Tuesday, March 11, 2008

பூவன் கடவுளாகிப் போனான்: காட்டாறு!

எப்பொழுதும் போலவே அதுவும் ஒரு மழைக்காடுகளின் மழைக்காலம்! சுகமான சுமையாக பூவனும் நானும் ஆளுக்கு ஒரு ஐம்பது அலும்னியத்தாலான எலிப் பொறி பெட்டிகளை ஒரு கட்டாக கட்டி, அக்காமலை (Akkamalai) நோக்கிச் செல்லும் பேருந்தில் வால்பாறையிலிருந்து ஏறிக் கொண்டோம். பேருந்து நிலையம் வரைக்குமாக இருந்த அந்தச் சொந்த சுமையை இப்பொழுது பேருந்து ஏற்றிக் கொண்டது.

அக்காமலையின் கடைசி நிறுத்தத்தில் நாங்கள் இறங்கிக் கொண்ட பிறகு சுமாருக்கு ஒரு ஒண்ணரை கிலோமீட்டர் சரிவான தேயிலைக் காடுகளுக்கிடையேயான அந்தச் சுமையுடன் கால்நடையாக நடந்து அந்தப் பச்சைக் கம்பளத்தை நோக்கிய நடை. தலைக்கு மேலே மூடியாக மேக மூட்டங்கள். மழைக்காடுகளில், அதுவும் அந்த இரண்டு பருவ மழை காலங்களில், எந்த நேரத்தில் மேகம் கருக்கொண்டு, எந்த நேரத்தில் தன் கருக் கொண்ட சூலை இறக்கி வைத்துக் கொள்ளுமென்று அரிதியிட்டு சொல்லி விட முடியா வண்ணம் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாமென்ற சூழ்நிலை.

அன்றும் அது போன்றதொரு நாள்தான். நாங்கள் எப்பொழுதும் அந்தப் பசுங் காடுகளை ஓர் காட்டாற்றை குறுக்காக நடந்தேதான் அணுகுவது வழக்கம். அதிகம் மழையற்ற நாட்களில் கண்ணாடி படிகத்தின் மீது ஓடும் நீராக ஆங்காங்கே பாறைகளின் முகட்டைக் காட்டிக் கொண்டு ஓடுவது நாங்கள் காணும் காட்சி. அப்படியாக இருக்கும் நாட்களில் மிக எளிதாக நீரின் மேல் கால்படாமல் தாவித் தாவி எதிர்த்த கரைக்கு போய்விடுதுண்டு. அன்றும் அப்படியே நடந்தது.

எத்தனையோ அசம்பாவித நிகழ்வுகள் நமக்கு நிகழும் கணம் தோறும் நாம் நினைப்பதுண்டு, இதனை முன்னயே கண்ணுரும் சக்தி நமக்கு கிடைத்திருந்தால் நிகழ்ந்த அந்த நிகழ்வை தவிர்த்திருக்காலமே என்று நினைக்கத் தோன்றினாலும், அது போன்றதொரு சக்தியை எந்த கொம்பனும் வரமீட்டி பெற்று அந் நாளில் தன்னை நிறுபித்துக் கொண்டதாக நாமறிந்திருக்கிறோமா?

ஆனால், அப்படியாக அறியும் பட்சத்திலும் அந்த நிகழ்வின் மூலமாக கிடைத்திருக்கக் கூடிய அரிய பாடங்கள், அனுபவங்கள் நிகழாமல் போனாலே நம் மலரும் சாத்தியங்களும், கதை சொல்லும் திறனும் அற்றுப் போய் தேங்கிய குட்டையாக ஆகக் கூடிய இயற்கையின் வடிவமைப்பை என்னவென்று சொல்வது.

