Tuesday, March 11, 2008

பூவன் கடவுளாகிப் போனான்: காட்டாறு!

எப்பொழுதும் போலவே அதுவும் ஒரு மழைக்காடுகளின் மழைக்காலம்! சுகமான சுமையாக பூவனும் நானும் ஆளுக்கு ஒரு ஐம்பது அலும்னியத்தாலான எலிப் பொறி பெட்டிகளை ஒரு கட்டாக கட்டி, அக்காமலை (Akkamalai) நோக்கிச் செல்லும் பேருந்தில் வால்பாறையிலிருந்து ஏறிக் கொண்டோம். பேருந்து நிலையம் வரைக்குமாக இருந்த அந்தச் சொந்த சுமையை இப்பொழுது பேருந்து ஏற்றிக் கொண்டது.

அக்காமலையின் கடைசி நிறுத்தத்தில் நாங்கள் இறங்கிக் கொண்ட பிறகு சுமாருக்கு ஒரு ஒண்ணரை கிலோமீட்டர் சரிவான தேயிலைக் காடுகளுக்கிடையேயான அந்தச் சுமையுடன் கால்நடையாக நடந்து அந்தப் பச்சைக் கம்பளத்தை நோக்கிய நடை. தலைக்கு மேலே மூடியாக மேக மூட்டங்கள். மழைக்காடுகளில், அதுவும் அந்த இரண்டு பருவ மழை காலங்களில், எந்த நேரத்தில் மேகம் கருக்கொண்டு, எந்த நேரத்தில் தன் கருக் கொண்ட சூலை இறக்கி வைத்துக் கொள்ளுமென்று அரிதியிட்டு சொல்லி விட முடியா வண்ணம் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாமென்ற சூழ்நிலை.

அன்றும் அது போன்றதொரு நாள்தான். நாங்கள் எப்பொழுதும் அந்தப் பசுங் காடுகளை ஓர் காட்டாற்றை குறுக்காக நடந்தேதான் அணுகுவது வழக்கம். அதிகம் மழையற்ற நாட்களில் கண்ணாடி படிகத்தின் மீது ஓடும் நீராக ஆங்காங்கே பாறைகளின் முகட்டைக் காட்டிக் கொண்டு ஓடுவது நாங்கள் காணும் காட்சி. அப்படியாக இருக்கும் நாட்களில் மிக எளிதாக நீரின் மேல் கால்படாமல் தாவித் தாவி எதிர்த்த கரைக்கு போய்விடுதுண்டு. அன்றும் அப்படியே நடந்தது.

எத்தனையோ அசம்பாவித நிகழ்வுகள் நமக்கு நிகழும் கணம் தோறும் நாம் நினைப்பதுண்டு, இதனை முன்னயே கண்ணுரும் சக்தி நமக்கு கிடைத்திருந்தால் நிகழ்ந்த அந்த நிகழ்வை தவிர்த்திருக்காலமே என்று நினைக்கத் தோன்றினாலும், அது போன்றதொரு சக்தியை எந்த கொம்பனும் வரமீட்டி பெற்று அந் நாளில் தன்னை நிறுபித்துக் கொண்டதாக நாமறிந்திருக்கிறோமா?

ஆனால், அப்படியாக அறியும் பட்சத்திலும் அந்த நிகழ்வின் மூலமாக கிடைத்திருக்கக் கூடிய அரிய பாடங்கள், அனுபவங்கள் நிகழாமல் போனாலே நம் மலரும் சாத்தியங்களும், கதை சொல்லும் திறனும் அற்றுப் போய் தேங்கிய குட்டையாக ஆகக் கூடிய இயற்கையின் வடிவமைப்பை என்னவென்று சொல்வது.

சரி இப்ப விசயம், பூவனும் நானும் இப்பொழுது பச்சைக் கம்பளத்திற்குள் இறங்கி நடக்க ஆரம்பிச்சாச்சி, உள்ளே போய் என்ன செய்வோமென்றால் கொண்டு வந்திருக்கும் 100 எலிப் பெட்டிகளையும் மனித நடமாட்ட பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பார்த்து ஒரு நூறு மீட்டர் நேர்க் கோட்டில் பத்து மீட்டர் இடைவெளியில் ஒரு பெட்டி அமைந்திருக்குமாறு பத்து கோடுகளில் 100 பெட்டிகளையும் பரப்ப வேண்டும். அதுவே எங்களின் அப்பொழுதைய வேலை. அதற்கு குறைந்தப் பட்சம் ஒரு இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும், இருக்கும் தரை அமைப்பினை பொருத்து.

