அன்பு நண்பர்களே, திரு ரெ. கார்திகேசு *அந்திம காலத்தின்* கதையாசிரியர் மேலும் இங்கு சில விபரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அத்துடன் ஒரு கேள்வியையும் நம் முன்னால் வைத்திருக்கிறார். அந்த கடிதம் ஒரு பின்னூட்டமாக வந்திருப்பதால் நம்மில் நிறைய பேர் அதனை தவற விட்டுவிடலாம், அதனால்தான் இந்த பதிவினை இங்கு தனியாக இடுகிறேன்.
அவரின் கடிதம் இதோ:
ரெ.கா. said...
அன்புள்ள பிரபாகர்,
இதுவரை நான் எழுதியுள்ள நூல்கள்: நாவல்கள்: வானத்து வேலிகள்" (1981); தேடியிருக்கும் தருணங்கள் (1993);அந்திம காலம் (1998); காதலினால் அல்ல(1999); "சூதாட்டம் ஆடும் காலம்" (2006)
சிறுகதைத் தொகுப்புகள்: புதிய தொடக்கங்கள் (1974); மனசுக்குள் (1995); இன்னொரு தடவை (2001); ஊசி இலை மரம்(2003)
கட்டுரைத் தொகுப்பு: "விமர்சன முகம்" (2004)
பெரும்பாலான நூல்கள் சென்னை மித்ர பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்டவை.
Thiru S. Ponudurai (ESPO)
Mithra Publications
375/8-10 Arcot Road
Chennai 600024
India.
Tel: 00-91-44-23723182 or 24735314
Fax: 33733160
இவற்றுள் "அந்திம காலம்" என மனதுக்கு அணுக்கமானது. ஆனால் அது விரிவான வாசக கவனிப்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மலேசியாவில் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு "தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது. மலாயாப் பல்கலைக் கழகத் திறனாய்வாளர்கள் அது பற்றி எழுதியிருக்கிறார்கள்.
Gabriella Eichinger Ferro-Luzzi என்பவர் (பெண்) ஒரு இத்தாலியத் தமிழ் ஆய்வாளர். லா.ச.ரா.விடம் நெருக்கமாக இருந்து அவர் கதைகள் பற்றி இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுதிப் பதிப்பித்துள்ளார். இவர் என்னைப் பற்றிக் கேள்விப் பட்டு என்னிடம் தொடர்பு கொண்டு என் நூல்களை அஞ்சல் மூலம் பெற்றார். பின்னர் ஒரு முறை (நான்காண்டுகளுக்கு முன்) என்னைக் காண மலேசியா வந்தார். நாங்கள் சந்தித்த போது அழகிய எழுத்துத் தமிழில் பேசினார். என்னை ஆங்கிலம் பேச விடவே இல்லை.
எனக்கு அன்பளிப்பாக ஒரு படப் போஸ்கார்டைக் கொடுத்தார். ரோமில் உள்ள மைக்கல் ஏஞ்சலோவின் Creation என்னும் கூரை ஓவியத்தின் படம் அது. எங்கும் கிடைக்கும். யூரோ 50 காசுக்கு வாங்கலாம். ரொம்ப சாதாரணமான பரிசு எனினும் மரியாதையுடன் வாங்கி வைத்துக் கொண்டேன். சந்திப்பின் முடிவில் சொன்னார்: "இந்தப் பரிசு நான் உங்கள் அந்திம காலத்தைப் படித்ததன் நினைவாக!"
எனக்கு இது புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. புரிந்தவுடன் இது எவ்வளவு அர்த்தச் செழுமையுள்ள பரிசு என்றும் புரிந்தது.
நாவலைப் படித்துள்ள உங்களில் யாருக்காவது இது புரிந்தால் சொல்லுங்கள். யாரும் சொல்லவில்லை என்றால் நானே பிறகு சொல்லுகிறேன்.
அந்த வருகையின் போது கேப்ரியெல்லா மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் பகுதியில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு தமிழிலேயே ஒரு செமினார் நடத்தினார். "நவீனத் தமிழ் இலக்கியத்தில் மரணம்" என்பது அதன் தலைப்பு. அதில் "அந்திம காலம்" பற்றியும் பேசினார்.
