Showing posts with label பரிணாமம். Show all posts
Showing posts with label பரிணாமம். Show all posts

Friday, April 15, 2011

பரிணாம விதி நம் கையில்: Bio-engineering

தெக்கியில் வெளியான துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகளுக்கு நம்ம அனலிஸ்ட் ஒரு காணொளி இணைப்பை கொடுத்து ‘பயங்கரம்’ அப்படின்னு சொல்லியிருந்தார். சரின்னு நானும் உடனே பார்க்க ஆரம்பித்தேன். சில விசயங்கள் நம்ப முடியாத அளவிற்கு முன்னேறி எதனையும் எப்படியும் செய்து கொள்ளலாம் அது நம் கண்களுக்கும், வயிற்றிற்கும் மேலோட்டமான கொண்டாட்டத்தை தருவித்து தருகிறது என்றால் என்ற கொள்கையுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிப்பதாக பட்டது எனக்கு.

என்னுடைய பழைய பதிவொன்றில் இப்படியாக இந்த உயிரிய-தொழில் நுட்பத்தின் கட்டுபாடற்ற மனித கற்பனை எங்கே கொண்டு போயி நிறுத்தலாம் நம்மை என்று விளையாட்டாக கூறி வைத்தேன். ஆனால், அதனை இந்த காணொளி ஆமாம் ரொம்ப பக்கத்திலே வந்திட்டோம்னு சொல்ல வருது.

...Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))


அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக...


Wednesday, December 16, 2009

பரிணாமப் பின்னணியில் பறவைகளின் ஒலி : Birds Vocalization

நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் ஒலிகளின் அளவும், அதன் அழகு/கோர ஒலிக்குறிப்புகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எவ்வாறாக அந்த நாள் நகர்கிறது என்பதனை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது அல்லவா? அதற்குச் சான்றாக கிராமப் புறங்களில் அல்லது நிறைய மரங்களுடன் கூடிய வசிப்பிடங்களைப் பெற்றவர்கள் தன் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்னமே பறவைகளின் ஒலிகளை கேட்டபடியே எழுந்திருப்பதில் உள்ள வித்தியாசத்தையும், பலத்த வாகன இரைச்சலுக்குமிடையே வாழும் ஒருவர் தன் நாளை தொடங்குவதற்குமானதாக வித்தியாசத்தையும் கொண்டு அறியலாம்.

இயற்கையின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஒலிகளை (calls and songs) எழுப்பும் பறவைகளின் உலகில் அந்த ஒலிகளுக்கான பொருள் அறிவது அவசியமாகப்படுகிறது. கண்டிப்பாக பறவைகளின் சங்கீதம் எது போன்ற சிந்தனைகள் நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், அது ஒரு இனிமையான நாளைத்தானே தொடக்கமாக ஆரம்பித்து வைக்கிறது. அது போன்ற ஒலிகளை எழுப்பும் பறவைகளின் சங்கீதங்களுக்கு பின்னால் இருக்கும் பரிணாமச் சூத்திரம் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?

இயற்கையில் எல்லாவிதமான உயிரனங்களிலும் பால் சார்ந்து ஆண்/பெண் உடலமைவிலும், நிறத்திலும், குரலிலும் வித்தியாசம் அமைத்தே காட்டுகிறது. இதற்கு பறவைகளும் விதிவிலக்கல்ல! பறவை இனங்களில் ஆண் பறவைகளை பெண் பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல வண்ணங்களுடனும், சற்றே உடல் பருமனுடனும் ஆண் பறவைகள் இருப்பதனைக் காணப்பெறலாம்.

இவ்வாறான இயற்கை அமைவை பரிணாமப் பார்வை கொண்டு பார்த்தால் அது பால் தேர்ந்தெடுப்பு (sexual selection) காரணங்களுக்காக அமைந்ததாகப்படுகிறது. இயற்கையின் பொருட்டு இந்த மானுடம் மட்டுமே சற்றே விலகிய பாதையைத் தேர்ந்தெடுத்து இது போன்ற காரணிகளை புறந்தள்ளி தாமாக அமைத்துக் கொண்ட சுயநல போக்குப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது. இருப்பினும் ஒரு சில விசயங்களில் அந்த விலங்கினங்களின் உலகத்தில் நாமும் ஒரு பகுதிதான் என்று நிரூபிக்காமல் இல்லை.