சரி இப்ப விசயம், பூவனும் நானும் இப்பொழுது பச்சைக் கம்பளத்திற்குள் இறங்கி நடக்க ஆரம்பிச்சாச்சி, உள்ளே போய் என்ன செய்வோமென்றால் கொண்டு வந்திருக்கும் 100 எலிப் பெட்டிகளையும் மனித நடமாட்ட பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பார்த்து ஒரு நூறு மீட்டர் நேர்க் கோட்டில் பத்து மீட்டர் இடைவெளியில் ஒரு பெட்டி அமைந்திருக்குமாறு பத்து கோடுகளில் 100 பெட்டிகளையும் பரப்ப வேண்டும். அதுவே எங்களின் அப்பொழுதைய வேலை. அதற்கு குறைந்தப் பட்சம் ஒரு இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும், இருக்கும் தரை அமைப்பினை பொருத்து.

வேலையில் மும்முரமாக இருக்கும் சமயத்தில் இலைகளுக்கு யாரோ நெட்டி எடுத்து விடுவதனைப் போன்றதொரு நொட், நொட் சத்தம். மழைக்காடுகளில் வெயிலும் சரி, மழையும் சரி தரையை வந்து தொடுவதற்கு முன் 50 மீட்டர்களில் உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் குடுமியின்(Canopy) அனுமதியின்றி தொட்டு விட முடியாது. ஏனெனில் குடுமியின் அடர்த்தி அப்படி, அப்படியே கொஞ்சம் விட்டொழிந்தாலும் இரண்டாவது நிலையிலுள்ள தனது சகோதரர்களின் (Secondary growth) அனுமதியும் பெற வேண்டும்.

அந்த இயற்கை குடையமைப்பின் கீழ் லாவகமாக லஞ்ச் கேட்கும் அட்டைகளுக்கு உப்பினைக் கொண்டு பதிலுரைத்து விட்டு உஷ்ஷ் யாப்பாட என்று நிமிரும் பொழுது தட் தட் தட் என குடையை கிழித்துக் கொண்டு விட்டது

மழைக்காடுகளின் சிம்ஃபொனி. இப்பொழுது நம்மால் ஆனதெல்லாம் ஒரு அகன்ற மரத்தின் கீழ் தஞ்சம் புகுவதும் கொஞ்சம் நம் மன சாந்திக்கு அருகில் கிடைக்கும் மலை வாழை ஒன்றின் இலையை திருடி தலைக்கு கவசமாக பிடித்துக் கொண்டு, அந்த நிகழ்வை ரசிப்பது மட்டுமே!

அப்படியாகவே மேலும் ஒரு இரண்டு மணி நேரங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும், அங்கே நேரமென்ற ஒன்று இருப்பதே இருட்டும் தன்மையினைக் கொண்டும், அட்டைகளின் அட்டகாசத்தையும் கொண்டே அறியும் நிலை. அது போன்றதொரு நிலைதான் இப்பொழுதும். மழையின் வீச்சத்தை பின்னால் தள்ளிவிட்டு மெது மெதுவாக அந்த சறுக்கு ஈரப்பதமேறிய மலைத் தரையில் ஒரு கபடி நடை போட்டு காட்டின் விளிம்புக்கு வரும் பொழுது பெரும் காட்டாற்று சத்தம், எட்டிப் பார்த்தால் அங்கே கண்ணாடி படிவ அமைதித் தண்ணீர் அல்ல, சினமுற்ற முகம் சிவந்த சிறு பாறைகளை உருட்டிச் செல்லும் காட்டாறாக அது பரிணமித்திருந்தது.