இறுதியாக ஓராண்டுக்கு முன்னர் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் (அவர் மின்னஞ்சல் வைத்துக் கொள்ளவில்லை) தனக்கும் இரத்தப் புற்றுநோய் கண்டிருப்பதாகவும் சுந்தரத்தைப் போல் தமக்கு அவ்வளவு துயரங்கள் ஏற்படக் கூடாது என வேண்டிக் கொள்வதாகவும் எழுதியிருந்தார். அதன் பின் தொடர்பு விட்டுப் போயிற்று.
Gabriella Eichinger Ferro-Luzziயின் எழுத்துக்கள் (அல்லது reference) இணையத்தில் அகப்படும்.
ரெ,கா
Thursday, November 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இங்கு வரும் பின்னூட்டங்களை, வெட்டி எனது தெக்கிக்காட்டானின் *அந்திம காலம்* பதிவிலும் வெளியிடுவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!
நேசி,
திரு.ரெ.கார்த்திகேசு அவர்களின் கடிதத்தை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
நிச்சயம் பல பேரு உதவியாக இருக்கும்
மிக்க நன்றி
எஸ்பொ! ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவர் "நனவிடை தோய்தல்" ஓர் அருமையான படைப்பு; ஈழத்தவர்கள் அனுபவித்து வாசிக்கலாம். காரணம் அவர் குறிப்பிடும் விடயங்கள் நாம் கண்ட,கேட்டவை.
விபரத்துக்கு நன்றி!!
யோகன் பாரிஸ்
சிவா,
நிச்சயமாக அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
ஊக்கங்களுக்கு நன்றி, சிவா!!
எஸ்பொ! ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவர் "நனவிடை தோய்தல்" ஓர் அருமையான படைப்பு; ஈழத்தவர்கள் அனுபவித்து வாசிக்கலாம். காரணம் அவர் குறிப்பிடும் விடயங்கள் நாம் கண்ட,கேட்டவை.
விபரத்துக்கு நன்றி!!
யோகன் பாரிஸ் //
யோகன், தகவல்களுக்கும், வருகைக்கும் நன்றி! அது போன்ற ஈழத்துப் படைப்புகள் தமிழகத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. எஸ்பொ! கேள்வி பட்டதே இல்லை :-(
நேசி, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஆரம்பிக்கிறேன். நானும் அந்திமக்காலம் படித்துவிட்டு,
யார் என்ன என்றெல்லாம் தெரியாமல், யோசிக்காமல் அந்த எழுத்து தந்த தாக்கத்தில் ரெ.காவிற்கு
மெயில் போட்டேன். அவரும் திரு. ராமசந்திரன் என்று அழைத்து பதில் போட்டார். இது நடந்து மூன்று வருடம் இருக்கும்.
கதையில் அவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை. இன்னொரு முறை ஆரம்பித்தால் நினைவு
வரலாம். ஒரு கதையோ அல்லது சிறுகதையோ கவிதையோ மிக பிடித்துப் போக காரணம்
ஒன்றே தான். எங்காவது நம்மை நாம் சந்திப்போம்.
இக்கதையில் வருவதுப் போல என் மகனுக்கு மூன்று வயதில்
லுகேமியா என்று சந்தேகப்பட்டபொழுது நான் பட்ட வேதனையா அல்லது கடவுளை குறித்து
அவரின் அலசல் ஏறக்குறைய என்னுடையதுதான். நம்பிக்கை வரவில்லை அவ்வளவுதான். பலமுறை
கஷ்டம் வந்தப்பொழுது தூக்கம் வராமல் புரளும்பொழுது யாருபா கட்வுள், கொஞ்சம் வந்து என்னை காப்பற்ற கூடாது என்று புலம்பிவிட்டு நானே சிரித்துக் கொள்ளுவேன்.
