Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Saturday, March 06, 2010

விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killings

கோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதே தெரியாமல் இறங்கிக் கொண்டிருக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தானே!

சில உயரமான மலை உச்சியின் முகடுகளில் நாம் பயணிக்கும் பேருந்து இப்பவோ, அப்பவோ சாய்ந்துவிடுவேன் என்று ஒரு பக்கமாகச் சாய்ந்து செல்வதைக் கூட மறக்கடிக்கும் நிலையில், வெளியில் நமக்குக் காட்சியாக பரந்து விரிந்து மரங்களடர்ந்த மலை முகடுகள், மேகங்களை தன் மேல் கிடத்திக் காட்டும் நிகழ்வைப் பார்த்து நமது பயணம் நீண்டு கொண்டே சென்றிருப்பதனைப் பருகியிருப்போம்.

இப்படியான பயணங்களில் நாம் அமர்ந்து பயணிக்கும் பேருந்துகளின் சத்தமும், சக்கரங்களும் அங்கு வாழும் உயிரினங்களுக்கு எது போன்ற விளைவுகளை விட்டுச் செல்கிறது என்று யோசித்திருக்க வாய்ப்பில்லைதானே. இன்று மனிதன் கால் வைக்காத, வசிக்க முயற்சிக்காத இடமே இந்தப் பூமியிலில்லை என்கிற அளவிற்கு, எல்லா இடங்களிலும் நாம் நிறைந்திருக்கிறோம். இன்றைய உலக மொத்த மக்கள் தொகையாக ஏழு பில்லியன் மக்களைக் கொண்டு நாம் நெருங்கிவருவதாகத் தெரிகிறது.

அதனை ஒட்டிய மனிதத் தேவைகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதிலும் குறிப்பாக அன்றாடத் தேவையான மக்களின் இடப்பெயர்வு பொருட்டு நமக்குத் தேவையான வாகனங்களின் பெருக்கம், நம் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் இன்று அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தொகையை விட அந்நாடுகளில் பெருகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

நாம் அன்றாடம் வாகனங்களில் பயணிக்க நேரும் பொழுது சாலையோரங்களில் ஏதாவது விலங்குகள் அடிபட்டு இறந்து கிடப்பதனை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணி கடந்து போய்விடுகிறோமல்லவா? நம் கண்ணுக்குப் பெரிதாக காணக்கிடைக்கும் விலங்குகளின் உடல் பருமனைக் கொண்டு, அவ்வாறு அடிபட்டு இறந்து போன, அல்லது நம் வாகனத்திலேயே சிக்கிய விலங்குகளைத்தான் அறிகிறோம். ஆனால், அடர்ந்த வனப் பகுதிகளில் பயணிக்கும் பொழுது நம் கவனத்திற்கு வராமலேயே எத்தனையோ விதமான சிறு ஜீவராசிகளான முதுகெலும்பற்ற வகைப்பிராணிகளும் (பூச்சிகள், மெல்லுடலிகள்), ஊர்வன வகை, தவளை, சிறு பாலூட்டிகள், பறவைகளென நசுங்கி இறக்க நேரிடலாம்!

இது போன்ற அடர்ந்த மழைக்காடுகளில் வசிக்கும் பெரும்பாலான ஜீவராசிகளில் பல இன்னமும் நம் அறிவியல் உலகில் கண்டறியப்படாததாகவும் இருந்திருக்கக் கூடும். என்னுடைய அனுபவத்தில் மழைக்காடுகளின் முக்கியச் சாலைகளின் இருமருங்கும் அடிபட்டு நசுங்கி இறக்கும் வகைகளில் அதிகமாக காணப்பெற்றது, தவளைகளைத்தான். அதுவும் நன்றாக மழை பெய்யும் காலங்களில், சற்றே கூடுதலான எண்ணிக்கையில் கண்டிருக்கிறேன்.


