Thursday, December 14, 2006

125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா?

பறக்கும் அணிலப் பத்தி ஒரு கட்டுரை எழுதணுமின்னு ரொம்ப நாட்களாக திட்டமிட்டிருந்தேன். ஆனா, பாருங்க, 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பே ஒரு பறக்கும் பாலூட்டி இருந்ததாக வந்த ஒரு செய்தியைப் படித்தவுடன் முதலில் ஒரு அறிமுகம் கொடுத்த மாதிரியா இருந்துட்டுப் போகட்டுமின்னு நம்ம அனுபவத்தைப் பத்தி பகிர்ந்துக்கிறதுக்கு முன்னாடி நான் படிச்ச கட்டுரை என்ன சொல்லுதுன்னு படிச்சிடலாம்.

நம்ம தென் இந்தியக் காடுகளில் இரண்டு விதமான பறக்கும் அணில்கள் இருக்கிறது. பெரிய பழுப்பு மற்றும் திருவாங்கூர் பறக்கும் அணில்கள் (Large Brown Flying Squirrel and Travancore Flying Squirrel). இதில இந்த பெரிய பறக்கும் அணிலை கொஞ்சம் சிரமம் பார்க்காம இரவு நேரங்களில் வனத்துனுள் அலைந்தால் எப்படியாவது பார்த்து விடலாம்.

சரி இவைகள் பறக்கின்றனவா என்று கேட்டால், இல்லை. இவைகள் பறப்பது கிடையாது ஒரு பெரிய மரத்திலிருந்து அதனை விட தனிவாக சற்றே உயரம் தாழ்ந்த மரத்திற்கு மிதந்து (gliding) செல்கிறது. பின்னங்காலிருந்து முன்னங்கால்களுடன் இணைக்கும் ஒரு சவ்வு போன்ற முடியுடன் கூடிய அமைப்பை பெற்றிருக்கிறது, அதற்கு patagium என்று பெயர். இதனைக் கொண்டு தனது வாலையும் ஒரு துடுப்பை போல செயலாற்ற வைத்து செல்லும் திசையை மாற்றி அமைக்க பயன் படுத்தி மிதந்து வருகிறது.

சரி அப்படி மிதந்து சென்று வருவதால் என்ன பயன் என்றால், அதிக தூரத்தை தனது எதிரிகளின் கைகளுக்கு அகப்படாமல் சென்று உணவு தேட முடிகிறது, தனது இனப் பெருக்க நேரத்தில் தனது நெருங்கிய சொந்தத்திக்குள்ளேயே இனப் பெருக்கம் (inbreeding) செய்யாமல் (மொத்தத்தில நம்ம மாதிரி இல்லாம), தன்னின மரபணுத்தன்மை விரித்துக் கொள்ள முடிகிறது.

இப்பொழுது செய்திக்குள் போவோம். நானும் நேற்றைய வரைக்கும் நமது பாலூட்டி இனமே தோன்றியது நமது மூஞ்சூரு (Shrew) வகை பூச்சியுண்ணிகளிடமிருந்துதான் என்று நம்பி வந்தேன். ஆனால், இப்பொழுது சைனாவில் விவசாயிகளால் கண்டெடுக்கப் பட்ட இந்த பறக்கும் (மிதக்கும்) பாலூட்டி ஜீவராசியைப் பற்றி அறிந்து கொண்டவுடன், இப்ப பழைய மூஞ்சூரு கோட்பாடு கேள்விக் குறியாக ஆகிப் போச்சு. இருந்தாலும் இப்ப கண்டெடுக்கப்பட்டுருக்கிற பாலூட்டி நவீன பறக்கும் அணிலுடன் கொஞ்சம் கூட ஒப்புமை இல்லையாம்.

இதுகள் டைனோசார்கள் இருந்த மீசோசோயிக் காலத்திலயே கடை பரப்ப ஆரம்பித்திருக்கின்றார்களாம். இதனை கண்டெடுத்த நாளில் இருந்தே, ஆராய்சியாளார்கள் பச்சத் தண்ணி பல்லுள படாம இந்த ஜந்துவை ஒரு தனி வரிசை பாலூட்டிகளின் இனத்தில் சேர்க்காமல் விடமாட்டோமின்னு விரதமிருக்கிறதா கேள்வி ;-)

பாருங்க, பாலூட்டிகளிலேயே நமக்கு தெரிஞ்சு ஒர் 51 மில்லியன் வருஷத்திற்கு முன்பு தான் முதல் பறக்கும் ஜீவராசி இருந்ததா தெரிஞ்சுக்கிட்டு இருந்தோம், இப்ப இவரு அந்த ரிகார்டை உடைச்சுட்டார்.

டைனோசார் இருந்த அதாவது ஊர்வன (Reptiles) காலத்தில மெதுவா வானத்தில எட்டி குதிக்கிற ஆசை வந்து முதல் ஊர்வன-பறப்பன இணைப்பாக இருந்தவர் ஆர்க்கியோப்டெரெக்ஸ் (Archaeopteryx) அப்படிங்கிறவர்தான், 145 மில்லியன் வருஷத்துக்கு முன்னே. இவர்தான் பறவைகளுக்கே பறக்கிறதுக்கு முன்னோடின்னு சொல்லலாம்.

இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இவரும் பறக்கல, மிதந்து செல்லும் வேலையைத்தான் செய்திருக்கிறார். இப்ப இருக்கிற பறவைகளின் இறக்கையைப் போல மேலே கீழேன்னு அடிச்சு பறக்க முடியாது இந்த முன்னோடி தாத்தாவுக்கு.

எனது அடுத்தப் பதிவில நம்மூரு பறக்கும் அணில்களை எப்படி மழைக்காடுகளில் பார்க்க முடியுங்கிறதெ ஒரு தனிப் பதிவா போட்டு நம்ம அனுபவத்தை உங்க கிட்ட பகிர்ந்துக்குவோம். அது வரைக்கும் இதப் படிச்சிட்டு மனசில வைச்சுக்கோங்க, சரியா.


பி.கு: இங்கு இந்த ஆர்க்கியோப்டெரெக்ஸ் பற்றி பேசியதால் கொஞ்சம் குழப்பமாக இருப்பதை போல தோணலாம். அப்படி, ஆர்க்கியைப் பற்றி இங்கு பேசியதற்குக் காரணம், டைனோசார்களின் சம காலத்தில் வாழ்ந்து வந்த பாலூட்டிகளில் எந்த விதமான பறக்கும் பாலூட்டிகள் இது வரையிலும் இருந்ததாக அறியப் படாமல் இருந்து வந்தது. இந்த கண்டெடுப்பின் மூலமாக அது அப்படியல்ல என்று தெரிய வருகிறது.

மேலும் இந்த கண்டெடுக்கப்பட்ட ஜீவராசி பாலூட்டியாக இருந்தாலும், இன்றைய சமகால உயிரினத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பதால் தனி வரிசைக் கிரமத்தில் ஒரு இனமாக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே பெயரும் இடப்படவில்லை.

Sunday, November 26, 2006

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II

இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...


எனது முந்தைய "நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I" என்ற பதிவின் நீளம் கருதி அதனை உடைத்து அதன் முடிவுப் பகுதியாக இந்த பதிவினை வழக்குகிறேன்.

இந்தப் பதிவில் மதங்களின் பங்களிப்பு இயற்கை பலாத்காரத்திற்கு எப்படி துணை போகிறது என்பதனை சற்றே உரசிச் செல்லலாம். இருப்பினும் எந்த ஒரு மதத்தினையும் விரல் நீட்டி அதுவே எல்லாவற்றிர்கும் காரணம் என்ற சொல்ல எத்தனிக்கவில்லை.

அப்படி ஒரு புறத் தோற்றத்தை வழங்கினால், அது படிப்பவரின் புரிந்துணர்வு சார்ந்ததே என்பதனை சொல்லிக் கொள்கிறேன்.

மதத்தை போதிக்கும் எந்தவொரு மதக் காவலர்களும் எப்பொழு எல்லாம் ஏதாவொரு கட்டுக்கடங்க இயற்கை சீரழிவு நடந்தேறுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்கள், கடவுளர்களின் நன் மதிப்பை காப்பாற்றும் அரண்களாக நின்று சாக்கு போக்கு சொல்வது யாவரும் அறிந்ததே. அதற்கான உண்மை காரணத்தை புறம் தள்ளி. இதுவரையிலும் அதுவே நடந்தும் வருகிறது.

ஆனால் எனது பார்வையில் கடவுளும் - இயற்கையும் வேறு வேறாக தோற்றமளிக்கவில்லை. இயற்கையே, நாம் தவறான ஒரு முடிவு எடுத்து அது அவ்வாறு முடிவுறும் பொழுது கண் கூடாக நம் முன் நின்று நம்மை பல் வேறு முறைகளில் தண்டித்தும் விடுகிறது. அல்லது அதற்கு மாறாக நல்லதொரு முடிவை எடுத்து இயற்கையை அரவணைத்து செல்லும் பொருட்டு நம்மை கட்டி அணைத்து மகிழ்விக்கச் செய்கிறது.

எனவே எனது பார்வையில் இவ் இயற்கைதான் நம் கூடவே வாழ்ந்து வரும் கடவுள். கடவுள் வேறு எங்கும் இல்லை.

இவ்வுலகில் வாழும் அத்துனை ஜீவராசிகளும் நாம் செய்கின்ற அடிப்படை விசயங்களையே அவைகளும் செய்து வருகின்றன - உண்ணுதல், இனப்பெருக்கம் செய்தல், உறங்குதல் பிறகு செத்து மடிதல். இதிலிருந்து நமக்கு மட்டும் என்ன விதி விலக்கு, சற்றே விலகி நின்று யோசிக்கும் பொருட்டு, நாமும் அதனையேத்தான் செய்து வருகிறோம், இல்லையா?

சரி விசயம் இப்படியாக இருக்க இந்த இயற்கை-கடவுள் ஏன் மனிதன் என்ற ஒரு விலங்கை மட்டும் சுய-சிந்தனை என்ற ஒர் பரிணாம வழியுனுடே செலுத்தி இங்கே நம்மை முன்னெருத்தி வைத்து பார்க்க வேண்டும்?

இந்த பல இயற்கை சார்ந்த பரிணாம கண் சிமிட்டலுக்கு முன்பு, நம்முடைய இருப்பு இந்த பூமியில் ஒரு விரல் செடுக்கை விட குறைவே என்று பார்க்கும் தருனத்தில் நமக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமே இந்த இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிலைக்கு நம்மை மீண்டும் கொணர்வதற்கு.

அங்கேதான் இந்த ஃப்ரீ வில் என்ற பரிணாம யுக்தியும் இயற்கை நமக்கு வழங்கி ஒரு பரிசோதனை ஓட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது நம்மிடையே.

எங்கோ இல்லாத கடவுள் வந்து இவ்வுலகை காப்பாற்றுவான் என்று கையில் உள்ள கடவுளை கண்ணை கட்டி ஏதோ நடத்துவது போல பலாத்காரங்கள் தொடர்ந்தால்... விளைவுகள் இப்படியாகத்தானே அரங்கேறும்.

நாம் பொறுப்பற்ற செயல்களால் கட்டுக்கடங்காத மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், மனித சந்தோஷங்களுக்காகவுந்தான் இந்த பூமி படைக்கப் பெற்றது என்ற மனோ நிலையில் விசயங்களை அணுகும் பொழுது கிடைப்பது என்னவாக இருக்கும்? ஒரே வீட்டையும் நரகமாக்கி கொள்வதைத் தவிற.

உதாரணமாக, உலக-சூடேற்றத்தினை எடுத்துக் கொள்வோம். பொறுப்பற்ற முறையில் பொருளாதார முன்னேற்றத்தினை மட்டுமே முன்னுருத்தி கார்களின் பெருக்கத்தை பெருக்கி வெளித் தள்ளுவதால் நடைமுறையில் நாம் சந்திக்கும் விளைவு வெப்பச்-சூடேற்றம் (இரண்டாம் பாகம்).

இந்த வெப்பமே கடல் நீர் சூடாவதற்கும் காரணியாகிறது, இந்த கடல் நீர் வெப்பமே வரும் சூறாவளிகளின் பசிக்கு தீனி போட்டு அதன் வேகத்தை இரட்டிப்பாக்கி நம்மை நோக்கி சுழன்று அடிக்க வைக்கிறது. இது போன்ற நேரடி விளைவுகளுக்கு நானும், நீங்களும்தான் காரணமா அல்லது எங்கோ இருக்கும் கடவுளா? எது?

இது போன்ற ஒரு அழிவு வரும் பொழுது இயற்கை சீற்றம் திசை பார்க்கிறதா, மதம் பார்க்கிறதா, ஏழை, பணக்கார நாடு பார்க்கிறதா? எதனையும் பார்பது கிடையாதுதானே. இவைகளனைத்தும் இயற்கையின் முன் சமமே.
இன்று "நாம் என்ற உணர்வுசார்ந்த நிலை (Collective Consciousness)"லிருந்து பல வேறு பட்ட காரணங்களால் மனித இனம் பிளவுப் பட்டு தூர விலகி நிற்பதுவும் கூட, இயற்கையின் மீது நாம் நடத்தும் ஒரு போரின் வெளிப்பாடே அன்றி வேறென்ன.

மதங்கள் இந்த இயற்கை சார்ந்த சீரழிவுகளை மட்டும்படுத்தும் பொறுப்புணர்ந்து, சாக்கு போக்கு ஆருதல் மக்களுக்கு சொல்லுவதை காட்டிலும், உண்மை காரணத்தை எடுத்துக் கூறி நம்முடன் விழித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயற்கை கடவுளை போற்றி, பேணி வாழ்தல் ஒன்றே நாம் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்பதனை எடுத்துயம்புமா?

நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I


இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...


நாம் "இயற்கை உணர்வுசார்ந்த நிலையிலிருந்து (Nature Consciousness)" தினமும் வெகு தொலைவில் நம்மை நிறுத்தல் கூறி அயாராது உழைத்துக் கொண்டு வருகிறோம். அதற்கான சான்றுகளாக, நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக பல்கிப் பெருகி வரும், கேலிக்கை சாதனங்கள்.

ரேடியோ, ட்டி.வி, கணினி, வால்க் மேன், சிடிமேன், ஐபாட் அப்புறம் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தால் வெளியில் வெயில் அடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா இல்லை எவனும் குண்டு போட்டு விட்டானா என்று கூட தெரியாத அளவிற்கு நம்மை மதி ம(ழு)யக்க வைக்கும், இயந்தரத்தனமான விளையாட்டுக்கள் வேடிக்கைகள்.

இவைகள் எல்லாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் என்ற (அவ)நம்பிக்கையிலேயே புதிது புதிதாக ஏதாவதொன்று சந்தைக்கு வர வைத்து கொண்டே இருக்கிறோம்.

இவைகளைனைத்தும், நம்மை இயற்கையிடமிருந்து வெகு தொலைவில் தொடர்பற்று இருக்க வழிகோணுவதால் நாமும் இயற்கை சார்ந்த உணர்வற்று மேலும் மேலும் தேவையற்ற தீங்குகளை இயற்கைக்கு கோப மூட்டுமளவிற்கு வழங்கிவிடுகிறோம்.

இது இப்படியாக இருக்க, நாம் சற்றே அடித்தளத்தில் நின்று உற்று நோக்கினால் உண்மை இப்படியாக எனக்குப் புலப்படுகிறது. நாம் இயற்கையை வெற்றி கொள்ளவே இது போன்ற செயல்களில் நம்மை ஆட்படுத்தி இயற்கையுடன் போரிட்டு வருகிறோம் என்பது தெரியவருகிறது.

இப் போரின் வெளிப்பாடுதான், அண்மைய காலத்து இயற்கை சீற்றங்களனைத்தும் சற்றே நின்று நிதானித்து பார்க்குமளவிற்கு. வருடந்தோறும் நம் துணைக்கண்டத்தில் பெறும் பருவ மழை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை துவம்ஷம் செய்யுமளவிற்கு மழை கொட்டித் தீர்க்கிறது, அல்லது மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. அங்கு மட்டும்தான அப்படியாயெனில், இல்லை. சற்றே நமது பார்வையை உலகமனைத்திற்கும் திருப்புவோம்.

இப்பொழுது நடந்தேறிய சுனாமிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்த மாபொரும் நில நடுக்கங்கள் அதனையொட்டிய உயிர் மற்றும் பொருட் சேதங்கள். வட அமெரிக்கா நாடுகளில் அதிகரித்து வரும் சூறாவளி, புயல்கள்.

இதில் காட்ரீனா என்றழைக்கப்படும் அண்மைய சூறாவளி அமெரிக்கா நாட்டையே இயற்கை சார்ந்த உணர்வுநிலைக்கு திருப்பி கொணர்ந்தது என்றால் அது மிகையாகது.

அந்த உணர்வு நிலை, முன்பெலாம் ஏதோ மூன்றாம் தர உலக நாடுகளுக்கு மட்டுமே சொந்தமென நினைந்து வந்த அப் மாபொரும் நாடு அந்த ஒரு புயலின் மூலமாக விழித்துக் கொண்டது. இயற்கை சீற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதனை பொருத்து.

நீங்கள் எல்லாம் முனகுவது எனக்குத் கேக்கிறது, சரி, நேசி, அப்ப இது போன்ற இயற்கை சீரழிவுகள் முன்பு நடந்தேறியதே கிடையாது என்றா சொல்லவருகிறீர்கள என்று. சற்றே பொறுமையாக இதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

அக் காலத்திலும் நடந்ததுதான். ஒரு முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இது போன்ற கடுமையான வறட்சியோ அல்லது தண்ணீர் தட்டுப்பாடோ நிலவியாதா? எனக்கு தெரிந்து இவ்வளவு மும்முரமாக பேசிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்றே கருதுகிறேன்.

அப்படியெனில் என்னதான் நடந்து போனது, அன்மைய காலத்தில் என்று சற்று பார்ப்போம்.