கதையில் எனக்கு மிக பிடித்த அம்சம், சோகத்தையும், துக்கத்தையும் வெளிப்படுத்தும்பொழுது
ஒரு செய்தி சொல்லும் உத்திதான் இருக்குமே தவிர, வலிய நம்மை அழ வைக்கும் எழுத்து
இல்லை. எப்படி நகைச்சுவை எழுதுவது கடினமோ, துக்கத்தை வார்த்தைகளில் கொட்டாமல்,
அதே சமயம் வேதனையும், வலியும் படிப்பவரையும் உணர வைக்கும் எழுத்து இது.
இவரின் ஊசி இலை மரம்ச்சிறுகதைக்குதான் கல்கி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. என்று
நினைக்கிறேன். இன்னும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் அதுவும் கல்கியில் வந்தது சரியா சார்?
உஷா,
யோசிக்காமல் அந்த எழுத்து தந்த தாக்கத்தில் ரெ.காவிற்கு
மெயில் போட்டேன். அவரும் திரு. ராமசந்திரன் என்று அழைத்து பதில் போட்டார்.//
அது யாருங்க திரு. ராமசந்திரன்?
இன்னொரு முறை ஆரம்பித்தால் நினைவு
வரலாம். ஒரு கதையோ அல்லது சிறுகதையோ கவிதையோ மிக பிடித்துப் போக காரணம்
ஒன்றே தான். எங்காவது நம்மை நாம் சந்திப்போம்.
இக்கதையில் வருவதுப் போல என் மகனுக்கு மூன்று வயதில்
லுகேமியா என்று சந்தேகப்பட்டபொழுது நான் பட்ட வேதனையா அல்லது கடவுளை குறித்து
அவரின் அலசல் ஏறக்குறைய என்னுடையதுதான். நம்பிக்கை வரவில்லை அவ்வளவுதான். பலமுறை
கஷ்டம் வந்தப்பொழுது தூக்கம் வராமல் புரளும்பொழுது யாருபா கட்வுள், கொஞ்சம் வந்து என்னை காப்பற்ற கூடாது என்று புலம்பிவிட்டு நானே சிரித்துக் கொள்ளுவேன்.//
உஷா, i am very sorry to hear that. இப்பொழுது பையன் எப்படி இருக்கிறான்? நீங்கள் கூறுவது மிகச் சரியே. அந்த புதினத்தை வாசிக்கும் பொழுது எனக்கென்னமோ, நம் வீட்டில் நிகழ்வதைப் போன்ற ஒரு உணர்ச்சி. அதிலும் ஒரே நேரத்தில் எப்படி அந்த Pendulam கஷ்டமான சூழலின் பக்கமே ஆடிப் போய் அங்கேயே நிலை கொண்டது என்பதனை உணரும் பொழுது. இது போல நமது சொந்த வாழ்விலும் நடக்கிறது தானே, "பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்" என்று சொல்வார்களே அது போல.
//பலமுறை கஷ்டம் வந்தப்பொழுது தூக்கம் வராமல் புரளும்பொழுது யாருபா கட்வுள், கொஞ்சம் வந்து என்னை காப்பற்ற கூடாது என்று புலம்பிவிட்டு நானே சிரித்துக் கொள்ளுவேன்.//
இப்பொழுது புரிகிறது, உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது விசயங்கள் எழுதுவதற்கென்று. இந்த கட்டுரையின் மூலம் உங்களின் வாழ்வு அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த தருனத்திற்கு என்னுடய நன்றிகள்.
//இவரின் ஊசி இலை மரம்ச்சிறுகதைக்குதான் கல்கி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.//
ஓ, அப்படியா!! அந்த சிறுகதையையும் படித்து விட்டீர்களா?
இன்னும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் அதுவும் கல்கியில் வந்தது சரியா சார்?//
எனக்குத் தெரியவில்லை. இதுக்கு திரு. கார்த்திகேசு அவர்களே (நேரமிருந்து) பதிலிரைக்கட்டும்.