வேலையில் மும்முரமாக இருக்கும் சமயத்தில் இலைகளுக்கு யாரோ நெட்டி எடுத்து விடுவதனைப் போன்றதொரு நொட், நொட் சத்தம். மழைக்காடுகளில் வெயிலும் சரி, மழையும் சரி தரையை வந்து தொடுவதற்கு முன் 50 மீட்டர்களில் உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் குடுமியின்(Canopy) அனுமதியின்றி தொட்டு விட முடியாது. ஏனெனில் குடுமியின் அடர்த்தி அப்படி, அப்படியே கொஞ்சம் விட்டொழிந்தாலும் இரண்டாவது நிலையிலுள்ள தனது சகோதரர்களின் (Secondary growth) அனுமதியும் பெற வேண்டும்.

அந்த இயற்கை குடையமைப்பின் கீழ் லாவகமாக லஞ்ச் கேட்கும் அட்டைகளுக்கு உப்பினைக் கொண்டு பதிலுரைத்து விட்டு உஷ்ஷ் யாப்பாட என்று நிமிரும் பொழுது தட் தட் தட் என குடையை கிழித்துக் கொண்டு விட்டது

மழைக்காடுகளின் சிம்ஃபொனி. இப்பொழுது நம்மால் ஆனதெல்லாம் ஒரு அகன்ற மரத்தின் கீழ் தஞ்சம் புகுவதும் கொஞ்சம் நம் மன சாந்திக்கு அருகில் கிடைக்கும் மலை வாழை ஒன்றின் இலையை திருடி தலைக்கு கவசமாக பிடித்துக் கொண்டு, அந்த நிகழ்வை ரசிப்பது மட்டுமே!

அப்படியாகவே மேலும் ஒரு இரண்டு மணி நேரங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும், அங்கே நேரமென்ற ஒன்று இருப்பதே இருட்டும் தன்மையினைக் கொண்டும், அட்டைகளின் அட்டகாசத்தையும் கொண்டே அறியும் நிலை. அது போன்றதொரு நிலைதான் இப்பொழுதும். மழையின் வீச்சத்தை பின்னால் தள்ளிவிட்டு மெது மெதுவாக அந்த சறுக்கு ஈரப்பதமேறிய மலைத் தரையில் ஒரு கபடி நடை போட்டு காட்டின் விளிம்புக்கு வரும் பொழுது பெரும் காட்டாற்று சத்தம், எட்டிப் பார்த்தால் அங்கே கண்ணாடி படிவ அமைதித் தண்ணீர் அல்ல, சினமுற்ற முகம் சிவந்த சிறு பாறைகளை உருட்டிச் செல்லும் காட்டாறாக அது பரிணமித்திருந்தது.

அப்ப இன்னிக்கு நமக்கு ஆப்புத்தானா, என்று நினைத்துக் கொண்டே கரைகளின் விளிம்பிலேயே நின்றோம் மேலும் சில மணி நேரங்கள். மழையின் மூர்க்கம் ஒழிந்தால் ஆற்றின் வீச்சமும் அதனையொட்டி குறைந்து போகுமென்பது பூவனின் பல வருட அவதானிப்பு. ஆனால், அன்று நேசிக்கு ஒரு காட்டாற்றின் பலமறிய வைக்க அக்காமலை சிம்ஃபொனி எப்பொழுதோ திட்டமிட்டு விட்டது போலவே அது பாட்டுக்கு நிகழ்த்திக் கொண்டிருந்தது. அதில் பூவனின் எதிர்ப்பார்ப்பு புகைந்து போனது.
இப்பொழுது எனக்கு பூவன் கடவுளாகிப் போனான் ஒரு காட்டாறுக்கு முன்னால்! முழுதுமாக அவனின் காடாளும் திறத்தினை நம்பி அவன் எடுக்கும் முடிவிற்கு முழுதுமாக ஒப்பிப் போகும் நிலையில் நான். அங்கே கணினியில் மல்டிவேரியட் அனாலிசிஸ் புள்ளியல் கணக்குப் போடும் என் திறமை நல் ஹைப்போதீசிஸ் ஆகிப் போனது.

"சார், வேற வழியில்லை நமக்குத் தெரிஞ்சி எங்கே பெரிய பாறை முகடுகள் மூழ்கிப் போன நிலையில் நிறைய நீர்ச் சுழிப்பு இல்லாமல் தண்ணீர் ஓடுகிறதோ அங்கேயாகப் பார்த்து இறங்கி மெதுவாக நடந்து கடந்து விடுவதுதான் ஒரே வழி," என்று என் முகத்தை உற்று நோக்கினான், பூவன்.

"உனக்குத் தெரியாத பூவன், அப்படி எங்கே என்று ஒரு இடத்தை பார்த்து இதோ இங்கேதான் என்று சொல்கிறாயோ செய்து விடுவோமென்று," பாடத்தை ஏற்கும் நிலையில் நேசி.


அப்படியாக ஒரு இடத்தை தேடும் உத்தியில் ஆற்றின் கரையோரமாகவே சிறிது நேரம் நடந்து சென்றோம். காட்டாற்றின் மூர்க்கத்தினை கட்டற்ற தரையினூடே நடந்து அறிந்து கொண்ட நாள் அன்றுதான்.

