Sunday, April 30, 2006

முழிச்சுகிட்டே தூங்குவேனே...! : Mimicry Traits

விட்டில் பூச்சிய (moth) நாம எல்லோருக்கும் தெரியும். அதாங்க சும்மா செவனேன்னு ராத்திரி நேரத்தில நம்ம வீட்டு லைடிற்கு கீழே இறக்கையை பப்ரபான்னு விரிச்சுட்டு பளுப்பு அல்லது சாம்பல் நிறத்தில எப்படா அங்கன இருக்கிற சுவத்துப் பல்லி பதுங்கிப் பதுங்கி நகர்ந்து வந்து நம்மள காலி பண்ணுமின்னு (அதுக்கும் ஒரு தியரி இருக்கு - prey-predator தொடர்ப பத்தி எழுத, அதையும் பின்னாடி சொல்றேன்) உட்காந்திருக்குமில்ல அந்த நபர் இனம்தான் பேசப் போற விசயம்.

இந்த விட்டில் பூச்சிக்கும் நமக்கு நிரம்பப் பிடிச்ச (குறிப்பா... பொண்ணுங்களுக்கு) வண்ணத்துப் பூச்சிக்கும் (Butter Fly) ரொம்பத் தொடர்பு இருக்குது. அத எப்படி பிரிச்சுப் பார்க்கிறது அப்படிங்கிறதை, குமுதத்தின் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் மாதிரி ஒரு ஆறு வித்தியாசங்களுடன் இன்னொரு பதிவில காண்போம். இப்ப நம்ம பய விட்டிலோட பரிணாம தேடலைப் பார்ப்போம்.

இந்தப் பசங்க ராத்திரியில ஊர் சுத்தறவுனுங்க. அதனால செவனேன்னு பகல் முழுக்க ஒரே இடத்தில அடைஞ்சுகிடந்து தூங்கிட்டு இருப்பானுங்க. இந்த இடத்தில அதோட இறக்கை சம்பந்தமா கொஞ்சம் சொல்லிப்புடணும் முன்னலே நான் படம் ஒட்ரதிக்குள்லே. இதுகளுக்கு முன் இறக்கை (Fore Wing), பின் இறக்கைன்னு (Hind Wing) ரண்டும் மேலமேல இருக்கும். ஆனா சில வகை விட்டில்களுக்கு பின் ரக்கையில பெரிசா கண் மாதிரியே பெரும் புள்ளி ஒண்ணு வலது பக்கமும் இடது பக்கமும், அத மறைச்சுகிட்டு இந்த முன் இறக்கை அச்சு அசலா அவர் எது மேல உட்காந்து தூங்குறாரோ அந்த இடம் மாதிரியே ரக்கை நிறத்தோட....கொர்...கொர்...

இந்த செட் அப்பை வச்சுகிட்டுத்தான் நம்ம ஆளு பொழப்பை தள்ளிகிட்டு இருக்கிறார். எப்படியா? அப்படி பகல் பொழுதில் தூங்கிட்டு இருக்கிறாரா, இருக்கும் போது எவனாவது எழுப்பி விட்டவோ, அல்லது அவரே அப்படி நினைச்சுகிட்டவோ அப்பப்போ டக்குன்னு மேல் இறக்கையை மேல தூக்கி, கீழ் இறக்கையை காமிப்பாரு அந்த முட்டை பொய்கண்ணோட... இப்ப எங்கயாவது இருந்து அதப் பாத்துகிட்டு இருக்கிற பறவையோ இல்ல வேற எமனோ, சரி முழிச்சுகிட்டு இருக்கிறான் பக்கத்தில போன பறந்துபுடுவான் போல, எதுக்கு தேவையில்லாமல் சக்தியை செலவு பண்ணிகிட்டு அப்படியே போயிடுமிண்ணு நம்ம விட்டில் நினைச்சு, இயற்கையை கெஞ்சி கூத்தாடி பரிணாமத்தின் தயவால இப்படி ஒரு தகவமைப்பை வாங்கிட்டு வாழ்கையை ஓட்டுது...

நல்ல இருந்துச்சா, இல்ல மண்டை காஞ்சி போச்சான்னு சொல்லுங்க...

Saturday, April 29, 2006

மரத் தவளைகளின் பெரிய நிறக் கண்களின் ரகசியம்...

