Saturday, March 06, 2010

விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killings

கோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதே தெரியாமல் இறங்கிக் கொண்டிருக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தானே!

சில உயரமான மலை உச்சியின் முகடுகளில் நாம் பயணிக்கும் பேருந்து இப்பவோ, அப்பவோ சாய்ந்துவிடுவேன் என்று ஒரு பக்கமாகச் சாய்ந்து செல்வதைக் கூட மறக்கடிக்கும் நிலையில், வெளியில் நமக்குக் காட்சியாக பரந்து விரிந்து மரங்களடர்ந்த மலை முகடுகள், மேகங்களை தன் மேல் கிடத்திக் காட்டும் நிகழ்வைப் பார்த்து நமது பயணம் நீண்டு கொண்டே சென்றிருப்பதனைப் பருகியிருப்போம்.

இப்படியான பயணங்களில் நாம் அமர்ந்து பயணிக்கும் பேருந்துகளின் சத்தமும், சக்கரங்களும் அங்கு வாழும் உயிரினங்களுக்கு எது போன்ற விளைவுகளை விட்டுச் செல்கிறது என்று யோசித்திருக்க வாய்ப்பில்லைதானே. இன்று மனிதன் கால் வைக்காத, வசிக்க முயற்சிக்காத இடமே இந்தப் பூமியிலில்லை என்கிற அளவிற்கு, எல்லா இடங்களிலும் நாம் நிறைந்திருக்கிறோம். இன்றைய உலக மொத்த மக்கள் தொகையாக ஏழு பில்லியன் மக்களைக் கொண்டு நாம் நெருங்கிவருவதாகத் தெரிகிறது.

அதனை ஒட்டிய மனிதத் தேவைகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதிலும் குறிப்பாக அன்றாடத் தேவையான மக்களின் இடப்பெயர்வு பொருட்டு நமக்குத் தேவையான வாகனங்களின் பெருக்கம், நம் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் இன்று அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தொகையை விட அந்நாடுகளில் பெருகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

நாம் அன்றாடம் வாகனங்களில் பயணிக்க நேரும் பொழுது சாலையோரங்களில் ஏதாவது விலங்குகள் அடிபட்டு இறந்து கிடப்பதனை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணி கடந்து போய்விடுகிறோமல்லவா? நம் கண்ணுக்குப் பெரிதாக காணக்கிடைக்கும் விலங்குகளின் உடல் பருமனைக் கொண்டு, அவ்வாறு அடிபட்டு இறந்து போன, அல்லது நம் வாகனத்திலேயே சிக்கிய விலங்குகளைத்தான் அறிகிறோம். ஆனால், அடர்ந்த வனப் பகுதிகளில் பயணிக்கும் பொழுது நம் கவனத்திற்கு வராமலேயே எத்தனையோ விதமான சிறு ஜீவராசிகளான முதுகெலும்பற்ற வகைப்பிராணிகளும் (பூச்சிகள், மெல்லுடலிகள்), ஊர்வன வகை, தவளை, சிறு பாலூட்டிகள், பறவைகளென நசுங்கி இறக்க நேரிடலாம்!

இது போன்ற அடர்ந்த மழைக்காடுகளில் வசிக்கும் பெரும்பாலான ஜீவராசிகளில் பல இன்னமும் நம் அறிவியல் உலகில் கண்டறியப்படாததாகவும் இருந்திருக்கக் கூடும். என்னுடைய அனுபவத்தில் மழைக்காடுகளின் முக்கியச் சாலைகளின் இருமருங்கும் அடிபட்டு நசுங்கி இறக்கும் வகைகளில் அதிகமாக காணப்பெற்றது, தவளைகளைத்தான். அதுவும் நன்றாக மழை பெய்யும் காலங்களில், சற்றே கூடுதலான எண்ணிக்கையில் கண்டிருக்கிறேன்.


இந்தத் தவளைகள் இயற்கையின் நாடித் துடிப்பறியும் ஒரு மானியைப் (indicator species) போன்றது என்றால் அது மிகையாக இருக்க முடியாது. அவைகளில் பல வகையான தவளைகள் இன்னமும் நம் ஊர்க்காடுகளில் அறிவியல் உலகத்தால் அடையாளப்படுத்தப்படாமல் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையின் உணவுச் சுழற்சியிலும், விதை பரவலிலும் பங்காற்றிக் கொண்டிருக்கலாம். இது தவளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறிவிட இயலாது. ஏனைய வித அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

இது போன்ற ஜீவராசிகள் தொடர்ந்தே இருந்திருக்க வேண்டிய வனங்கள், துண்டாடப்பட்டு சிறு சிறு தீவுகளாக (fragmented landscape) மிக நீண்ட இடைவெளிகளைக் (தேயிலை, காப்பி) கொண்டோ அல்லது வாகனங்கள் செல்லுவதற்கான சாலைகளை அமைத்தோ காடுகள் துண்டாடப்படுவதால், இந்தச் சிறு உயிரினங்கள் நேரடியாக நமது பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