நன்றாக செப்பனிடப் பட்ட பாதையில் அறிந்து கொள்ளும் நோக்கம் அங்கு அற்றிருக்கும் நிலையில் நாம் பயணிக்க நேரும் பொழுது, மனதில் தடம் பதிக்க அத் தடத்தில் ஏதும் மற்றதைப் போல ஒரு பிம்பம் நம் மனதில் பதிவது இயற்கைதானே. ஆனால், இங்கோ ஒரு மரத் துண்டினைப் போலவே இற்று போய்க் கிடக்கும் மனத்திற்குக் கூட உள்வாங்கும் சக்தி பல மடங்கு எகிறுகிறது. காரணம், மனம் அந் நொடியில் லயித்து இலக்கற்ற நீர்ச் சுழிப்பில் கால்கள் இடறிச்செல்வதால் அப்படியே அத் தடமும் அந்த சூழலும் மனத்தினுள் தடத்தினை விட்டுவிட்டுச் செல்வதால் தானோ!

அப்படியாக ஊர்ந்து கொண்டே சரியான ஓர் கடக்கும் இடத்தினை பார்த்துக் கொண்டே வரும் பொழுது பூவனுக்கு மேலும் ஓர் யோசனை, அவன் கடவுளல்லவா, என்னை காக்கும் பொறுப்பு அவனிடத்தில்.

"சார், அந்த தொடைச் சுற்றளவுள்ள மரத்தினை வெட்டி குறுக்காகப் போட்டு விட்டால் நீரின் சுழிப்பிலிரிந்து கொஞ்சம் நம்மை அசுவாசப் படுத்திக் கொள்ள உதவுமே," என்று நிறுத்தினான் பூவன்.

கொண்டு வந்த அருவாளை பயன் படுத்தி வெட்டிச் சாய்த்து படுக்கவும் வைத்துப் பார்த்தால் அடுத்த முனைக் கரையைத் தொட்டுப் பார்க்காமல் ஒரு ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு படுத்துக் கொண்டது. ஆறும் அதனை அசைத்துப் பார்த்து தன் வழியில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், நாங்களும் இறங்கி விட்டோம்.

இப்பொழுது காட்டாறா அல்லது பூவனா? நான் எடுத்து வைத்த இரண்டு அடிகளிலேயே என் முழங்கால் மட்டும் தண்ணீர் சூழ்ந்து, அன்னிச்சையாகவே என் கைகள் பூவனின் தோள்களைப் பற்றிக் கொண்டது. பூவனோ, ஒரு கையில் நீண்ட குச்சியும், மறு கையில் பெட்டி கொண்டு வந்திருந்த பைகள், அருவாள் இத்தியாதிகளைப் பிடித்துக் கொண்டே பாலன்ஸ் செய்தவாறு, குச்சியால் அவ்வப்பொழுது நீரின் ஆழமும், தட்டிச் செல்லும் பாறைகளின் இருப்பையும் உணர முயற்சிக்கும் வேலைப் பளுவிற்குமிடையே என் பளுவையும் ஏற்றிக் கொண்டான்.

என் உடல் எடை அங்கு ஒன்றுமே அற்ற நிலையில் ஒரு மீன் தூண்டிலில் இருக்கும் மிதவைத் தட்டையைப் போலவே என் கணமறிந்தேன், ஒரு காலைத் தூக்கி கீழிறக்கும் கணம் தோறும். அது ஒரு பத்து நிமிட கடப்பே எனினும் ஒவ்வொரு அடியும் நீரின் வேகத்தை விட எனது மனதை பயனிக்கவே வைக்கச் செய்தது. பூவனின் வெற்றுப் பாதங்கள் என் ஷு அணிந்த கால்களை விடவும் நிறையவே தரை உணர்ந்து வழி நடத்த உதவியிருக்கக் கூடும். ஏனெனில், நான் இரு இடங்களில் பாறைகளின் விளிம்பில் தட்டி நெஞ்சளவிற்கு நனைந்தே எழுந்தேன்... மறு கரையின் புற்களை தொட்டப் பொழுது அப் புற்கள் கூறியது என்னைப் போலவே பசுமையாக உன் நெஞ்சில் இந் நிகழ்வு பசுமையுற்று இருக்கட்டும் என்று ஆசிர்வதித்து ஏற்றுக் கொண்டதைப் போல உணரவைத்தது.



பி.கு: அன்று எனக்கு ட்ராக்கராக பணிபுரிந்த "பூவன்" என்ற நண்பன் கடவுளாக எழுந்தருளியது போய், பின் பொரு காலத்தில் நிஜமாக கடவுளாகிப் போனான் தனது 27 வயதில் வரகலியாற்றில், சிறுநீரகப் கோளாறுகளால். அவனுக்காக இந்தப் பதிவினை சமர்பிக்கின்றேன்.



Related Posts with Thumbnails