நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் ஒலிகளின் அளவும், அதன் அழகு/கோர ஒலிக்குறிப்புகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எவ்வாறாக அந்த நாள் நகர்கிறது என்பதனை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது அல்லவா? அதற்குச் சான்றாக கிராமப் புறங்களில் அல்லது நிறைய மரங்களுடன் கூடிய வசிப்பிடங்களைப் பெற்றவர்கள் தன் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்னமே பறவைகளின் ஒலிகளை கேட்டபடியே எழுந்திருப்பதில் உள்ள வித்தியாசத்தையும், பலத்த வாகன இரைச்சலுக்குமிடையே வாழும் ஒருவர் தன் நாளை தொடங்குவதற்குமானதாக வித்தியாசத்தையும் கொண்டு அறியலாம்.
இயற்கையின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஒலிகளை (calls and songs) எழுப்பும் பறவைகளின் உலகில் அந்த ஒலிகளுக்கான பொருள் அறிவது அவசியமாகப்படுகிறது. கண்டிப்பாக பறவைகளின் சங்கீதம் எது போன்ற சிந்தனைகள் நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், அது ஒரு இனிமையான நாளைத்தானே தொடக்கமாக ஆரம்பித்து வைக்கிறது. அது போன்ற ஒலிகளை எழுப்பும் பறவைகளின் சங்கீதங்களுக்கு பின்னால் இருக்கும் பரிணாமச் சூத்திரம் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?
இயற்கையில் எல்லாவிதமான உயிரனங்களிலும் பால் சார்ந்து ஆண்/பெண் உடலமைவிலும், நிறத்திலும், குரலிலும் வித்தியாசம் அமைத்தே காட்டுகிறது. இதற்கு பறவைகளும் விதிவிலக்கல்ல! பறவை இனங்களில் ஆண் பறவைகளை பெண் பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல வண்ணங்களுடனும், சற்றே உடல் பருமனுடனும் ஆண் பறவைகள் இருப்பதனைக் காணப்பெறலாம்.
இவ்வாறான இயற்கை அமைவை பரிணாமப் பார்வை கொண்டு பார்த்தால் அது பால் தேர்ந்தெடுப்பு (sexual selection) காரணங்களுக்காக அமைந்ததாகப்படுகிறது. இயற்கையின் பொருட்டு இந்த மானுடம் மட்டுமே சற்றே விலகிய பாதையைத் தேர்ந்தெடுத்து இது போன்ற காரணிகளை புறந்தள்ளி தாமாக அமைத்துக் கொண்ட சுயநல போக்குப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது. இருப்பினும் ஒரு சில விசயங்களில் அந்த விலங்கினங்களின் உலகத்தில் நாமும் ஒரு பகுதிதான் என்று நிரூபிக்காமல் இல்லை.
விலங்கு உலகில் வலிமையுள்ளதே தப்பிப்பிழைக்குமென நியதி (survival of fittest) ஒன்று உண்டு. அந்த நிலையில் தன் இனத்தை அவை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல சரியான வாரிசுகளை தேர்ந்தெடுத்து விட்டுச் செல்ல வேண்டும். அவ்வாறான அமைப்பில் இனப்பெருக்கத்தின் பொருட்டு பெண் சரியான, வலிமையுள்ள, குரல் வளமிக்க, அழகுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதன் பொருட்டு ஆண் உயிரினங்களும் கடுமையாகப் போராடி தன்னுடைய சக இனத்திற்குள்ளேயே இருக்கும் மற்ற ஆண்களுடன் போட்டியிட்டு தன்னை நிலை நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கிறது.
இந்தப் பின்னணியில்தான் ஏன் ஆண் பறவைகள் அவ்வளவு வண்ணங்களுடனும், நல்ல குரல்வளத்துடனும் இயற்கையில் அமைந்து பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். அவ்வாறானமைவில் ஆண் பறவைகள் எழுப்பும் தனிப்பட்ட ஒலி எங்கோ அமர்ந்திருக்கும் தன் இன ஆண் எதிராளிக்கு ஒரு அபாய முன் எச்சரிக்கையாகவும், பெண் பறவையை கவர்வதற்கான பிரத்தியோக ஒலியாகவும் கூட அமையலாம்.
இந்த ஒலிகள் பல விதங்களில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான ஒலிக் குறிப்புகளுடன் அமைந்திருக்கிறது. வானம்பாடி(Skylark) என்ற பறவைகளினத்தில் கிட்டத்தட்ட 300 வித்தியாசமான ஒலிக்குறிப்புகளுடன் அவைகள் சத்தம் எழுப்புவதாக அறியப்படுகிறது. சிவப்புக் - கண்ணுடைய விரியோ (Red-Eyed Vireo) என்ற வகைப் பறவை ஒரு நாள் ஒன்றிற்கு சராசரியாக 20,000 முறை பாடுகிறதாம். இதன் மூலமாக பெண் பறவைகளுக்கு ஆண் பறவை இருக்கும் இடத்தில் உள்ள உணவின் தாராளத்தன்மையையும் அறியப்படுத்துகிறதாம். தொடர்ந்து இது போன்ற ஒலியை எழுப்பும் ஆண் இறுதியாக பெண் பறவையை கவரும் வாய்ப்பையும் அதிகம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஒலிகள் சில நேரத்தில் மிகவும் சிக்கலான குறிப்புகளையும், எளிமையான ஒலிக்குறிப்புகளையும் கொண்டதாகவும் இருக்கிறது.
