Thursday, July 30, 2009

மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!

கடந்த மே மாதம் ஜெர்மனியில இருந்து டாக்டர் John Hurum_ங்கிற குரங்குகளராய்ச்சி விஞ்ஞானி கையில சுமார் 47 மில்லியன் வருஷத்திற்கு முன்ன வாழ்ந்த ஃபாசில் ஒண்ணு பம்பர் பரிசாட்டமா கிடைச்சிருக்கு. அது ஃப்ராங்ஃபோர்ட்ல இருந்து ஒரு 30கிமீ தள்ளித்தானாம்.

அது வால்/வாலற்ற குரங்கு மற்றும் மனித பரிணாம வளர்ச்சிப் பாதையை "இணைக்கும் பாலமா (missing link)" கருதப்படக் கூடியளவிற்கு அதி முக்கியமான ஒன்னுன்னு ஒட்டு மொத்த பரிணாம ஆராய்ச்சியாளர்கள் மத்தியில கருதப்படுகிறதாம். கண்டுபிடிச்ச அந்த விஞ்ஞானி அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.

இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், 47 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போன்ற மத்திய ஐரோப்பா நாடுகளில் இன்றைய ஆசிய, ஆஃப்ரிகா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் காணப்படும் மழைக் காடுகளும், சீதோஷ்ண நிலைகளைப் போன்றே பூமிப் பந்தின் கால கட்டங்களாக அறியப்படும் பேலியோசீன் (Paleocene - 65~58 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்தில் அப்படியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்து முன் வைத்திருப்பது அறிய வந்ததும், அட! அப்போ நாமதான் பின் தங்கி இருந்திருக்கிறோம் இந்த விபரங்களை அறியாமல்னு ஈடா பற்றிய சந்தேகம் தீர்ந்து இப்போ பரிணாம ஏணியில் ஏன் இந்த ஈடா ஃபாசில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்கன்னு அறிஞ்சுக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பினுச்சா அத கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டவுடன் உங்ககிட்டயும் பகிர்ந்துகளாமேன்னு இங்கே வந்திருக்கேன்.

பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.

அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர், தேவாங்கு மற்றும் டார்சியர்ஸ், இவைகள் ப்ரோசிமியன்ஸ் (Prosimians) என்றழைக்கப்படும். அதற்கு பிந்திய கால கட்டமான யியொசீன் காலக் கட்டத்தில் தேன்றியவைகளை ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) என்றழைப்பார்கள் இதில் தான் குரங்கு வகைகள், வாலில்லா மனித குரங்குகள் மற்றும் மனிதன் பரிணமித்த காலம்.

இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.

பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.

இப்பொழுது எப்படி இரண்டு குழுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறதுன்னும் சொல்லிடுறேன். தேவாங்கு, லெமூர் வகை விலங்குகளிலிருக்கிற மாதிரி எலும்புக் கூடமைவும், சொரிந்து கொள்வதற்கு இணையான ஒரே ஓர் கால்விரலைப் போன்று தனியாக அமைந்த புலி நகத்தையொட்டிய நகமும், கீழ்தாடையிலமைந்த ஒரு பல்லும் ப்ரோசிமியன்ஸ் வகை விலங்குகளோட போறேன்னு சொல்லுவதாகவும்; குரங்கு, வால்/வாலில்லா ஆட்களூடன் இணைவதற்கான மற்ற பண்புகளான - பொருட்களை விரல்களால் சுத்திப் பிடிக்கும் தன்மையோடும், எதிர் முனையில் அமைந்த கட்டைவிரலும், புலி நகங்களைப் போன்று கூரான நகங்களை கொள்ளலாமல் விரலுக்கு விரல் நம்மையொத்த நகங்களையும் கொண்டு நான் அந்ரோபாய்ட்ஸ் என்று சொல்லிக்கிறதாகவும் இந்த ஈடாப் பெண் இருக்கிறதுனாலேதான் இத ஒரு "இணைப்பு பாலம்"ங்கிற அளவில முக்கியமான ஃபாசிலா கருதப்படுகிறது.

இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.

Sunday, April 19, 2009

பறவை பார்த்தல்: Birding as a Hobby!