அப்ப இன்னிக்கு நமக்கு ஆப்புத்தானா, என்று நினைத்துக் கொண்டே கரைகளின் விளிம்பிலேயே நின்றோம் மேலும் சில மணி நேரங்கள். மழையின் மூர்க்கம் ஒழிந்தால் ஆற்றின் வீச்சமும் அதனையொட்டி குறைந்து போகுமென்பது பூவனின் பல வருட அவதானிப்பு. ஆனால், அன்று நேசிக்கு ஒரு காட்டாற்றின் பலமறிய வைக்க அக்காமலை சிம்ஃபொனி எப்பொழுதோ திட்டமிட்டு விட்டது போலவே அது பாட்டுக்கு நிகழ்த்திக் கொண்டிருந்தது. அதில் பூவனின் எதிர்ப்பார்ப்பு புகைந்து போனது.
இப்பொழுது எனக்கு பூவன் கடவுளாகிப் போனான் ஒரு காட்டாறுக்கு முன்னால்! முழுதுமாக அவனின் காடாளும் திறத்தினை நம்பி அவன் எடுக்கும் முடிவிற்கு முழுதுமாக ஒப்பிப் போகும் நிலையில் நான். அங்கே கணினியில் மல்டிவேரியட் அனாலிசிஸ் புள்ளியல் கணக்குப் போடும் என் திறமை நல் ஹைப்போதீசிஸ் ஆகிப் போனது.

"சார், வேற வழியில்லை நமக்குத் தெரிஞ்சி எங்கே பெரிய பாறை முகடுகள் மூழ்கிப் போன நிலையில் நிறைய நீர்ச் சுழிப்பு இல்லாமல் தண்ணீர் ஓடுகிறதோ அங்கேயாகப் பார்த்து இறங்கி மெதுவாக நடந்து கடந்து விடுவதுதான் ஒரே வழி," என்று என் முகத்தை உற்று நோக்கினான், பூவன்.

"உனக்குத் தெரியாத பூவன், அப்படி எங்கே என்று ஒரு இடத்தை பார்த்து இதோ இங்கேதான் என்று சொல்கிறாயோ செய்து விடுவோமென்று," பாடத்தை ஏற்கும் நிலையில் நேசி.


அப்படியாக ஒரு இடத்தை தேடும் உத்தியில் ஆற்றின் கரையோரமாகவே சிறிது நேரம் நடந்து சென்றோம். காட்டாற்றின் மூர்க்கத்தினை கட்டற்ற தரையினூடே நடந்து அறிந்து கொண்ட நாள் அன்றுதான்.

நன்றாக செப்பனிடப் பட்ட பாதையில் அறிந்து கொள்ளும் நோக்கம் அங்கு அற்றிருக்கும் நிலையில் நாம் பயணிக்க நேரும் பொழுது, மனதில் தடம் பதிக்க அத் தடத்தில் ஏதும் மற்றதைப் போல ஒரு பிம்பம் நம் மனதில் பதிவது இயற்கைதானே. ஆனால், இங்கோ ஒரு மரத் துண்டினைப் போலவே இற்று போய்க் கிடக்கும் மனத்திற்குக் கூட உள்வாங்கும் சக்தி பல மடங்கு எகிறுகிறது. காரணம், மனம் அந் நொடியில் லயித்து இலக்கற்ற நீர்ச் சுழிப்பில் கால்கள் இடறிச்செல்வதால் அப்படியே அத் தடமும் அந்த சூழலும் மனத்தினுள் தடத்தினை விட்டுவிட்டுச் செல்வதால் தானோ!

அப்படியாக ஊர்ந்து கொண்டே சரியான ஓர் கடக்கும் இடத்தினை பார்த்துக் கொண்டே வரும் பொழுது பூவனுக்கு மேலும் ஓர் யோசனை, அவன் கடவுளல்லவா, என்னை காக்கும் பொறுப்பு அவனிடத்தில்.

"சார், அந்த தொடைச் சுற்றளவுள்ள மரத்தினை வெட்டி குறுக்காகப் போட்டு விட்டால் நீரின் சுழிப்பிலிரிந்து கொஞ்சம் நம்மை அசுவாசப் படுத்திக் கொள்ள உதவுமே," என்று நிறுத்தினான் பூவன்.

கொண்டு வந்த அருவாளை பயன் படுத்தி வெட்டிச் சாய்த்து படுக்கவும் வைத்துப் பார்த்தால் அடுத்த முனைக் கரையைத் தொட்டுப் பார்க்காமல் ஒரு ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு படுத்துக் கொண்டது. ஆறும் அதனை அசைத்துப் பார்த்து தன் வழியில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், நாங்களும் இறங்கி விட்டோம்.