அது போன்றே மரங் கொத்திகளும் (Woodpeckers) நன்றாக காய்ந்து வெற்றிடமாக உள்ள மரக்கிளைகளை கண்டறிந்து ஒரு நொடிக்கு எத்தனை முறை கொத்தி ஒலியெழுப்புகிறது என்பதும் இதில் அடங்கும். அவைகள் சமயத்தில் ஒரு நொடிக்கு 15 முறை கூட கொத்தி தன் எல்லையை (territory) பிற ஆண் பறவைகளுக்கு அறிவிப்பதாகவும், தன் ஜோடியை நாடி வரச் செய்யும் புணர்ச்சிக்கான அறிவிப்பாகவும் (courtship display) செய்து கொள்கிறது.
வானம்பாடி ஆண் பறவைகள் ஒலியின் நீட்டிப்பை குறுக்கியும், தடித்தும் எழுப்புவதின் மூலம் அது தனது இன மற்ற ஆண் பறவைகளை தன்னுடைய எல்லைக்கு அப்பால் ஒதுங்கிச் சென்றுவிடுமாறு எழுப்பும் அபாய ஒலியாக அமைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் தன் அருகாமையே அவை அவைகளுக்கென உள்ள எல்லைக்குள் வசிக்கும் பிற ஆண் பறவைகளுக்குள் வட்டார வழக்கு(dialect) ஒலிகளும் இருப்பதாக அறியப்படுகிறது. புதிதாக தன் எல்லைக்கு அப்பாற்பாட்ட மற்றொரு இடத்திலிருந்து தவறுதலாக அந்த வட்டாரத்திற்குள் ஏதேனும் அதே இன ஆண் பறவைகள் வந்திருக்குமாயின் இதுபோன்ற சிறப்பு ஒலியமைவுகளை கிளப்பி அவைகளை பிரித்தறிய பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இது போன்ற குழு அமைப்பு அவைகளுக்குத் தேவையான பாதுகாப்பைத் தருவதாக பரிணாமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.
இத்தனை ஆர்பாட்டங்களும் எதன் பொருட்டு அமைகிறது என்றால், பெண் பறவைகள் ஒரு ஆண் பறவையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அந்த ஆண் எத்தனை பெரிய எல்லையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது, எது போன்ற ஒலிக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, வண்ணத்தின் அடர்வு அதனை வெளிக்கொணரும் தன்மை, அதன் உடல் வலிமை மற்றும் பருமன் இதனையெல்லாம் கருத்தில் கொண்டே இனப் பெருக்கத்திற்கான அடுத்த நகர்வான புணர்ச்சிக்கு பெண் பறவைகள் வழிவிடுகிறது.
இயற்கையின் எதார்த்த உலகிலிருந்து இது போன்ற சிறிய விசயங்களை கவனிப்பதின் பொருட்டு நாம் புரிந்து கொள்வதற்கும், விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய உள்ளது. மாறாக, சற்று நின்று நிதானித்து கவனித்தால் நவீன தேவைகளுக்கென மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஆரோக்கிய அமைவிலிருந்து விட்டு விலகி வெகு தொலைவு சென்று கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.
பி.கு: ஈழநேசனுக்காக எழுதியது! நன்றி!
Wednesday, December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//அதற்குச் சான்றாக கிராமப் புறங்களில் அல்லது நிறைய மரங்களுடன் கூடிய வசிப்பிடங்களைப் பெற்றவர்கள் தன் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்னமே பறவைகளின் ஒலிகளை கேட்டபடியே எழுந்திருப்பதில் உள்ள வித்தியாசத்தையும், பலத்த வாகன இரைச்சலுக்குமிடையே வாழும் ஒருவர் தன் நாளை தொடங்குவதற்குமானதாக வித்தியாசத்தையும் கொண்டு அறியலாம்//
ஆமா நீங்க சொல்லுறது சரி தான் .. நெல்லை வீட்டுல பகல் முழுவதும் பறவை ஒலிகளால் நிரம்பி வழியும் ... இரவு முழுவதும் பூச்சிகளால் நிரம்பி வழியும் ... அந்த வீடே ஒரு சொர்க்கம் தான் .
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
அருமையானப் பதிவு.. .நாம் சிறு வயதில் கேட்ட பறவைகளின் ஒலிகளை இப்போதெல்லாம் கேட்க முடியாதது மனதில் மிகுந்த சஞ்சலத்தை உண்டாக்குகிறது. தற்போது வாழ்வது இங்கிலாந்து நாட்டில் என்றாலும், ஊருக்கு வரும்போது பழைய விஷயங்கள் இல்லாதபோது ஒரு வெறுமை காணப்படுவது இயற்கைத்தானே?
என்னுடைய இன்னொரு வலைப்பூவான http://prabanjapriyan.blogspot.com/ பார்த்ததுண்டா? அதில் BBC வழங்கும் Life என்ற வீடியோத் தொடரை பதிவாக கொடுத்துள்ளேன். நேரமிருந்தால் சென்றுப் பாருங்களேன். நீங்கள் கட்டாயம் விரும்புவீர்கள்.
வணக்கங்க, மீண்டும் அரிய செய்திகளுடனும் கண்டுபிடிப்புகளுடனும் கூடிய ஒரு கட்டுரை.
போலத் தோன்றும் ஒலிக்குறிப்புகள் வைத்து பறவையினங்களில் ஊடுறுவுதல் நடக்கும் சாத்தியங்கள் உண்டா? உண்டென்றால் அதைப்பற்றியும் குறிப்பிடுங்களேன்.
//விலங்கு உலகில் வலிமையுள்ளதே தப்பிப்பிழைக்குமென நியதி (survival of fittest) ஒன்று உண்டு.//
survival of the fittest, என்பதை "வலியது வாழும்" என்று தமிழ்ப்படுத்துதல் பொருட்சிதைவு செய்கிறதுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
"தகவுடையது வாழும்" - இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க.
அரிய செய்திகளுடனும் கண்டுபிடிப்புகளுடனும் கூடிய ஒரு கட்டுரை.
Post a Comment