சதுப்பு நிலக் காடுகளும் இயற்கை சீற்றமும்:

சுனாமியின் தாக்கம் நாகை ஏரியாவில் மட்டும் சற்றே அதீதப் படியான உயிர் மற்றும் பொருட் சேதங்களுடன் நடந்தேறியதை நாம் அறிவோம் அல்லவா? அதனை கண்டிப்பாக அங்கே இயற்கையிலேயே அமைந்திருந்த சதுப்பு நிலக்காடுகளை அழிக்காமல் வைதிருந்தால், அது ஒரு அரணைப் போல செயல் பட்டு சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி கரைக்கு வந்து சேரும் பொழுது, அதன் தாக்கம் இன்று நாம் பார்த்த அளவிற்கு இருந்துதிருக்காது.

அதுபோலவே, வளர்ந்த நாடு என்று தாவிக் குதிக்கும் அமெரிக்காவில் மட்டும் இந்த இயற்கை வளங்கள் சூரையாடப் படாமலா இருக்கிறது என்றால் அங்கும் இதே கதைதான். அங்கும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியது, காட்ரீனா என்ற சூறாவளி.

அங்கும் இது போன்ற சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டதினால் அந்த சூறாவளியின் முழுவீச்சத்தையும் கரைபரப்பில் காண நேர்ந்தது. இன்னமும் ஒரு சுட்டரிக்கையின் மூலமாக தெரிந்த கொண்ட உண்மை ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு ஏக்கர் அளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதாக அது சொல்லவருகிறது.

சற்று சிந்தித்து பாருங்கள், இயற்கையே நமக்கு வழங்கியிருக்கும் அரண்களை விட்டொழிந்து விட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கடற்கரையோரம் மதிற்சுவர் கட்டுவது என்ன முட்டாள்தனமான அணுகுமுறை.

மக்கட் பெருக்கமும், அழிந்து வரும் பயிர் பன்முகத் தன்மையும், வனங்களும்:

1950-60களில் விவசாயத் துறையில் வந்த பசுமை புரட்சி என்கிற திட்டம் பின்னாலில் மெதுவாக தொழிற்புரட்சியாக மாறிப்போனது விவசாயத்துறையிலும், இயற்கை சார்ந்த உற்பத்தி திறனை பின்தள்ளி. இந்த புரட்சியின் காரணமாக 1950 லிருந்து 80களில், உணவு உற்பத்தி 250 சதவீதமாக உயர்ந்ததாம். சரி இப்படி நடந்து போனதில் என்ன நன்மை, தீமை என்று பார்ப்போம்.

பல்கிப் பெருகிக் கொண்டுவரும் இந்த மக்கட் தொகைக்கு பசியாற்றுகிறேன் என்ற பெயரில் இயற்கையிடமிருந்த அத்துனை செல்வங்களையும் பறித்துக் கொண்டு அவளது கருப்பையில் உள்ள சில முட்டைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றுனுள் நமது உடனடித்தேவைக்கென என்ன தேவையோ அதனை மட்டுமே கருத்தில் கொண்டு அவளின் கருப்பையை சூரையாடி, பணப் பயிர்களாக வெளிக்கொணர்ந்து, ரசாயனங்களை மட்டுமே நம்பியே அவைகளையும் பயிரிட்டு அந்த ரசாயனங்களையும் சேர்த்து உணவுப் பொருளாக மாற்றி நாமும் உண்டு, மற்ற உயினங்களுக்கும் ஊட்டி பார்க்காத வியாதிகள் எல்லாம் பார்த்து வருகிறோம் இன்னாலில்.

இந்த பணப் பயிர்கள் தானியங்களாக குறிப்பிட்ட வகை கோதுமை, அரிசி, சோளம் etc., போன்றவைகளாகவே பயிரடப்பட்டு ஏனையெ வகை அந்த ஊரின் சீதோஷ்ன நிலைக்கே உருவான தானியங்கள் துடைத்தெடுக்கப்பட்டு அத்துடன் சேர்த்து அதனை நம்பியிருந்த பூச்சி பட்டுக்களையும் அழித்து, இயற்கை உரங்களையும் பயன் படுத்த முடியாவண்ணம் எல்லாவற்றையும் இழந்து, மீண்டும் அழிவுப் பாதையில் இயற்கையை நடக்க வழிகோணுகிறோம், அத்துடன் இணைந்து வாழும் நம்மையும் அழித்துக் கொண்டுதான்.

மேற்கு மலைதொடர்கள், ஒரு காலத்தில் உள்ளே புக முடியா வண்ணமிருந்த அடர்ந்த காடுகள் இன்று ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்துகள் மூலைமுடுக்கெல்லாம் சென்று வர. அங்கிருந்த மழைக்காடுகள் நிறைய அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் என்ற ஒன்றை கொண்டுவந்ததின் விளைவு இன்று மழையத்துப் போய், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்றிருந்த சுற்று வட்டார ஊர்களும், மாநிலங்களும் ஏன் உலகம்தழுவிய என்று கூட கூறமுடியும் அதன் விளைவை சந்தித்து வருகிறது.

ஃபாசில் எரிபொருள் திருட்டும், இயற்கையின் பெருமூச்சும்:

இந்த ஃபாசில் எரிபொருட்கள் எங்கிருந்து வருகிறது? பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினுடே பயணித்து இன்று நமக்கு பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.

எனவே மீண்டும் ஞாபகத்தில் நிறுத்த வேண்டிய விசயம், இவைகள் தண்ணீரைப் போல் தோண்டத் தோண்ட ஊறி வருவது கிடையாது, ஏற்கெனவே அவ்வாறு இருப்பதை வெளியே கொண்டுவருகிறோம் அவ்வளவே.

ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து அடி தாவர பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்துருந்தால் நாம் இன்று அழித்து தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கும். நாளை இது போல் நம் சந்ததிக்கு கிடைக்க வாய்புண்டா? விட்டுவைத்திருக்கிறோமா ஏதாவது ஒன்றை?

இதனை வெளிக்கொணர்ந்து முறையற்று பயன்படுத்துவதின் மூலம், (ஒரு அமெரிக்கனுக்கு உணவளிக்க அவருக்குகென ஆகும் எரிபொருளின் செலவு 1600 லிட்டர் பெட்ரோலியமாம் ஒரு வருடத்திற்கு) நமது தலைக்குமேல் இருக்கும் குடையாம் ஒஷொன் திரையையும் கிழித்து மற்ற விளைவுகளையும் விலை கொடுத்தல்லவா வாங்குகிறோம்.

கடல் மாசுபாடு:

எங்குதான் நாம் விட்டுவைத்தோம், கடலுக்குள்ளும் சென்று அணுக் கழிவுகளையும், கொண்டு வந்த பொட்ரோலியம் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து அல்லது அவைகள் வேண்டுமென்றே கடலில் கலக்க வைத்து அங்குள்ள மழைக்காடுகளை போன்று என்றழைக்கப்படும் "பவளப் பாறைகளின்" அழிவிற்கும் ஏனைய கடல் விலங்குகளுக்கும் அழிவினையும், ஒரு சமச்சீரற்ற நிலையில் அந்த வளம் விழ அடிகோலிடுகிறேம்.

இயற்கையின் பதிலடி நமது சுரண்டல் போருக்கு:

இப்படி பல நிலைகளில் நமது போரை இயற்கைக்கு எதிராக நடத்தி வருகிறொம். எதனை மறந்து என்றால் நாம் இயற்கையின் அங்கம் தான், நமக்காக அல்ல இயற்கை என்பதனை முழுவதுமாக மறந்து போரடுவதின் விளைவு; இயற்கை பிரிதொரு நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள, carrying capacity என்ற சமன்பாட்டை பயன்படுத்த நேரிடுகிறது, உயிரனங்களுக்கு எதிராக.

எப்படி, ஒர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட எறும்பின் பெருக்கம் அதிகமுறும் பொழுது அதனை அதற்கெதிரான ஒரு விலங்கினத்திற்கான வளரும் வாய்ப்பை இயற்கையே உற்பத்தித்து அவ் எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.

இது போன்று நமக்கும் அன்மை காலங்களில் இயற்கை இந்த யுக்தியை பயன்படுத்த முற்படுகிறதோ என்று எனக்கு தோன்றச் செய்கிறது. எப்படியெனில்;

அதீதத்து வரும் கணக்கற்ற மக்களின் பெருக்கமும் அதனையொத்த கண்மூடித்தனமான இயற்கை சீரழிப்பும் ஒரு வகையில் இயற்கையே முன் வந்து நம்மை கண்டிப்பதாக உள்ளதுதானோ இந்த சூறாவளி பெருமூச்சுகளும், சுனாமிகளும், பூகம்பங்களும், உடல் வியாதிகளும், வெப்ப சூடேற்றமும் இன்ன பிறவும். யோசிக்கத்தான் வைக்கிறது.

இயற்கையுடனான உணர்வு சார்ந்த நிலை (Nature Consciousness) அற்றுப் போனதே இதற்கெலாம் தலையா காரணமோ?

எனது அடுத்த பதிவில் நம்ம மதக் கடவுளர்களும் இதற்கு எப்படி பொறுப்பாளி ஆகுகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.

இதோ எனது அடுத்தப் பதுவிற்கான சுட்டி: நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II

காட்டிற்குள் ஓர் முதலிரவு...!!!

இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...


இது ஒர் இயற்கை நேசியின் தயாரிப்பு:

எனக்கு இது வாழ்வின் ஒரு மறக்க முடியாத நாள். எதிர் பார்த்து, திட்டமிட்ட படி நடப்பதில் ஒண்ணும் சுவாரசியம் அவ்வளவாக கிடைக்கிறது இல்லை. ஆனா, இது போன்ற எதிர் பாராம நடக்கிற விசயங்கள் தான் மனசில ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி பிறகு அதனை வாழ்க்கை முழுக்கவுமே சுமந்து திரியற மாதிரி அமைச்சுடும் இல்லையா, அது இனிமையான அனுபவமா இருந்தாலும் சரி கசப்பானதாக இருந்தாலும் சரி.

ஆனா, எங்களுக்கு அன்று கிட்டியது ஒரு இனிமையான அனுபவம். இது நடந்தது, புல் மேடுகளில் (Grass Hills). இந்த இடம் டாப்சிலிப் (Top Slip) இருந்து ஒரு 12 லிருந்து 15 கிலோமீட்டர் தூரம், மேலே கீழேன்னு ஏறி இறங்கி நடந்து போன வரகலியார் (Varagaliar) அப்படின்னு ஒரு யானை முகாம் வரும். அங்கிருந்து நின்னு பார்த்த நம் முகத்துக்கு முன்னாடி மழைக்காடுகள் பச்சை கம்பளமாக விரிந்து ஒரு பெரிய, பாதி ஒன்றுமற்ற வழுக்கு பாறையாகவும், பாதி எலுமிச்சை புற்களும் (Lemon Grass) நிரம்பிய மலை ஒன்று எழுந்து நிற்கும்.

அந்த மலைக்கு பேரு, பெருங்குன்று. நல்ல சரிவான மலை. ஏறுவது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும், ஆனா, ஏறி உச்சத்தில நின்னு கீழே தெரியும் ஊர்காடுகளையும், வனத்தையும் பார்த்தால் அத்துனை சோர்வும் காணமல் போயி விடும்.

சரி, அன்னிக்கு நாங்க ஒரு ஆறு பேருங்க, டாப்சிலிப்பிலிருந்து கொஞ்சம் மளிகை சாமான்கள், மெழுகுவர்த்தி எல்லாம் வாங்கிக் கொண்டு வரகலியார் செல்வதாக திட்டம். வரகலியார், போற வழியில கோழிகமுத்தின்னு (அப்படின்னா என்ன பொருள்னு கேக்காதீங்க, தெரியாது) ஒர் இடம், அங்கே ஒரு யானை முகாம் கூட இருக்கு. அங்க நிறைய சுற்றுலா பயணிகள் வந்து போவதைக் காணாலாம்.

ஏன்னா, நிறைய காட்டெருமை (Indian Bison) பார்க்கலாம் அப்படின்னு, ஆனா, ஒண்ணு தெரிஞ்சிக்கிறது இல்லை, அருதப் பழசான எட்டூருக்கு சத்தம் கேக்கிறமாதிரி வண்டிகளை எல்லாம் எடுத்துட்டு வந்து மிருகங்களை துரத்தி தூரத்தில் நிறுத்தி விடுறாங்க அவுங்களே அப்படிங்கிறத.

நம்ம கதைக்கு போவோம். அந்த கோழிகமுத்தி யானை முகாமில நாங்க உக்காருவதில்ல, அதனையும் தாண்டி ஒரு சின்ன ஆறு ஓடுற இடமா பார்த்துத் தான் உட்கார்ந்து, ஏதாவது கொஞ்சம் கடிச்சிகிட்டு, குடிச்சிக்கிடுவோம். இப்ப உட்கார்ந்துகிட்டு இருக்கும் போதே, யாரெல்லாம் என் கூட இருக்காங்க அப்படிங்கிறத பார்த்திடுவோம்.

ஆறு பேருன்னு சொன்னேன் இல்லீய. அதில் எங்களோட குருஷி ஒர் பி.ஹெச்டி கைடு. இவரு காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில டாக்டரேட் வாங்கினவர், நம்ம மேற்கு மலைத்தொடர்களில் வாழும் சிங்கவால் குரங்குகளின் (Lion tailed macaque) மேல் ஆராய்ச்சி செய்து. இவர் கிட்டே இருந்து, எனக்கு வாழ்க்கையை பத்தின பிரக்ஞை நிறைய கிடைச்சுதுங்க.

ஒரு சராசரி இந்திய ஆண் மகனுக்கு இருக்கும் இயல்பிலிருந்து, கொஞ்சம் விலகி வாழ்வின் சூட்சுமங்களை உணர்ந்து, மேற்கத்திய தொடுதலுடன் இந்திய முறையில் எப்படி குடும்பம் சந்தோஷமாக நடத்துவது என்பதனைப் பொருட்டு, சொல்லாமல் வாழ்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவர் கையால் சமைத்து நாங்கள் நிறைய சாப்பிட்டிருக்கிறோம். ஒரு நல்ல நண்பனுக்கு நண்பனாகவும், ஆசிரியனுக்கு ஆசிரியாராகவும் இருந்து வருகிறார். இன்றும்.

அடுத்தது, நம்ம வரகலியார் யானை முகாமில் வாழும் பண்மையாளன், பெயர் எழுதப்படுவதற்காக மாற்றப்பட்டு வேல் முருகன் என்று வைத்துக்கொள்ளுவோம். முருகன் எனக்கு, என்னுடைய பி.ஹெச்டி குரு எப்படியோ அப்படியே இவரும், இன்னொரு வகையில். நேற்று விட்டுவிட்டு வந்த ஒரு படிப்பிற்கான குரங்கு கூட்டத்தை மறுநாள் எங்கு, எத்தனை மணிக்கு சென்றால் பிடிக்கலாம் என்பதிலிருந்து - நடந்து போகும் வழியில் காட்டு யானைகள் நடந்து போயிருக்கிறதா இல்லையா என்பது வரைக்கும் காட்டிற்குள் எல்லாமே அத்துப் படியாக வைத்திருப்பார்.

அதற்கெல்லாம் மேலாக, சார் என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. இவரிடமிருந்தும் நிறைய பணிவு சார்ந்த வாழ்வியல் சூட்சுமங்களை கற்றுக் கொண்டேன். அவன் ஒரு மடையன் என்று தெரிந்தும் எப்படி அவனுக்கு வேண்டியதை கொடுத்து, மடையனை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற மனோத்துவம் முருகனுக்கு அத்துப்படி ;).

சரி, மீதம் உள்ள நான்கு பேர்களும் ஆராய்ச்சி மாணக்கர்கள் என்னையும் சேர்த்து. இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.

அன்று வரகலியார் வந்து சேர்ந்தவுடன், அன்றிரவு பால் வீதியில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை அள்ளிப் பருகிக் கொண்டே (இது எங்களுக்கு ஒரு வாடிக்கை), முகாம் தீ போட்டுக் கொண்டு எங்களது குருவின் அனுபவங்களை கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது, முருகன் அலும்னிய தட்டுக்கள், பாத்திரங்கள் சகிதமாய் தனது மகளுடன் பருப்பு சாம்பாரும், சோறும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இருக்கும் உடம்பு அயர்ச்சியில் எது கொடுத்தாலும் அது அமிர்தமே அங்கு. அதிலும், முகாமில் இருப்பவர்களின் கைவண்ணத்தில் சமைத்ததை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் சமையல் வேறு எங்குமே காண முடியாத சுவையில் அமைந்திருக்கும் :).

மறுநாளும் வந்தது. அன்று மிதமான குளிருடன், நல்ல மிஸ்டியான நாள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மலைகாடுகளுனுடே நடந்து பெருங்குன்று ஏறுவதாக திட்டமிட்டோம். அதன் படி ஒரு நான்கு நாட்கள் அங்கிருந்து விட்டு, திரும்ப வருவதாகவும் திட்டமிடப் பட்டது. அதற்கென தேவையான, ஸ்லிப்பிங் பேக், மெழுகுவர்த்தி, அரிசி, கருவாடு, உருளைக் கிழங்கு அப்புறம் ஓல்டு மாங்க் (அட அது இல்லாமலா :-) எல்லாம் அள்ளிக் கொண்டு. நடுங்கும் குளிரில், தரிசனம் தரும் அத்துனை மிருகங்களையும் தரிசித்துக் கொண்டே பெருங்குன்றின் அடிவாரத்தை அடைந்தாகிவிட்டது.

பெருங்குன்றின் உயரம் 1850 மீட்டர்கள் கடல் மட்டத்திற்கு மேல். ஆனால் அந்த உயரத்தின் உச்சியை அடைவதற்கு நடந்து செல்லும் பாதைதான் அலாதியான சுகம். நெஞ்சு தரையை தொட ஒரு இரண்டு அடி இடைவெளிதான் இருக்கும், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் சரிவை.