விலங்கு உலகில் வலிமையுள்ளதே தப்பிப்பிழைக்குமென நியதி (survival of fittest) ஒன்று உண்டு. அந்த நிலையில் தன் இனத்தை அவை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல சரியான வாரிசுகளை தேர்ந்தெடுத்து விட்டுச் செல்ல வேண்டும். அவ்வாறான அமைப்பில் இனப்பெருக்கத்தின் பொருட்டு பெண் சரியான, வலிமையுள்ள, குரல் வளமிக்க, அழகுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதன் பொருட்டு ஆண் உயிரினங்களும் கடுமையாகப் போராடி தன்னுடைய சக இனத்திற்குள்ளேயே இருக்கும் மற்ற ஆண்களுடன் போட்டியிட்டு தன்னை நிலை நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஏன் ஆண் பறவைகள் அவ்வளவு வண்ணங்களுடனும், நல்ல குரல்வளத்துடனும் இயற்கையில் அமைந்து பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். அவ்வாறானமைவில் ஆண் பறவைகள் எழுப்பும் தனிப்பட்ட ஒலி எங்கோ அமர்ந்திருக்கும் தன் இன ஆண் எதிராளிக்கு ஒரு அபாய முன் எச்சரிக்கையாகவும், பெண் பறவையை கவர்வதற்கான பிரத்தியோக ஒலியாகவும் கூட அமையலாம்.

இந்த ஒலிகள் பல விதங்களில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான ஒலிக் குறிப்புகளுடன் அமைந்திருக்கிறது. வானம்பாடி(Skylark) என்ற பறவைகளினத்தில் கிட்டத்தட்ட 300 வித்தியாசமான ஒலிக்குறிப்புகளுடன் அவைகள் சத்தம் எழுப்புவதாக அறியப்படுகிறது. சிவப்புக் - கண்ணுடைய விரியோ (Red-Eyed Vireo) என்ற வகைப் பறவை ஒரு நாள் ஒன்றிற்கு சராசரியாக 20,000 முறை பாடுகிறதாம். இதன் மூலமாக பெண் பறவைகளுக்கு ஆண் பறவை இருக்கும் இடத்தில் உள்ள உணவின் தாராளத்தன்மையையும் அறியப்படுத்துகிறதாம். தொடர்ந்து இது போன்ற ஒலியை எழுப்பும் ஆண் இறுதியாக பெண் பறவையை கவரும் வாய்ப்பையும் அதிகம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஒலிகள் சில நேரத்தில் மிகவும் சிக்கலான குறிப்புகளையும், எளிமையான ஒலிக்குறிப்புகளையும் கொண்டதாகவும் இருக்கிறது.

அது போன்றே மரங் கொத்திகளும் (Woodpeckers) நன்றாக காய்ந்து வெற்றிடமாக உள்ள மரக்கிளைகளை கண்டறிந்து ஒரு நொடிக்கு எத்தனை முறை கொத்தி ஒலியெழுப்புகிறது என்பதும் இதில் அடங்கும். அவைகள் சமயத்தில் ஒரு நொடிக்கு 15 முறை கூட கொத்தி தன் எல்லையை (territory) பிற ஆண் பறவைகளுக்கு அறிவிப்பதாகவும், தன் ஜோடியை நாடி வரச் செய்யும் புணர்ச்சிக்கான அறிவிப்பாகவும் (courtship display) செய்து கொள்கிறது.

வானம்பாடி ஆண் பறவைகள் ஒலியின் நீட்டிப்பை குறுக்கியும், தடித்தும் எழுப்புவதின் மூலம் அது தனது இன மற்ற ஆண் பறவைகளை தன்னுடைய எல்லைக்கு அப்பால் ஒதுங்கிச் சென்றுவிடுமாறு எழுப்பும் அபாய ஒலியாக அமைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் தன் அருகாமையே அவை அவைகளுக்கென உள்ள எல்லைக்குள் வசிக்கும் பிற ஆண் பறவைகளுக்குள் வட்டார வழக்கு(dialect) ஒலிகளும் இருப்பதாக அறியப்படுகிறது. புதிதாக தன் எல்லைக்கு அப்பாற்பாட்ட மற்றொரு இடத்திலிருந்து தவறுதலாக அந்த வட்டாரத்திற்குள் ஏதேனும் அதே இன ஆண் பறவைகள் வந்திருக்குமாயின் இதுபோன்ற சிறப்பு ஒலியமைவுகளை கிளப்பி அவைகளை பிரித்தறிய பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இது போன்ற குழு அமைப்பு அவைகளுக்குத் தேவையான பாதுகாப்பைத் தருவதாக பரிணாமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.

இத்தனை ஆர்பாட்டங்களும் எதன் பொருட்டு அமைகிறது என்றால், பெண் பறவைகள் ஒரு ஆண் பறவையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அந்த ஆண் எத்தனை பெரிய எல்லையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது, எது போன்ற ஒலிக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, வண்ணத்தின் அடர்வு அதனை வெளிக்கொணரும் தன்மை, அதன் உடல் வலிமை மற்றும் பருமன் இதனையெல்லாம் கருத்தில் கொண்டே இனப் பெருக்கத்திற்கான அடுத்த நகர்வான புணர்ச்சிக்கு பெண் பறவைகள் வழிவிடுகிறது.