மரத் தவளைகளில் (tree frogs) பெரும்பான்மையானவை மழைக் காடுகளில் (rain forest) உள்ள மரப் பொந்துகளில் வாழ்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மட்டுமே வெளியே தலை காட்ட ஆரம்பிப்பார்கள், ரொம்ப சத்தம் போடுற வகை. பகல் முழுக்க நம்ம ஊரு சில பசங்க மாதிரி தூக்கம் தூக்கம்தான். இரவில்தான் ஆட்டம் முழுக்க!

சரி விசயத்துக்கு வருவோம், இந்த மக்களோட கண் (உடம்பும் தான்) நல்ல மிட்டாய் நிறத்தில அசல்ல பார்த்த பொம்மை தவளைப் பசங்க மாதிரியே இருப்பானுங்க. இவனுகள்ல சில பேரு பயங்கர விஷம் கொண்ட பயக, எங்கே அழகு இருக்கோ அங்க ஆபத்தும் இருக்கும் அப்படிங்கிற மாதிரி. நான் நினைக்கிறேன் அதுவும் ஒரு பரிணாம சமிக்கைதானோ என்று. சொல்லாமல் சொல்றது நான் ரொம்ப அடிக்கிற நிறத்தில இருந்து, என்னை பிடிச்சு சாப்பிடற எண்ணமிருந்தால் விட்டுடு அப்படின்னு ராத்திரியில வெளியில வந்து பசிச்சு அழையுற ஆந்தை, தேவாங்கு, பறக்குற அணிலு, அப்புறம் இன்னும் பிற மரம் ஏறுர சிறு பாலூட்டிகளிடத்த.

சரி அப்படி பகல் நேரத்தில தூங்கிட்டு இருக்கிறப்ப யாராவது தட்டு தடுமாறி எரடி விழுந்து நம்மாளை முழிக்க வச்சுப்புட்டா அப்பதான் நம்மாளோட பெரிய கண் உதவிக்கு வருது. எப்படி? படக்குன்னு ஒரு ஒரு பெரிய முட்டைக் கண்ணெ சிவப்போ, பச்சை நிறத்திலோ வைச்சுக்கிட்டு உர்ர்னு கோபத்தில பார்க்கிறமாதிரி முறைச்சு உருட்டி பார்த்தா, எரடி விழுந்தவன் குழம்பிப் போய் கொஞ்சம் நேரம் சுதாரித்சு அடுத்த மூவ் முடிவு பண்றதுக்கு முன்னாடி நம்மாளு வுடு சூட்தான்...

இப்ப தெரியுதா எதுக்கு பெரிய முட்டை கண்ணுன்னு. நாங்க பல முறை வால்பாறை காடுகளில் இரவு நேரங்களில் டார்ச்சும் கையுமா எப்படியாவது ஒன்ன பார்த்துப் புடனுமின்னு அலைஞ்சிருக்கோம். இந்த தவளை விடும் சத்தம் வரும் திசையை நோக்கி நகர்ந்து ஒரு ஐந்து அடி வித்தியாசத்தில் இருக்கும் பொழுது சத்தம் வருவது டக்குன்னு நின்னு போகும். அப்புறம் கிளை கிளையா பார்த்தாக் கூட கண்டுபிடிக்கிறது...ரொம்ம்ம்பக் கடினம்.

ஆனா, அவைகளை தேடிகிட்டு அலைஞ்சது அப்படியே பசக்குன்னு பச்சையா மனசில ஒட்டிகுச்சு. ஏன்னா, மழைக்காடு, எங்கு திரும்பினும் ரீங்ன்னு சந்தம், தூத்தல், கீழே தொங்கும் மிஸ்ட் இப்படீ இருந்தா எப்படியிருக்கும் கொஞ்சம் பயம், நிறைய எதிர்பார்ப்பு...

நான் ஒன்னு கூட காட்டுல பார்த்ததே இல்லைங்க...உண்மைய சொல்லிப்புட்டேனே...

Friday, April 28, 2006

பூச்சியுண்ணும் நெப்பாந்தஸ் தாவரம்...!