இப்பொழுது காட்டாறா அல்லது பூவனா? நான் எடுத்து வைத்த இரண்டு அடிகளிலேயே என் முழங்கால் மட்டும் தண்ணீர் சூழ்ந்து, அன்னிச்சையாகவே என் கைகள் பூவனின் தோள்களைப் பற்றிக் கொண்டது. பூவனோ, ஒரு கையில் நீண்ட குச்சியும், மறு கையில் பெட்டி கொண்டு வந்திருந்த பைகள், அருவாள் இத்தியாதிகளைப் பிடித்துக் கொண்டே பாலன்ஸ் செய்தவாறு, குச்சியால் அவ்வப்பொழுது நீரின் ஆழமும், தட்டிச் செல்லும் பாறைகளின் இருப்பையும் உணர முயற்சிக்கும் வேலைப் பளுவிற்குமிடையே என் பளுவையும் ஏற்றிக் கொண்டான்.

என் உடல் எடை அங்கு ஒன்றுமே அற்ற நிலையில் ஒரு மீன் தூண்டிலில் இருக்கும் மிதவைத் தட்டையைப் போலவே என் கணமறிந்தேன், ஒரு காலைத் தூக்கி கீழிறக்கும் கணம் தோறும். அது ஒரு பத்து நிமிட கடப்பே எனினும் ஒவ்வொரு அடியும் நீரின் வேகத்தை விட எனது மனதை பயனிக்கவே வைக்கச் செய்தது. பூவனின் வெற்றுப் பாதங்கள் என் ஷு அணிந்த கால்களை விடவும் நிறையவே தரை உணர்ந்து வழி நடத்த உதவியிருக்கக் கூடும். ஏனெனில், நான் இரு இடங்களில் பாறைகளின் விளிம்பில் தட்டி நெஞ்சளவிற்கு நனைந்தே எழுந்தேன்... மறு கரையின் புற்களை தொட்டப் பொழுது அப் புற்கள் கூறியது என்னைப் போலவே பசுமையாக உன் நெஞ்சில் இந் நிகழ்வு பசுமையுற்று இருக்கட்டும் என்று ஆசிர்வதித்து ஏற்றுக் கொண்டதைப் போல உணரவைத்தது.பி.கு: அன்று எனக்கு ட்ராக்கராக பணிபுரிந்த "பூவன்" என்ற நண்பன் கடவுளாக எழுந்தருளியது போய், பின் பொரு காலத்தில் நிஜமாக கடவுளாகிப் போனான் தனது 27 வயதில் வரகலியாற்றில், சிறுநீரகப் கோளாறுகளால். அவனுக்காக இந்தப் பதிவினை சமர்பிக்கின்றேன்.23 comments:

சாலிசம்பர் said...

அழகுத்தமிழில் அருமையான பதிவு.

அடர்ந்த காட்டை பார்க்கும் போது எனக்கு வீரப்பன் ஞாபகம் தான் வரும்.வாழ்நாள் முழுக்க எப்படித்தான் கழித்தாரோ என்று.

இயற்கை நேசி|Oruni said...

வாங்க ஜாலி,

இப்படி எழுதினா அது அழகுத்தமிழா :-).

//அடர்ந்த காட்டை பார்க்கும் போது எனக்கு வீரப்பன் ஞாபகம் தான் வரும்.வாழ்நாள் முழுக்க எப்படித்தான் கழித்தாரோ என்று.//

அவருக்கு இருந்தது obsessive compulsive காதல் காடுகளின் மீது, நமக்கு அப்படியில்லையப்பா, காதல் விட்டு விட்டு வரும் :D.

Unknown said...

