Showing posts with label Apes. Show all posts
Showing posts with label Apes. Show all posts

Thursday, July 30, 2009

மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!

கடந்த மே மாதம் ஜெர்மனியில இருந்து டாக்டர் John Hurum_ங்கிற குரங்குகளராய்ச்சி விஞ்ஞானி கையில சுமார் 47 மில்லியன் வருஷத்திற்கு முன்ன வாழ்ந்த ஃபாசில் ஒண்ணு பம்பர் பரிசாட்டமா கிடைச்சிருக்கு. அது ஃப்ராங்ஃபோர்ட்ல இருந்து ஒரு 30கிமீ தள்ளித்தானாம்.

அது வால்/வாலற்ற குரங்கு மற்றும் மனித பரிணாம வளர்ச்சிப் பாதையை "இணைக்கும் பாலமா (missing link)" கருதப்படக் கூடியளவிற்கு அதி முக்கியமான ஒன்னுன்னு ஒட்டு மொத்த பரிணாம ஆராய்ச்சியாளர்கள் மத்தியில கருதப்படுகிறதாம். கண்டுபிடிச்ச அந்த விஞ்ஞானி அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.

இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், 47 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போன்ற மத்திய ஐரோப்பா நாடுகளில் இன்றைய ஆசிய, ஆஃப்ரிகா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் காணப்படும் மழைக் காடுகளும், சீதோஷ்ண நிலைகளைப் போன்றே பூமிப் பந்தின் கால கட்டங்களாக அறியப்படும் பேலியோசீன் (Paleocene - 65~58 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்தில் அப்படியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்து முன் வைத்திருப்பது அறிய வந்ததும், அட! அப்போ நாமதான் பின் தங்கி இருந்திருக்கிறோம் இந்த விபரங்களை அறியாமல்னு ஈடா பற்றிய சந்தேகம் தீர்ந்து இப்போ பரிணாம ஏணியில் ஏன் இந்த ஈடா ஃபாசில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்கன்னு அறிஞ்சுக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பினுச்சா அத கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டவுடன் உங்ககிட்டயும் பகிர்ந்துகளாமேன்னு இங்கே வந்திருக்கேன்.

பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.

அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர், தேவாங்கு மற்றும் டார்சியர்ஸ், இவைகள் ப்ரோசிமியன்ஸ் (Prosimians) என்றழைக்கப்படும். அதற்கு பிந்திய கால கட்டமான யியொசீன் காலக் கட்டத்தில் தேன்றியவைகளை ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) என்றழைப்பார்கள் இதில் தான் குரங்கு வகைகள், வாலில்லா மனித குரங்குகள் மற்றும் மனிதன் பரிணமித்த காலம்.

இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.

பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.

இப்பொழுது எப்படி இரண்டு குழுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறதுன்னும் சொல்லிடுறேன். தேவாங்கு, லெமூர் வகை விலங்குகளிலிருக்கிற மாதிரி எலும்புக் கூடமைவும், சொரிந்து கொள்வதற்கு இணையான ஒரே ஓர் கால்விரலைப் போன்று தனியாக அமைந்த புலி நகத்தையொட்டிய நகமும், கீழ்தாடையிலமைந்த ஒரு பல்லும் ப்ரோசிமியன்ஸ் வகை விலங்குகளோட போறேன்னு சொல்லுவதாகவும்; குரங்கு, வால்/வாலில்லா ஆட்களூடன் இணைவதற்கான மற்ற பண்புகளான - பொருட்களை விரல்களால் சுத்திப் பிடிக்கும் தன்மையோடும், எதிர் முனையில் அமைந்த கட்டைவிரலும், புலி நகங்களைப் போன்று கூரான நகங்களை கொள்ளலாமல் விரலுக்கு விரல் நம்மையொத்த நகங்களையும் கொண்டு நான் அந்ரோபாய்ட்ஸ் என்று சொல்லிக்கிறதாகவும் இந்த ஈடாப் பெண் இருக்கிறதுனாலேதான் இத ஒரு "இணைப்பு பாலம்"ங்கிற அளவில முக்கியமான ஃபாசிலா கருதப்படுகிறது.

இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.

Monday, July 24, 2006

மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்மிடையில் இனக்கலப்பு...!

எந்த காலக் கட்டத்திலும் சிந்திக்கும், சிரிக்கும் திறன் மிக்க இந்த ஆபூர்வ விலங்கினமான மனித இனம் "நாம் எங்கிருந்து" வருகிறோம் என்று அறிந்து கொள்வதில் நாட்ட மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.

அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us இவ் ஆய்வு இரண்டு விதமான சான்றுகளை அதற்கு வழங்கி ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. ஃபாசில்களில் மனிதனுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திலிருந்து கிடைத்த பற்கள், மண்டை ஓடுகள் போன்றவை, ஒப்புமை உடையாதாக இருப்பதும்.

இரண்டாவதாக, மரபணுக்களில் காணப்படும் வித்தியாசங்கள். இயற்கையாகவே, இயற்கை தேர்ந்தெடுப்பின் (Nutaural Selection) பொருத்து எக்ஸ்-வகை குரோமொசோம்களில் நடைபெறும் கடைசி மாற்றமே மற்றொரு வகை விலங்கினமாக உருவெடுக்க சாத்தியப் படுகிறதாம்.

அதன் பொருட்டு இந்த எக்ஸ் வகை குரோமோசொம்களில் விட்டக் குறை தொட்ட குறையாக மிச்சம் எஞ்சியிருக்கக் கூடிய மரபணு சார்ந்த விசயங்கள் இன்னமும் கொரில்லாக்கள், சிம்பன்சி மற்றும் மனித மரபணுக்களில் காணப்படுகிறதாம்.

சரி இதனை எதனைக் கொண்டு எத்துனை காலங்களுக்கு முன்னால் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொரு இனமாக பிரிந்து சென்றிருக்கும் என்று அறிகிறார்கள் என்று கேட்டால்... "மூலக்கூறு கடிகாரம் (Molecular Clock)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு தூரம் அவைகள் மரபணுக் கூறுகளின் வழியே பயணித்து மரபணு வேறுபாடுகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை பொருத்து, இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய சொந்தமான்னு தீர்மானிக்கிறார்களாம்.

அப்படிப் பார்த்தோம்னா, நாம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறோமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்ல, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்தில எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அறுந்து போச்சாம்.

Image Hosted by ImageShack.us எப்போவாவது நீங்கள் இந்த மனிதக் குரங்குகளின் சோஷ்டையை நின்று கவனித்துப் பார்த்திருக்கீறிர்களா? பார்த்திருந்தால் தெரியும் மேற் கூறிய ஆராய்ச்சில் லாஜிக்கலாகவே நிறைய தொடர்பு இருப்பதை... உதாரணதுக்கு போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு ஹைலைட், திருப்தியா சாப்பிட்டுவிட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...
Related Posts with Thumbnails