எனக்கு நல்லா நினைவிருக்கு 1990கள் வரைக்கும் என்னய சுத்தி ஒரு பத்தில இருந்து பதினைஞ்சு வகையான பறவைகள் இருக்கலாங்கிற வரையான ஒரு பொது அறிவு இருந்ததாக. ஆனா, மயிலாடுதுறையில ஏ.வி.சி கல்லூரியில வனவியல் முதுகலைப் பட்டப் படிப்புக்கு சேர்ந்ததற்கு பிறகுதான், பறவைகளைப் பத்தி படிக்கிறதுகின்னே ஒரு துறை இருப்பதாகவும் அதுக்கு பறவையியல்னும் (Ornithology) தெரிய வந்துச்சு.

அந்த சமயத்திலதான் எனக்கு பைனாகுலர் (Binoculars=தமிழ் படுத்துங்கப்பா; இருகுழல்நோக்கி?), பறவைகளை அடையாளம் காண்பதற்கென உள்ள தள கையேட்டுப் புத்தகங்கள்(field guide) எல்லாம் கண்ணில தட்டுப்பட ஆரம்பிச்சுச்சு. அந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக சில சமயங்களில் அருகாமையே உள்ள வயல், கன்மாய்கள், தடாகங்கள், ஊருணிகள், வயல்வெளிகள்னு அந்தக் கல்லூரியை சுத்தி அமைந்த இடங்களுக்கு கால்நடையாக சென்று பறவைகள் பார்க்கும் சந்தர்ப்பமும்கிட்டியது. அதுவே கொஞ்ச கொஞ்சமா பழக்கமாகி, பின்னாடி பார்த்தீங்கன்னா நூலகத்திலருந்து பைனாகுலரும், கையேட்டுப் புத்தகமும் கடன்வாங்கி சொந்த ஊருக்குப் போகும் பொழுது கூட அங்குள்ள வயல் வெளிகளில் பறவைகள் தேடி நடக்கிற அளவிற்கு ஆர்வம் வந்துருச்சு.

அது மாதிரியான ஒரு ஆர்வமூட்டக் கூடிய வேலை இந்த பறவைங்க கவனிக்கிறதுன்னா மிகையாகாது. ஏன்னா, இந்தியாவில மட்டுமே 1250 வகையான பறவைகள் காணப்படுவதாகவும் அவைகளில் ஏறத்தாழ 920 வகையான பறவைகள் இங்கயே முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அறியப்படுகிறது. நம்மூர்ல அதாவது தென் இந்தியாவில் (இலங்கை) 450 வகையான பறவைகளும், அவைகளில் மேற்கு மலைத் தொடர்களில் மட்டுமே காணப்படும் (endemic species) 35 வகையான அரிய பறவைகளும் இது வரையிலும் கண்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

பல முறை எனக்கு நேர்ந்தது எப்படின்னா குளக்கரைக்குப் போவேன், ஏதாவது ஒன்றிரண்டு சிறு பறவவைகள் வேலிகளில் தாவித் திரிவதை கண்டு அவைகளை தள கையேட்டில் உள்ள பறவைகளுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டுவிட்டால் பெரு மகிழ்ச்சியோடு அன்றைய தினத்தில் மிதப்பேன். அப்படியாகத்தான் ஒரு நாள் அந்த நடையில் ஒரு பெரிய புது பறவை ஒன்றைக் காண நேர்ந்தது. என்னுடைய 21வது வயது வரைக்கும் இத்தனை பெரிய பறவை, இவ்வளவு எடுப்பான நிறத்துடன் என் கண்களில் சிக்காமல் நான் வாழ்ந்து வந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போனது என்று அதிசயமாக இன்று நினைக்கிறேன். ஆமாம். என்னாகிவிட்டது அந்த நடையின் பொழுது ஒரு காகத்தின் அளவிலிருந்த ஒரு பறவை வேலிகளுக்குள் ஒளிந்து மறைந்து தாவித் தாவி சென்றதை கவனித்து விட்டேன்.

நன்றாகப் பார்க்கும் பொழுது அது காகத்தினை விடப் பெரிதாக இருந்தது. மேலும், காகம் அப்படி கள்ளி வேலிகளில் புகுந்து சென்று கொண்டிருப்பதனை அந்த பறவைகள் கவனிப்பு நிலையில் நான் கண்டறிந்ததில்லை. இந் நிலையில், அப் பறவையின் பழக்கம் என்னை மேலும் ஆர்வமூட்டியது. கையில் பைனாகுலரைத் தவிர வேறு எதுவுமே இல்லை. கடைசியாக அந்தப் பறவை ஒரு முடிவிற்கு வந்ததாய் வெளிக் கிளம்பி சிறகெடுத்துப் பறந்து ஒரு 300 மீட்டரை கடந்து மீண்டும் அதே போன்றதொரு வேலிக்குள் புகுந்து கொண்டது.