மலேசியாவில் உள்ள நெப்பாந்தஸ் (Nepenthes) என்னும் ஒரு வகை செடி பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. எப்படியெனில், அதன் அகண்ட ஜாடி போன்ற அமைப்பு தண்ணீருடன் கூடிய திரவத்தை அதன் அடிப்பகுதியில் கொண்டுள்ளது, அதனுள் செல்லும் எவையும் மரணக் குகைக்குள் நுழைந்தாகத்தான் பொருள். அப்படி உள்ளே சொன்றோ அல்லது தவறி விழுந்த பூச்சிகள் அத்திரவத்தினுள் மூழ்கி தன் உடம்பிலுள்ள கனிமங்களை இழந்து பிறகு அத்தாவரத்தினால் கிரகித்துக்கொள்ளப் படுகிறது.

இருப்பினும் அதற்கு யாரவது ஒரு ஆள் நமது இயற்கையில் அல்வா கொடுக்க இருக்க வேண்டுமல்லவா? அக் குடுவைக்குள் ஒரு வகை எறும்பு குடித்தனம் நடத்துகிறதாம், அது அத் தாவரத் தடாகத்தினுள் சென்று நீந்தி அங்கு சிக்கியிருக்கும் பூச்சிகளை இவர் கபளீகரம் செய்து விடுகிறாம்.

இது எப்படி இருக்குகுகுகு....(சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல்ல ஒரு முறை படிச்சுட்டு சிரித்சுடுங்க...ஹ்ஹா...ஹா.ஹா..)

விஷமுள்ள வெட்டுக்கிளியும்-அதற்கென பிறந்த ஸ்ரைக்கும்!


ஸ்ரைக்(shrike) வகை பறவைகள் சற்றே நமது சிட்டு குருவிகளின் உடல் அளவை விட பெரியதாக இருக்கும். இவைகள் பெரும்பாலும் உணவாக தன்னைவிட உருவத்தில் சிறிய உயிரினங்களை உண்ணுகிறது. அதன் வேட்டையாடும் ஸ்டைல் பறந்து வந்து கவ்விச் செல்வது போல்தான்.

இயற்கையில் எல்லாவற்றிர்க்கும் ஒரு செக் மேட் போல, ஒவ்வொரு இனத்தையும் இனத்தொகையீட்டு (கட்டுப்படுத்தி) வைத்துக் கொள்ள அதனை பிடித்து உண்ணும் உயிரினம் ஒன்று இருக்கும் நிச்சயமாக. ஆனால் தென் அமெரிக்காவில் வாழும் ஒரு வகை வெட்டுக்கிளியை வேறு எந்த உயிரினமும் தன்னை பிடித்து உண்ணா வண்ணம் தகவமைப்பாக பெற்றிருப்பது 'விஷம்' அதன் தொண்டை பகுதியையொட்டி. உண்மை அதுவாக இருக்க, அப்படி யாரும் அதற்கு செக் மேட் ஆக இல்லாமல் போனால் இயற்கையின் விதிப்படி அந்த குறிப்பிட்ட உயிரினம் பல்கிப் பெருகி மற்றவைகளுக்கு இடமலிக்காமல் தானும் எந்த ஒரு பிரயோசனமும் மற்றவர்களுக்கில்லாமல் உணவுச் சங்கிலியை உடைக்கும் நிலைக்கிட்டுச் செல்லலாம்.

இச் சூழலில் அந்த வெட்டுக்கிளிக்கு எமனாக அமைந்தது இந்த ஒரு குறிப்பிட்ட ஸ்ரைக் இனம். ஒரு நாள் ஒரு பறவை ஆராய்ச்சியாளர் களப்பணி செய்து கொண்டுள்ள போது, தற்செயலாக தனது பைனாகுலர் மூலமாக இந்த பறவையை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்த ஸ்ரைக் பையன் சமர்த்தாக அந்த ஒரு விஷ வெட்டிக்கிளியை பிடித்துக் கொண்டு போய் ஒரு முள் வேலியில் அமர்ந்து பொறுமையாக தனது அலகால் தலைப்பாகத்தை மட்டும் தட்டி விட்டுட்டு (அங்குதானே விஷ சுரப்பி இருக்கிறது) லபக்கென்று கபளீகரம் செய்ததை பார்த்தவுடன், ஆராய்ச்சியாளனுக்கு அன்னைக்கு பம்பர் பரிசு விழுந்த ஆனந்தம் தான்!

காட்டிலிருந்து தனக்கு ஞானம் கிட்டிய தொனியில் வந்து தனக்குக் கிட்டிய தரிசனத்தை ஒரு பல்நாட்டு பறவைகள் மாத ஏட்டில் பகிர்ந்து கொள்ளும் வரை தனியவில்லையாம்.