இயற்கையின் எதார்த்த உலகிலிருந்து இது போன்ற சிறிய விசயங்களை கவனிப்பதின் பொருட்டு நாம் புரிந்து கொள்வதற்கும், விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய உள்ளது. மாறாக, சற்று நின்று நிதானித்து கவனித்தால் நவீன தேவைகளுக்கென மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஆரோக்கிய அமைவிலிருந்து விட்டு விலகி வெகு தொலைவு சென்று கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.


பி.கு: ஈழநேசனுக்காக எழுதியது! நன்றி!

Tuesday, August 18, 2009

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?

அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!

அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.

அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.

இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.

பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!



Thursday, July 30, 2009

மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!

கடந்த மே மாதம் ஜெர்மனியில இருந்து டாக்டர் John Hurum_ங்கிற குரங்குகளராய்ச்சி விஞ்ஞானி கையில சுமார் 47 மில்லியன் வருஷத்திற்கு முன்ன வாழ்ந்த ஃபாசில் ஒண்ணு பம்பர் பரிசாட்டமா கிடைச்சிருக்கு. அது ஃப்ராங்ஃபோர்ட்ல இருந்து ஒரு 30கிமீ தள்ளித்தானாம்.

அது வால்/வாலற்ற குரங்கு மற்றும் மனித பரிணாம வளர்ச்சிப் பாதையை "இணைக்கும் பாலமா (missing link)" கருதப்படக் கூடியளவிற்கு அதி முக்கியமான ஒன்னுன்னு ஒட்டு மொத்த பரிணாம ஆராய்ச்சியாளர்கள் மத்தியில கருதப்படுகிறதாம். கண்டுபிடிச்ச அந்த விஞ்ஞானி அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.

இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், 47 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போன்ற மத்திய ஐரோப்பா நாடுகளில் இன்றைய ஆசிய, ஆஃப்ரிகா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் காணப்படும் மழைக் காடுகளும், சீதோஷ்ண நிலைகளைப் போன்றே பூமிப் பந்தின் கால கட்டங்களாக அறியப்படும் பேலியோசீன் (Paleocene - 65~58 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்தில் அப்படியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்து முன் வைத்திருப்பது அறிய வந்ததும், அட! அப்போ நாமதான் பின் தங்கி இருந்திருக்கிறோம் இந்த விபரங்களை அறியாமல்னு ஈடா பற்றிய சந்தேகம் தீர்ந்து இப்போ பரிணாம ஏணியில் ஏன் இந்த ஈடா ஃபாசில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்கன்னு அறிஞ்சுக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பினுச்சா அத கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டவுடன் உங்ககிட்டயும் பகிர்ந்துகளாமேன்னு இங்கே வந்திருக்கேன்.

பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.

அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர், தேவாங்கு மற்றும் டார்சியர்ஸ், இவைகள் ப்ரோசிமியன்ஸ் (Prosimians) என்றழைக்கப்படும். அதற்கு பிந்திய கால கட்டமான யியொசீன் காலக் கட்டத்தில் தேன்றியவைகளை ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) என்றழைப்பார்கள் இதில் தான் குரங்கு வகைகள், வாலில்லா மனித குரங்குகள் மற்றும் மனிதன் பரிணமித்த காலம்.

இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.

பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.

இப்பொழுது எப்படி இரண்டு குழுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறதுன்னும் சொல்லிடுறேன். தேவாங்கு, லெமூர் வகை விலங்குகளிலிருக்கிற மாதிரி எலும்புக் கூடமைவும், சொரிந்து கொள்வதற்கு இணையான ஒரே ஓர் கால்விரலைப் போன்று தனியாக அமைந்த புலி நகத்தையொட்டிய நகமும், கீழ்தாடையிலமைந்த ஒரு பல்லும் ப்ரோசிமியன்ஸ் வகை விலங்குகளோட போறேன்னு சொல்லுவதாகவும்; குரங்கு, வால்/வாலில்லா ஆட்களூடன் இணைவதற்கான மற்ற பண்புகளான - பொருட்களை விரல்களால் சுத்திப் பிடிக்கும் தன்மையோடும், எதிர் முனையில் அமைந்த கட்டைவிரலும், புலி நகங்களைப் போன்று கூரான நகங்களை கொள்ளலாமல் விரலுக்கு விரல் நம்மையொத்த நகங்களையும் கொண்டு நான் அந்ரோபாய்ட்ஸ் என்று சொல்லிக்கிறதாகவும் இந்த ஈடாப் பெண் இருக்கிறதுனாலேதான் இத ஒரு "இணைப்பு பாலம்"ங்கிற அளவில முக்கியமான ஃபாசிலா கருதப்படுகிறது.

இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.

Tuesday, August 08, 2006

பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...

உலக மக்கள் தொகை ராக்கெட்டை விட அதி வேகமான முறையில் பயணித்து ஏழு பில்லியன்களையும் தாண்டி போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் எப்படி இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவது என்று யோசிக்கும் கட்டாயத்தில் சில மனிதக் கடவுள்கள் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் இந்த "உயிரிய-தொழிற்புரட்சி (Bio-technology)" அணுகுமுறை.

இந்த வகை தொழிற்புரட்சி இயற்கை அன்னையின் அடிமடியில் கைவைப்பது என்றால் அது மிகையாகது. எப்படியெனில், உயிர்களின் அடிப்படை செல்களில் மாற்றங்களை திருடியோ அல்லது வைத்தோ அதன் பரிணாம சுழற்சியை கற்பிழக்க வைப்பதால்தான் இதற்கு "இயற்கையின் அடிமடி சுரண்டல்" இப்படி ஒரு பெயர் பொருந்தும் என்று கருதுகிறேன்.

இது போன்ற தொழிற் நுட்பத்திற்கு எந்த எல்லையும் கிடையாது, இது எப்படி காலப் போக்கில் பரிணமிக்கும் என்றும் அரிதியிட்டும் விளக்கிவிட முடியாது...

இதற்கு எனது இந்தப் பதிவில் நகைச்சுவையாக அளித்த சில பின்னூட்டங்கள் உண்மையாக நடக்கவும் வாய்ப்பு அதிகமே!

Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக.

நம் உணவில் கலந்து வரும் இந்த திருட்டு யுக்தி:

இது மூன்று வகையான தொழிற் நுட்பத்தின் மூலமாக சத்தமில்லாமல் பரிணாம மாசு படுத்தல் நடந்தேறுகிறது.

a) GE or GM (Genetically Engineered Food)

b) GMO (Genetically Modified Organism) and

c) TT (Terminator Technology)

a) Bovine Growth Hormone (BGH) என்ற வகை வளர்ச்சி ஹார்மோன்கள் Monsanto என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சதாரணமாக ஒரு மாட்டில் சுரக்கும் பாலின் அளவீட்டை விட 15 சதவீதம் அதிகமாக பெற உட் செலுத்தப் படுகிறது. இது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது ஆனால் ஐரோப்பா போன்ற கண்டங்களில் நடைமுறையில் இல்லை. இதன் பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு.

b) GMO இந்த வகை தொழில் நுட்பத்தில் மரபணுக்களில் மாற்றங்களை சொருகி, திருடி எடுத்துவிட்டு நடைமுறை படுத்தப் படுவதால் மனிதனுக்கும் பல வகையான வியாதிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருப்பதோடு, பரிணாம மாசுபாடும் பிற்காலத்தில் பெரிய அளவில் நடந்தேறுகிறது... மீன்களில் எவ்வாறு இது போன்று நடைபெறுகிறது என்பதனை இங்கு பேசியிருக்கிறேன் முன்பே...

c) TT இதுவும் ஒரு Monsanto நிறுவன தயாரிப்பே இம்முறையில் தாவரங்களில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி அதிக மகசூலை பெருக்குவோம் என்ற போர்வையில், உலக விதைச் சந்தையை கையகப் படுத்தும் ஒரு குறுகிய கண்ணோட்டமே.

இந்த வகை அணுகுமுறையில் அவ்வாறு மாற்றமுரச் செய்யப்பட்ட பயிர்களிடமிருந்து கிடைத்த தானியங்களோ விதைகளோ, மறு பயிரிட்டுக்கு உதவுவதில்லை. வருடா வருடம் விவசாயிகள் விதைகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே...

இது நமக்கும் தீங்கை விளைவித்து இயற்கைக்கும் புறம்பாக அமைகிறது. இன்று புதிதாக பரிணாமத்திருக்கும் புது வகை வியாதிகள் பரிணமித்த வைரஸ்களின் புது வகைகளால அல்லது இத் போன்ற குறுக்கு வழி வியாபார சுரண்டல்களால?

Monday, July 24, 2006

மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்மிடையில் இனக்கலப்பு...!

எந்த காலக் கட்டத்திலும் சிந்திக்கும், சிரிக்கும் திறன் மிக்க இந்த ஆபூர்வ விலங்கினமான மனித இனம் "நாம் எங்கிருந்து" வருகிறோம் என்று அறிந்து கொள்வதில் நாட்ட மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.

அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us இவ் ஆய்வு இரண்டு விதமான சான்றுகளை அதற்கு வழங்கி ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. ஃபாசில்களில் மனிதனுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திலிருந்து கிடைத்த பற்கள், மண்டை ஓடுகள் போன்றவை, ஒப்புமை உடையாதாக இருப்பதும்.

இரண்டாவதாக, மரபணுக்களில் காணப்படும் வித்தியாசங்கள். இயற்கையாகவே, இயற்கை தேர்ந்தெடுப்பின் (Nutaural Selection) பொருத்து எக்ஸ்-வகை குரோமொசோம்களில் நடைபெறும் கடைசி மாற்றமே மற்றொரு வகை விலங்கினமாக உருவெடுக்க சாத்தியப் படுகிறதாம்.

அதன் பொருட்டு இந்த எக்ஸ் வகை குரோமோசொம்களில் விட்டக் குறை தொட்ட குறையாக மிச்சம் எஞ்சியிருக்கக் கூடிய மரபணு சார்ந்த விசயங்கள் இன்னமும் கொரில்லாக்கள், சிம்பன்சி மற்றும் மனித மரபணுக்களில் காணப்படுகிறதாம்.

சரி இதனை எதனைக் கொண்டு எத்துனை காலங்களுக்கு முன்னால் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொரு இனமாக பிரிந்து சென்றிருக்கும் என்று அறிகிறார்கள் என்று கேட்டால்... "மூலக்கூறு கடிகாரம் (Molecular Clock)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு தூரம் அவைகள் மரபணுக் கூறுகளின் வழியே பயணித்து மரபணு வேறுபாடுகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை பொருத்து, இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய சொந்தமான்னு தீர்மானிக்கிறார்களாம்.

அப்படிப் பார்த்தோம்னா, நாம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறோமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்ல, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்தில எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அறுந்து போச்சாம்.

Image Hosted by ImageShack.us எப்போவாவது நீங்கள் இந்த மனிதக் குரங்குகளின் சோஷ்டையை நின்று கவனித்துப் பார்த்திருக்கீறிர்களா? பார்த்திருந்தால் தெரியும் மேற் கூறிய ஆராய்ச்சில் லாஜிக்கலாகவே நிறைய தொடர்பு இருப்பதை... உதாரணதுக்கு போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு ஹைலைட், திருப்தியா சாப்பிட்டுவிட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...

Thursday, May 11, 2006

இப்படியும் நிப்பேனே...: Buttressed Trees...!

அதிகமாக மழை பெறும் மலைப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் நல்ல நெடுக வளர்ந்தானாக நெடு நெடுன்னு நல்ல உயரமாக ஒரு 50 அல்லது 60 அடி உயரத்திற்கே கூட வளர்ந்துவிடலாம்.

இதுக்கென்ன காரணமாக இருக்கலாம், அப்படின்னு கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சுப் பார்த்தா ஒரு விசயம் டக்கின்னு உதயமானுச்சு... இது எங்க வச்சுன்னா, ஒரு முறை நாங்க கலக்காடு-முன்டந்துரையில விலங்குகள் கணக்கீட்டுக்காக போயிருந்தப்ப எங்களுக்கு உதயமானது.

Western Ghats_Rainforest

எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் வந்து செங்கல்தேரிங்கிற இடங்க. சூப்பரான லொகேஷங்க...! ஒரு நாள் சுத்தமா எடுத்துகிச்சு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து செங்கல்தேரி போயி அங்கிருந்து ட்ரெக்கிங் ட்ரெக்கிங்தான், மழைக்காடுகளிடத்தே புகுந்து. போற வழியெங்கும் புலியோட பாதச் சுவடுகள் தெளிவா கிடைக்கிற எடத்தில பிளாஸ்டோ பாரிஸ் கரைச்சு ஊத்தி அப்படியே அலக்கா பேர்த்து வைச்சுக்கணும், பின்னால கணக்குப் போட்டு எத்தனை புலிகள் அந்த காட்டுக்குள்ள இருக்கலாம் அப்படின்னு தோராயம கணக்கு போட ஏதுவா இருக்குமின்னு.

அப்படிப் போகும் போதுதான், அந்த மலைகளின் கம்பீரமும், அழகும் பிடிபட ஆரம்பித்தது. மப்பும் மந்தாரமும் 2000 அடிக்கும் மேல உயரத்தில நின்னுகிட்டு கீழே விரித்துப் போட்ட ஜமுக்காளம் போல ஏற்ற இறக்கமாக உருண்டு கிடக்கும் மலைகளின் அழக ஆயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் முழுமையாக பருகிவிட முடியாதுங்க. அவ்ளோ அழகு!