நின்று நின்று பறவைகள், தவளைகள் பார்த்து நேரமாகிப் போனதால், காட்டிற்குள்ளேயே பாத்திரத்தை வைத்து கஞ்சி காச்சி, கருவாடு நெருப்பில் சுட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. எப்படியோ, மாலை நேர வாக்கில், மலையின் மீது இருக்கும் குடிலுக்கு சென்றடைந்தோம். அந்த குடில் கட்டப் பட்டது வெள்ளைக்காரன் காலத்தில், கோடையை குளு குளுன்னு கொண்டாட போல.

அங்க போயிட்டா அது தாங்க புல் மேடுகள் (Grass Hills). சும்மா, கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும், உதறிப் போட்ட வெளிர் நிற பச்சை ஜமுக்காளம் போல மேடும் பள்ளமுமாக இருக்கும். நாங்க போன சமயம் பார்த்து குறிஞ்சிப் பூ பூத்திருந்தது. ரொம்ப லக்கிங்க நாங்க. அப்பப்பா, எவ்ளோ அழகு!

ஹும், அன்று இரவு கொஞ்சம் ஓல்ட் மாங்க நாக்கில் தடவிக் கொண்டு வந்த கலைப்பு தெரியாமல், ஒரு 11 மணி வாக்கில் கிடைத்த இடத்தில் சுருண்டாச்சு. மறுநாள் காலையும் புலர்ந்தது, இன்னும் அடர்த்தியான மிஸ்ட்டும், குளிருடனும். எங்கோ இன்னொரு உலகத்தில் இருப்பதை போல ஒரு உணர்வு, இருக்காதா பின்னே. எம்புட்டுத் தூரம் இந்த நாகரிக கோமாளிகளை விட்டு விட்டு, இப்படி அந்ரான காட்டுக்குள்ள வந்து இருக்கோம். ஏதாவது ஒண்ணுன்ன, தன் காலே தனக்கு உதவி இங்கெல்லாம்.

பிறகு ஒரு பதினோரு மணிக்கெல்லாம் மிஸ்ட் கொஞ்சம் மட்டுப்பட்டு, இடங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. வந்தது, நம்ம குருஷிக்கு ஓர் ஐடியா, வரைபடத்தை எடுத்து விரித்தார் எங்கள் முன்னால், இங்கிருந்து மூணாறு (Munnar) எங்கிருக்கிறது என்பதனை சுட்டிக் காமித்து விட்டு, நாம் இன்று அங்குதான் செல்லப் போகிறோம். இப்பொழுது கிளம்பினால் இன்று மாலைக்குள் அங்கு சென்று விடலாமென்று யூகித்து, கையில் இருக்கும் காம்பஸ்-சை நம்பி. போகலாமென்று எலோரும் ஒரு மனதாக ஒத்துக் கொண்டோம். எனக்கு மட்டும், நாளைக்கு போகலாமே என்று உள்ளுக்குள் ஒரு நப்பாசை.

முருகன், ஒரு அலும்னிய பானை, இரண்டுத் தட்டுக்கள், முன்று டம்ளர் அரிசி, கொஞ்சம் கருவாடு, ரெண்டு உருளைக் கிழங்குகள், மட்டும் எடுத்துக் கொண்டார். அதான் நாளைக்கு திரும்ப வந்துடுவோம்லன்னு நினைச்சுக்கிட்டு.

வழியெங்கும் குறிஞ்சி மலர்களை செடிகளோடு பார்த்துக் கொண்டே, புல் வெளி பறவைகளையும், ஓர் இடத்தில் நீலகிரிமலை ஆடு (Nilgiri Tahr) பார்க்கக் கூடிய வாய்ப்புடன் சென்று கொண்டே இருந்தோம். பிறகு ஒரு இரண்டரை மணி வாக்கில் கட்டன் காபி குடிக்கலாமென நினைத்தோம். முருகன், மல மலவென்று கொண்டுவந்ததை இறக்கி வைத்துவிட்டு, ஒரு சின்ன பாறைச் சந்தில் பாத்திரம் உட்காரும் படியாக இடத்தை தேர்வு செய்து தீ போட விறகு குச்சிகளுக்கு அலைந்ததை கவனித்து நானும் கொஞ்சம் உதவி செய்யப் போய், என் அறை மாணக்கன், ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்து, குருஷிக்கு தூபம் போடும் விதமாக, நீயும் ஒரு அஸிஸ்டெண்ட் ஆகிவிட்டாயா என விளித்தார். எல்லோரும் சிரித்தார்கள்... பாடம் எண் 10000023 ;).

அந்த சிரிப்பின் விலை என்ன என்பதனை பின்னால் பார்க்கலாம். மீண்டும் கதைக்கு போகலாம். கட்டன் காபியும் சில பிரட் துண்டுகளும் சாப்பிட்டு விட்டு, ஒரு அரை மணி நேரம் நடந்திருப்போம், எதிர்த்தார்ப் போல ஒரு பெரிய பள்ளத்தாக்கு இறங்கி நடக்க முடியாத வாக்கில் சரிந்து கிடந்தது எங்களின் முன்னால்.

ஆனால், அருகிலேயே ஒரு பசுஞ் சோலை (Shola) இருந்தது. இந்த புல் மேடுகளில் இருக்கும் சோலைகளுக்கும் (Grass Land Sholas) அதனை விட கொஞ்சம் குறைந்த உயரத்தில் இருக்கும் சோலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புல் மேடுகளில் அடிக்கும் காற்று மற்றும் திசை, கொட்டும் மழையளவு, மலையின் உயரம் இவைகளைக் கொண்டு அங்கு வளரும் தாவரங்களின் உயரம், அதன் இலையமைப்பு, பூ, காய்காக்கும் விதம் இவையெல்லாமே வித்தியாசமாக இருக்கும். ரொம்ப அடர்வாக, மரங்கள் குள்ளமாகவும் இருக்கும்.

ஏற்கெனவே, மேகம் திரண்டு மிஸ்டியான சூழலில் சிறிது மழைத் தூரவும் செய்திருந்தது. இந்த நிலையில், வெளிச்சம் மங்க ஆரம்பித்து , பள்ளத்தாக்கின் மேற்புறமாக அதி வேக காற்றை உணர முடிந்தது. அதன் விளிம்பில் நின்று பார்க்கும் பொழுது தூரத்தில் தெரியும் மூணாறு ட்டீ எஸ்டேட்டின் ஃபாக்டரியின் அஸ்பெடாஸ் கூரை அங்கு அடிக்கும் வெயிலில் தகதகத்தது. அதுதான் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு. முடியுமா இன்றைக்கு.

வேறு வழியில்லாமல் அந்த குறைந்த அளவே நம்பகத் தன்மையுடைய திசைகாட்டியை நம்பி அந்த அடர்ந்த சோலைக்குள் இறங்கி விட்டோம். இப்பொழுது மழையும் சற்று கனத்திருந்தது. மழைக்காட்டிற்குள் எப்பொழுதுமே பூமி சற்று ஈரப்பசையுடந்தான் இருக்கும், அதிலும் புதிதாக அண்மையில் மழை பெய்திருந்தால் சறுக்கி விழுவதற்கு சொல்லவே வேண்டியதில்லை.

புதியவர்கள் அந்த ட்ரிக்கை கற்றுக் கொள்ளும் வரைக்கும், கொஞ்சம் கஷ்டம்தான் காட்டினுள் காணக் கூடிய விலங்குகளை அவைகள் நம்மை காண்பதற்கு முன்பு நாம் அவைகளை காண்பது ;-).

சோலைக்குள் அந்த நெலைமைதான் இப்பொழுது. நிறைய அட்டைகள் (Leeches) வெளி வர ஆரம்பித்து விட்டன, காலை வைத்து எடுக்குமிடமெங்கிலும் இரண்டு மூன்று தலையை தூக்கி நாட்டியமாடியபடி தனது பசியை தீர்த்துக் கொள்ள தயாராக இருந்தது. உங்களுக்கு தெரியுமா? அட்டைகள் கடிப்பதற்கு முன்பு ஹிருடின் என்ற சுரப்பை கடிக்கும் வாயிலில் சொலுத்தி விடுவதால் நமக்கு கடிக்கப்பெறுகிறோம் என்ற பிரஞ்கையும் அற்று, அவருக்கு இரத்தமும் தடையில்லாமல் சப்ளை ஆகிக் கொண்டிருக்க அந்த சுரப்பு பயன்படுகிறது. அந்த அட்டையும் இரத்தத்தை தன் வயிறு வெடிக்கும் மட்டும் அருந்தி விட்டு, தானாக விழுந்த பின்னும் இரத்தம் வழிவது நிற்க 5லிருந்து 10 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ளும்.

மீண்டும் விசயத்திற்கு போவோம். அந்த அட்டைகளுக்கு பயந்தும், மேலும் மேலும் வெளிச்சம் மங்கி இருண்டு கொண்டே சென்றதால் இதற்கு மேலும் எந்த திசையில் செல்கிறொம் என்பதனை அறியாது, நடப்பதது உசிதமல்ல என்பதனை கொண்டு வெளியில் வந்துவிடுவது என்று முடிவு கட்டினோம். ஏனெனில், திசைகாட்டி காட்டும் திசையில் சென்று நடக்கும் பொழுது சரிவு மிக மோசமாக நடக்க முடியாத பட்சமாக இருக்கும் பட்சத்தில், திசையை மாற்றி நடக்க வேண்டி வரும், அவ்வாறு அடிக்கடி மாற்றி மாற்றி சுத்தி நடக்கும் பொழுது நேரமும் விரயமாகி, காணமல் போகவும் சாத்தியமுண்டு.

எனவே, வெளியே வந்து விட்டோம். மணியைப் பார்த்தால் மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் தூரலாக மாறி இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த சோலை ஓரத்திலேயே பெரிய பாறை ஒன்றை கண்டோம். அருகிலேயே ஒரு மரமும் கூட, சிறு தூரலிருந்து தப்பித்துக் கொள்ள. பாறையான பகுதி அட்டைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஏனைய மிருகங்களின் அண்மையினை அறிந்து கொள்ளவும்.

இப்பொழுது, தெரிந்து விட்டது. இரவு இங்குதான் கழியப் போகிறது எங்களுக்கென்று. இன்னும் அந்த அரிசியும் ஏனைய பொருட்களும் கைவசம் இருக்கிறது. ஓல்ட் மாங்க்தான் மிஸ்ஸிங். ஒரு உரச் சாக்கும் கைவசம், அது முருகனின் அவசர குடையாக அவாதாரமெடுத்துக் கொள்ளும் அவ்வப்பொழுது. இப்பொழுது அந்த உரச் சாக்கும், எங்களது இரண்டு பேரின் மழை கோட்டும் எங்களுக்கு கேம்பிங்க் கூரையாக ஆகிப் போனது.

முதலில் என்னைப் பார்த்து சிரித்தார்களே ஞாபகம் இருக்கிறதா, காப்பி போடும் பொழுது, சுள்ளி பொருக்குவதில் உதவினேன் முருகனுக்கென்று? இப்பொழுது சுள்ளி கதைக்கு உதாவாது. எரிக்கக் கூடிய வகையில் உள்ள மரக் கிளைகள் வேண்டும். அதுவும் ஒரு பணிரெண்டு மணி நேரத்திற்கு எரிக்கப் படும் விதமாக.

அப்படியானால், எல்லோரும் எழுந்து சென்று முழுதுமாக இருட்டுவதற்கு முன்பு பொருக்கி சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. முருகனுக்கு, கவலைப் படர்ந்த சந்தோஷம், சில மடையன்கள் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து தனக்கு உதவுவதை பார்த்து ;).

ஒரு வழியாக கிடைத்தது. தண்ணீர், தண்ணீருக்கு என்ன பண்ணுவது? அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் பிளவிலிருந்து ஒரு நீண்ட புல்லின் நுனியின் வழியே வடிந்த சொட்டு நீரை, கால் கடுக்க நின்று அரை பாத்திரம் நிரப்பி எடுத்து வந்தோம். சமைப்பதற்கு அது உதவியது. கேம்ப் தீயும் போட்டாகிவிட்டது. நமது கருவாட்டு ப்ரியர் - குருஷிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அடடா, பசங்களுக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம் கிடைச்சுக்கிட்டு இருக்குங்கிறத நினைக்கும் பொழுது.

ஆனா, குளிருதே என்ன பண்ணுவது. இருந்த ஒரு நண்பியையும் நேரமாக நேரமாக ஒரு வட இந்திய நணபர் தனது கூட்டுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். நானெல்லாம் ஒரு ட்யூப் லைட் அப்ப (அந்த காலத்தில...:-)) . சரி அது போகட்டும், அந்த இரவு, சுழற்சி அடிப்படையில் ஒருவர் மாத்தி ஒருவர் கண் விழித்திருந்து (காவலுக்காக), தூங்கி வழிஞ்சு கொண்டே, அந்த மிஸ்ட், அந்த தூரல், அந்த த்ரில் அப்படின்னு ஒரு கலந்த கலைவயா கழிந்தது.

விடிந்ததும் சில காட்டெருமைகள் அருகில் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். பார்த்ததும் எங்களுக்கு தெரிந்த சங்கோதப் பாஷையில் ஒருவருக்கு ஒருவர் தலையாட்டிக் கொண்டு, சாமீ திரும்ப குடிலுக்கு நடையைக் கட்டுவொமென்று, குருஷியை மல்லுக்கட்டி திரும்ப அழைத்தோம். மீண்டும் மழையில் நனைந்த குறிஞ்சு பூக்களினுடே நடந்து மதியம் போல குடில் வந்த்தடைந்தோம்.

அந்த இரவு எல்லா இரவுகளை விடவும், ஒரு சிறந்த இரவு எனக்கு. இப்ப வுடு ச்சூட்... நீங்க என்னா இரவுன்னு நினைச்சுக்கிட்டு படீச்சீங்க இதுவரைக்கும்;-))

இதற்கு முன்னால் எழுதப்பட்ட டாப் ஸ்லிப் தொடர்பான பதிவுகள்:

காதலிக்க நேரமில்லை...!

அபூர்வக் காதல் : சிம்பயொசிஸ்

பிள்ளையார சந்திச்சப்பா: யானை விரட்டு..!

Friday, November 24, 2006

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Image Hosted by ImageShack.us
இந்த பவளப் பாறைகளை (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை என்னையும் சேர்த்துத்தான். ஏனெனில், இவைகள் கடலுனுள் வாழ்கின்றன. பெரும்பாழும் இவைகள் வசிக்கும் பகுதி பூமத்திய ரோகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளில். அதிகமாக சொல்லப் போனால் பசிபிக் மகா சமுத்திரத்தில் என்று கூறலாம். நம்மூரில், அந்தமான் தீவுகளிலும், லக்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் காணலாம்.

அய்யோ! இவன் சொந்தரவு தாங்கலையே. போட்டுக் கொல்லப் போறனேன்னு, அழுக ஆரம்பிச்சுட்டீங்களா, மக்களே! இவனுங்கள பத்தி நாம எல்லோரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும். நான் இங்க, தேவையில்லாத விசயத்தை எடுத்திட்டு வாரது இல்லைன்னு ஒரு மிகப் பெரிய சபதமே எடுத்துருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இந்த பவளப் பாறைகளை பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியமா படுது எனக்கு.

Image Hosted by ImageShack.usபவளப் பாறைகளை நாம் அக்குவாரியங்களில் (Aquariuam) பார்த்திருக்கலாம். இவைகளுக்கெனவே, அங்கு தனி காட்சித் தொட்டிகள் அமைத்திருப்பார்கள். ஒரு முறைப் பார்த்தால் நம் கண்களை விட்டு அகலாமல் இருக்கக் கூடிய பல வண்ன நிறங்களில் பாறையை ஒத்த அமைப்புடன் பல வடிவங்களில் காணலாம் இவைகளை.

அத்தோட, இந்தப் பவளப் பாறைகள் உண்மையிலேயே ஒரு பிராணியா, இல்லை தாவரமா இல்லை அதுவுமில்லை இதுவுமில்லை பல தாதுப் பொருட்களாலான மட்டியா என்று கூட எண்ணத் தோண்டும். அப்படி நம் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு கொள்ளை அழகுடனும், செயற்கைத்தனமாக செய்து வைக்கப் பட்டதைப் போன்ற பிரமையையும் ஏற்படுத்தி விடும்.

Image Hosted by ImageShack.usசரி இவைகள் தான் என்ன? இவைகள் ஒரு பிராணியே! கடலினுள் ஒரு மழைக்காடுகள் என்று அழைக்கப் படுவதற்குக் காரணம் - "மழைக்காடுகள்" இயற்கையாகவே உயிர்-பன்முகத்தன்மைக்கு பெயர் போனது. உலகத்தின் அதிகப் படியான தாவர வகைகளும், விலங்குகளும், மற்ற சிறு ஜீவராசிகளும் அக் காடுகளில்தான் அதிகம் வசிக்கிறது.

Image Hosted by ImageShack.usஅது போலவே, இந்த பவளப் பாறைகளை சுத்தி நிறைய வகை மீன் இனங்களும், மற்ற சிறு கடல் வாழ் ஜீவராசிகளும் தனது பாதுகாப்பிற்கெனவும், உணவுத் தேடலுக்கெனவும் இந்த சூழ் நிலையை சார்ந்து வாழ பழகிக் கொண்டது பரிணாமத்னுடையே.

அது மட்டுமல்லாமல் இந்த பவளப் பாறைகள் சுற்றுச் சூழலுக்கு மற்றொரு வகையிலும் பெரும் பங்கு ஆற்றுகிறது. அது, ஒரு தீவின் அமைப்பும், அதன் சீதோஷ்ன நிலையையும் கூட இந்த பவளப் பாறைகளின் கட்டமைப்பும், எண்ணிக்கையையும் (கூட்டமைப்பும்) பொறுத்தே கூட அமைகிறதாம். அப்படியெனில், இந்த ஜீவராசிகளின் முக்கியத்துவம் சொல்லித் தெரிவதற்கில்லை, இல்லையா?