அன்புள்ள உஷா,
மன்னிக்க வேண்டும். "இராமச்சந்திரன் உஷா" என்றுதானே உங்கள் பெயர் இருக்கிறது? அதனால் நீங்கள் இராமச்சந்திரன் என்று எடுத்துக் கொண்டேன். இப்போது கவனித்துப் பார்க்கும்போது நீங்கள் "உஷா" என்பது விளங்குகிறது. குளறுபடிக்கு மன்னியுங்கள்.
ஏற்கனவே உங்கள் மடலுக்கு ஒரு பதில் இங்கு எழுதினேன். (அதிலும் உங்களை இராமச்சந்திரன் என்றுதான் அழைத்திருக்கிறேன் போல.) இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. ஒரு நாள் பொருத்திருந்து வரவில்லையானால் மீண்டும் எழுதுகிறேன்.
எஸ்பொ அருமையான மனிதர். அற்புதமான எழுத்தாளர். அவரைப் பற்றியும் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன.
ரெ.கா.
ரெ.கா சார், அப்பா பெயர் ராமசந்திரன், இன்ஷியல் விரிவாக்கத்தில் பஸ்போர்ட் போன்றவற்றில் அப்படி இருந்ததால்,ராமசந்திரன் உஷா என்று எழுது பெயர் வைத்துக்கொண்டேன். இணைய நட்பின் ஆரம்பத்தில் பலரும் நான் ஆண், என் பெயர் ராமசந்திரன் என்று நினைத்திருந்தார்கள்.
பிறகு அந்த சைன்ஸ் பிக்ஷன் கதை? அதுவும் மூன்று வருடம் முன்னால் வந்தது என்றி நினைக்கிறேன்.
நேசி, கமெண்ட் மாடரெஷனில் சாரோட கமெண்ட் இருக்கான்னு பாருங்க
//இன்ஷியல் விரிவாக்கத்தில் பஸ்போர்ட் போன்றவற்றில் அப்படி இருந்ததால்,ராமசந்திரன் உஷா என்று எழுது பெயர் வைத்துக்கொண்டேன்.//
உஷா, உங்களுக்கும் இதே கதைதானா :-)) எனக்கும் அப்படியே ஆகிப் போனது, எனது அப்பாவின் பெயர்தான் எனது முதல் பெயராகிப் போனது. இருந்தாலும், அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு கொடுத்தப் பெயர் இரண்டாவது இடத்தை எடுத்துக் கொன்டதில் :-) புரிகிறதா, அதிலும் ஒரு தத்துவ நோக்கு இருக்கிறது...
ஆமா, எந்த கமென்ட்ட பத்திக் கேக்குறீங்க... நேசியில ஒரு கமென்ட்_ம் இல்லை மட்டுறுத்தப் படாமல். எதற்கும் தெக்கி பதிவில் பாருங்கள்.
உஷா, நேசி,
வணக்கம். முதலில் எழுதி வராமல் போனதைத் திருப்பி எழுதுகிறேன்:
என்னுடைய அறிவியல் புதினம் என்று நீங்கள் குறிப்பிட்டது திண்ணையில் வந்த "எதிர்காலம் என்று ஒன்று" என்ற கதையாக இருக்க வேண்டும். அறிவியல் புனைகதைப் போட்டியில் இரணடாம் பரிசு பெற்றது. பின்னர் AnyIndianCom பதிப்பகத்தார் அந்தப் பரிசு பெற்ற கதைகளை நூலாக வெளியிட்டார்கள். என்னுடைய தலைப்பையே தொகுப்பின் தலைப்பாகவும வைத்தார்கள்.
வேறு அறிவியல் புனைகதைகளும் எழுதியிருக்கிறேன். "சூரியனைக் கொன்று விட்டார்கள்" எனக்கு மிகவும் பிடித்தது.
கல்கியில் அவர்களின் வைரவிழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை "ஊசி இலை மரம்".
இந்த போஸ்ட் கார்ட் விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்.