ஆஹா! நான் ஏதோ ஒரு புது விதமான பறவையை கண்டுபிடித்து விட்டதாகவும், அது பெரிய அளவில் பேசப்பட்டு கையேட்டுப் புத்தங்களில் எனது பேருடன் வரப் போகிறதென்றும் மிக்க ஆவல் கொண்டவனாய் அடுத்த மணி நேரங்கள் அந்தப் பறவையின் பின்னாலே மிதந்துகிட்டே ஓடிக்கிட்டுருந்தது.

ஆனால் அந்தப் பறவையின் பறப்பு எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அது, அதன் மேல் இறக்கைப் பகுதியில் செங்கல் நிறந்திலமைந்த திட்டான இறகுகளின் இருப்பை உறுதிப் படுத்தியது. இப்படியாக அந்தப் பறவையை பின் தொடர்ந்து, தொடர்ந்து ஒரு இரண்டரை கிலோமீட்டர்கள் போயிருப்பேன். நேரம் ஓடியதே தெரியவில்லை. வீட்டிற்கு வந்து காலை உணவுக்கு அமரும் பொழுது நேரம் முன் மதியத்தைத் தொட்டிருந்தது. இப்படியாக நிறைய நாட்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடந்ததுண்டு. பின்பு அந்தப் பறவை பற்றிய குறிப்புகளுடன் கையேட்டை வைத்து அறியும் பொழுது அது Crow Phesant (செண்பகப் பறவை ~ செம்போத்து) என்பதாக தெரிய வந்தது. மேலும், கொஞ்சம் கவனத்துடன் ஆராய்ந்தால் அடிக்கடி காணக்கிடைப்பதென்றும் அறிந்தேன். என் ஆசையில் மண்!

பறவைகள் கவனிப்பினை ஆரம்பித்து ஆர்வம் கிளம்பிவிட்ட தருணத்தில், தினமும் புதிது புதிதாக பறவைகளைக் கண்டு நம்முடைய பட்டியலில் சேர்ப்பதில் ஒரு விதமான கிறக்கம் இருக்கும். அதுவே எனக்கும் நடந்தது. அது வீங்கி நீல்கிரீஸ்ல் வைத்து மேற்கு மலைத்தொடரில் காணக்கிடைக்காதென எண்ணியிருந்த ஒரு "ஸ்ரைக்" வகைப் பறவையை மீள் கண்டெடுக்கும் வரைக்கும் சென்றது.

ஒவ்வொரு வகையான பறவையும் எந்த விதமான சூழ்நிலையில் நான் கண்ணுற்றேன் என்று கூற வேண்டுமானால், அது மாதிரியான ஒவ்வொரு சிறப்பு பறவைக்கும் தனிப் பதிவாகவே பதிவிடலாம். அது போன்ற சுவாரசியமான நிகழ்வாக சில பறவைகள் எனக்கு வாய்ப்பை கொடுத்திருந்தது. அதுவும், மழைக்காடுகளில் பெரிய சேலஞ்ச்சாகவே அமையும் அவைகளின் சத்தத்தினை வைத்து திசையறிந்து, அமர்ந்திருக்கும் மரக் கிளையறிந்து அப்படியே நல்ல பார்வைக்கும் எட்டி... ம்ம்.

ஆரம்பக் காலங்களில் பைனாகுலர் பயன்படுத்துவதே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பயன்படுத்தியவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கும். வெறும் கண்களால் ஒரு சிறு பறவையை கண்டுவிட்டு அந்த திசையை நோக்கி பைனாகுலர் கொண்டு பார்க்கிறேன் என்று வைத்துப் பார்த்தால் வேறு எங்காவது குளித்துக் கொண்டிருப்பவர்கள் தெரிவார்கள் [:-P]. சரியான இலக்கை நோக்கிப் பிடிக்க சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் அந்தப் பழக்கத்தை நம்மதாக கொள்ள.

பறவைகள் கவனிப்புக்கு தேவையானது என்னன்னு பார்ப்போம். குறைந்த பட்சம் 8 X 32 or 8 X 42 அளவீடு கொண்ட பைனாகுலர். ஒரு நோட்டுப் புத்தகம், பென்சில், ஒரு நல்ல தள பறவைகள் கையேடு எல்லாத்துக்கும் மேலா ஆர்வம் இன்னும் பெரிய அளவில ஆர்வம். அவ்வளவே!