இந்த பவளப் பாறைகள் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச ஜெல்லி மீன் இருக்கில்ல அந்த வகையை சார்ந்த பேரினமான Cnidaria இனத்தை சேந்ததுகள் தானாம். என்னய்யா, இப்படிச் சொல்லிப் புட்ட ஜெல்லி மீன்களின் வகைதான் இந்தப் பவளப் பாறைகள்னு நின்னைக்கிறீங்களா. அப்படி நினைச்சீங்கன்னா இந்தாங்க இதனையும் பிடிங்க...

இதுகளும் இனப் பெருக்க காலத்தில் உயிரணுவையும், சினை முட்டையையும் தண்ணீரில் விட்டு விடுகின்றன. இந்த ரெண்டும் சந்திச்சுக்கிட்டப்ப டச்சிங் டச்சிங் ஆகி கருவாகி, பிறகு லார்வாவாகிறாய்ங்களாம் இதுக்கு பிளானுலான்னு (Planula) பேராம்.

Image Hosted by ImageShack.usபிறந்து விழுந்தவுடன் பார்த்தாக்க எல்லா பேபிகளும் பார்க்கிறதுக்கு பூமாதிரி பல விரல்களுடன் ஜெல்லி மீன் போன்ற தோற்றத்துடன் ஆடி, அசைஞ்சு, மிதந்து திரியுதுங்களாம், பிறகு நாட்பட நாட்பட ஒரே இடத்தில அசையாம இருக்கிற மாதிரி ஒரு இடத்த தேர்வு செஞ்சுகிட்டு செட்டில் ஆகிடுதுகளாம். அந்த மாதிரி இடம் ஏற்கெனவே கூட்டமா தன் இனத்தை சேர்ந்த ஆட்கள் இருக்கிற இடமாகக் கூட இருக்கலாமாம்.

அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமா தன்னைச் சுத்தி ஒரு ஓடு கட்டிக்கிடுதுகள். அது எப்படிய்யா நேசி, சாத்தியம் அப்படின்னா, இருங்க அந்த டெக்னிக்கல் பகுதியையும் சொல்லிப் புடுறேன். தண்ணீரில் கரைந்துள்ள கரியமிலா வாயுவையும் (C02)) கால்சியத்தையும் (Ca) கிரகித்து அதனை கால்சியம் கார்பனேட் (CaCo3) ஆக மாற்றி கெட்டியான ஒரு சுண்ணாம்பு மட்டி மாதிரி ஆக்கி புடுதுகள் இந்த சமர்த்துகள் தனது வீடாக.

இது பார்க்கிறதுக்கு ஒரு சின்ன பூஞ் ஜாடி மாதிரியோ, மான் கொம்பு மாதிரியோ (ஓன்றின் மேல் மற்றொன்று அடுக்கடுக்காக கட்டுவதால்) அல்லது பல் வேறு வண்ண மற்றும் அமைப்புகளில் காணப் பெறலாம். அந்த மாதிரி அவ அவன் வீட்டுக்குள்ள அவன் அவனும் இருப்பாய்ங்க தான் சாவுற வரைக்கும்.

இப்படித் தனித்தனியா வூடு கட்டி இருந்தாலும், ஒரே இடத்தில கூட்டமா கட்ட ஆரம்பிச்சு அதுவே மிகப் பிரமாண்டமா அமையப் போய் பார்க்கிறதுக்கு, மலை முகடுகள் மாதிரியும், குகைகளோடவும் இருக்கிறதினால மற்ற கடல் ஜீவராசிகளுக்கு இதுவும் ஒரு புகலிடமா அமைஞ்சுடறது போல. அதினாலேதான் பவளப்'பாறைகள் அப்படின்னு பெயர்க் காரணம் போல.

இதோட பிரமாண்ட கட்டமைப்பைப் பற்றி தெரிஞ்சுக்கிடணுமின்னா, இப்ப எல்லோருக்கும் தெரிஞ்ச நம்ம டைடானிக் கப்பல் இருக்கில்ல அது மேல கூடி இவனுங்க குடும்பம் நடத்த ஆரம்பிச்சானுங்கன்னு வைச்சுக்கோங்க, அதோட சைஸ்க்கு சந்து பொந்தெல்லாம் வலைச்சு வலைச்சு பல நிறங்களில், பல அமைப்புகளில்னு கட்டினா எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க...

இவிங்களும் இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் கோஷ்டிதான். இரவில் தன் வீட்டு வாயிலின் அருகே அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டு வரப் போற பிளாங்டான்களை சாப்பிட்டுகிடுவாய்ங்களாம். இதிலென்ன நமக்கும் அதுகளுக்கும் ஒரு வித்தியாசமின்னா, நம்மூரில் இன்னும் சில பேர் பகல் நேரத்திலேயே இப்படி உட்கார்ந்து கொண்டே ஊர அடிச்சி உலையில் போட்டு உயிர் வாழுங்க அதுதான்.

ஏற்கெனவே சொன்னேன் இல்லையா, நீரில் கலந்துள்ள கரியமிலா வாயுவைக் கொண்டு ஓடுகள் தயார் பண்ணுகின்றனன்னு; அப்படிங்கும் பொழுது, இந்த கடல் வாழ் ஜீவராசிகளனைத்தும் தண்ணீரில் கரைந்துள்ள பிராணவாயுவை உட் கொண்டு, கரியமிலா வாயுவாக வெளித் தள்ளும் பட்சத்தில், அதில் ஒருத்தர் இந்த கரியமிலா வாயுவை பயன் படுத்தி நீரில் சமநிலைப் படுத்துவது எவ்ளோ அவசியம் பார்த்தீங்களா. அடிச்சேன் சிக்ஸர் இப்போ... :-) இன்னொரு சிக்சரும் அடிசுடறேன் கையோட, கடல் பொங்கி வரும் பட்சத்தில் பெரும் அலைகள் கிளம்பினால் அது பேரலைகளாக கரைக்கு வந்து சேரமல் அடக்கி வாசிக்க வைக்கும் ஒரு சுவர் போலவும் வேலை செய்தாங்கோ...

ஆனா, பாருங்க மக்கா இந்த பவளப் பாறைகளின் மேல் நம்மால் கொண்ட அதீதக் காதல் இதன் நிறத்திர்கெனவும், அமைப்பிற்குகெனவும் அங்கு சென்று திருடியும், மீன்களை வெடி போட்டு பிடிக்கிறேன் என்று இவைகளுக்கும் வெடி வைத்து கட்டமைப்பையே உடைப்பதாலும், மற்றும் சுற்றுப் புறச் சீர்கேடுகளை உற்பத்தித்தும், இந்த கடல் மழைக்காடுகளை மிக வேகமாக அழித்து வருகிறோம்.

அதன் பொருட்டு ஒரு விழிப்புணர்வேற்று படலமாகவே இந்த நேசிப்'புலம்பல்ஸ் இங்கே.

ஆமா, நாம எங்குதான் விட்டுவைச்சோம் திருடாம, உருப்படாததுகள்.

Thursday, November 09, 2006

*அந்திம காலம்* ஆசிரியரின் கேள்வி எல்லோரின் பார்வைக்கும்

அன்பு நண்பர்களே, திரு ரெ. கார்திகேசு *அந்திம காலத்தின்* கதையாசிரியர் மேலும் இங்கு சில விபரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அத்துடன் ஒரு கேள்வியையும் நம் முன்னால் வைத்திருக்கிறார். அந்த கடிதம் ஒரு பின்னூட்டமாக வந்திருப்பதால் நம்மில் நிறைய பேர் அதனை தவற விட்டுவிடலாம், அதனால்தான் இந்த பதிவினை இங்கு தனியாக இடுகிறேன்.

அவரின் கடிதம் இதோ:

ரெ.கா. said...

அன்புள்ள பிரபாகர்,

இதுவரை நான் எழுதியுள்ள நூல்கள்: நாவல்கள்: வானத்து வேலிகள்" (1981); தேடியிருக்கும் தருணங்கள் (1993);அந்திம காலம் (1998); காதலினால் அல்ல(1999); "சூதாட்டம் ஆடும் காலம்" (2006)

சிறுகதைத் தொகுப்புகள்: புதிய தொடக்கங்கள் (1974); மனசுக்குள் (1995); இன்னொரு தடவை (2001); ஊசி இலை மரம்(2003)

கட்டுரைத் தொகுப்பு: "விமர்சன முகம்" (2004)

பெரும்பாலான நூல்கள் சென்னை மித்ர பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்டவை.

Thiru S. Ponudurai (ESPO)

Mithra Publications
375/8-10 Arcot Road
Chennai 600024
India.
Tel: 00-91-44-23723182 or 24735314
Fax: 33733160

இவற்றுள் "அந்திம காலம்" என மனதுக்கு அணுக்கமானது. ஆனால் அது விரிவான வாசக கவனிப்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மலேசியாவில் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு "தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது. மலாயாப் பல்கலைக் கழகத் திறனாய்வாளர்கள் அது பற்றி எழுதியிருக்கிறார்கள்.

Gabriella Eichinger Ferro-Luzzi என்பவர் (பெண்) ஒரு இத்தாலியத் தமிழ் ஆய்வாளர். லா.ச.ரா.விடம் நெருக்கமாக இருந்து அவர் கதைகள் பற்றி இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுதிப் பதிப்பித்துள்ளார். இவர் என்னைப் பற்றிக் கேள்விப் பட்டு என்னிடம் தொடர்பு கொண்டு என் நூல்களை அஞ்சல் மூலம் பெற்றார். பின்னர் ஒரு முறை (நான்காண்டுகளுக்கு முன்) என்னைக் காண மலேசியா வந்தார். நாங்கள் சந்தித்த போது அழகிய எழுத்துத் தமிழில் பேசினார். என்னை ஆங்கிலம் பேச விடவே இல்லை.

எனக்கு அன்பளிப்பாக ஒரு படப் போஸ்கார்டைக் கொடுத்தார். ரோமில் உள்ள மைக்கல் ஏஞ்சலோவின் Creation என்னும் கூரை ஓவியத்தின் படம் அது. எங்கும் கிடைக்கும். யூரோ 50 காசுக்கு வாங்கலாம். ரொம்ப சாதாரணமான பரிசு எனினும் மரியாதையுடன் வாங்கி வைத்துக் கொண்டேன். சந்திப்பின் முடிவில் சொன்னார்: "இந்தப் பரிசு நான் உங்கள் அந்திம காலத்தைப் படித்ததன் நினைவாக!"


எனக்கு இது புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. புரிந்தவுடன் இது எவ்வளவு அர்த்தச் செழுமையுள்ள பரிசு என்றும் புரிந்தது.


நாவலைப் படித்துள்ள உங்களில் யாருக்காவது இது புரிந்தால் சொல்லுங்கள். யாரும் சொல்லவில்லை என்றால் நானே பிறகு சொல்லுகிறேன்.
அந்த வருகையின் போது கேப்ரியெல்லா மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் பகுதியில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு தமிழிலேயே ஒரு செமினார் நடத்தினார். "நவீனத் தமிழ் இலக்கியத்தில் மரணம்" என்பது அதன் தலைப்பு. அதில் "அந்திம காலம்" பற்றியும் பேசினார்.


இறுதியாக ஓராண்டுக்கு முன்னர் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் (அவர் மின்னஞ்சல் வைத்துக் கொள்ளவில்லை) தனக்கும் இரத்தப் புற்றுநோய் கண்டிருப்பதாகவும் சுந்தரத்தைப் போல் தமக்கு அவ்வளவு துயரங்கள் ஏற்படக் கூடாது என வேண்டிக் கொள்வதாகவும் எழுதியிருந்தார். அதன் பின் தொடர்பு விட்டுப் போயிற்று.

Gabriella Eichinger Ferro-Luzziயின் எழுத்துக்கள் (அல்லது reference) இணையத்தில் அகப்படும்.

ரெ,கா

Thursday, November 02, 2006

மூளை மாற்றுச் சிகிச்சை முடிந்தால் என்னவாகும்...

இன்று எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. உடலின் எல்லா பாகங்களிலும் உள்ள உடலுறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக, மற்றொரு பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் மாற்றி வைக்கக் கூடிய சாத்தியம் மருத்துவத் துறையில் வளர்ந்து வருகிறது.

இந்த பின்புலத்தில், கையே வைக்க முடியாத (அட கத்தியைத்தாங்க அப்படிச் சொன்னேன்) ஒரு உடல் பாகமுன்னா அது மூளையாகத்தான் இருக்க முடியும். எசகுபிசகா எங்காவது தொட்டுவைச்சா பிறகு அதில கோளாறு இதில கோளாறுன்னு மனிதனின் மற்ற பாகங்களில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிச்சுடும், இல்லையா.

இப்ப சும்மானாச்சுக்கும் யோசிப்போம். கொஞ்ச காலங்களுக்கு பிறகு அப்படியே அலேக்கா, மூளையையும் பெயர்த்து (donor) இன்னொரு ஆளுக்கு (மூளையில கட்டி வந்த ஒருவருக்கு) மாற்று அறுவை சிகிச்சை (transplantation) மூலமா வைச்சு தைக்க முடிந்தால் என்னவாகும் அந்த புது மூளையை பெற்றவருக்கு (receipient), அப்படிங்கிறதுதான் என்னோட கேள்வி.
Image Hosted by ImageShack.us
அப்படி கேட்டவுடன் அட என்னங்க நேசி, ஒரு சிறுநீரக மாற்றுச் சிகிச்சையில என்ன நடக்குமோ அதுதான் நடக்கப் போகுது இங்கேயும் அப்படிங்கிறவங்களுக்கு, கொஞ்சம் பொருங்க.

சிறுநீரகம் பெற்றவுடன், சிறுநீரகம் செய்ய வேண்டியதான இரத்தத்தை சுத்திகரித்து அதிலுள்ள அதீத வேதியப் பொருட்களை கழிவுகளாக நீக்கப்பெற்று சமச்சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது இல்லையா? சிறுநீரகம் யோசிப்பது கிடையாது, மற்ற உடல் உறுப்புகளை இயக்குவது கிடையாது, மூளையைப் போல, இல்லையா?

அப்படியானால், மூளையை இந்த பெறுநர் பெற்றவுடன் அவருடைய பழைய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே போயே போய், எவரிடமிருந்து அந்த மூளை பெறப்பெற்றதோ அவருடைய குண நலன்கள் பாதுகாக்கப் பட்ட பழைய நினைவுகள் ஏனைய பிறவும் அத்துடனே வரச் செய்யும் இல்லையா?

அப்படிப் பார்க்கும் பொழுது, எண்ணங்களைக் கொண்டு அதனை செயல் முறை படுத்தும் பொழுதுதான் அதற்கு பிரதி பலன்களாக நன்மை தீமைகளை நாம் அடையப் பெறுகிறோம். மதங்ககளுக்கும் இந்த மூளைக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. இந்த கர்மா (Karma) வினைகள் அகற்றப் பெறுகின்றனவா? ஆத்மா என்ற விசயம் இன்னும் அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப் படாத பட்சத்தில், மூளைதான் எல்லாமே என்று அறிவியல் அரிதியிட்டு கூறியிருக்கும் பட்சத்தில், கீழே கேட்கப் பட்ட சில சிந்தனைகளுக்கு உங்களின் கண்ணோட்டத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

உதாரணமாக, ஒரு கொலைகாரரின் மூளையை அகற்றி விட்டு, ஒரு புனிதரின் (அல்லது நமது பரிமாணத்தில் நிரம்ப நல்லவனாக வாழ்ந்த;) மூளையை மாற்றுச் செய்தால், அங்கு கொலைகாரரின் பாவங்கள் எல்லாமே பதிவேட்டிலுருந்து நீக்கப் பெற்று, இப்பொழுது கொலைகாரர் புனிதரானார் என்று கொள்ள முடியுமா?



பி.கு: இது ஒரு Frankenstein தனமான கேள்வி தெரியும். ரொம்ப நாளாச்சு நேசியில பதிவு போட்டு அப்படியே அமெரிக்காவில ஹாலோவின் விழா வேற, கொஞ்சம் பயம்மா கேள்வி கேட்போமின்னு... ஹி..ஹி..ஹி.

Tuesday, September 26, 2006

அம்மா லூசியும், பெண் கயல்விழியும் - படக் கதை!!!

போன வாரத்தில் போட்ட இந்த பதிவில் பாலியோ-ஆன்ந்ரோபாலாஜி துறையைபற்றியும் அதன் கடினமான அணுகுமுறையும் பற்றிம் சொல்லியிருந்தேன். இருப்பினும் அவர்கள் அவ்வாறு இந்த இணைக்கும் பாலங்கள் (missing link) என்று அழைக்கப்படும் மனித மூதாதையர்களை கண்டெடுக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு நம் வழித்தோன்றல் பற்றி அறிந்து கொள்ள எக்கச்சக்கமான வழி வகைகள் பிறப்பதாக கருதுகிறார்கள்.

அன்மையில் லூசியும், அவரின் குழந்தையை ஒத்த கயல்விழியும் ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் என்ற இன வகை மனித மூதாதைகள் என்பதும் ஒரே ஏரியாவிலிருந்து அவர்களின் எலும்பு மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிந்து கொண்டோம்.

இப்பொழுது எப்படி இந்த லூசியும், கயல்விழியும் மரத்திலிருந்து இறங்கி இருகால்களை மட்டுமே நம்பி சமவெளியில் நடந்திருக்கக் கூடும் என்பதனைப் பற்றி சிறு கண்ணொட்டத்துடன், சில படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றுதான் இந்தப் பதிவு.