அங்குதான் நான் சொன்ன மாதிரி அந்த மரங்களின் உயரத்திற்கு லாஜிக்கலா விடை கிடைத்தது. அப்படி சரிவா பள்ளத்தாக்குகளில் இருக்க கூடிய மரங்களுக்கு விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் சூரிய ஒளி கிடைக்கிறதில்ல ஏன் அப்படின்னா, மேட்டுப் பகுதியில இருந்து சூரியன் மீண்டு உயர வரதுக்குள்ள பள்ளத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும், இல்லையா?

அப்படி இருந்தாலும் அவைகளுக்கும் சூரிய ஒளி ரொம்ப அவசியமில்லையா, அதினால அவைகளும முட்டி மோதி முதல் சூரிய ஒளியை பெறுவதற்கு எவ்வி வளர வேண்டியிருக்கு. அதுவும் ஒரு காரணம் ஏன் அந்த மாதிரி, மழைக் காடுகளில் இருக்கிற மரங்கள் ரொம்ப உயரமா இருக்கு அப்படிங்கிறத்துக்கு.

அப்படி உயரமா வளர்ந்த அந்த நெடுக வளர்ந்தவனை யாரு தரையில தாங்கி இருப்பான்னு பிடிச்சுக்கிறது, வேருகள்தானே? ஏற்கெனவே, மழைக்காடுகள் உள்ளே போயி பார்த்தோம்னா ரொம்ப அடர்த்தியா இருக்கும்; நிறைய சின்னதும் பெரிசுமா செடிகளும், மரங்களும், கொடிகளுமா...

அப்படியிருக்கையில் மழைவேற சும்மா தொண தொணன்னு பேஞ்சுகிட்டே இருக்குமா, எனவே இருக்கிற இடத்துக்குள்ள நம்ம நெடுக வளர்ந்தவனுங்க ஸ்ட்ராங்க தரைய பிடிச்சிகிட்டு, நல்ல சத்தும் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கணும். இந்த சூழ்நிலையில்தான், இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க எப்படின்னும் பார்ப்போம் இப்ப.

தரையில நல்லா ஊன்றி நிக்கறதுக்காக அதோட அடிப்பகுதியை ஒரு ராக்கெட்டெ செங்குத்தா நிக்கவைச்சா எப்படி இருக்கும், ராக்கெட் இறக்கைகள் தரையோட நல்ல அகலமா இருக்குமில்லே, அது போலவே இந்த நெடும் பசங்கள ஊன்றிப் பிடிச்சிக்கிறத்துக்காக அதே மாதிரியே நல்ல அகலமா மரத் தோட அடிப்பகுதியாகிடுது. இது மாதிரி எல்லா மரங்களும் இருப்பதில்லை, ஒரு சில ஆட்கள் மட்டுமே இந்த ட்ரிக்க பயன்படுத்துறாங்க.

இப்படி இருக்கிறதாலே நிறைய நல்ல விசயங்கள் அந்த நெடும் பசங்களுக்கு கிடைக்கிது. ஒண்ணு, நிறைய மழை பெய்யும் பொழுது மண் அரிப்புனால சாஞ்சுட மாட்டானுங்க. இரண்டு, காஞ்ச சருகு இதெல்லாம் பிடிச்சு வைசுக்கலாம், அப்படி வச்சுக்கும் போது அந்த சருகெல்லாம் மச்சு திரும்ப தனக்கே உரமா வந்திடுமில்லையா, அதான்.

என்ன ட்ரிக் பாருங்க. இந்த பசங்களுக்கு. நாமெல்லாம் நினைக்கிறோம் என்ன மரம் தானேன்னு, ஆனா, இவனுகூட யோசிச்சு தனக்கு வேணுங்கிறதை கேட்டு காலப் போக்கில வாங்கிக்கிறாங்க நம்மை போலவே. ஆனா, என்ன கொஞ்சம் சத்தமில்லாம இங்கே வேலை நடக்குது, அவ்ளோதான் வித்தியாசம்.

ஒரு மரத்த நாங்க டேப் வச்சு சுத்தி பிடிச்சோம் பாருங்க 10 மீட்டரை சாதாரணமா சுத்திக்கிச்சு தன்னைச் சுத்தி. அப்படின்னா எவ்ளோ பெரிய மரம் பாருங்க!

சரிங்க, மரத்தப் பத்தி பேசிகிட்டு இருக்கோம் இன்ன ஒண்ணும் சொல்லிப்புடறேன். ஒரு நாள் அவ்ளோ பெரிசா இருக்கேன்னு, தரையில படுத்துகிட்டு பார்த்தா எப்படி இருக்குன்னு மல்லாக்க படுத்திட்டு பார்தேங்க, ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு ஒரு மரப்பைய இன்னொரு பக்கத்தில நிக்கிற பையனோட கிளைகளோட முட்டிக்காம உரசிக்காம அழக வரைஞ்சு வச்ச மாதிரி ஒரு இரண்டு அடி இடம் விட்டு கிளை பரப்பி நிக்கிதுங்க (நான் சொல்றது மர நுனியைப் பத்தி - Canopy).