அது நாள் வரையிலும் எல்லோரும் அந்த வெட்டுக்கிளியின் செக் மேட் யார் என்பது தெரியாமல் இருந்ததும், இந்த சமத்து ஸ்ரைக் எப்படி நாம் தூசி பட்ட அல்வா பகுதியை கொஞ்சம் கிள்ளி அந்த பக்கம் போட்டுவிட்டு சாப்பிடுவதை போல சாப்பிடுவதை கண்டதும், இயற்கையின் விந்தையோ விந்தையென்று அதிசயத்துப் போனாராம். நானும் தான்! இப்பொழுது நீங்களும்தான்!!

இந்த செய்தியை நான் ஒரு 6 வருடங்களுக்கு முன்பு படித்தேன், அப்படியே மனதில் நின்று போனது. இப்பொழுது இங்கு சொல்வதின் மூலம் உங்கள் மனதையும் நிரப்புகிறேன். குழந்தைகளிடத்தே சொல்லிப் பாருங்களேன்....அப்புறம் நீங்கதான் ஹீரோ...!

சொல்லிட்டு போங்க இது பிடிச்சிருந்ததான்னு....

முதல் பதிவில் ஒரு அறிமுகம்...!

கடவுளே (=சக்தி - Energy) இப் ப்ரபஞ்ச இயற்கைய முடுக்கி பரிணாமம் எனும் துடுப்பைக் கொண்டு அவையனைத்தையும் நகர்த்தி, "அன்பு, அரவணைப்பு(=கடவுள்) எல்லா உயிரிடத்தும்" எனும் உயர்ந்த நிலையை நாம் எட்ட உதவி மீண்டும்...மூலத்தை நோக்கி நமது பரிணாமம் நகர்கிறது...

இப் பதிவில் நான் பார்த்த, ரசித்த, படித்த, கேட்டுத் தெரிந்து கொண்ட இயற்கை சார்ந்த பரிணாம வினோதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இங்கு பதிந்து வைக்கலம்மென்று எண்ணியுள்ளேன்.

இப் பதிவில் சமீபத்திய வன உயிரின ஆராய்ச்சிகளின் போது இயற்கை ஆர்வளர்கள் கண்டு அதிசியத்துப் போன தாவர மற்றும் விலங்களின் பழக்க வழக்கங்கள், அவைகள் தனக்கே உரிய இடத்தை(Niche) இயற்கையில் தக்க வைத்துக்கொள்ள பெற்றுள்ள தகவமைப்புகள், அதற்கென பெற்றுள்ள புற உறுப்புகள் அவைகளை கையாளும் முறை இப்படி எத்தனை எத்னையோ விசயங்களை அறிவியல் ஏடுகளில் வரும் கட்டுரைகளை படித்தோ அல்லது என்னுடைய சொந்த கன்காணிப்பின் மூலம் அறிந்த விசயங்களை அவ்வெப்பொழுது இங்கே கொணர எண்ணியுள்ளேன்.

அதற்கு எப்படி ஆதரவு இருக்கும் என்பதையும் போகப் போக தெரிந்து கொள்கிறேன்.

என்னுடை பின்புலம், நான் ஒரு இயற்கையாளன் (Naturalist) பல வருடங்கள் மேற்கு மலைத் தொடர்களில் அலைந்து திரிந்த அனுபவமுண்டு என்னுடைய ஆராய்ச்சிக்கென. என்னை இப் பொழுது இங்கு எழுத தூண்டிய விசயம் என்ன வென்றால், நாம் இருக்கும் அரிபரியில், அரசியல், சமூதாய சீர்கேடு, மதம் சார்ந்த பிரட்சினைகள் பற்றியே அதிகமாக சிந்திக்கும் வேலையில், நாம் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இந்த இயற்கையை புறக்கணித்து "இயற்கை கற்பழிப்பு" செய்து வருகிறோம் என்பதே நிசர்சனமான உண்மை.

அதனால் இயற்கை விழிப்புணர்வேற்றும் வண்ணம் முடிந்த அளவிற்கு விந்தையிலும் விந்தையான விசயங்களை இங்கே வழங்க முயற்சிக்கின்றேன். நீங்களும் மற்ற சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சுகமான காற்று வாங்க விரும்பினால், அது இங்கே கிடைக்குமென நம்பி வாருங்கள்...

அன்புடன்,

இயற்கை நேசி.
Related Posts with Thumbnails