அந்திம காலத்தில் 17ஆம் அத்தியாயத்தில் மதர் மேகி தான் வத்திகன் போக இருப்பதாக சுந்தரத்திடம் கூறுகிறார். அப்போது சுந்தரம் கூறுவார்: "மதர் மேகி, வத்திகனில் உள்ள தேவாலயத்தில் மைக்கலேஞ்சலோ ஓவியம் ஒன்று உள்கூரையில் இருக்கிறதாம். அதில் கடவுளின் கைகள் மனிதனை நோக்கி நீண்டிருந்தாலும் அவரின் விரல்கள் மனிதனின் விரலைத் தொடாமல் இடைவெளி விட்டு நீண்டிருக்கிறதாம். அந்த ஓவியத்தை நீங்கள் பார்த்தால் அதன் கீழ் நின்று இறைவனின் விரல்கள் மனிதனைத் தொட வேண்டும் என எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்பார்.
இந்த ஒரு சிறிய உரையாடலை நினைவில் வைத்துத்தான் கேப்ரியெல்லா எனக்கு அந்த போஸ்ட் கார்ட் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே மிக பொருட்செறிவு உள்ள பரிசல்லவா?
அன்புடன்
ரெ.கா.
வணக்கம் கார்த்திகேசு,
ஒரு முறை தான் வாசித்தேன் என்பதனால் என்னால் தொடர்பு படுத்தி பார்க்க முடியவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும், கதையின் ஆழத்துடன் ஒன்றிப் படிக்கும் பொழுது அந்த வரிகள், கண்டிப்பாக மனதில் தைத்துப் போவதை மறுக்க முடியாது.
அடிக்கடி இனிமேல் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வோம் திரு. கார்த்தி அவர்களே. மேலும் ஏதேனும் வாய்ப்பு கிட்டி உங்கள் ஊர்ப் பக்கம் வர முடிந்தல் உங்கள் அழகிய தீவு பக்கமும் எட்டிப் பார்க்கிறேன்.
இந்த வாரத்தில் உங்களை என்னுடைய முதல் பதிவின் மூலம் சந்திக்க நேர்ந்ததை ஒரு அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நானும் அடுத்த மாதம் இந்தியா செல்லும் பொழுது, நீங்கள் கொடுத்த பிரசுரத்தின் முகவரிக்கு சென்று அத்துனை புத்தகங்களையும் வாங்கி விடுவதாக திட்டம். கண்டிப்பாக அதில் நிறைய *அந்திம காலம்* புதினத்தின் பிரதிகள் அதிகமிருக்கும், ஏனெனில் அதுவே நான் சந்திக்கும் நண்பர்களுக்கு பரிசுப் புத்தகம் :-) இனிமேல்.
நணபர்களே,
என்னை ரெ.கா. என்று சுருக்கமாகவே அழைக்கலாம்.
இயற்கை நேசியும் தெகாவும் ஒருவர்தானா? அவர்தான் பிரபாகரா?
மிக நன்றாக எழுதுகிறீர்கள். அமெரிக்காவில் சம கால வாழ்வு பற்றிய உங்கள் பார்வைகளும் பதிவுகளும் மிக அருமையானவை. உங்களைப் போலவே பி.கே.சிவகுமாரும் அமெரிக்க வாழ்வு பற்றி (மற்ற பல விஷயங்களுக்கு ஊடே) எழுதுகிறார். அமெரிக்காவுக்கு வெளியே வாழ்பவர்களுக்கு இந்தத் "தமிழ்" நோக்குநிலை மிக முக்கியமானதாக இருக்கிறது.
தொடருங்கள்.
நேசி, மித்ரவைத் தவிர New Booklands-இலும் கேட்டுப் பாருங்கள். அங்கு ஸ்ரீநிவாசன் என் நண்பர். அவர் முயற்சி செய்து புத்தகங்களைத் தேடிக் கொடுப்பார். Make New Booklands your first stop.
ஆனால் கொஞ்ச புத்தகங்கள் வாங்கி கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே அவர்கள் வைத்திருப்பதால் எது கிடைக்கும் எது கிடைக்காது என்று சொல்ல முடியவில்லை. முயற்சியின் பலன் என்ன என எனக்குத் தெரிவியுங்கள்.
நன்றி.
ரெ.கா.
Post a Comment