ஒரு 6லிருந்து8 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் காடுகளில் வசித்த விலங்குகள் தடாலென ஒரு பேரழிவை சந்தித்தாம் (mass extinction). அதனையொட்டி மிச்சம் மீதியிருந்த விலங்கினங்களின் தகவமைப்பு திறனும் இருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பரிணமித்ததாம்.

அதன்பொருட்டே இந்த லூசியும், கயல்விழியும் மரங்களில் வாழ்ந்தவர்கள் வேறு வழியில்லாமல், சமவெளிகளில் வாழ நேரிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எழுந்து நடந்தால்தான் எதிர் வரும் எதிராளியை காணமுடியும் அப்படி காணும் பொருட்டு தூரத்திலேயே கண்டுணர்ந்து தப்பிப்பதற்கு ஏதுவாகும் என்பதற்கினங்க கண்களின் நேர் கொண்ட பார்வையும், இடம் பெயர்வுக்கென இரு கால்களில் எழுந்து நின்று நடக்கும் திறனும், மற்றவைகளும் காலத்தினூடையே கைவரப் பெற்றிக்ககூடுமென அறியப்படுகிறது.

இவர்களே பின்னாலில் ஹோமோ சாபியன்ஸ் என்கிற 'நாம்' உப கிளையாக பரிணமிக்க உந்துதலாக அமைந்ததாம்.

சரி இப்பொழுது லூசியும் அவரது கணவரும் எப்படி ஒரு மாலை நேர நடை பயில சென்றிக்கக் கூடும்... நீங்களே பாருங்கள், எப்படி கூலாக எந்த டிஸ்-ஆர்டர்ஸ், டிவர்ஸ் கோர்ட் பற்றிய பிரஞைகளுமில்லாமல், காலில் ஆடிடாஸ் கூட இல்லாமல் பனியில் ஓர் நடை :-)...

Image Hosted by ImageShack.us

லூசியின் பாஸ்போர்ட் சைஸ் படம் அமெரிக்கா வருவதற்கு விசா எடுக்கும் நிமித்தமாக எடுத்தது... :-))...

Image Hosted by ImageShack.us

லூசியின் குழந்தை கயல்விழியின் பாஸ்போர்ட் சைஸ் படம் வெள்ளத்தில் அடித்து செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்தது ;-((

Image Hosted by ImageShack.us

வயசாகிப் போன லூசி...

Image Hosted by ImageShack.us

Thursday, September 21, 2006

3ல் மரணித்த 3 மில்லியன் வருட பரிணாமக் கயல்விழி...

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈத்தியோப்பியாவில் ஒரு ஏரி போன்ற அமைப்பிற்கு அருகே சில சிதைந்து போன மனித மண்டையோடு மற்றும் இதர உடல் பாக எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. பிறகு கார்பன் தேதி குறிப்பிட்டின்படி (Carbon Dating) அது ஒரு பெண்ணின் எலும்புகள் எனவும் சுமார் ஒரு 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆஃப்ரிகா கண்டத்தில் வாழ்ந்த ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் (Australopithecus afarensis) எனும் வகை மனித மூதாதைகள் இனத்தை சேர்ந்தது எனவும் கண்டறியப்பட்டது.

அதற்கு லூசி எனவும் பெயரிடப்பட்டது.லூசி ஒருநாள் நோய் வாய் பட்டிருக்கும் பொழுது ஏரிக்கு நடந்து வரும் பட்சத்தில் ஏரிக்கு அருகிலேயே தடுமாறி மாண்டிருக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டது.

Image Hosted by ImageShack.us

இப்பொழுது அந்த ஏரியாவிற்கு மிக அருகிலேயே ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க கைக்குழந்தையின் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்ப நாமே இந்த குழந்தைக்கு ஒரு பெயர் கொடுத்திடுவோம். கயல்விழி. சுலபமாக இருக்கும் பேசுவதற்கு என்பதற்காக. கயல்விழியும், லூசியின் இனத்தை சார்ந்தவராம். இவர்கள் சுமாருக்கு 3 லிரிந்து 3.7 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையர்கள்.

சொல்லப்போனால், இந்த பாலியோஆன்ந்ரோபாலாஜி (தமிழ் மொழிபெயர்ப்பு - தேவை ) துறை ஒரு கடினமான ஏரியா. ஒரு சின்ன சில்லு எலும்பு துண்டு கிடைக்கிறதுக்கே மாத கணக்கில் பொறுமையாக மண்தோண்டு கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டாமல், மிக மென்மையாக முட்டிக்கால் தேய அங்குலம் அங்குலமாக கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் துழாவ வேண்டும்.

அப்படியே ஒரு பல்லு கிடைத்தாலும், மண்ணு மாதிரியே நிறத்தோட சின்ன ஒரு கல்லு மாதிரி கூட இருக்கலாம், அப்பன்ன எவ்ளோ கவனத்தோட பார்க்கணும் பாருங்க.

அது அப்படி இருக்கும் பொழுது இப்படி சுளையாக, ஒரு கபாலம் கண்டெடுக்கிறது, அதுவும் நமக்கு மிக நெருங்கிய சொந்தம் ஒண்ணு ரொம்ப ரொம்ப அபூர்வங்க.

இந்த கண்டெடுப்பில் என்ன ஒரு சிறப்புன்னா, இது போன்ற கயல்விழி ஒத்த கைக்குழந்தைங்களோட எலும்புங்க கிடைக்கிறது ரொம்ப அரிதாம். அதுவும் மண்டையோடு சிந்தமா, சிதையாமல் கிடைத்தது இதுவே முதல் முறையாம். அதினால கண்டெடுத்தவங்களுக்கு பம்பர் லாட்டரி சீட்டு விழுந்த கணக்க ஏகப்பட்ட சந்தோஷமாம்.

இதற்கு முன்னால் நம்மோடு சமகாலம் வரையிலும் வாழ்ந்த நியான்டர்தால் வகை குழந்தை மண்டையோடு சிரியாவில் கண்டெடுக்கப்பட்டது, இருப்பினும் கயல்விழி வாழ்ந்த வருடங்களோட ஒப்பிடும் பொழுது நியாண்டர்தால் கிடைத்ததில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறதாம்.

கயல்விழி மண்டையோடு மற்றும் இதர உடல் எலும்புகளை கொண்டு பார்க்கும் பொழுது, கயல் நம்மைப் போலவே இருகால்களை (Bipedal walk) கொண்டு நிமிர்ந்து நடந்து திரிந்திருப்பதாகவும், கைவிரல்களை கொண்டு பார்க்கும் பொழுது மரம் நிறைய ஏறியிருக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது.

கயல்விழி எப்படி தொல்பொருளாக ஆகிப்போனால் என்பதற்கு கண்டெடுத்த இடத்தின் நிலவரத்தை கொண்டு, அவள் ஒரு வெள்ள நேரத்தில் மரணித்து, மணல்படுகையில் கற்களை கொண்டு புதைக்கப்பட்டிருக்கலாமென்று கருதப்படுகிறது.

கிடைத்த எலுப்புகளை கொண்டு அம்மாவைப் போன்ற லூசிக்கும், குழந்தை கயலுக்கும் வளர்ச்சி அடிப்படையில் சில வேறுபாடுகளை கண்டறிவதோடு, நமக்கும் அவர்களுக்கும் மிடையே தொடர்புகள் இப்படி பல விசயங்களை கண்டறிய உதவுமாம்.

கயல்விழியின் அத்மா சாந்தியடைய எல்லோரும் ஒரு நிமிடம் மானிட்டர்களுக்கு முன்னால் கண் மூடி மொளன அஞ்சலி சொலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.



பி.கு: இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே...ஷேம், ஷேம் பப்பி ஷேம்...

Monday, August 28, 2006

பூச்சிகளின் கண்களினுடே இவ்வுலகம்...!!!

இவ்வுலகில் தழைத்து ஓங்கும் எல்லா ஜீவராசிகளுக்கும், பரிணாமம், ஒவ்வொரு வகையிலும் தன்னிடமுள்ள அற்புதங்களை அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறது என்பதனை நமது கவனத்திலிருந்து தூரத்தில் இருக்கும் இந்த பூச்சிகளின் கண்களினுடே சொன்று நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த உலகம் எவ்வாறு அவைகளுக்குக் காணக் கிடைக்கிறது என்று பார்ப்போமா?

பூச்சிகளுக்கு மண்டை எங்க இருக்கு, உடம்பு எங்கேயிருந்து தொடங்குதுன்னு கண்டுபிடிக்கிறதே பெரிய விசயம், இதில அதுகளுக்கு மூளை இருக்குன்ன நம்புவோமா? அதிலும் இந்த ஜீவராசிகளின் உலகத்திலேயே, பூச்சிகளுக்குத்தான் சிறப்பு கண்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், சொல்லவே வேண்டாம். நமக்கெல்லாம் ஆச்சர்யம் பீரிட்டு கிளம்ப.

Image Hosted by ImageShack.usஇப்ப ஒரு தட்டாம் பூச்சிய (Dragon Fly) எடுத்துக்குவோம், அவ்வளவு வேகமாக பறந்துகிட்டு பல அடி தூரத்தில பறந்து போயிகிட்டு இருக்கிற அதை விட சிறுசா இருக்கிற இன்னொருப் பூச்சிய எப்படிங்க லபக்கடீர்னு பிடிச்சு சாப்பிடுது. யோசிச்சா ஆச்சர்யமா இல்ல?

ஆனா, இந்த பூச்சிகளின் உலகமில்லாமல் இன்னொருத்தரும் இந்த சிறப்பு அமைப்பை பகிர்ந்துக்கிறார், அவருதான் கடல்ல வசிக்கிற ஆக்டோபஸ் (Octopus). இவங்க ரெண்டு பேருக்கும் தான் யாரு பெரிய ஆளு இந்த தகவமைப்பிலன்னு தகராறு வருமாம், நம்ம அறிவியல் உலகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களிடத்தே. நாம பின்னாடி ஒரு "நாட்டாமை ஸ்டைல்ல தீர்ப்ப கொடுத்திடுவோம்."

இந்த பூச்சி பார்ட்டிங்களுக்கு நம்ம கண்பார்வை மாதிரி இல்லாமல் "கூட்டுப் பார்வை"ன்னு (Compound Eyes) ஒரு தகவமைப்புங்க, அது எப்படின்ன எப்பாவது நீங்க ஒரு தட்டாம் பூச்சியவோ அல்லது வண்ணத்துப் பூச்சியவோ பிடிச்சு நல்ல கூர்ந்து கவனிச்சுப் பார்த்து இருந்திங்கன்னா தெரியும், கட்டம் கட்டமா (Facets) நிறைய அதன் கண்களிலிருப்பதை கவனிச்சுருக்கலாம்.

Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

இந்த ஒவ்வொரு கட்டமும் தனித்தனியா வரும் பிம்பங்கள பிடிச்சு பிறகு அதுகளை மூளைக்கு அனுப்பி எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பார்க்குதாம். அதிலும் பாருங்க இதுகளுக்கு பெரும்பாலும் கிட்டப் பார்வை. அப்படிங்கும் பொழுது, இதுகள் பார்க்கும் விசயங்கள நாம மைக்ரோஸ்கோப்பில் வைச்சு பார்த்தாத்தான் அதுக பார்க்கிற டீடைல் நமக்கு கிடைக்குமாம்.

இப்பப் புரியுதா எப்படி அத்துனுண்டு பூவுக்குள்ள இருக்கிற (மகரந்த) சூலுக்குள்ள ச்சூசை கண்டுபிடிச்சு மூக்க நுழைச்சு எடுக்கிதுன்னு.

நிறைய பூச்சி வகைகள் நல்ல வண்ன நிறங்களையோ, பளிச்சின்னு அடிக்கிற வெளிச்சத்த பார்க்கிறமாதிரியோ, இல்லென்னா நிறக்குருடாகவும் இருக்குதுகளாம். ஏன் அப்படின்ன, உதாரணத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள், அதீதமான நிறங்களைத்தான் நம்பி இருக்குதாம். சாப்பாட்டுக்கு, பூக்களைத் தேர்ந்துதெடுப்பதற்கும் கலவி நண்பர்களை அடையாளம் காண்பதற்கும்.

அதோட கண்களின் நிற நிறமிகள் நம்ம கண்களுக்குள் இருப்பதை விட ரொம்ப அதி சக்தி வாய்ந்ததாம். அப்படின்னா, நம்மலைவிட அதிகமான நிறங்கள அவங்க உலகத்தில் பார்க்கிறாங்கன்னுதானே பொருள்?

தேனீக்களின் உலகத்தில எப்படிப்பான்னு கேளுங்க, அவங்களுக்கு வெறும் கண்களுக்கு புலப்படும் நிறங்களுக்குகெல்லாம் அப்பாற்பட்டு, புற ஊதாக்கதிர்களைக் (UV) கூட பார்க்கமுடியுதாம். இன்னொன்னையும் கேளுங்க இதுகளோட இடப்பெயர்ச்சிக்கு சூரியனிடமிருந்து வரும் போலாரைசிடு வெளிச்சத்தை (Polarized light) கொண்டு வார போற வழி தெரிஞ்சுக்கிட்டு பொயித்து வருதுங்களாம். எனக்கு மண்டை சுத்துதுங்க உங்களுக்கு எப்படியோ.

இப்ப கடைசிய நான் முன்ன சொன்ன ஆக்டோபஸ் கண்களப் பத்தியும் பாத்துவிட்டு நேர தீர்ப்புக்கு போயிடுவோம். இந்த ஆக்டோபஸ்ங்களோட கண்கள், நாம் கண்களிலிருந்து எவ்வாறு வித்தியாசப் படுகிறது என்பதனை கொண்டு இவரோட பரிணாமப் பரிசு எவ்வளவு அற்புதமின்னு தெரிஞ்சுக்கலாம்.

Image Hosted by ImageShack.us

இப்ப நாம ஒரு ஃபிகர (object) பார்க்கிறோமின்ன நம்மளோட கண் தசைகள் சுருங்கி விரிஞ்சு இருக்கிற தூரம், கிடைக்கிற ஒளி இவைகளைக் கொண்டு அட்சஸ்ட் செஞ்சிகிட்டு பார்க்குது. ஆனா இவுக எப்படித் தெரியுமாவ, கேமர லென்ஸ் எப்படி முன்ன பின்ன போயி ஃபோகஸ் பண்ணுது அது மாதிரியே உள்ளே வெளியேன்னு பொயிட்டு பார்க்கிற விசயத்த பார்க்குதுகளாம்.

அப்படிப் பார்க்கப் போன நமக்கு பரிணாம மூலமா உடம்பில இருந்த முடி எல்லாம் உதிர்ந்ததைத் தவிர எதுவுமே நல்ல விசயம கொடுக்காம, இந்த நச்சு மண்டையை மட்டும் கொடுத்து எப்படி அடுத்த ஆளை கவுக்கிறதுன்னு ஐடிய பண்ணறது மாதிரி ஒரு மண்டையப் பரிசா கொடுத்து வைச்சிருக்கோ அப்படின்னு தோணுது.

இப்ப தீர்ப்பு நேரம்: அதுக ரெண்டும் சண்டை போட்டுகிதுகளா? எங்கள்ல யாருப்ப பெரிய ஆளுன்னு கேட்டுக்கிட்டு, அது அதுக உலகத்தில கிடைக்கிற, தேவைப்படுற விசயங்களுக்கு ஏர்த்தாப்ல உருப்புகள வாங்கிட்டு, தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருக்குதுக, அதுகளுக்கிடையே விட்டா நாம ஒரு போரை மூட்டிவிட்டு ஆயுதங்களையும் வித்துப்புடுவோம் போல.

Thursday, August 24, 2006

இழந்து தவிக்கும் சூரியக் குடும்பம்...!!!

வியாழக் கிழமை பொறந்ததும் பொறந்தது நம்ம சூரியக் குடும்பத்தில இருந்த ஒன்பது கோள்களில் ஒண்ணை (ப்ளூட்டோ) கிரகம் என்ற நிலையிலிருந்து இறக்கி "டுவாஃர்ப் ப்ளானட்" என்ற நிலைமைக்கு அண்மையில் Czech Republic (Prague) நாட்டில் நடந்த International Astronomical Union சந்திப்பில் வானவியல் விஞ்ஞானிகள் இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சரிங்க என்னங்க நினைச்ச ஒரு கிரகத்த சேர்த்துக்கிறாங்க பிறகு ஏதாவது ஒரு காரணத்த சொல்லி அந்த நிலையில இருந்து இறக்கிக்கிறாங்க.

Image Hosted by ImageShack.us

எந்த அடிப்படையில இதனை செய்றாங்க, அப்படின்னு தேடினேன் கிடைச்சத உங்ககூட பகிர்ந்து கொள்ளலாமேன்னு தான் இந்த பதிவு. இப்ப என்னன்ன அடிப்படையில ஒரு ப்ளானட்டை ப்ளானட்டாவும் இல்லன்ன, இந்த மாதிரி டுவாஃப் ப்ளானட் அது இதுன்னு பேர் கொடுக்கிறாங்கன்னு பார்ப்போம்.

ஒரு கிரகமின்னு சொல்ல கீழ்கண்ட மூன்று அடிப்படை தகுதிகள் அந்த கிரகத்திற்கு இருக்கணுமாம்.

1) அந்த கிரகம் சூரியனை மையமாக வைச்சு சுத்தணுமாம்.

2) அந்த கிரகத்தின் அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை அந்த கோளை வட்ட நிலைக்கு எடுத்து சென்றிருக்க வேண்டுமாம்.

3) அதன் அண்டைய வழியில் மத்த பொருட்கள் இதன் இருப்பை பாதிக்காத வண்ணம் வலியதாக இருக்கணுமாம்.

மேலே குறிப்பிட்ட மூன்றில் ஏதாவது இரண்டு ஒரு வானத்தில் சுற்றும் பொருளுக்கு (object) அமைந்தால் அது "டுவாஃர்ப் ப்ளானட்" என்றழைக்கப் படுகிறது.