அவ்ளோ அண்டர்ஸ்டண்டிங் ஒருத்தருக்கொருத்தர். ஆச்சர்யம் தானே!? ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?

Tuesday, May 09, 2006

அபூர்வக் காதல் : சிம்பயோசிஸ்(Symbiosis)

நம் உலகில் நமக்குத் தெரிந்தோ அல்லது சினிமாவிலோ பார்த்திருக்கலாம்; ஒடிப் பஸ்ஸில் ஏறிய லாவகத்தைக் கண்டதும் காதல், தலைக் கேசத்தைக் கோதிவிடும் அழகில் மயங்கிக் காதல், அப்புறம் பார்க்காம காதல், தொலை பேசியிலேயே காதல், ஒரு பார்வைப் பார்த்துட்டா காதல், அட ஏங்க காய்கறி கடையிலே நீங்க வெண்டைக்கா உடைச்சு வாங்கிறதப் பார்த்துட்டு உங்க மேல காதல் வந்ததாகக் கூட காதல் பண்ண வைச்சு மக்கள வியர்வை சிந்த படமும் பார்க்க வைச்சாச்சு.

ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப் போற காதல், "எதையும் தாண்டிப் புனிதமாக," காலங்களையும் பரிணாமச் சுழற்சியையும் தாங்கி, எந்த வேதிப் பொருளுமோ அல்லது இனக் கவர்ச்சியின்பால் உந்தப்பட்டோ இயற்கை இவர்களுக்கிடையில் அந்த காதலைப் பற்ற வைக்காமல், பற்ற வைத்திருக்கிறது. அது எப்படி இனக் கவர்ச்சி இல்லாத காதல், வாங்க எந்த மாதிரி அபூர்வக் காதலா அது இருக்க முடியும் அப்படிங்கிறதா பார்த்துடுவோம்.

இயற்கையில் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நம்மால் பார்த்த, தெளிந்த, இன்னும் நமது சிந்தனை ஓட்டத்தில் இருக்கக் கூடிய விசயங்களை மட்டுமே நாம் கிரகித்து அதனை வார்த்தைகளின் மூலம் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், நமக்கு நமது சிறு மூளைக்கு எட்டாத கோணங்களில் இயற்கை இன்னும் எத்தனையோ விசயங்களை கொட்டி வைத்திருக்கிறது.

எல்லமே இங்குதான், நம்மைச் சுற்றிதான் இருக்கிறது. எப்பொழுது ஒரு தனி மனித சிந்தனை அவ்வாறு சிதறிச் தெரித்துள்ள விசயங்களை உராய்விச் சொல்கிறதோ, அங்குதான் பிறக்கிறது ஒரு புதிய கண்டுபிடிப்போ, கோட்பாடோ, அல்லது ஒரு சிக்கலான விசயத்திற்கு தீர்வோ.

எது எப்படியோ, நாமும் எதனையும் புதிதாக கண்டுபிடித்து விடுவது கிடையாது. வெளிக் கொணர்கிறோம் விசயங்கள் முன்பே இங்கு இருப்பதை நமது விழிப்புணர்வின் மூலமாக. அவ்வளவே!

அடடா, சொல்ல வந்த விசயத்தை விட்டுட்டு சுரையில ஆராய ஆரம்பிச்சுட்டனே! அப்படின்னு இன்னேரம் யோசிக்க ஆரம்பிச்சியிருப்பீங்க. சரிங்க, நாம பேசப் போற விசயம் "இயற்கையா எப்படி இரு வேறு வகை உயிரினங்கள் ஒருத்தருக்கு ஒருத்தரு நகமும் சதையுமா, பிண்ணிப் பிணைந்து இருக்கிறாங்க" அப்படிங்கிற விசயம்தான்.

இத பரிணாம உயிரியியல்ல சிம்பயோசிஸ் (Symbiosis) அப்படின்னு சொல்றோம். இப்ப இது இயற்கையில எப்படி நடந்தேறுது அப்படிங்கிறதெ நமக்கு வெளியில (நமக்குள்ளேயும் தான்) பார்க்கிற மாதிரி நடக்கிற விசயங்களை கொண்டு புரிஞ்சுக்குவோம்.

