Friday, August 28, 2009

காட்டுத்தீ ஏற்படுவது நல்லதா? கெட்டதா?:Forest Fire

அண்மைய காலங்களில் உலகம் தழுவிய முறையில் காடுகளில் அதி ஆக்ரோஷமான முறையில் காட்டுத்தீ ஏற்படுவது என்பது நடைமுறையாக உள்ளது. அப்படியெனில், முன்னைய காலங்களில் இது போன்ற காட்டுத்தீக்கள் இல்லையா என்று கேட்டால், கண்டிப்பாக இருந்திருக்கும்.

ஆனால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் ஏன் இப்பொழுது மட்டும் ஒவ்வொரு முறையும் காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட வெளிகளைச் சாம்பலாக்கிச் செல்வதும் பலத்த பொருளாதார இழப்புகளையும் சில சமயங்களில் மனித உயிர்களைக் காவுகொண்டும் அழிவை ஏற்படுத்துகிறது?

இதற்குரிய காரணங்களில் முதன்மையானதாக நிற்பது உலகச் சூடேற்றம். அதனையடுத்து நீண்டு போன வறண்ட கோடைக்காலம். இவைகளன்றி வட அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காட்டுத்தீ கட்டுப்பாட்டு சட்ட திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காரணமாகின்றன. இவை அந்த நேரத்தில் பெருமளவில் காட்டுத்தீயை நன்றாகவே கட்டுக்குள் வைக்க உதவின. ஆனால் இன்று அவையே கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் அமைகின்றன.

இன்று பெருகிவரும் மக்கட் தொகையும் அவர்களுக்கான தேவையும் பல்கிப் பெருகிப் போக, வனப் பகுதிகளுக்குள்ளும் மனித வாழ்விடங்கள் பன்முகமாக காலுன்றியதும் ஒரு வகையில் காட்டுத்தீ ஏற்படும் பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாக உள்ளது.

பொதுவாக காட்டுத்தீ, காடுகளில் ஏற்படுவது இயற்கையின் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அது போன்ற தீக்கள் இயற்கையில் மின்னலின் மூலமாகவும், பாறைகள் எப்பொழுதாவது உருள்வதால் ஏற்படும் உரசலால் உருவாக்கப்படும் தீப்பொறிகள் மூலம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு காட்டுத்தீக்கள் ஏற்படுவதினால் பல நன்மைகளும், சில தீமைகளும் இயல்பாகவே பக்க விளைவுகளாக விட்டுச் செல்லப்படுகின்றன. சில மரங்கள் இத்தீக்களைத் தாண்டியும் நிற்கும் திறனுடையதாக தகவமைவுகளை இயல்பாகவே பெற்றிருக்கின்றன.

சில நேரங்களில் இத் தாவரங்களின் இனப் பரவலுக்கும் இத் தீக்கள் உதவலாம். தீக்கு முன்பு வரை அங்கு வாழும் தாவரங்களில் சிலவற்றுக்கு வெளிச்சமே கிடைக்காமல் வெளிக்கிளம்ப முடியாதவைகளாக இருந்திருக்கக் கூடும். இப்பொழுது கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி பன்முக வழியில் தாவரங்கள் மீண்டும் செழித்து வளர ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும், தேவையில்லாத அடர்ந்த ஊடு தாவரங்களை விலக்கி அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவும் காட்டுத்தீ ஒரு காரணியாக அமையலாம்.

அதற்கு நேர்மாறாக தீமைகள் என்று பார்த்தோமானால், அதீதமான கட்டுக்கடங்காத தீ பெரும் பரப்பினையும் அதனூடாக வாழும் சிறு ஜீவராசிகளையும் அழித்துவிடுகிறது. மேலும் அடிக்கடி இது போன்ற தீ ஏற்படுமாயின் சிறு தாவரங்களின் வளர்ச்சிநிலை குறுக்கப்படுகிறது. நம் பங்கிற்கு மனிதருடைய இழப்பாக வீடுகள் அதனையொட்டிய வியாபாரத் தளங்கள், மர வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய கால கட்டத்தில் மனிதனின் பங்கு இந்தக் காட்டுத்தீ உருவாக்கத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. அதி நவீன தீயணைப்பு வசதியும் (மேற்கத்தியநாடுகளில்), அடர்த்தியான ஊடு தாவரங்களுடன் இருக்கும் வனங்களே அழகான, உற்பத்தித் திறன் மிக்க வனங்களாக அமையும் என்ற அணுகுமுறை ஆரம்ப கால கட்டத்தில் நிலவியது. நினைத்தபடியே அமைந்தாலும் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை அந்த அணுகுமுறை தருவிப்பதாக அமைந்தது.