அடுத்து எப்படி ஒரு பறவையை கவனிக்க நேரும் பொழுது என்னன்னா விசயத்தை கவனிக்கணுங்கிறதை சொல்லிடுறேன். முதலில் நல்ல கண்பார்வை. அதாவது அட்டெண்டிவ்வாக பார்க்கும் மன நிலை. பொதுவாக பறவைகள் இலைகளுக்குள் அமர்ந்திருக்கும் பட்சத்தில் எப்பொழுது அவை அசைகிறதோ அதனைக் கொண்டு பறவையின் இருப்பை அறிய முடியுமல்லவா? எனவே, பொறுமையாக கூர்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படி இருக்குமிடம் அறிந்து கொண்டால் ஆர்வத்தில் அடுத்தவரை அழைக்கிறேன் என்று கூச்சல் இடுவது ஒரு கல்லை எடுத்து எறிவதற்கு ஒப்பானது என்பதால், அதனை கண்டிப்பாக தவிர்த்து, ஹஸ் குரலில் விசயத்தை பெரிய அளவு உடம்பு அசைவுகளற்ற முறையில் வெளிப்படுத்துவது அவசியம். எல்லாம் அனுபவம் கற்றுக் கொடுப்பதுதான்.

ஒவ்வொரு குடும்ப பறவைக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான பழக்க வழக்கமிருக்கும் அல்லது அதனோட உடல் புற உறுப்புகளே கூட அதன் வாழ்வு முறைக்கு தகுந்த மாதிரி அமைஞ்சிருக்கும். உதாரணமா பார்த்தோம்னா: கிளைகள் மாதிரியான ஏதோ பிடிமானத்திற்கு ஏற்ற விசயங்களை பற்றிக்கிட்டு அமர்கிற பறவைகள் (perching bird =மைனா, ஸ்ரைக், புல்புல், சாம்பல் நிறக் குருவி, கருங்குருவி...). இந்த வகைள்தான் பறவைகள் இனத்திலயே அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகிறது. நீர் நிலைகளுக்கு அருகாமையில் காணக்கூடிய பறவைகளுக்கு பொதுவாக கால்கள் நீளமாவோ, அல்லது அலகுகள் வளைந்தோ, நல்ல தட்டையாகவோ, அலகுக்கு கீழ் பையுடனோ காணப்படலாம். இப்படியாக அவைகளை பிரிச்சறியலாம்.

இது போன்ற பொதுவான பண்புகளைக் கொண்டு ஓரளவிற்கு அது எந்த விதமான பறவையாக இருக்கக் கூடும் என்று அனுமானிக்கும் அனுபவத்தை பெற்றுவிடுவோம். இரண்டாவது, நமக்கு மிகவும் பார்த்து பழக்கப் பட்ட ஒரு பொதுவான பறவை உடலைப்பு, அதன் நீளம், எடை இவைகளை கருத்தில் கொண்டு அந்தப் பறவையுடன் பார்த்த பறவையை குறிப்பிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நம்ம சிட்டுக் குருவி எல்லாருக்கும் பார்க்கக் கிடைத்திருக்கும் ஒரு பறவை, அதே போன்றே உடல் பருமனுடன் வயல் வெளியில் பிப்பிட், ஸ்கைலார்க் வகை பறவையை காண நேரிட்டிருந்தால், குறிப்பு புத்தகத்தில் சிட்டுக் குருவி அளவு, பிறகு எது போன்ற அடையாளங்கள் மிகவும் கவனிக்கத் தக்க வகையில் தென் பட்டதோ, அவைகளை எல்லாம் நன்றாக கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும்.