ஆஃப்பிரிக்காவில நமக்கெல்லாம் தெரிஞ்ச வரிக்குதிரை, காண்டாமிருகம், அப்புறம் ஒரு வகை எருமை மாடுங்க இவங்களுக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரா ஆக்ஸ்பெக்கர்-ங்கிற (எருமைக் கொத்தி - நம்மூர் மைனா மாதிரி) பறவை அவங்க மேல உட்காத்துக்கிட்டு ஓசிச் சவாரி பண்ணிக்கிட்டே, அந்த விலங்குகள் மேல இருக்கிற உண்ணி, அட்டை மற்றும் ஏனைய ஒண்டுண்ணிகளெ கொத்தி சுத்தம் செய்து விடுகிறது.

அப்படி பண்ணும் போது நல்லா கவனிச்சுப் பார்த்தா ரெண்டு பேருமே ரொம்ப நெருங்கிய சொந்தக் காரங்க மாதிரி தோணல? ஆக்ஸ்பெக்கருக்கு வயிறும் நிரம்புது, விலங்குகளுக்கு க்ளீன் உடம்பும் கிடைச்சுது.

அது போலவே நைல் முதலையும் எஷிப்தியன் ப்ளொவெர் பறவையும் இவ்வுறவில பிணைந்து வாழ்றாங்க; அப் பறவை முதலையின் பல் ஈரலை சுத்தம் செய்கிறது மாமிச துண்டுகளை அகற்றி உண்ணுவதன் மூலம்... அங்கும் இருவருமே வின்னர்ஸ்.

நம்ம ஊருலும் பார்த்திருக்கலாம் கால்நடைங்க மேஞ்சுகிட்டு இருக்கும் போது கரைச்சான் குருவி (Drango), அப்புறம் மைனா எல்லாம் அதே மாதிரி செய்வதனை.

இப்ப பெரிச விட்டுட்டு இன்னும் கொஞ்சம் சிறிய உலகத்துக்குள்ள போவோம். இது வண்டுகளும், வவ்வால்களும் பண்ற பூக் காதல் பூக்களிடத்தே. எப்படின்னா, வண்டுகள் உடம்புல நிறைய சின்னச் சின்னதா முடிகள் இருக்கு அதே மாதிரிதான் வவ்வால் மூக்குலயும் (அட மூஞ்சிதாங்க) இருக்கு. இவங்கெல்லாம், பூக்கள்ல அமர்ந்து ச்சூஸ் (தேனு) குடிக்கும் போது நாம பீச்சில ஈரத்தோட படுத்து உருண்டா மண்ணு உடம்பு முழுக்க ஒட்டிக்கிட்டு வரமாதிரி, அதுங்களோட உடம்புல இருக்கிற முடில அந்த பூக்கள்ல இருக்கிற மகரந்தத் தூள் ஒட்டிக்கிது.

அந்த தூளோட நம்மவர்கள் அடுத்த பூவுக்கு விஜயம் பண்ணும் போது அங்க இருக்கிறவங்க எடுத்துக்குவாங்க. அதனை நாம "மகரந்தச் சேர்க்கை" அப்படிங்கிறோம். பாத்தீங்களா ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தரு அண்ணன் தம்பியா (எங்க இப்ப இருக்கிறாங்க அப்படிங்கிறீங்கா...எல்லாம் ஒரு பேச்சுக்குத் தாங்க) இருந்து உதவி பண்ணிகிறாங்க.

இப்போ இன்னும் சிறிய உலகம் ஏன் வெளியயெல்லாம் போய் தேடிக்கிட்டு நமக்குள்ளேயே ஒரு சிம்பயோசிஸ் உலகம் இயங்கிட்டு இருக்குது... எப்படிடான்னு பயந்துட்டீங்களா?

நம்மோட சிறு குடல்ல ஒரு வகை பாக்டீரிய இருக்குங்க, அதுங்க நாம் ஏன் எதுக்குன்னு கேள்வி கேப்பாடு இல்லாம நிறைய சாப்பிட்டோமின்னு வைச்சுக்கோங்க அந்த மிச்சம் செரிக்காத உணவை இவங்கதான் டைசினா-ஆ இருந்து உதவி பண்ணி அடுத்த வேளை ரவுண்ட்க்கு நம்மை ரெடி பண்ணுதுங்க. இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு அன்னியமா இருந்தாலும் இது நம் கூடவே இருந்து கடைசி வரைக்கும் நம்கூடவே வருது (ஓண்ணும் உடம்பு ரிஜெக்ட் பண்ணிடறடதில்லை இவைகளை).

இந்த பாக்டீரியா மட்டுமில்லை நான் மெக்டெனால்ஸ்-அ சாப்பிடற வேகத்துக்கு நிரந்தரமா ஹாஸ்பிடல்லதான் இருக்கணும்.

சரி வந்துட்டீங்க இவ்வளவு தூரம் பொறுமையாவும் படிச்சு வைச்சுட்டீங்க, அப்படியே சொல்லிட்டு போங்க பயனுள்ளதா இருந்துச்சான்னு...
Related Posts with Thumbnails