நேசி,

பூவனுக்கு என் காலம் கடந்த அஞ்சலிகள். காட்டாறு எப்பவுமே ஒரே மாதிரி இருக்கும்னு சொல்ல முடியாது. இதேபோல் எனக்கு மழைக்காலங்களில் நிறைய அனுபவங்கள்! எங்கள் வயல் கொஞ்சம் ஒரு காட்டாறு தாண்டி செல்லனும். இப்பிடி, மழை வந்தால் நீரின் வேகத்தை யாராலும் கணிக்க முடியாது. நீங்க சொன்ன மாதிரி சின்ன ஆறு இல்லை. ரொம்ப கவனமா கடக்கனும்! இல்லேன்னா, 1 கி.மீ தொலைவில் உள்ள 'சட்ரசு' (ஷட்டர்ஸ் என்பதின் கிராம வழக்கு) பக்கத்திலே பாடியத்தான் எடுக்க முடியும்.

இயற்கைதான் எவ்வளவு சக்தி வாய்ந்தது? இயற்கைக்கு பல வகையிலும் அணை போடப் பாக்கும்/மீறப்பாக்கும் மனிதன் எவ்வளவு முட்டாள்??

இயற்கை நேசி|Oruni said...

வாங்க தஞ்சாவூரான்,

//இப்பிடி, மழை வந்தால் நீரின் வேகத்தை யாராலும் கணிக்க முடியாது. நீங்க சொன்ன மாதிரி சின்ன ஆறு இல்லை.//

அதன் இழுப்பின் வீச்சத்தை அன்றுதான் உணர்ந்தேன்...

//இயற்கைதான் எவ்வளவு சக்தி வாய்ந்தது? இயற்கைக்கு பல வகையிலும் அணை போடப் பாக்கும்/மீறப்பாக்கும் மனிதன் எவ்வளவு முட்டாள்??//

அந்தப் போட்டியின் உச்சத்தில் எச்சமாக நீர்க்கப் போவது யார், தஞ்சை :).

காட்டாறு said...

உங்க தமிழ் நடை அழகோ அழகு. காட்டாற்றின் வீச்சத்தில் நடை பயின்ற அழகிற்கு ஈடாக உள்ளது.

காட்டாறு said...

எதற்காக இந்த எலிப்பெட்டி என்று சொல்லவேயில்லையே? காட்சியின் கரு அதுவில்லை என்றதாலா?

காட்டாறு said...

எங்கிட்ட (காட்டாறு) என்னவோ சொல்ல வாறிங்களோன்னு தலைப்பை பார்த்ததும் ஓடோடி வந்தேன். ஹி ஹி ஹி... நானில்லை அவன்!

இயற்கை நேசி|Oruni said...

உங்க தமிழ் நடை அழகோ அழகு. காட்டாற்றின் வீச்சத்தில் நடை பயின்ற அழகிற்கு ஈடாக உள்ளது.//

அப்படியா நீங்களும் சொல்றீங்க...

காட்டாறைப் பற்றிய பதிவுக்கு ஓர் காட்டாறே வந்து வாழ்த்திவிட்டது :-).

தருமி said...

இப்படி எழுதினா அது அழகுத்தமிழா :-).//
இந்தப் பதிவு என்னவோ வித்தியாசமான நடையில்தான் இருக்கு - அந்தக் காட்டாறு மாதிரி

இலவசக்கொத்தனார் said...

பூவனைப் போல் ஒரு நண்பனும் இது போன்ற அனுபவங்களும் கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

காட்டாற்றின் வெள்ளம் போல் தமிழ் புரண்டு ஓடுகிறது. வாழ்த்துகள்!

இயற்கை நேசி|Oruni said...

தெக்ஸ்.. அழகான எழுத்து நடை. பூவன் பற்றி எழுதிருப்பது ரொம்ப அழகா இருக்கு. ஆனா வாசிச்சு முடித்ததும் ஒரு கவலை மனதில்..//

டாக்டர் எவ்வளவு நாட்களாச்சு உங்களை இந்தப் பக்கமா ஒரு நடை கூட்டிட்டு வந்து, சுத்த காற்றை சுவாசிக்க வைச்சி :-).