இந்தத் தவளைகள் இயற்கையின் நாடித் துடிப்பறியும் ஒரு மானியைப் (indicator species) போன்றது என்றால் அது மிகையாக இருக்க முடியாது. அவைகளில் பல வகையான தவளைகள் இன்னமும் நம் ஊர்க்காடுகளில் அறிவியல் உலகத்தால் அடையாளப்படுத்தப்படாமல் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையின் உணவுச் சுழற்சியிலும், விதை பரவலிலும் பங்காற்றிக் கொண்டிருக்கலாம். இது தவளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறிவிட இயலாது. ஏனைய வித அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

இது போன்ற ஜீவராசிகள் தொடர்ந்தே இருந்திருக்க வேண்டிய வனங்கள், துண்டாடப்பட்டு சிறு சிறு தீவுகளாக (fragmented landscape) மிக நீண்ட இடைவெளிகளைக் (தேயிலை, காப்பி) கொண்டோ அல்லது வாகனங்கள் செல்லுவதற்கான சாலைகளை அமைத்தோ காடுகள் துண்டாடப்படுவதால், இந்தச் சிறு உயிரினங்கள் நேரடியாக நமது பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

அண்மையில் அமெரிக்கா, இண்டியானா மாநிலத்தில் வாகனப் போக்குவரத்தால் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு சார்ந்து 11 மைல்கள் நீண்ட சாலையில் 17 மாதங்கள் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவ்வாராய்ச்சியின் முடிவாக கண்டறியப்பட்டது நம்மையெல்லாம் ஒரு கணம் திகைக்கச் செய்வதாக அமைகிறது. இந்த 11 மைல் நீண்ட சாலையில் மட்டுமே கிட்டத்தட்ட 10,500 விலங்குகள் அடிபட்டு மரணித்ததாக அறியப்பட்டது. இவைகளில் தவளையினங்களில் மட்டுமே 7,600ஆகவும் அவைகளில் பெரும்பாலானவை அது என்ன வகைத் தவளை என்று கூட அறிந்திருக்கவில்லையாம். ஏனைய எண்ணிக்கையை மற்ற இன வகை உயிரினங்கள் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

மேலே கூறிய ஆராய்ச்சி குளிர்கால நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நடத்தப்பட்டதன் முடிவு; அந்த நாட்டுக் காடுகள் வெப்பமாறாக் காடுகளைப் போன்று அதிக எண்ணிக்கையிலான ஜீவராசிகளை கொண்டிருப்பதில்லை. இந்தியா, இலங்கை போன்ற மழைக்காடுகளைக் கொண்ட நாடுகளில் வாகனங்களால் மரணத்திற்குள்ளாகும் விலங்குகளின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து பார்த்தால் நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் பல வகை சிறு விலங்கினங்கள் தினமும் பெருமளவில் துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கலாமோ என்றளவில் கூட எண்ணச் செய்கிறது.

பெரும்பாலும் சாலைகள் மிகக் குறுகலாகவும், வளைவுகளுடனும் இருக்கும் பொருட்டு குறுக்காக கடக்கும் பெரிய, சிறிய உயிரினங்களுக்கு விபத்து நடந்து விடாமல் கடந்து செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைப்பதில்லை (வாகன ஓட்டிக்கும் கூட). அந்நிலையில் பெரிய விலங்கினங்களான மான், காட்டெருமைகளும் கூட இது போன்ற ஆபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துவிடுவதுண்டு.

நமக்கு மன மகிழ்வூட்டும் போக்கிடங்கள் தேவைதான் என்றாலும், இது போன்ற அசம்பாவிதங்கள் மென்மேலும் தொடராமல் இருக்க நம்மால் இயன்ற அளவிற்கு வாகன நெரிசல்கள் அது போன்ற மலைஸ்தலங்களில் பெருகாமல் இருக்க முடிந்த வகையில் உதவலாம். வனச்சாலைகளில் செல்லும் பொழுது வாகனங்களின் வேகத்தை ஒரு மட்டுக்குள் ஓட்டிச் செல்வதும் பெரிய விலங்குகள் விலகிச் செல்ல போதுமான அவகாசத்தைக் கொடுக்க உதவலாம். மழைக்காலங்களில் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குப் பிறகு அவ்வூர்களுக்குச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தலாம்.

இருக்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் உயிர்களுக்கே மதிப்பற்ற நிலையில், இது போன்ற சிறு உயிரினங்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பது ஒரு கேள்விக்குறியே!

பி.கு: ஈழ நேசனுக்காக எழுதியது. நன்றி!

Friday, August 28, 2009

காட்டுத்தீ ஏற்படுவது நல்லதா? கெட்டதா?:Forest Fire

அண்மைய காலங்களில் உலகம் தழுவிய முறையில் காடுகளில் அதி ஆக்ரோஷமான முறையில் காட்டுத்தீ ஏற்படுவது என்பது நடைமுறையாக உள்ளது. அப்படியெனில், முன்னைய காலங்களில் இது போன்ற காட்டுத்தீக்கள் இல்லையா என்று கேட்டால், கண்டிப்பாக இருந்திருக்கும்.