அதற்காக நமது நிலவு ஏன் "டுவாஃர்ப் ப்ளானட்" நிலைக்கு அறிவிக்கப் படவில்லையென்றால், அது அப்படித்தானாம்.

சரி இந்த ப்ளூட்டோ கிரகத்தில நாம இறங்கின வுடனேயே அப்படியே உறைந்து போயிடுவோமாம், அவ்வளவு குளிர்ந்த நிலையில இருக்கிற ஒரு சுருங்கிப் போன கிரகமாம்.

இந்த ப்ளூட்டோ கிரகத்த வைச்சு நம்ம ஜாதகம்மெல்லாம் கணிப்பாங்களா, எனக்குத் தெரியல. அப்படி இந்த கிரகத்த கிரக நிலையில வைச்சு ஜாதகம் கணிச்சுருந்தா இப்ப அதுக்கெல்லாம் என்னவாகும்?

இப்படி இந்த கிரகத்த டி-பிரமோட் பண்ணதால நம்ம பள்ளிக்கூட நாட்களில் கடம் அடிச்சி வைச்சிருந்த ஒரு கிரகத்த மறக்கணும் இப்ப... நிறைய புத்தகங்கள்ல எழுதி வைச்சிருக்க அம் புட்டு விசயத்தையும் மாத்தணும். எம்புட்டு கவலை பாருங்க, நமக்கு.

Friday, August 11, 2006

புவியீர்ப்பு விசையை ஸ்தம்பிக்க செய்த சுனாமி...!

Image Hosted by ImageShack.us

2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் நடந்தேறிய இயற்கை சீற்றம் பூமியின் புவியீர்ப்பு விசையையே திருப்பிப் போட்டதாக அன்மைய ஆராய்ச்சிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளன.

அவ்வாறு புவியீர்ப்பு விசையில் மாற்றம் காணும் பொழுது பூமிக்கு அப்பால் நிலை நிறுதப்பட்டுள்ள சாட்டிலைட்களின் பாதை கூட விலகியதாக அறியப்பட்டதாம்.

இந்த 9.1 ரிக்டர் அளவுகோலில் கடலுக்கு அடியில் நடந்த பூகம்பம் கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவில் நடந்தேறியதாம். இதனால் சுமாத்ரா தீவுக்கருகில் உடனாடியாக புவியீர்ப்பு சக்தி குறைவு காணப்பட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.

இந்த பூகம்பம் எவ்வாறு பூவியீர்ப்பு விசையுடன் விளையாண்டிருக்க முடியும் என்பதனை இப்படியாக விளக்கியிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் பூகம்பத்தால் ஏற்பட்ட பிளவு ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதனால், பூமியின் மேல் ஓட்டில் உள்ள பாறைகளின் அடர்வு தன்மை குழைந்து புவியீர்ப்பு விசையுடன் சண்டை போட்டதாக தெரிகிறது.

இந்த புவியீர்ப்பு குறைவினாலோ அல்லது கூடுதாலலோ நமக்கென்ன ஆகாப்போகுது என்ற ஒரு கேள்வியை கேட்டு வைத்தால் அதற்கு விடை நமது உடம்பு எடையும் கூடலாம், குறையலாம் புவியீர்ப்பு விசையின் மாற்றத்தை பொருத்து (உதாரணமாக, இப்பொழுது நடந்த புவியீர்ப்பு சண்டையில் 150 பவுன்ட் உடைய ஒருவரின் உடல் எடை நமது எடையின் 25000த்தில் ஒரு அவுன்ஸ் குறைந்தாக அறியப்பட்டுள்ளது).

இது போன்ற புவியீர்ப்பு விசையின் மாற்றதினை முதன் முதலாக பூமிக்கு மேலிருந்து இந்த சுனாமியின் பொழுது மட்டுமே சாட்டிலைட்டுகளின் உதவி கொண்டு கவனித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 08, 2006

பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...

உலக மக்கள் தொகை ராக்கெட்டை விட அதி வேகமான முறையில் பயணித்து ஏழு பில்லியன்களையும் தாண்டி போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் எப்படி இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவது என்று யோசிக்கும் கட்டாயத்தில் சில மனிதக் கடவுள்கள் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் இந்த "உயிரிய-தொழிற்புரட்சி (Bio-technology)" அணுகுமுறை.

இந்த வகை தொழிற்புரட்சி இயற்கை அன்னையின் அடிமடியில் கைவைப்பது என்றால் அது மிகையாகது. எப்படியெனில், உயிர்களின் அடிப்படை செல்களில் மாற்றங்களை திருடியோ அல்லது வைத்தோ அதன் பரிணாம சுழற்சியை கற்பிழக்க வைப்பதால்தான் இதற்கு "இயற்கையின் அடிமடி சுரண்டல்" இப்படி ஒரு பெயர் பொருந்தும் என்று கருதுகிறேன்.

இது போன்ற தொழிற் நுட்பத்திற்கு எந்த எல்லையும் கிடையாது, இது எப்படி காலப் போக்கில் பரிணமிக்கும் என்றும் அரிதியிட்டும் விளக்கிவிட முடியாது...

இதற்கு எனது இந்தப் பதிவில் நகைச்சுவையாக அளித்த சில பின்னூட்டங்கள் உண்மையாக நடக்கவும் வாய்ப்பு அதிகமே!

Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக.

நம் உணவில் கலந்து வரும் இந்த திருட்டு யுக்தி:

இது மூன்று வகையான தொழிற் நுட்பத்தின் மூலமாக சத்தமில்லாமல் பரிணாம மாசு படுத்தல் நடந்தேறுகிறது.

a) GE or GM (Genetically Engineered Food)

b) GMO (Genetically Modified Organism) and

c) TT (Terminator Technology)

a) Bovine Growth Hormone (BGH) என்ற வகை வளர்ச்சி ஹார்மோன்கள் Monsanto என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சதாரணமாக ஒரு மாட்டில் சுரக்கும் பாலின் அளவீட்டை விட 15 சதவீதம் அதிகமாக பெற உட் செலுத்தப் படுகிறது. இது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது ஆனால் ஐரோப்பா போன்ற கண்டங்களில் நடைமுறையில் இல்லை. இதன் பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு.

b) GMO இந்த வகை தொழில் நுட்பத்தில் மரபணுக்களில் மாற்றங்களை சொருகி, திருடி எடுத்துவிட்டு நடைமுறை படுத்தப் படுவதால் மனிதனுக்கும் பல வகையான வியாதிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருப்பதோடு, பரிணாம மாசுபாடும் பிற்காலத்தில் பெரிய அளவில் நடந்தேறுகிறது... மீன்களில் எவ்வாறு இது போன்று நடைபெறுகிறது என்பதனை இங்கு பேசியிருக்கிறேன் முன்பே...

c) TT இதுவும் ஒரு Monsanto நிறுவன தயாரிப்பே இம்முறையில் தாவரங்களில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி அதிக மகசூலை பெருக்குவோம் என்ற போர்வையில், உலக விதைச் சந்தையை கையகப் படுத்தும் ஒரு குறுகிய கண்ணோட்டமே.

இந்த வகை அணுகுமுறையில் அவ்வாறு மாற்றமுரச் செய்யப்பட்ட பயிர்களிடமிருந்து கிடைத்த தானியங்களோ விதைகளோ, மறு பயிரிட்டுக்கு உதவுவதில்லை. வருடா வருடம் விவசாயிகள் விதைகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே...

இது நமக்கும் தீங்கை விளைவித்து இயற்கைக்கும் புறம்பாக அமைகிறது. இன்று புதிதாக பரிணாமத்திருக்கும் புது வகை வியாதிகள் பரிணமித்த வைரஸ்களின் புது வகைகளால அல்லது இத் போன்ற குறுக்கு வழி வியாபார சுரண்டல்களால?

Monday, July 24, 2006

மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்மிடையில் இனக்கலப்பு...!

எந்த காலக் கட்டத்திலும் சிந்திக்கும், சிரிக்கும் திறன் மிக்க இந்த ஆபூர்வ விலங்கினமான மனித இனம் "நாம் எங்கிருந்து" வருகிறோம் என்று அறிந்து கொள்வதில் நாட்ட மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.

அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us இவ் ஆய்வு இரண்டு விதமான சான்றுகளை அதற்கு வழங்கி ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. ஃபாசில்களில் மனிதனுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திலிருந்து கிடைத்த பற்கள், மண்டை ஓடுகள் போன்றவை, ஒப்புமை உடையாதாக இருப்பதும்.

இரண்டாவதாக, மரபணுக்களில் காணப்படும் வித்தியாசங்கள். இயற்கையாகவே, இயற்கை தேர்ந்தெடுப்பின் (Nutaural Selection) பொருத்து எக்ஸ்-வகை குரோமொசோம்களில் நடைபெறும் கடைசி மாற்றமே மற்றொரு வகை விலங்கினமாக உருவெடுக்க சாத்தியப் படுகிறதாம்.

அதன் பொருட்டு இந்த எக்ஸ் வகை குரோமோசொம்களில் விட்டக் குறை தொட்ட குறையாக மிச்சம் எஞ்சியிருக்கக் கூடிய மரபணு சார்ந்த விசயங்கள் இன்னமும் கொரில்லாக்கள், சிம்பன்சி மற்றும் மனித மரபணுக்களில் காணப்படுகிறதாம்.

சரி இதனை எதனைக் கொண்டு எத்துனை காலங்களுக்கு முன்னால் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொரு இனமாக பிரிந்து சென்றிருக்கும் என்று அறிகிறார்கள் என்று கேட்டால்... "மூலக்கூறு கடிகாரம் (Molecular Clock)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு தூரம் அவைகள் மரபணுக் கூறுகளின் வழியே பயணித்து மரபணு வேறுபாடுகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை பொருத்து, இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய சொந்தமான்னு தீர்மானிக்கிறார்களாம்.

அப்படிப் பார்த்தோம்னா, நாம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறோமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்ல, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்தில எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அறுந்து போச்சாம்.

Image Hosted by ImageShack.us எப்போவாவது நீங்கள் இந்த மனிதக் குரங்குகளின் சோஷ்டையை நின்று கவனித்துப் பார்த்திருக்கீறிர்களா? பார்த்திருந்தால் தெரியும் மேற் கூறிய ஆராய்ச்சில் லாஜிக்கலாகவே நிறைய தொடர்பு இருப்பதை... உதாரணதுக்கு போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு ஹைலைட், திருப்தியா சாப்பிட்டுவிட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...

Wednesday, July 12, 2006

"வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...

"வெர்மின் (Vermin)" என்பது எந்த ஒரு விலங்கினமும் அதன் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி, சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் யாவும் வெர்மின் என்ற கட்டமைப்பில் சேர்த்துவிடப் படுகிறது. இது போன்ற வெர்மின் வகைகளில் சில நமக்கு பரிச்சயமான பறவைகள் மற்றும் பாலூட்டிகளை வைத்து அவைகளுக்கு என்னதான் ஆகிறது இந்த காலக் கட்டத்தில் என்று பார்ப்போம்.

பறவைகள் இனத்தில் சிட்டுக் குருவி, காகம், மணிப் புறா மற்றும் பாலூட்டிகளில் வீட்டு எலி, பரட்டைத் தலை குரங்கு, முயல் இத்தியாதிகள் உடனடியாக நமது ஞாபகத்தில் வந்து போகும் விலங்கினங்களில் சில.

அவைகளும் இந் நாளில் நமது குளம் குட்டைகள் வற்றுவது போலவே, அவைகளின் நடமாட்டமும் குறைந்து வருகிறது. அதனை நமது நாகை சிவா கூட கவனித்து கேள்வியாக எழுப்பினார். சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். இது போன்ற விலங்கினங்கள் முதலில் வெர்மினாக ஆவதற்கே எக்கச் சக்கமான வகையில் தனது இயற்கையான பழக்க வழக்கங்கலிருந்து மாறுபட்டு மாத்தியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு சிட்டுக் குருவியும், மணிப்புறாவும் நமது வீட்டுக் கூரையிலே கூட கூடு கட்டி குடும்பம் நடத்தலாம். அப்படியெனில் நமது அண்மையிலான நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டுதானே என்று பொருள். இன்று அது போன்ற வாய்புகள் கூட அவைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய பிரட்சினை.

மனிதனின் மாறி வரும் வாழ்க்கை முறை, அன்று நடுத்தர இரண்டாம் தர சிற்றுராகவும், பேரூராகவும் இருந்ததெல்லாம் இன்று நகரமாகி வரும் இச் சூழலில் கட்டட அமைப்பு, அதனையொட்டிய போக்கு வரத்து வாகனக் கூட்டம், மக்கள், சத்தம், கான்கீரிட் தரைகள், இப்படி எத்தனை எத்தனையோ தடைச் சுவர்கள்.

அவைகளையும் தாண்டி வசிக்கும் இவைகளுக்கு உணவு அல்லது தண்ணீர்த் தேவை என வரும் பொழுது அவைகள் ஒரு பெரும் நகரத்தில் வசிக்கும் பொருட்டு எப்படிப் பெறமுடியும்? தினமும் சாலையையே கூட்டிப் பெருக்கி பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்ளும் நாம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நுனி வெட்டி அழகு பார்க்கும் நாம், அதில் உள்ள நெல் மணிகளையும் (அவைகளின் உணவு) சேர்த்தல்லவா வெட்டி விடுகிறோம்.

அந்த புற்களையும் நல்ல பச்சையாக வளர்க்க எத்தனித்து எத்தனை விதமான உரங்கள், அந்த உரங்கள் எத்தனை விதமான புழுக்களையும், பூச்சிகளையும் அழித்து இது போன்ற பறவைகளின் உணவு பற்றாக் குறையை ஏற்படுத்தி விடுகிறது.

மேலும் இப்பொழுது ஜரூராக இது போன்ற பறவைகள் கட்டடங்களின் மீது கூடு கட்டாமலிருக்க புது வகையான யுக்திகள் பொறிகளை (traps, scare tatctics, spikes etc) கொண்டு தடுக்கப் படுகிறது.

இதற்கெல்லாம் மேலாக, மற்றொரு முறையில் பல்கிப் பெருகிப் போன இந்த செல் பேசிகள் அவைகளுக்கான செல் டவர்கள் அவைகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள்(electro magnetic radiation), எது போன்ற விளைவுகளை இவைகளில் ஏற்படுத்துகின்றன என்பதனை இன்னமும் அரிதியிட்டு கூறாத நிலையில், அவ்வலைகள் மனிதனில் மூளை புற்று நோயை உருவாக்கவல்லது எனவும் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளதை அறிந்துள்ளோம்.

இதனைவிட நேரடியாக நமது பசியின் கோரம் எவ்வளவுதான் தனிக்க உணவு வகைகள் இருந்தும் இவ் பறவைகளயும் உணவாக பெருமளவில் சில இடங்களில் உட்கொள்ளப் படுவதும், மற்றொரு காரணியோ இவைகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதற்கு.

பறவைகளும், ஏனைய பிராணிகளும் நம்மை விட இயற்கை அழிவு சார்ந்த சகிப்புத்தன்மையில் கொஞ்சம் தோல் மென்மையாக இருப்பதாகப் படவில்லை?


P.S: என் வீட்டுக் கூரையில் இப்பொழுது இரண்டு சிட்டுக் குருவி குடும்பங்கள் சந்தோஷமாக எனக்குத் தெரிந்து ஒரு நான்கு வருடங்களாக வசித்து வருகிறது, அதனைப் பற்றி நான் யோசிப்பதுண்டு, இப்பொழுது இவைகளுக்கு தாகம்மென்றால் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை எங்குள்ளது எப்படி அவைகள் இந்த பிரட்சினையை எதிர் கொள்கிறது என.

Tuesday, July 11, 2006

"டைனோசார்" வெப்ப ரத்தப் பிராணியா?

எல்லா ஊர்வன பிராணிகளும் இது நாள் வரையிலும் "குளிர் ரத்தப் பிராணிகளே" என்று நம்பி வந்த அறிவியல் சமூகம் இப்பொழுது தனது புது ஆராய்ச்சிகளின் மூலம் "டைனோசார்" போன்றவைகள் ஊர்வன இனத்தில் வந்தாலும், இவைகள் வெப்ப ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளது.

ஊர்வன வகைப் பிராணிகள் தனது உடம்புச் சூட்டை கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ள புற வெப்பத்தை நாடுகிறது, நாம் கூட கவனித்திருக்கலாம், முதலைகள் போன்றவைகள் சூரிய ஒளியில் படுத்து வெப்பத்தை கிரகித்துக் கூட்டியோ குறைத்துக் கொள்வதனை, இல்லையா? ஏனைய விலங்கினங்களான பாலூட்டிகள் மட்டும் பறவைகள் உடல் மெட்டபோலிக் நடவடிக்கைகளை கொண்டே உடம்புச் சூட்டை தக்கவைத்துக் கொள்கிறது.
Image Hosted by ImageShack.us

இந் நிலையில் இப்பொழுது டைனோசார்களில் உடம்பின் எடையை வைத்து அவைகள் குளிர் அல்லது வெப்பத் ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கக் கூடும்மென்று இந்த புது வித ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

டைனோசார்களில் சிறியவை குளிர் ரத்தப் பிராணியாகவும் (20 டிகிரி செல்.), அவைகளின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும் பட்சத்தில் (48 டிகிரி செல்.) வெப்ப ரத்தப் பிராணியாகவும் வாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.

இதற்கென அண்மைய காலத்து 11 வகையான ஊர்வன இனங்கள் தேர்ந்துதெடுக்கப் பட்டு மீண்டும அவைகளின் உடல் எடையை கணக்கில் கொண்டு உடம்பின் வெப்பச் சூடு ஒப்பீட்டு நடத்தி ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.

