத்த மாதிரியா இருந்துட்டுப் போகட்டுமின்னு நம்ம அனுபவத்தைப் பத்தி பகிர்ந்துக்கிறதுக்கு முன்னாடி நான் படிச்ச கட்டுரை என்ன சொல்லுதுன்னு படிச்சிடலாம்.

நம்ம தென் இந்தியக் காடுகளில் இரண்டு விதமான பறக்கும் அணில்கள் இருக்கிறது. பெரிய பழுப்பு மற்றும் திருவாங்கூர் பறக்கும் அணில்கள் (Large Brown Flying Squirrel and Travancore Flying Squirrel). இதில இந்த பெரிய பறக்கும் அணிலை கொஞ்சம் சிரமம் பார்க்காம இரவு நேரங்களில் வனத்துனுள் அலைந்தால் எப்படியாவது பார்த்து விடலாம்.

சரி இவைகள் பறக்கின்றனவா என்று கேட்டால், இல்லை. இவைகள் பறப்பது கிடையாது ஒரு பெரிய மரத்திலிருந்து அதனை விட தனிவாக சற்றே உயரம் தாழ்ந்த மரத்திற்கு மிதந்து (gliding) செல்கிறது. பின்னங்காலிருந்து முன்னங்கால்களுடன் இணைக்கும் ஒரு சவ்வு போன்ற முடியுடன் கூடிய அமைப்பை பெற்றிருக்கிறது, அதற்கு patagium என்று பெயர். இதனைக் கொண்டு தனது வாலையும் ஒரு துடுப்பை போல செயலாற்ற வைத்து செல்லும் திசையை மாற்றி அமைக்க பயன் படுத்தி மிதந்து வருகிறது.

சரி அப்படி மிதந்து சென்று வருவதால் என்ன பயன் என்றால், அதிக தூரத்தை தனது எதிரிகளின் கைகளுக்கு அகப்படாமல் சென்று உணவு தேட முடிகிறது, தனது இனப் பெருக்க நேரத்தில் தனது நெருங்கிய சொந்தத்திக்குள்ளேயே இனப் பெருக்கம் (inbreeding) செய்யாமல் (மொத்தத்தில நம்ம மாதிரி இல்லாம), தன்னின மரபணுத்தன்மை விரித்துக் கொள்ள முடிகிறது.

இப்பொழுது செய்திக்குள் போவோம். நானும் நேற்றைய வரைக்கும் நமது பாலூட்டி இனமே தோன்றியது நமது மூஞ்சூரு (Shrew) வகை பூச்சியுண்ணிகளிடமிருந்துதான் என்று நம்பி வந்தேன். ஆனால், இப்பொழுது சைனாவில் விவசாயிகளால் கண்டெடுக்கப் பட்ட இந்த பறக்கும் (மிதக்கும்) பாலூட்டி ஜீவராசியைப் பற்றி அறிந்து கொண்டவுடன், இப்ப பழைய மூஞ்சூரு கோட்பாடு கேள்விக் குறியாக ஆகிப் போச்சு. இருந்தாலும் இப்ப கண்டெடுக்கப்பட்டுருக்கிற பாலூட்டி நவீன பறக்கும் அணிலுடன் கொஞ்சம் கூட ஒப்புமை இல்லையாம்.

இதுகள் டைனோசார்கள் இருந்த மீசோசோயிக் காலத்திலயே கடை பரப்ப ஆரம்பித்திருக்கின்றார்களாம். இதனை கண்டெடுத்த நாளில் இருந்தே, ஆராய்சியாளார்கள் பச்சத் தண்ணி பல்லுள படாம இந்த ஜந்துவை ஒரு தனி வரிசை பாலூட்டிகளின் இனத்தில் சேர்க்காமல் விடமாட்டோமின்னு விரதமிருக்கிறதா கேள்வி ;-)

பாருங்க, பாலூட்டிகளிலேயே நமக்கு தெரிஞ்சு ஒர் 51 மில்லியன் வருஷத்திற்கு முன்பு தான் முதல் பறக்கும் ஜீவராசி இருந்ததா தெரிஞ்சுக்கிட்டு இருந்தோம், இப்ப இவரு அந்த ரிகார்டை உடைச்சுட்டார்.

டைனோசார் இருந்த அதாவது ஊர்வன (Reptiles) காலத்தில மெதுவா வானத்தில எட்டி குதிக்கிற ஆசை வந்து முதல் ஊர்வன-பறப்பன இணைப்பாக இருந்தவர் ஆர்க்கியோப்டெரெக்ஸ் (Archaeopteryx) அப்படிங்கிறவர்தான், 145 மில்லியன் வருஷத்துக்கு முன்னே. இவர்தான் பறவைகளுக்கே பறக்கிறதுக்கு முன்னோடின்னு சொல்லலாம்.

இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இவரும் பறக்கல, மிதந்து செல்லும் வேலையைத்தான் செய்திருக்கிறார். இப்ப இருக்கிற பறவைகளின் இறக்கையைப் போல மேலே கீழேன்னு அடிச்சு பறக்க முடியாது இந்த முன்னோடி தாத்தாவுக்கு.

எனது அடுத்தப் பதிவில நம்மூரு பறக்கும் அணில்களை எப்படி மழைக்காடுகளில் பார்க்க முடியுங்கிறதெ ஒரு தனிப் பதிவா போட்டு நம்ம அனுபவத்தை உங்க கிட்ட பகிர்ந்துக்குவோம். அது வரைக்கும் இதப் படிச்சிட்டு மனசில வைச்சுக்கோங்க, சரியா.


பி.கு: இங்கு இந்த ஆர்க்கியோப்டெரெக்ஸ் பற்றி பேசியதால் கொஞ்சம் குழப்பமாக இருப்பதை போல தோணலாம். அப்படி, ஆர்க்கியைப் பற்றி இங்கு பேசியதற்குக் காரணம், டைனோசார்களின் சம காலத்தில் வாழ்ந்து வந்த பாலூட்டிகளில் எந்த விதமான பறக்கும் பாலூட்டிகள் இது வரையிலும் இருந்ததாக அறியப் படாமல் இருந்து வந்தது. இந்த கண்டெடுப்பின் மூலமாக அது அப்படியல்ல என்று தெரிய வருகிறது.

மேலும் இந்த கண்டெடுக்கப்பட்ட ஜீவராசி பாலூட்டியாக இருந்தாலும், இன்றைய சமகால உயிரினத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பதால் தனி வரிசைக் கிரமத்தில் ஒரு இனமாக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே பெயரும் இடப்படவில்லை.

Related Posts with Thumbnails