ஆனால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் ஏன் இப்பொழுது மட்டும் ஒவ்வொரு முறையும் காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட வெளிகளைச் சாம்பலாக்கிச் செல்வதும் பலத்த பொருளாதார இழப்புகளையும் சில சமயங்களில் மனித உயிர்களைக் காவுகொண்டும் அழிவை ஏற்படுத்துகிறது?

இதற்குரிய காரணங்களில் முதன்மையானதாக நிற்பது உலகச் சூடேற்றம். அதனையடுத்து நீண்டு போன வறண்ட கோடைக்காலம். இவைகளன்றி வட அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காட்டுத்தீ கட்டுப்பாட்டு சட்ட திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காரணமாகின்றன. இவை அந்த நேரத்தில் பெருமளவில் காட்டுத்தீயை நன்றாகவே கட்டுக்குள் வைக்க உதவின. ஆனால் இன்று அவையே கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் அமைகின்றன.

இன்று பெருகிவரும் மக்கட் தொகையும் அவர்களுக்கான தேவையும் பல்கிப் பெருகிப் போக, வனப் பகுதிகளுக்குள்ளும் மனித வாழ்விடங்கள் பன்முகமாக காலுன்றியதும் ஒரு வகையில் காட்டுத்தீ ஏற்படும் பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாக உள்ளது.

பொதுவாக காட்டுத்தீ, காடுகளில் ஏற்படுவது இயற்கையின் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அது போன்ற தீக்கள் இயற்கையில் மின்னலின் மூலமாகவும், பாறைகள் எப்பொழுதாவது உருள்வதால் ஏற்படும் உரசலால் உருவாக்கப்படும் தீப்பொறிகள் மூலம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு காட்டுத்தீக்கள் ஏற்படுவதினால் பல நன்மைகளும், சில தீமைகளும் இயல்பாகவே பக்க விளைவுகளாக விட்டுச் செல்லப்படுகின்றன. சில மரங்கள் இத்தீக்களைத் தாண்டியும் நிற்கும் திறனுடையதாக தகவமைவுகளை இயல்பாகவே பெற்றிருக்கின்றன.

சில நேரங்களில் இத் தாவரங்களின் இனப் பரவலுக்கும் இத் தீக்கள் உதவலாம். தீக்கு முன்பு வரை அங்கு வாழும் தாவரங்களில் சிலவற்றுக்கு வெளிச்சமே கிடைக்காமல் வெளிக்கிளம்ப முடியாதவைகளாக இருந்திருக்கக் கூடும். இப்பொழுது கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி பன்முக வழியில் தாவரங்கள் மீண்டும் செழித்து வளர ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும், தேவையில்லாத அடர்ந்த ஊடு தாவரங்களை விலக்கி அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவும் காட்டுத்தீ ஒரு காரணியாக அமையலாம்.

அதற்கு நேர்மாறாக தீமைகள் என்று பார்த்தோமானால், அதீதமான கட்டுக்கடங்காத தீ பெரும் பரப்பினையும் அதனூடாக வாழும் சிறு ஜீவராசிகளையும் அழித்துவிடுகிறது. மேலும் அடிக்கடி இது போன்ற தீ ஏற்படுமாயின் சிறு தாவரங்களின் வளர்ச்சிநிலை குறுக்கப்படுகிறது. நம் பங்கிற்கு மனிதருடைய இழப்பாக வீடுகள் அதனையொட்டிய வியாபாரத் தளங்கள், மர வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய கால கட்டத்தில் மனிதனின் பங்கு இந்தக் காட்டுத்தீ உருவாக்கத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. அதி நவீன தீயணைப்பு வசதியும் (மேற்கத்தியநாடுகளில்), அடர்த்தியான ஊடு தாவரங்களுடன் இருக்கும் வனங்களே அழகான, உற்பத்தித் திறன் மிக்க வனங்களாக அமையும் என்ற அணுகுமுறை ஆரம்ப கால கட்டத்தில் நிலவியது. நினைத்தபடியே அமைந்தாலும் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை அந்த அணுகுமுறை தருவிப்பதாக அமைந்தது.