ஏங்க மனசு கணமானுச்சு பூவனை நினைச்சா...? பூவனைப் பத்தியே ஒரு பதிவு போடுற அளவிற்கு விசயமிருக்கு, பின்னாடி எழுதுறேன்.

கோவி.கண்ணன் said...

நிகழ்வை நன்றாக விவரித்து இருக்கிறீர்கள். கொள்ளிடம் ஆற்றில் கரை கொள்ளா தண்ணீரில் வாழைமரத்தைப் பிடித்துக் கொண்டு உறவினர் ஒருவருடன் கடந்த ஞாபகம் வந்துவிட்டது.

எனக்கும் இது போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள்.

இயற்கை நேசி|Oruni said...

இந்தப் பதிவு என்னவோ வித்தியாசமான நடையில்தான் இருக்கு - அந்தக் காட்டாறு மாதிரி//

தருமி சார், அதாவது அது இஷ்டத்திற்கு போவ விட்டா வருவது வித்தியாசமான நடையா :)? சரி, இனிமே எப்பல்லாம் ஆறு நடை வருதோ அப்படியே கட்டவிழ்த்து விட்டுறுவோம் :)).

இயற்கை நேசி|Oruni said...

பூவனைப் போல் ஒரு நண்பனும் இது போன்ற அனுபவங்களும் கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.//

வாங்கய்யா கொத்ஸ் அய்யா,

நாமெல்லாம் இந்தப் வலைப் பக்கம் வைச்சிப் பார்த்து எவ்வளவு நாட்களாச்சு.

நீங்க சொன்ன மாதிரிதான் பூவன் விசயத்தில் நானும் நினைக்கிறேன்.

எழுத்து நடை வாழ்த்துக்கு ஒரு சிறப்பு நன்றி...

இயற்கை நேசி|Oruni said...

Welcome Kovi,

Kollidam Aaru and Vazhaimaram seem to be a good combo :), bring it up here...

Anonymous said...

எலிப்பொறின்னு சொல்றீகளே ! அது என்ன ? ஏன் அத்தனை எடுத்துகினு
போனீக..ஏன் அத பரப்பி வச்சீக..? அதுவும் பத்து மீட்டருக்கு ஒண்ணான்னு வேறசொல்றீக...எத புடிக்க வச்சீக..
காட்டாறு கேட்டாங்க‌..ப‌தில் சொல்லாம‌லேயே போயிட்டீக‌ளே ?

நீங்க வச்ச எலிப்பொறி இன்னும் அங்கனவே இருக்குதா ?

அய்யா ! அடுத்த மாசம் வால்பாறை பக்கம் போகவேண்டியிருக்குது.
ப‌ய‌மா கீது ..கொஞ்ச‌ம் சொல்லிபோடுங்க‌..

எப்ப‌டியோ ந‌ல்ல‌ப‌டியா வ‌ந்து
சேந்தீக‌ளே..

இயற்கை நேசி|Oruni said...

காட்டாறும், ஒரு அநானியும் எதுக்காக இந்த எலிபெட்டிகளை வனத்தினுள் எடுத்துச் சென்றேன்... எதற்காக அப்படி ஒரு அளவுகோலில் அவைகளை பரப்பி வைத்தேன் என்று கேட்டிருந்தார்கள். அவர்கெளுக்கென்று இதோ அதற்கென பதில்! உண்மையில் கீழே இருக்கும் விரிவான பின்னூட்டம் தருமியின்165.சாதிகள் இருக்குதடி பாப்பா..2 பதிவிற்கென எனது ஆராய்ச்சின் முடிவுகளை சிறிது நமக்கும் பயனுறும் வண்ணம் எனது புரிதலை, ஒரு சிறிய காட்சியை விரிவு படுத்தி பெரிய காட்சியாக்கி அதன் விளைவுகளை உட் புகுத்தியிருக்கிறேன் ஒரு பின்னூட்டமாக அவரின் பதிவுக்கு சிறிது தொடர்பு இருப்பதாகக் கருதி.