இறக்கையின் நிறம், கண்களைச் சுற்றி ஏதாவது வட்டம், நிறம் இருந்ததா, அதன் அலகின் அமைப்பு, நெஞ்சுப் பகுதியின் நிறம், வால் அமைப்பு, அங்கு ஏதாவது வரியாகவோ அல்லது பட்டைகள் ஏதும் காணப்பெற்றதா, பறக்கும் பொழுது கீழ் இறகுகளின் நிறம் குறிப்பிடும் படியாக எதாவது என்று நன்றாக கவனித்து கிறுக்கி வைச்சுக்கோங்க. முடிஞ்சா படமாவே வரைஞ்சு கூட வைச்சுக்கலாம். எங்கே எந்த நேரத்திற்கு பார்த்தீங்க, பறக்கும் பொழுது எப்படி பறந்துச்சு. நேர் கோட்டில் போன்றமைவிலா அல்லது மேலும் கீழுமாக இறங்கியா போன்ற குறிப்புகளும் உதவலாம் கையேட்டில் அந்த பறவையை பின்பு அடையாளப்படுத்த எத்தனை விதமான குறிப்புகள் இருந்தாலும் அது மேற்கொண்டு அடையாளப் படுத்துவதில் மிகவும் உதவும்.

இப்படியே நீங்களும் இதுல ஈடுபட்டுப் பாருங்களேன். எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். மேலும், தினமும் ஒரு பறவையென உங்க சொந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும். தேவை ஆர்வம் அதனையே பழக்கமாக்கிக் கொள்வது வரைக்கும். குழந்தைகளை ஆரம்ப கால கட்டத்திலேயே ஆர்வத்தை வளர்த்து விட்டால், கோடை காலத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் செலவு பண்ணும் நேரத்தை மிச்சப் படுத்தி இது போன்ற ஆரோக்கியமான விசயங்களை கற்றுக் கொண்டவர்களாவார்கள். முயற்சி பண்ணிப்பாருங்களேன்!

Sunday, April 12, 2009

வண்ணத்துப் பூச்சியின் உலகமும், பெண்களும்...!

வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ? மேலும் வண்ண வண்ணமா அத்தனை வகையான இனங்களாக அறியப்படுவதாலும் இவைகள் நம் உலகில் பெண்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு பெண்களும்-வண்ணத்துப் பூச்சிகளும் இரண்டர கலந்து விட்டதோ!

இப்போ இதப்பத்தி என்னாத்துக்கு இங்கே பேசுறேன்னு கேக்கப் போறீங்களா? இருங்க, நான் இன்னும் இயற்கை நேசி தளத்தை மறந்துடல. இங்கே நிறைய எழுதப்பட வேண்டியிருக்கு. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு பதிவில இப்படி ஒரு பின்னூட்டம் பார்த்தேன் ...

...//ஊர்ந்திடும் புழுவிலிருந்து நேர்முறையில் மாறிப் பறந்திடும் பட்டாம்பூச்சி அடுத்த பிறவியாக உருவாகிறது. ஆனால் பட்டாம்பூச்சி தன்னினம் பெருக்க முட்டை இடுவதுமில்லை //...

படிச்சவுடன் ஏற்கெனவே இந்த பூச்சிகளின் உலகம் ஒரு புரியா அதிசிய உலகம் அதிலும் குறிப்பாக இந்த வளர்சிதை மாற்றத்துனூடாக வரும் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முறை ரொம்ப ஆச்சர்யமூட்டக் கூடியது.

இதனில் பின்னூட்டமிட்டவர் போலவே உயிரியல் ஆழமாக படித்திருக்க வாய்ப்புகிட்டாத எவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் இவைகளின் வாழ்க்கை முறை அறிந்து கொள்வதின் பொருட்டு. சரி, படிச்சவுடன் இதனைப் பற்றி ஒரு பதிவு போட்டு விடலாமே என்று தோணியதால் இந்தப் பதிவு.

இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனில் நமது மேற்கு மலைத்தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 334 வகையானவை காணப்பெறலாம்.

நான் பார்த்து அதிசயித்ததிலேயே பறவை இறகு (Bird wing) என்றொரு வகையான வண்ணத்துப் பூச்சிதான் மிக்க பெரிதாக அரையடி நீளத்திற்கு (இறகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு இறகின் முனை) பெரிதாக நீல கண்ணைப் போன்ற புள்ளியுடன் கறுப்பு நிறத்தைக் கொண்ட பூச்சி. அழகோ! அழகு!!

பூச்சி வகைகளே உலகத்தில் அதிகப்படியான இன வகைகளாக அமையப் பெற்றதால் புதிது புதிதாக முன்னமே அறியப்படாத புது வகையான இனங்கள் நாளொருமேனியும் பொழுதொரு பூச்சியும் இருப்பதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா விதமான பூச்சி இனங்களும் முட்டையிட்டு அதன் பிறகு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் (developmental stages) படிப்படியாக முதிர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி நிலைகளை வளர்சிதை மாற்றம் என அறியலாம். நாம் அறிந்த பூச்சி இனங்கள்லே இரண்டு விதமான வளர்சிதை மாற்ற முறை நடைபெறுகிறதாம்.