Monday, July 03, 2006

முழிச்சுகிட்டே தூங்குவேனே...! : Mimicry Traits

விட்டில் பூச்சிய (moth) நாம எல்லோருக்கும் தெரியும், அதாங்க சும்மா செவனேன்னு ராத்திரி நேரத்தில நாம வீட்டு லைட்க்கு கீழே இறக்கையை பப்ரபான்னு விரிச்சுட்டு பளுப்பு அல்லது சாம்பல் நிறத்தில எப்படா அங்ஙன இருக்கிற சுவத்துப் பல்லி பதுங்கிப் பதுங்கி நகர்ந்து வந்து நம்மள காலி பண்ணுமின்னு (அதுக்கும் ஒரு தியரி இருக்கு prey-predator தொடர்ப பத்தி எழுத, அதையும் பின்னாடி சொல்றேன்) உட்காந்திருக்குமில்ல அந்த நபர் இனம்தான் பேசப் போற விசயம்.

இந்த விட்டில் பூச்சிக்கும், நமக்கு நிரம்ப பிடிச்ச (குறிப்பா... பொண்ணுங்களுக்கு) வண்ணத்துப் பூச்சிக்கும் (Butter Fly) ரொம்பத் தொடர்பு இருக்குது. அத எப்படி பிரிச்சுப் பார்க்கிறது அப்படிங்கிறத, குமுதத்தின் குறைந்த பட்சம் ஆறு வித்தியசங்கள் மாதிரி ஒரு ஆறு வித்தியாசங்களுடன் இன்னொரு பதிவில காண்போம். இப்ப நம்ம பய விட்டிலோட பரிணாம தேடலைப் பார்ப்போம்.

Image Hosted by ImageShack.usஇந்தப் பசங்க ராத்திரியில ஊர் சுத்தறவுனுங்க, அதனால செவனேன்னு பகல் முழுக்க ஒரே இடத்தில அடைஞ்சுகிடந்து தூங்கிட்டு இருப்பானுங்க. இப்ப அதோட இறக்கை சம்பந்தமா கொஞ்சம் சொல்லிப்புடணும் முன்னலே நான் படம் ஒட்ரதிக்குள்லே... இதுகளுக்கு முன் இறக்கை (Fore Wing), பின் இறக்கைன்னு (Hind Wing) ரண்டும் மேலமேல இருக்கும்.

ஆனா சில வகை விட்டில்களுக்கு பின் ரக்கையில பெரிசா கண் மாதிரியே பெரும் புள்ளி ஒன்னு வலது பக்கமும் இடது பக்கமும், அத மறைச்சுகிட்டு இந்த முன் இறக்கை அச்சு அசாலா அவர் எது மேல உட்காந்து தூங்கிறாரோ அந்த இடம் மாதிரியே ரக்கை நிறத்தோட....கொர்... கொர்... இந்த செட் அப்-எ வச்சுகிட்டுத்தான் நம்ம ஆளு பொழப்ப தள்ளிகிட்டு இருக்கிறார்.

எப்படியா? அப்படி பகல் பொழுதில் தூங்கிட்டு இருக்கிறாரா, இருக்கும் போது எவனாவது எழுப்பி விட்டவோ, அல்லது அவரே அப்படி நினைச்சுகிட்டவோ அப்பப்போ டக்குன்னு மேல் இறக்கையை மேல தூக்கி, கீழ் இறக்கையை காமிப்பாரு அந்த முட்டை பொய்க் கண்ணோட.... இப்ப எங்கயாவது இருந்து பாத்துகிட்டு இருக்கிற பறவையோ இல்ல வேற எமனோ, சரி முழிச்சுகிட்டு இருக்கிறான் பக்கத்தில போன பறந்துபுடுவான், எதுக்கு தேவையில்லாமல் சக்தியை செலவு பண்ணிகிட்டு அப்படின்னு கொல பண்ண வாரவன் அப்படியே போயிடுவான்னு, இவரு இப்படி இயற்கையை கெஞ்சி கூத்தாடி பரிணாமத்தின் தயவால தலைவரு வாழ்கை ஓடுது...

நல்லா இருந்துச்சா இல்ல மண்டை காஞ்சி போச்சான்னு சொல்லுங்க...

Thursday, June 22, 2006

400 வருடங்களில் இல்லாத வெப்ப சூடேற்றம்...


கடந்த 400 வருடங்களில் இல்லாத அளவிற்கு பூமிச் சூடேற்றம் நிகழ்ந்து வருவதாக வாஷிங்டனில் உள்ள "தேசிய ஆராய்ச்சி கழகம்" ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.



இவ் அறிக்கையில் கடந்த 20ஆம் நூற்றாண்டு வாக்கில் மட்டும் ஒரு டிகிரி ஃபாரன்கெய்ட் வெப்பம் அதிகரித்து இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

மேலும் இந்த பூமிப் பந்தின் சுர அதிகரிப்பு, அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம், கார்கள் மற்றும் தொழிற் சாலைகள் மூலமுமே என்றும் அவ் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

Tuesday, June 13, 2006

*குளோபல் சூடேற்றம்* - காட்டிக்கொடுக்கும் தவளைகள்...

பூமிப் பந்தின் சூடேற்றம் குறித்து ஏற்கனவே நான் இரண்டு பதிவுகள் *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? வெளிகண்ட நாதரின் உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்? என்பதிலும் விளக்கியுள்ளோம். அதனைப் பற்றி படித்தறிந்தால் இப்பொழுது அதனை உறுதிப் படுத்தும் வண்ணம் எவ்வாறு தவளைகளும், தேரைகளும் தன் உயிரை மாய்த்து நடப்பதை நமக்கு உண்மையே என்று உறுதி செய்து வருகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அண்மையில் நடந்த ஆராய்ச்சியின் பொருத்து 'இயற்கை' எனும் ஜார்னலில் இது பற்றிய உண்மை வெளியாகி உள்ளது.

கடந்த 25 வருடங்களில் 168-க்கும் மேற்பட்ட தவளை இனங்கள் உலகம் தழுவிய முறையில் அடியோடு கபளீகரமானதாக (சுத்தமாக பூமியை விட்டே) அறியப் பட்டுள்ளது.

இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்மென்று உற்று பார்க்கும் பொழுது சீதோஷண நிலையில் ஏற்படும் மாற்றம் அதனை தொடர்ந்து ஏற்படும் தொடர் வறட்சி அல்லது வெள்ளம் இவைகள்தான் முக்கிய பங்கு வகிப்பதாக அறியப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்கையில் ஆராய்சியாளர்கள் வெப்ப ஏற்றதிற்கும் அத் தவளைகளின் மறைவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புள்ளியீட்டு கணக்கின் படி உறுதி செய்துள்ளனர்.

அத் தொடர்பு பற்றிய ஆய்வு மத்திய மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் நடத்தி கண்டறியப்பட்டுள்ளது. அவ் ஆய்வின் படி கிட்டதட்ட 65 இனத் தவளைகள் நிரந்தரமாக காணவில்லை அவ் வனங்களிலிருந்து என சுட்டுகிறது.

சரி இப்பொழுது ஏன் தவளைகளை மட்டும் இந்த வெப்பச் சூடேற்றம் உடனடியாக பாதிக்கிறது அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். நம்ம எல்லோருக்குமே தெரியும் நில நீர் வாழ்வனவான (amphibians) அத் தவளைகளின் தோல் மிகவும் மென்மையானது. அதனால் எதும் மிக எளிதாக (Permeable) ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம். உ.த: நாம் வயலில் அடிக்கும் சில வகை பூச்சி கொல்லிகள் அல்லது உரங்கள் கூட அவைகளின் தோல்களின் வழியே சென்று அவைகளை கொன்று விட முடியுமுன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வெப்ப சூடேற்றம் அவைகளை நேரடியா பாதிக்கிறதுமில்லாம, காஸ்டா ரிகா எனும் மத்திய அமெரிக்கா நாட்டு காடுகளில் ஒரு வித பூஞ்சைகாளான்கள் (Chytrid) அதீதமாக பல்கி பெருக வழி வாகை செய்து விடுகிறதாம். இந்த பூஞ்சைகள் என்ன பண்ணுதுன்னா, தவளைகளின் மீது தொத்தி அவைகளின் தோல் துவாரங்களை அடைத்துவிடுவதால, தண்ணீர் சமநிலை சீர்கெட்டு தவளைகள் மாண்டு விடுகின்றனவாம்.

இது வரைக்கும் இத்த தொத்து வியாதிக்கு நான்கு மாதத்திலேயே சுமார் நான்கு இனத் தவளைகள் மாண்டு இவ்வுலகை விட்டே சுத்தமாக (extinct) அழிந்து போனதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது இப்படியாக இருக்க நம்மூரு காடுகளில் இன்னும் எத்தனை இனத் தவளைகள் இருக்கிறது என்பதனை கண்டுபிடிக்காத பட்சத்தில், எங்கங்கோ நாம் உலக வெப்ப சூடேற்றதிற்கு அவைகளை நொடிக்கு ஒன்றாக இழந்து வருகிறோம் என்று தெரிந்து கொள்ளும் கணம்தோரும் - நிறைய பசங்கள நாம நம்மூர்ல கண்ணாலே பார்க்காமலேயே காவு கொடுக்கிறோமோ என்று நினைக்கும் பொழுதும்... இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் தோணுது.

Thursday, May 11, 2006

இப்படியும் நிப்பேனே...: Buttressed Trees...!

அதிகமாக மழை பெறும் மலைப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் நல்ல நெடுக வளர்ந்தானாக நெடு நெடுன்னு நல்ல உயரமாக ஒரு 50 அல்லது 60 அடி உயரத்திற்கே கூட வளர்ந்துவிடலாம்.

இதுக்கென்ன காரணமாக இருக்கலாம், அப்படின்னு கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சுப் பார்த்தா ஒரு விசயம் டக்கின்னு உதயமானுச்சு... இது எங்க வச்சுன்னா, ஒரு முறை நாங்க கலக்காடு-முன்டந்துரையில விலங்குகள் கணக்கீட்டுக்காக போயிருந்தப்ப எங்களுக்கு உதயமானது.

Western Ghats_Rainforest

எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் வந்து செங்கல்தேரிங்கிற இடங்க. சூப்பரான லொகேஷங்க...! ஒரு நாள் சுத்தமா எடுத்துகிச்சு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து செங்கல்தேரி போயி அங்கிருந்து ட்ரெக்கிங் ட்ரெக்கிங்தான், மழைக்காடுகளிடத்தே புகுந்து. போற வழியெங்கும் புலியோட பாதச் சுவடுகள் தெளிவா கிடைக்கிற எடத்தில பிளாஸ்டோ பாரிஸ் கரைச்சு ஊத்தி அப்படியே அலக்கா பேர்த்து வைச்சுக்கணும், பின்னால கணக்குப் போட்டு எத்தனை புலிகள் அந்த காட்டுக்குள்ள இருக்கலாம் அப்படின்னு தோராயம கணக்கு போட ஏதுவா இருக்குமின்னு.

அப்படிப் போகும் போதுதான், அந்த மலைகளின் கம்பீரமும், அழகும் பிடிபட ஆரம்பித்தது. மப்பும் மந்தாரமும் 2000 அடிக்கும் மேல உயரத்தில நின்னுகிட்டு கீழே விரித்துப் போட்ட ஜமுக்காளம் போல ஏற்ற இறக்கமாக உருண்டு கிடக்கும் மலைகளின் அழக ஆயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் முழுமையாக பருகிவிட முடியாதுங்க. அவ்ளோ அழகு!

அங்குதான் நான் சொன்ன மாதிரி அந்த மரங்களின் உயரத்திற்கு லாஜிக்கலா விடை கிடைத்தது. அப்படி சரிவா பள்ளத்தாக்குகளில் இருக்க கூடிய மரங்களுக்கு விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் சூரிய ஒளி கிடைக்கிறதில்ல ஏன் அப்படின்னா, மேட்டுப் பகுதியில இருந்து சூரியன் மீண்டு உயர வரதுக்குள்ள பள்ளத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும், இல்லையா?

அப்படி இருந்தாலும் அவைகளுக்கும் சூரிய ஒளி ரொம்ப அவசியமில்லையா, அதினால அவைகளும முட்டி மோதி முதல் சூரிய ஒளியை பெறுவதற்கு எவ்வி வளர வேண்டியிருக்கு. அதுவும் ஒரு காரணம் ஏன் அந்த மாதிரி, மழைக் காடுகளில் இருக்கிற மரங்கள் ரொம்ப உயரமா இருக்கு அப்படிங்கிறத்துக்கு.

அப்படி உயரமா வளர்ந்த அந்த நெடுக வளர்ந்தவனை யாரு தரையில தாங்கி இருப்பான்னு பிடிச்சுக்கிறது, வேருகள்தானே? ஏற்கெனவே, மழைக்காடுகள் உள்ளே போயி பார்த்தோம்னா ரொம்ப அடர்த்தியா இருக்கும்; நிறைய சின்னதும் பெரிசுமா செடிகளும், மரங்களும், கொடிகளுமா...

அப்படியிருக்கையில் மழைவேற சும்மா தொண தொணன்னு பேஞ்சுகிட்டே இருக்குமா, எனவே இருக்கிற இடத்துக்குள்ள நம்ம நெடுக வளர்ந்தவனுங்க ஸ்ட்ராங்க தரைய பிடிச்சிகிட்டு, நல்ல சத்தும் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கணும். இந்த சூழ்நிலையில்தான், இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க எப்படின்னும் பார்ப்போம் இப்ப.

தரையில நல்லா ஊன்றி நிக்கறதுக்காக அதோட அடிப்பகுதியை ஒரு ராக்கெட்டெ செங்குத்தா நிக்கவைச்சா எப்படி இருக்கும், ராக்கெட் இறக்கைகள் தரையோட நல்ல அகலமா இருக்குமில்லே, அது போலவே இந்த நெடும் பசங்கள ஊன்றிப் பிடிச்சிக்கிறத்துக்காக அதே மாதிரியே நல்ல அகலமா மரத் தோட அடிப்பகுதியாகிடுது. இது மாதிரி எல்லா மரங்களும் இருப்பதில்லை, ஒரு சில ஆட்கள் மட்டுமே இந்த ட்ரிக்க பயன்படுத்துறாங்க.

இப்படி இருக்கிறதாலே நிறைய நல்ல விசயங்கள் அந்த நெடும் பசங்களுக்கு கிடைக்கிது. ஒண்ணு, நிறைய மழை பெய்யும் பொழுது மண் அரிப்புனால சாஞ்சுட மாட்டானுங்க. இரண்டு, காஞ்ச சருகு இதெல்லாம் பிடிச்சு வைசுக்கலாம், அப்படி வச்சுக்கும் போது அந்த சருகெல்லாம் மச்சு திரும்ப தனக்கே உரமா வந்திடுமில்லையா, அதான்.

என்ன ட்ரிக் பாருங்க. இந்த பசங்களுக்கு. நாமெல்லாம் நினைக்கிறோம் என்ன மரம் தானேன்னு, ஆனா, இவனுகூட யோசிச்சு தனக்கு வேணுங்கிறதை கேட்டு காலப் போக்கில வாங்கிக்கிறாங்க நம்மை போலவே. ஆனா, என்ன கொஞ்சம் சத்தமில்லாம இங்கே வேலை நடக்குது, அவ்ளோதான் வித்தியாசம்.

ஒரு மரத்த நாங்க டேப் வச்சு சுத்தி பிடிச்சோம் பாருங்க 10 மீட்டரை சாதாரணமா சுத்திக்கிச்சு தன்னைச் சுத்தி. அப்படின்னா எவ்ளோ பெரிய மரம் பாருங்க!

சரிங்க, மரத்தப் பத்தி பேசிகிட்டு இருக்கோம் இன்ன ஒண்ணும் சொல்லிப்புடறேன். ஒரு நாள் அவ்ளோ பெரிசா இருக்கேன்னு, தரையில படுத்துகிட்டு பார்த்தா எப்படி இருக்குன்னு மல்லாக்க படுத்திட்டு பார்தேங்க, ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு ஒரு மரப்பைய இன்னொரு பக்கத்தில நிக்கிற பையனோட கிளைகளோட முட்டிக்காம உரசிக்காம அழக வரைஞ்சு வச்ச மாதிரி ஒரு இரண்டு அடி இடம் விட்டு கிளை பரப்பி நிக்கிதுங்க (நான் சொல்றது மர நுனியைப் பத்தி - Canopy).

அவ்ளோ அண்டர்ஸ்டண்டிங் ஒருத்தருக்கொருத்தர். ஆச்சர்யம் தானே!? ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?

Tuesday, May 09, 2006

அபூர்வக் காதல் : சிம்பயோசிஸ்(Symbiosis)

நம் உலகில் நமக்குத் தெரிந்தோ அல்லது சினிமாவிலோ பார்த்திருக்கலாம்; ஒடிப் பஸ்ஸில் ஏறிய லாவகத்தைக் கண்டதும் காதல், தலைக் கேசத்தைக் கோதிவிடும் அழகில் மயங்கிக் காதல், அப்புறம் பார்க்காம காதல், தொலை பேசியிலேயே காதல், ஒரு பார்வைப் பார்த்துட்டா காதல், அட ஏங்க காய்கறி கடையிலே நீங்க வெண்டைக்கா உடைச்சு வாங்கிறதப் பார்த்துட்டு உங்க மேல காதல் வந்ததாகக் கூட காதல் பண்ண வைச்சு மக்கள வியர்வை சிந்த படமும் பார்க்க வைச்சாச்சு.

ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப் போற காதல், "எதையும் தாண்டிப் புனிதமாக," காலங்களையும் பரிணாமச் சுழற்சியையும் தாங்கி, எந்த வேதிப் பொருளுமோ அல்லது இனக் கவர்ச்சியின்பால் உந்தப்பட்டோ இயற்கை இவர்களுக்கிடையில் அந்த காதலைப் பற்ற வைக்காமல், பற்ற வைத்திருக்கிறது. அது எப்படி இனக் கவர்ச்சி இல்லாத காதல், வாங்க எந்த மாதிரி அபூர்வக் காதலா அது இருக்க முடியும் அப்படிங்கிறதா பார்த்துடுவோம்.