இதனுள் உங்கள் இருவரின் கேள்விகளுக்கும் விடையும் கிடைக்கலாம்...

“வந்தேறிகள்” என்பது மனித பரிணாமச் சுழற்சியில் ஒன்றுமே கிடையாது. ஹோமோ எரெக்டஸ் என்ற மனித குரங்கு இனம் புது இடங்களுக்கு வலசை போகமல் இருந்திருந்தால், அதற்கு அடுத்த மனித இனமாக தோன்றிய ஹோமோ சாபியன்ஸ் என்ற இந்த தற்கால மனிதன் தேன்றி இருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்காது.

“விலங்குகள்” உலகில் எந்த ஒரு இனமும் தன்னை இயற்கையின் நடைமுறை சேர்காப்பு (inclusion) சுழற்சியில் தற்காத்து அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டுமெனில், ஒரு சில தேவையில்லாத தகவைமைப்புகளை, பண்புகளை இழந்தோ அல்லது பெருக்கிக்கொண்டோ அடுத்த பரிணாமச் பயணத்தில் பயணித்தே ஆக வேண்டும்.

இந்த கூற்று அப்படியாக இருக்கையில் ஒரு தனிப்பட்ட இனம் தழைக்கவேண்டுமெனில் இயற்கை மீண்டும் அத் தனிப்பட்ட இன பிரஜைகளிடுடேயே கூட தறம் வாய்ந்த மரபுப் பண்புகளை பெரும் வண்ணமும் அவைகளை தனது அடுத்த சந்ததியினர்களுக்கு கடத்தி விடவும் சில பல முறைகளில் அந்த யுக்தியை இயற்கை நடத்த வாய்பளிக்கிறது.

உதாரணமாக, விலங்குகளுக்கிடையே இனப்பெருக்கத்தினை முன்னிட்டோ அல்லது தனது குடும்பத்தை யார் வழி நடத்தி (Alpha male) செல்வது என்பதற்கென நடக்கும் சண்டைகள் (குரங்கு வகைகள், மான்…), கிட்டத்தட்ட எல்லா வகை இனங்களுக்கும் இது போன்ற இயற்கை தேர்ந்தெடுப்பு இயற்கையாகவே நடந்தேறுகிறது. கிடைக்கும் நன்மை, தனது அடுத்த சந்ததி மிக்க திறமைகளை கொண்ட ஆரோக்கியமான, இயற்கை எதிப்புகளை சந்திக்க திறன் மிக்க ஒரு இனம்.

இதற்கு மாறாக இப்பொழுது மனித இனத்தில் இந்த சாதிகள் அடிப்படையில் நடந்தேறும் இனப்பெருக்க யுக்தி, இயற்கைக்கு புறம்பான யுக்தியாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய நேரிடும் பொழுது அங்கே நிகழ்வுறுவது “தன் சாதிப் பெருக்கம்” இதனை ஆங்கிலத்தில் Inbreeding என்று அழைக்கிறார்கள். இதன் மூலமாக மரபணுக்களில் எந்த ஒரு சிறப்பு புற பண்புகளும் அடுத்த தலைமுறைக்கு இணைக்கப்படுவதில்லையாதலால், பிறக்கும் சந்ததிகளும், ஒரு நல்ல ஆரோக்கியமற்ற, உடல் மற்றும் புத்தி சார்ந்த தேக்கம் நிகழ்ந்து விடுகிறது.

….. To be Contd

இயற்கை நேசி|Oruni said...