வெட்டுக்கிளி, புள்ளப்பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் தட்டாம் பூச்சி இவைகள்லே என்ன நடக்குதாம் முழுமையற்ற வளர்சிதை மாற்றம்; எப்படின்னா, முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் இறக்கை மட்டுமில்லாம அதோட அம்மாப்பாவை ஒத்தே இருக்குதாம். இந்த பருவத்துக்கு பேரு நிம்ஃப்(Nymph) ஆம்.

இரண்டாவது வகையான வளர்சிதை மாற்றத்தைத்தான் முழுமையான வளர்சிதை மாற்றமா பார்க்கிறோம். இது பெரும்பாலும் எது மாதிரியான பூச்சிகள் உலகத்திலன்னா, வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி, வண்டுகள், ஈக்கள் மற்றும் குழவிகளில். இங்கே டிபிக்கலா நம்ம பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல.

நான்கு நிலைகளை (முட்டை, லார்வா, ப்யூப்பா மற்றும் அடல்ட்) இவைகள் தாண்டி வர வேண்டியதா இருக்கு, அதற்கு பல புறக்காரணிகளும் சாதகமா இருக்கிற பட்சத்தில தடையின்றி அடுத்த தலைமுறைக்கான குடும்ப பொறுப்பை ஏத்துக்க ரெடியாகிடுதுகளாம்.


இப்போ ஒவ்வொரு படியா(stage) தாண்டி நாமும் போவோம், ரொம்ப உள்ளர போயிடாம. அசராம வாங்க! படிக்க ஆர்வமா இருக்குங்கிறதுக்காக இப்போ நாம வண்ணத்துப் பூச்சிய மட்டும் சுட்டிப் பேசுவோம்.

எங்கெல்லாம் நான் பூச்சின்னு சொல்றேனோ அங்கே நீங்க வண்ணத்துப் பூச்சியா எடுத்துக்கோங்கப்பா.

முட்டை (Egg): நாம எல்லாம் சாதாரணமா பார்த்திருப்போம் ரெண்டு வண்ணத்துப் பூச்சிகள் இணைந்து பறந்துகிட்டு திரியுறதை. அதப் பிடிச்சி பார்த்தோம்னா அதில ஒரு ஆண், ஒரு பெண் இருப்பாய்ங்க. அதுக ரெண்டும் சேர்ந்து முட்டை தயார் செய்ற வேலையில இருக்குதுகன்னு மட்டும் எடுத்துக்குவோம், சரியா!

அதுக்குப் பிறகு பெண் பூச்சி என்ன பண்ணுது முட்டைகளை இலைகளின் அடிப்பாகத்திலோ இல்லன்னா இலைகளின் அடிக் காம்புகளில் நூற்றுக்கணக்கா இட்டு வைச்சிருதுகளாம். இந்த முட்டைகள் சில நேரத்தில ரொம்பச் சின்னதாவும் வெறுங் கண்ணாலே பார்க்க முடியாத அளவிற்கு கூட இருக்கும் போல. அது ஏன் காம்பிலேன்னு கேட்டீங்கன்னா, இலையே பட்டு கீழே விழுந்துட்டாவோ, இல்ல மற்ற ஜீவராசிகள் அந்த இலையை திண்ணுப்புட்டாக் கூட அதன் காம்பு மரத்துடன் இணைந்து இருக்குமிடத்தில் இருந்து போனா மிச்சம் மீதி முட்டைகள் பொரித்து அடுத்த படிக்கு முன்னேறுமில்லே, அதான்.

சரி, இந்த முட்டையிடுற காலம் தாவரங்களில் உணவு கிடைக்கும் பருவ காலத்தை முன்னிட்டு இருக்குமாம். அப்பத்தானே அந்த கம்பளிப் புழு(cattepillar) நிலையில சாப்பிட நிறைய கிடைக்கும் அதுனாலே. இப்போ, இதிலருந்து அடுத்த படி என்னான்னா...