இயற்கையில் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நம்மால் பார்த்த, தெளிந்த, இன்னும் நமது சிந்தனை ஓட்டத்தில் இருக்கக் கூடிய விசயங்களை மட்டுமே நாம் கிரகித்து அதனை வார்த்தைகளின் மூலம் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், நமக்கு நமது சிறு மூளைக்கு எட்டாத கோணங்களில் இயற்கை இன்னும் எத்தனையோ விசயங்களை கொட்டி வைத்திருக்கிறது.

எல்லமே இங்குதான், நம்மைச் சுற்றிதான் இருக்கிறது. எப்பொழுது ஒரு தனி மனித சிந்தனை அவ்வாறு சிதறிச் தெரித்துள்ள விசயங்களை உராய்விச் சொல்கிறதோ, அங்குதான் பிறக்கிறது ஒரு புதிய கண்டுபிடிப்போ, கோட்பாடோ, அல்லது ஒரு சிக்கலான விசயத்திற்கு தீர்வோ.

எது எப்படியோ, நாமும் எதனையும் புதிதாக கண்டுபிடித்து விடுவது கிடையாது. வெளிக் கொணர்கிறோம் விசயங்கள் முன்பே இங்கு இருப்பதை நமது விழிப்புணர்வின் மூலமாக. அவ்வளவே!

அடடா, சொல்ல வந்த விசயத்தை விட்டுட்டு சுரையில ஆராய ஆரம்பிச்சுட்டனே! அப்படின்னு இன்னேரம் யோசிக்க ஆரம்பிச்சியிருப்பீங்க. சரிங்க, நாம பேசப் போற விசயம் "இயற்கையா எப்படி இரு வேறு வகை உயிரினங்கள் ஒருத்தருக்கு ஒருத்தரு நகமும் சதையுமா, பிண்ணிப் பிணைந்து இருக்கிறாங்க" அப்படிங்கிற விசயம்தான்.

இத பரிணாம உயிரியியல்ல சிம்பயோசிஸ் (Symbiosis) அப்படின்னு சொல்றோம். இப்ப இது இயற்கையில எப்படி நடந்தேறுது அப்படிங்கிறதெ நமக்கு வெளியில (நமக்குள்ளேயும் தான்) பார்க்கிற மாதிரி நடக்கிற விசயங்களை கொண்டு புரிஞ்சுக்குவோம்.

ஆஃப்பிரிக்காவில நமக்கெல்லாம் தெரிஞ்ச வரிக்குதிரை, காண்டாமிருகம், அப்புறம் ஒரு வகை எருமை மாடுங்க இவங்களுக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரா ஆக்ஸ்பெக்கர்-ங்கிற (எருமைக் கொத்தி - நம்மூர் மைனா மாதிரி) பறவை அவங்க மேல உட்காத்துக்கிட்டு ஓசிச் சவாரி பண்ணிக்கிட்டே, அந்த விலங்குகள் மேல இருக்கிற உண்ணி, அட்டை மற்றும் ஏனைய ஒண்டுண்ணிகளெ கொத்தி சுத்தம் செய்து விடுகிறது.

அப்படி பண்ணும் போது நல்லா கவனிச்சுப் பார்த்தா ரெண்டு பேருமே ரொம்ப நெருங்கிய சொந்தக் காரங்க மாதிரி தோணல? ஆக்ஸ்பெக்கருக்கு வயிறும் நிரம்புது, விலங்குகளுக்கு க்ளீன் உடம்பும் கிடைச்சுது.

அது போலவே நைல் முதலையும் எஷிப்தியன் ப்ளொவெர் பறவையும் இவ்வுறவில பிணைந்து வாழ்றாங்க; அப் பறவை முதலையின் பல் ஈரலை சுத்தம் செய்கிறது மாமிச துண்டுகளை அகற்றி உண்ணுவதன் மூலம்... அங்கும் இருவருமே வின்னர்ஸ்.

நம்ம ஊருலும் பார்த்திருக்கலாம் கால்நடைங்க மேஞ்சுகிட்டு இருக்கும் போது கரைச்சான் குருவி (Drango), அப்புறம் மைனா எல்லாம் அதே மாதிரி செய்வதனை.

இப்ப பெரிச விட்டுட்டு இன்னும் கொஞ்சம் சிறிய உலகத்துக்குள்ள போவோம். இது வண்டுகளும், வவ்வால்களும் பண்ற பூக் காதல் பூக்களிடத்தே. எப்படின்னா, வண்டுகள் உடம்புல நிறைய சின்னச் சின்னதா முடிகள் இருக்கு அதே மாதிரிதான் வவ்வால் மூக்குலயும் (அட மூஞ்சிதாங்க) இருக்கு. இவங்கெல்லாம், பூக்கள்ல அமர்ந்து ச்சூஸ் (தேனு) குடிக்கும் போது நாம பீச்சில ஈரத்தோட படுத்து உருண்டா மண்ணு உடம்பு முழுக்க ஒட்டிக்கிட்டு வரமாதிரி, அதுங்களோட உடம்புல இருக்கிற முடில அந்த பூக்கள்ல இருக்கிற மகரந்தத் தூள் ஒட்டிக்கிது.

அந்த தூளோட நம்மவர்கள் அடுத்த பூவுக்கு விஜயம் பண்ணும் போது அங்க இருக்கிறவங்க எடுத்துக்குவாங்க. அதனை நாம "மகரந்தச் சேர்க்கை" அப்படிங்கிறோம். பாத்தீங்களா ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தரு அண்ணன் தம்பியா (எங்க இப்ப இருக்கிறாங்க அப்படிங்கிறீங்கா...எல்லாம் ஒரு பேச்சுக்குத் தாங்க) இருந்து உதவி பண்ணிகிறாங்க.

இப்போ இன்னும் சிறிய உலகம் ஏன் வெளியயெல்லாம் போய் தேடிக்கிட்டு நமக்குள்ளேயே ஒரு சிம்பயோசிஸ் உலகம் இயங்கிட்டு இருக்குது... எப்படிடான்னு பயந்துட்டீங்களா?

நம்மோட சிறு குடல்ல ஒரு வகை பாக்டீரிய இருக்குங்க, அதுங்க நாம் ஏன் எதுக்குன்னு கேள்வி கேப்பாடு இல்லாம நிறைய சாப்பிட்டோமின்னு வைச்சுக்கோங்க அந்த மிச்சம் செரிக்காத உணவை இவங்கதான் டைசினா-ஆ இருந்து உதவி பண்ணி அடுத்த வேளை ரவுண்ட்க்கு நம்மை ரெடி பண்ணுதுங்க. இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு அன்னியமா இருந்தாலும் இது நம் கூடவே இருந்து கடைசி வரைக்கும் நம்கூடவே வருது (ஓண்ணும் உடம்பு ரிஜெக்ட் பண்ணிடறடதில்லை இவைகளை).

இந்த பாக்டீரியா மட்டுமில்லை நான் மெக்டெனால்ஸ்-அ சாப்பிடற வேகத்துக்கு நிரந்தரமா ஹாஸ்பிடல்லதான் இருக்கணும்.

சரி வந்துட்டீங்க இவ்வளவு தூரம் பொறுமையாவும் படிச்சு வைச்சுட்டீங்க, அப்படியே சொல்லிட்டு போங்க பயனுள்ளதா இருந்துச்சான்னு...

Saturday, May 06, 2006

பிள்ளையார சந்திச்சப்போ: யானை விரட்டு..!

இது ஒரு சுவாரசியமான உண்மைக் கதைங்க! உண்மையிலேயே காட்டுக்குள்ள ஒரு ஒத்தக் கொம்பு ஆண் யானையை நேருக்கு நேரா பார்த்த அனுபவத்தை உங்ககூட இன்னிக்கு பிச்சிக்கப் போறேன்.

அன்னிக்குன்னு என்னைக்குமில்லாமல் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்துருச்சு எப்பொழுதும் போல குளிக்காம ஒரு காக்கி கலரு அழுதுவடியர மேல் சட்டையும், லைட் பச்சை கலரு பேண்ட்ஸ்ம் போட்டுகிட்டு என் ட்ராக்கர்-வோட எப்பொழுதும் மாடு (அதான் காட்டெருமை) மேய்க்கிற எடத்துக்கு போறதா கிளம்பிக்கிட்டு இருந்தோம்.

அன்னைக்குன்னு எனது சக ஆராய்ச்சி நண்பனும், நானும் உன் கூட வரேன்டா அப்படின்னு என்னோட சேர்ந்துகிட்டான். மூணு பேருமா சேர்ந்து நடக்க ஆரம்பிச்சோம். போற வழி நெடுக முடிஞ்ச அளவுக்கு புதுசா ஏதாவது பறவைங்க கண்ணுல காதுல தட்டுப் படுதான்னும் பார்த்துக்கிட்டெதான்.

அது ஒரு மாதிரியான சுகங்க! சொன்னா புரியாது. அனுபவிச்சு பார்த்ததான் முழு பரிமாணமும் பிடிபடும். நாங்க நோக்கி போயிகிட்டு இருக்கிற இடம் ஒரு புல் மேடுங்க அதுக்குப் பேரே 110 ஏக்கர் புல் மேடுதான்.

அங்கதான் இந்த காட்டெருமைங்க கூட்டமா வந்து மேஞ்சுகிட்டும், படுத்து ரெஸ்ட் எடுத்துகிட்டும் இருப்பானுங்க. விடியகாத்தால சீக்கிரமா அந்த எடத்துகிட்டே போயாச்சுன்னா கொஞ்சம் பேரயாவது நாம கண்டிப்பா பிடிச்சுருலாம் அங்க வச்சு.

ஏன்னா, அவனுங்க ராத்திரி நேரத்தில ஒய்வுவெடுக்க அப்படி திறந்த வெளி மைதானம இருக்கிறதத் தான் விரும்புறாங்க. ஒரு சேஃப்டிக்காக! அதான், நாங்களும் அத புரிஞ்சுகிட்டு அங்க போயி அவங்க எல்லாம் கிளம்பி இடத்த மாத்துறத்துக்குள்ள பிடிச்சுட்டா அவங்கள பின்னாலேயே வால் பிடிச்சுகிட்டு அலையலாம் பாருங்க.

இப்ப நம்ம கதைக்கு வருவோம். அன்னிக்கு ஒரு குறுக்கு வழியை (என்ன குறுக்கு வழி நேர் வழி காட்டுக்குள்ள வேண்டி கிடக்கு அப்படிங்கிறீங்க) பிடிச்சிகிட்டு லேட் ஆவுறத்துகுள்ள போயிடுவோம்மின்னு ஒரு அடர்ந்து இருக்கிற மூங்கில் தோப்புக்குள்ள புகுந்து நடக்க ஆரம்பிச்சோம்.


ஒரு 15 நிமிஷம் நடந்திருப்போம், எங்களோட ட்ராக்கர் யானை அந்த வழியா நடந்துப் போனதிற்கான சில அறிகுறிகளெ கவனிச்சுட்டாரு நல்லா துலாவிப்பார்த்துட்டு; சார், இந்த வழியா ஒரு யானை போயிருக்கிற மாதிரி தெரியுது, ஆனா, எப்பொழுதுன்னு தெரியாலயே சார் அப்படின்னு சொன்னார். இன்னும்மொரு 10 நிமிஷ நடை சடச் சடன்னு ஒரு மரக்கிளை ஒடைஞ்சுப் போன சத்தம்.

எல்லாம் அப்படியே ஒரு நிமிஷம் சொல்லி வைச்ச மாதிரி உறைஞ்சுப் போயி காத மட்டியும் தீட்ட ஆரம்பிச்சாச்சு எந்த பக்கமிருந்து சத்தம் வந்ததுச்சு அப்படின்னு பார்க்க. கொஞ்ச நேரம் அப்படியே ஒருத்தரும் பேசாம, ட்ராக்கர் சமிக்கை கொடுக்கிற வரைக்கும் பொறுத்துருந்துப்புட்டு, திரும்ப கொஞ்ச தூரம் நடந்திருப்போம்...அவ்ளோதான்.

அங்கே நிக்கிறார் நம்ம பிள்ளையாரு அப்படியே சிலையாட்டம் அலர்ட் ஆகி காதெல்லாம் விடைச்சுகிட்டு வால தூக்கிட்டு எங்கள நோக்கி உர்ர்ர்ன்னு கோபத்தோட பார்த்துகிட்டு இருக்கிறார்.

எங்களுக்கு வேற சிவ்வுன்னு அட்ரீனலின் எகிற ஆரம்பிச்சுடுச்சு. ஏன்னா, அந்த பிள்ளையாரு வேறத் தனியாளு (கூட்டத்தோட இருந்தா அவ்ளோ பயமில்ல), ஒரு 15-20 வயசுக்குள்ளதான் இருப்பாரு, இப்பவே வலது தந்தத்தோட முனைவேற ஒடைஞ் போயிருக்கு, முதல் முறையா காதல் கிறுக்கு பிடிச்சியிருக்கவும் வாய்ப்பு அதிகம். இந்த மாதிரியான நேரத்தில நம்ம பிள்ளையாருக்கு டக் டக்குன்னு கோபம் வேற வரும், சின்ன புள்ளைக்கு வர மாதிரி (அவன் சின்னப் புள்ளைதானே...).

இப்ப என்ன பண்றது, அப்படின்னு பேசாம பேசணும், உடம்ப ஆட்டி கீட்டி வைச்சு அவன உசுப்பு ஏத்த வேறக் கூடாது. நாமும் அப்படியே நிக்கிறோம் அவனும் நிக்கிறான்.

கடைசியா நம்ம ட்ராக்கர் சன்னமான குரலில், சார், கடைசியா நிக்கிற சார்... (என் நண்பந்தான் கடைசியா நின்றான்) நான் ஒரு ஆக்டு வுடப் போரேன் அவன் பயந்து ஓடினா ஓடட்டும் இல்லென்னா அப்படியே பின்னால திரும்பி ஓட ஆரம்பிச்சுடுங்க அப்படின்னு சொல்லிட்டார்.

நாங்களும் ரெடியாகிட்டோம் சூட்டுக்கு காதெல்லாம் தக தகன்னு கொதிக்குது. இப்ப நம்மாளு பயங்கரமான ஒரு சத்தத்தோட கையில வைச்சிருந்த அருவாள தூக்கிபோட்டு கத்தினாரா அவ்ளோதான் நம்ம பிள்ளையாரு அதுக்காகவே வெயிட் பண்ணிகிட்டுருந்த கணக்கா பிளிருனாரு பாருங்க ஒரு அடி முன்னே வைச்சு, நாங்க வந்த திசை திரும்பி ஓட்டமின்னா அப்படி ஒரு ஓட்டம் நம்மூரு பி.ட்டி உஷா அன்னிக்கு அப்ப எங்ககிட்ட தோத்துருப்பாரு அப்படி ஒரு ஓட்டம்.

கண்ண மூடிக்கிட்டு போனா, பின்னால வந்து யாரோ தொட்ட மாதிரி ஒரு உணர்வு எனக்கு கொஞ்சம் பயம் கழுத்த திருப்பி ஓடிக்கிட்டேதான் பார்த்தா, பிள்ளையாரு! ஒரு மூங்கில இழுத்து போட்டுருக்காரு அது வந்து சாய்ந்து அதோட நுனி நம்ம மேல பட்டிருக்கு அப்படின்னு தெரிஞ்சவுடன், அடப் போங்கப்பா அப்படின்னு இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி ஓடினா, அப்பத்தான் நாம நிஜ பிள்ளையாரு ஒரு பெரிய பள்ளத்த காமிச்சு உள்ளே பசங்களா தாவி ஓடி பிழைசுக்கங்டான்னு வழிய காமிச்சாரு.

யானை கொஞ்சம் சைஸ்ல பெரிசு இல்லையா, நல்ல சறிவான அல்லது மேட்டுப் பாங்கான இடமா இருந்தா நல்லா யோசிச்சுத்தான் கால எடுத்து வைப்பாரு சறிக்கி விட்டுடும் அப்படிங்கிற பயத்தில. ஆனா, நாம சின்ன உடம்பு பாலன்ஸ் பண்ணிகிடுவோம் அந்த மாதிரி சமயத்தில அதுவும் உயிர் பயம் வேற இல்லையா, குதிச்சுட்டோம்.

நல்ல சறுக்கான பள்ளம் நிறைய குத்துச் செடி கொடிகளோட அதில வேற ஒரு வகை முள்ளுச் செடி wait-a-bit_ன்னே பேரு கோத்து பிடிச்சு நிக்க வைக்கும், இந்த நேரத்தில நின்னு எடுத்து விடவா முடியும் நல்லா கிழிச்சு வைக்க ஓரே ஓட்டந்தான்.

பிள்ளையாரு மேல நின்னு ஒரே ஆர்ப்பாட்டம். மண்ணெ உதைச்சு தள்ளிக்கிட்டு பிளிரிகிட்டு நிக்கிறான். நாங்க ஒரு 300 அடி தூரத்தில போயி நின்னுதான் திரும்பியே பார்த்தோம். அப்பாட நல்ல வேளை கீழே இறங்க ஆயத்தப்படலே அப்படின்னு நாம நிஜ பிள்ளையாருக்கும் ஒரு நன்றிய சொல்லிப்புட்டு, வேற பக்கமா நடையைக் கட்டி, மிச்ச மிருந்த நேரத்தை பறவைங்கள பார்க்கிறதில சிலவு செஞ்சோம்.

என்ன இருந்தாலும் அன்னிக்கு நடந்ததெ எங்கள்ல யாருமே கண்டிப்பா எப்பவுமே மறக்க முடியாது இல்லீங்களா? அது ஒரு சுவையான இன்ப அதிர்ச்சி, உங்ககிட்ட பகிர்ந்துக்கிற அளவுக்கு.
Related Posts with Thumbnails