அண்மையில் அமெரிக்கா, இண்டியானா மாநிலத்தில் வாகனப் போக்குவரத்தால் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு சார்ந்து 11 மைல்கள் நீண்ட சாலையில் 17 மாதங்கள் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவ்வாராய்ச்சியின் முடிவாக கண்டறியப்பட்டது நம்மையெல்லாம் ஒரு கணம் திகைக்கச் செய்வதாக அமைகிறது. இந்த 11 மைல் நீண்ட சாலையில் மட்டுமே கிட்டத்தட்ட 10,500 விலங்குகள் அடிபட்டு மரணித்ததாக அறியப்பட்டது. இவைகளில் தவளையினங்களில் மட்டுமே 7,600ஆகவும் அவைகளில் பெரும்பாலானவை அது என்ன வகைத் தவளை என்று கூட அறிந்திருக்கவில்லையாம். ஏனைய எண்ணிக்கையை மற்ற இன வகை உயிரினங்கள் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

மேலே கூறிய ஆராய்ச்சி குளிர்கால நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நடத்தப்பட்டதன் முடிவு; அந்த நாட்டுக் காடுகள் வெப்பமாறாக் காடுகளைப் போன்று அதிக எண்ணிக்கையிலான ஜீவராசிகளை கொண்டிருப்பதில்லை. இந்தியா, இலங்கை போன்ற மழைக்காடுகளைக் கொண்ட நாடுகளில் வாகனங்களால் மரணத்திற்குள்ளாகும் விலங்குகளின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து பார்த்தால் நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் பல வகை சிறு விலங்கினங்கள் தினமும் பெருமளவில் துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கலாமோ என்றளவில் கூட எண்ணச் செய்கிறது.

பெரும்பாலும் சாலைகள் மிகக் குறுகலாகவும், வளைவுகளுடனும் இருக்கும் பொருட்டு குறுக்காக கடக்கும் பெரிய, சிறிய உயிரினங்களுக்கு விபத்து நடந்து விடாமல் கடந்து செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைப்பதில்லை (வாகன ஓட்டிக்கும் கூட). அந்நிலையில் பெரிய விலங்கினங்களான மான், காட்டெருமைகளும் கூட இது போன்ற ஆபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துவிடுவதுண்டு.

நமக்கு மன மகிழ்வூட்டும் போக்கிடங்கள் தேவைதான் என்றாலும், இது போன்ற அசம்பாவிதங்கள் மென்மேலும் தொடராமல் இருக்க நம்மால் இயன்ற அளவிற்கு வாகன நெரிசல்கள் அது போன்ற மலைஸ்தலங்களில் பெருகாமல் இருக்க முடிந்த வகையில் உதவலாம். வனச்சாலைகளில் செல்லும் பொழுது வாகனங்களின் வேகத்தை ஒரு மட்டுக்குள் ஓட்டிச் செல்வதும் பெரிய விலங்குகள் விலகிச் செல்ல போதுமான அவகாசத்தைக் கொடுக்க உதவலாம். மழைக்காலங்களில் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குப் பிறகு அவ்வூர்களுக்குச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தலாம்.

இருக்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் உயிர்களுக்கே மதிப்பற்ற நிலையில், இது போன்ற சிறு உயிரினங்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பது ஒரு கேள்விக்குறியே!

பி.கு: ஈழ நேசனுக்காக எழுதியது. நன்றி!

5 comments:

சுந்தரவடிவேல் said...

அண்ணாச்சி, இலங்கையில்தான் உலகிலேயே அதிகமான தவளையினங்கள் வாழ்வதாக (அல்லது வாழ்ந்ததாக) வாசித்திருக்கிறேன்.

காருல அடிபட்டுச் சாகிறதுல இன்னும் சில: வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் சிறு பூச்சிகள். அதுவும் ராத்திரியில விளக்கைப் பாத்துட்டு அதுக வந்து முட்டி முட்டிச் செத்துப் போயி கண்ணாடியில வெள்ளையா ஆயுசு முடிஞ்சு போறது கொடுமை. அதுகளைக் கணக்குல எடுக்கத்தான் முடியுமா?! தொடச்சுப் போட்டுட்டு ஏழு பில்லியனும் போயிக்கிட்டே இருக்கும் :(

முகுந்த்; Amma said...

ரொம்ப கஷ்டமான விசயங்க, அதுவும் நான் வசிக்கிற வடக்கு கரோலினாவில நிறைய விலங்குகள் உண்டு, இப்படி தான் ரோட்டுல அடிப்பட்டு கிடக்கிறத பாத்திருக்கேன். காடுகள் அழிக்கப்பட்டு ரோடும், வீடுமா ஆனா இப்படி தாங்க நடக்கும் :(((

ஜோதிஜி said...

உங்களுடன் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். தெளிவான அக்கறையான படைப்புகள். உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.

ஜோதிஜி said...

நிச்சயம் மொத்த தலைப்புகளையும் வெகு சீக்கீரம் படித்து விடுவேன். என்னுடைய தேடல்கள் இது போன்ற இடுகைகளே.

nandhu said...

வணக்கம் தோழா

நல்ல பதிவு .

Related Posts with Thumbnails