எப்படியெனில், இயற்கையின் அமைவில் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒருமுறை இயற்கையாக ஏற்படும் காட்டுத்தீக்களால் தேவையற்ற ஊடு தாவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் அவை எட்டி வளர்ந்து பெரும் மரங்களின் நுனிக் கிளைகளைத் தொட முடியாத நிலைமை இருந்ததால் பெரும் மரங்கள் இத்தீக்களுக்கு இரையாகாமல் தப்பும் வாய்ப்புக்கள் இருந்திருக்கின்றன.

ஆனால் பின்னர் கொண்டுவரப்பட்ட புதுவிதமான அணுகுமுறை மூலம் நன்றாக தீயை எளிதில் கவர்ந்து கொள்ளும் வகையில் அடர்த்தியான ஊடு தாவரங்களும், குறிப்பிட்ட மர வகைகளை வெட்டி அதன் தண்டுப் பகுதியை எடுத்துக் கொண்டு மிச்சம் உள்ள பகுதிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதும் பெருமளவில் தீயின் உக்கிரத்தை அதீதப் படுத்துகிறது.

இன்னொரு காரணம் நம்முடைய கவனக்குறைவால் ஏற்படும் தீ. வனப்பகுதியில் பயணிக்கும்
பொழுது எனக்கென்ன என்று தூக்கியெறியும் சிகரெட் துண்டங்கள், சுற்றுலாவுக்கோ வேறு தேவைக்கெனவோ அமைக்கப்படும் முகாம்களில் ஏற்படுத்தப்படும் தீயிலிருந்து ஏற்படும் காட்டுத்தீ, அதற்கெல்லாம் மேலாக வேண்டுமென்றே வைக்கப்படும் தீ, வனத்தினூடாகச் செல்லும் தனிவான மின்சாரக் கம்பிகளிலிருந்து உருவாக்கப்படும் தீ என்று பலவிதங்களில் எமது கவனக்குறைவால் காட்டுத்தீக்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுக்குள் வைப்பதனைக் கருத்திற்கொண்டு 'குறிப்பிட்ட மர அகற்றல் (selective tree felling)' என்ற புதுவிதமான நுட்பத்தை அணுகுகிறார்கள். இதன் மூலமாக பெரும் மரங்களுக்குத் தீ பரவும் தன்மையை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுண்டு.

இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் அமையும் மழைக்காடுகளில் ஏற்படும் தீ, இயற்கையாக ஏற்படுவனவாகவே இருந்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகமாக உள்ளன. சில நன்மைகள் மேற்கூறிய முறைகளில் கிடைத்தாலும், ஒவ்வொரு முறை இது போன்ற தீக்கள் ஏற்படும் பொழுதும் வெளிவிடப்படும் அதிகூடிய வெப்பம் (சில சமயம் 1000 இலிருந்து 2000 பாகை·பாரன்ஹீட்) தாவர வகைகளின் விதைகளைக்கூட அழித்து விடுகிறது. தீக்குபிறகு அங்கு வாழும் பன்முகப் பறவை மற்றும் சிறு விலங்குகளின் இன வகைகளில் மாற்றங்கள் பெரிதாக நடைபெறா விட்டாலும், உணவாகக் கிடைக்கும் தாவர, விலங்கு வகைகளைக் கொண்டு அதன் கூட்டமைவில் சில மாற்றங்கள் அமையக் கூடும்.

குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட நாடுகளில் உள்ள காடுகளைப் போலன்றி, வெப்ப மழைக்காடுகள் அதிக ஜீவராசிகளை - மர உச்சியிலிருந்து அழுகி வரும் இலை தழைகளுக்கிடையேயுமாக எங்கும் எப்பொழுதும் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்றே தாவர இனங்களும் செழித்து இருப்பதால் மழைக்காடுகளில் இது போன்ற தீயும் பெரும் சேதத்தினை உருவாக்கி விடுகிறது, அதுவும் இயற்கையாகவே நிகழும் நிலையிலே கூட. இத் தருணத்தில் மனிதனின் தவறுகளால் நிகழும் காட்டுத்தீக்களும் சேர்ந்து கொண்டால் நம் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

இச் சூழலில் நம் பொறுப்புணர்ந்து நம்மால் காட்டுத்தீக்கள் உருவாக்கப்படாமல் தவிர்ப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.



Related Posts with Thumbnails