எப்படியெனில், இயற்கையின் அமைவில் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒருமுறை இயற்கையாக ஏற்படும் காட்டுத்தீக்களால் தேவையற்ற ஊடு தாவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் அவை எட்டி வளர்ந்து பெரும் மரங்களின் நுனிக் கிளைகளைத் தொட முடியாத நிலைமை இருந்ததால் பெரும் மரங்கள் இத்தீக்களுக்கு இரையாகாமல் தப்பும் வாய்ப்புக்கள் இருந்திருக்கின்றன.

ஆனால் பின்னர் கொண்டுவரப்பட்ட புதுவிதமான அணுகுமுறை மூலம் நன்றாக தீயை எளிதில் கவர்ந்து கொள்ளும் வகையில் அடர்த்தியான ஊடு தாவரங்களும், குறிப்பிட்ட மர வகைகளை வெட்டி அதன் தண்டுப் பகுதியை எடுத்துக் கொண்டு மிச்சம் உள்ள பகுதிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதும் பெருமளவில் தீயின் உக்கிரத்தை அதீதப் படுத்துகிறது.

இன்னொரு காரணம் நம்முடைய கவனக்குறைவால் ஏற்படும் தீ. வனப்பகுதியில் பயணிக்கும்
பொழுது எனக்கென்ன என்று தூக்கியெறியும் சிகரெட் துண்டங்கள், சுற்றுலாவுக்கோ வேறு தேவைக்கெனவோ அமைக்கப்படும் முகாம்களில் ஏற்படுத்தப்படும் தீயிலிருந்து ஏற்படும் காட்டுத்தீ, அதற்கெல்லாம் மேலாக வேண்டுமென்றே வைக்கப்படும் தீ, வனத்தினூடாகச் செல்லும் தனிவான மின்சாரக் கம்பிகளிலிருந்து உருவாக்கப்படும் தீ என்று பலவிதங்களில் எமது கவனக்குறைவால் காட்டுத்தீக்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுக்குள் வைப்பதனைக் கருத்திற்கொண்டு 'குறிப்பிட்ட மர அகற்றல் (selective tree felling)' என்ற புதுவிதமான நுட்பத்தை அணுகுகிறார்கள். இதன் மூலமாக பெரும் மரங்களுக்குத் தீ பரவும் தன்மையை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுண்டு.

இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் அமையும் மழைக்காடுகளில் ஏற்படும் தீ, இயற்கையாக ஏற்படுவனவாகவே இருந்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகமாக உள்ளன. சில நன்மைகள் மேற்கூறிய முறைகளில் கிடைத்தாலும், ஒவ்வொரு முறை இது போன்ற தீக்கள் ஏற்படும் பொழுதும் வெளிவிடப்படும் அதிகூடிய வெப்பம் (சில சமயம் 1000 இலிருந்து 2000 பாகை·பாரன்ஹீட்) தாவர வகைகளின் விதைகளைக்கூட அழித்து விடுகிறது. தீக்குபிறகு அங்கு வாழும் பன்முகப் பறவை மற்றும் சிறு விலங்குகளின் இன வகைகளில் மாற்றங்கள் பெரிதாக நடைபெறா விட்டாலும், உணவாகக் கிடைக்கும் தாவர, விலங்கு வகைகளைக் கொண்டு அதன் கூட்டமைவில் சில மாற்றங்கள் அமையக் கூடும்.

குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட நாடுகளில் உள்ள காடுகளைப் போலன்றி, வெப்ப மழைக்காடுகள் அதிக ஜீவராசிகளை - மர உச்சியிலிருந்து அழுகி வரும் இலை தழைகளுக்கிடையேயுமாக எங்கும் எப்பொழுதும் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்றே தாவர இனங்களும் செழித்து இருப்பதால் மழைக்காடுகளில் இது போன்ற தீயும் பெரும் சேதத்தினை உருவாக்கி விடுகிறது, அதுவும் இயற்கையாகவே நிகழும் நிலையிலே கூட. இத் தருணத்தில் மனிதனின் தவறுகளால் நிகழும் காட்டுத்தீக்களும் சேர்ந்து கொண்டால் நம் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

இச் சூழலில் நம் பொறுப்புணர்ந்து நம்மால் காட்டுத்தீக்கள் உருவாக்கப்படாமல் தவிர்ப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.Tuesday, August 18, 2009

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?

அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!

அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.

அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.

இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.

பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!Related Posts with Thumbnails