TheKa Says:

July 16th, 2006 at 12:59 am

…Part II

இது போன்ற மரபணு தேக்க நிலையின் இறுதி கட்ட வாழ்வு எப்படியிருக்கும் என்பதனை ஒரு பாலூட்டிகளில் நடதிய ஆராய்ச்சியின் பொழுது கண்டெடுத்த உண்மைகளை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ஒரு மூன்று வித அளவுகோலுடன் உள்ள மழைக்காடுகளில் இந்த ஆராய்ச்சி நடத்தப் பட்டது. ஒன்று, இயற்கையான மனித நடமாட்டம் இல்லாத மிகப் பெரும் நீண்ட காடு அதனை ஆங்கிலத்தில் Main Land என்பார்கள், இரண்டாவது, அது போன்ற மெயின் லாண்டிலிருந்து உடைந்த சிறு பெரும் காடு (Fragmented Landscape) சுற்றிலும் தேயிலை தோட்டத்தால் துண்டிக்கப்பட்டு, மூன்றாவது, இரண்டாவது வகை காட்டை விட இன்னும் அளவில் சிறியது அது போன்றே பண்புகளுடன்.

இப்பொழுது மரபணுச் சோதனை ஒரு குறிப்பிட்ட எலி வகை தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்த்தப் பட்டது, முதல் வகை காட்டில் அதாவது மெயின் லாண்டில் எந்த தங்கு தடையுமின்றி இனப்பெருக்க ஓட்டத்திற்கான வழிமுறைகள் இருந்ததால் between individuals, அங்கு உள்ள சந்ததிகளின் நோய் எதிர்புத்தன்மை, குட்டி ஈனும் பொழுது குட்டிகளின் சாவு எண்ணிக்கை எல்லாம் குறைந்தே காணப்பட்டது.

மாறாக இரண்டாவது காட்டில் மெயின் லாண்டின் சூழ்நிலைக்கு எதிர் மரையாக காண நேர்ந்தது. ஆனால் மூன்றாவது வகை காட்டில் அந்த இன எலியே காணப்படவில்லை. காரணம் ஆராயப்படும் பொழுது, இனப் பெருக்க inbreeding ஒன்றே முதல் காரணியாக கண்டறியப்பட்டது. உணவு சார்ந்த பற்றாக்குறை இருந்த போதிலும்.

இந்த தன் இனச் சேர்க்கையால் (inbreeding), ஒரு சில குறிப்பிட்ட நோய் தாக்கும் பட்சத்தில் அந்த இனமே அழிந்து போகும் அபாயம், மரபணு டைவர்சிடி இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நிலையில் நடந்திருக்கலாம் என கண்டறியப்பட்டதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்திய இளைஞர்களை தன் இயற்கை சார்ந்த திறமைகளின் மூலம் தனது பார்ட்னர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டி வந்தால் நாமும் ஒலிம்பிக், உலக கால்பந்து போட்டி போன்ற உலகப் போட்டிகளில் கலந்து கொண்டிருப்போமோ??

Bharathan Umapathy said...

A good soul Poovan must have regenerated as a fragnant flower in the same rain forests in Anamalais , where he lived and loved the great green canopies.

Anonymous said...

Poovan hasn't gone any where, he is still there in the flowers, rills and clouds of the forest. Good souls never die they only disappear

இயற்கை நேசி|Oruni said...

A good soul Poovan must have regenerated as a fragnant flower in the same rain forests in Anamalais , where he lived and loved the great green canopies.//

hi Poet,

It is good to see you around here.You had a chance to get to see him a week or so, right, within that time frame he stole your heart too.

As you stated he is there every where in the forest greenery as well as the very humming of the jungle itself.

Read the other pieces too, when you get a chance and leave your trace as well :).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்சியின் விவரணைகள் நேரில் பார்த்த ஒரு பிரமையை உண்டு பண்ணிவிட்டது.. பூவனுக்கு என் அஞ்சலிகள்.

எலிபெட்டி வச்சதற்கு குடுத்த விளக்கம் ரொம்ப பெரீஈஈஈஈசு.

Anonymous said...

useful information thankful guy
balachandran.c
ottadai.blogspot.com

Related Posts with Thumbnails