கம்பளிப் புழு நிலை (Catterpillar Stage): நாம இந்தப் பருவத்தை பார்த்திருக்கலாம் வண்ணத்துப் பூச்சி மற்றும் அந்துப் பூச்சி இனங்கள்லே. அதான் புழு மாதிரி வண்ண வண்ண நிறங்களில் அதன் உடம்பு முழுக்க முடி மாதிரியான சுனைகளுடன் ஊர்ந்து இலைகளை மென்னு மேய்ஞ்சிக்கிட்டே இருக்கிறதை.

இதன் முழு வேலையே சாப்பிடுறதுதான் பொழுதன்னிக்கும். ஏன்னா, இப்போ சாப்பிட்டு வைச்சிக்கிறதுதான் பின்னாளில் ரொம்ப உதவப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு. நான்கைந்து முறை இந்தப் பருவத்திலயே இதன் தோலுறித்தல் நடைபெற்றும் விடுவதால் நிறைய சக்தி தேவைப்படுது. இதன் பிறப்பு பருவத்திற்கும் இந்தப் படி நிலையின் வளர்ச்சி நிலைக்கும் வைச்சிப் பார்த்தா கிட்டத்தட்ட நூறு மடங்கு வித்தியாசத்தில உடம்பு போட்டுருக்குமாம். இப்படியே ஊர்ந்து, நகந்து அடுத்ததிற்கு போயி...

ப்யூப்பா நிலை(Pupa Stage): இந்த நிலையில சுத்தமா சாப்பிடுறதை நிப்பாட்டிட்டு மெதுவா நகர்ந்து இலையோட இலையாவோ, இல்ல மண்ணுக்குள்ளரயோ ஒரு மெழுகுக் கூட்டை கட்டிக்கிட்டு சுருண்டுக்கிறாய்ங்களாம் உள்ளரயே. இந்த சமயத்திலதான் முக்கியமான சிதைவுகள், மறு கட்டமைவுகள்னு உள்ளர பட்டைய கிளப்பிட்டு இருக்குதுகளாம். எங்கங்கோ மறைந்திருந்த செல்களிலுள்ள செய்திக் கோர்வைகளை கொண்டு எங்கே எந்த உடற் பாகங்கள் இருக்கணுமோ அவைகளை அங்கங்கே வைச்சு வளர்ரதெல்லாம் இந்த நிலையிலதான். இந்த வளர்ச்சி இரண்டு மாசத்திலும் நடை பெறலாம், இரண்டு வருஷமும் எடுத்துக்குமாம் அது கொடுக்கப்பட்ட இன பூச்சி வகையைக் கொண்டு அப்படி நடக்குதாம்.

என்னடா இது முட்டை வடிவத்தில கூட்டைக் கட்டிக்கிட்டு வெளியில வர ரொம்ப கஷ்டப்படும் போலவேன்னு நாம உடைச்சு கொஞ்சம் ஈசி பண்ணிடுவோம்னு நினைச்சு ஏதாவது பண்ணி வைச்சோம். அம்பூட்டுத்தான் அதோட மிச்ச மீதி வாழ்க்கை அப்படியும் இப்படியும்தான் (இப்போ ஒப்பீடு பண்ணிக்கோங்க பெண்/ஆண் குழந்தைக வளர்ச்சி நிலையில எங்காவது ஒரு சறுக்கல் நடந்தா என்னாகுதோ அதே தான் இங்கும்...).

ஒரு கொசுறுச் செய்தி, இந்த மெழுகுக்கூட்டை கட்டிக்கிது பார்த்தீங்களா அதத் தான் நாம இதே இனங்களிலே ஒண்ணா வார பட்டுப் புழுக்களை அந்த நிலையில் இருக்கும் பொழுது அவைகளை சிதைச்சிட்டு அந்த மெழுகுக் கூட்டை நாம லபக்கி "இந்தப் பட்டுப் புடைவை என்ன வெல தெரியுமா... 35 ஆயிரம ரூவான்னு" பீலா விட்டுக்கிட்டு இருக்கோம்ங்க. அதுவும் காந்தி பொறந்த, ஆன்மீகத்தில நெம்பர் ஒன் இந்தியாவில இந்த அநியாய்ம்ங்க.

அடல்ட் அல்லது இனப்பெருக்க நிலை: இங்கன வைச்சித்தான் நம்மில் பல பேருக்கு வண்ணத்துப் பூச்சின்னா என்னான்னே தெரியும். அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் பார்த்தீங்கன்னா நான் முன்னே கொடுத்திருந்த பின்னூட்டத்தில நினைச்சிட்டு இருந்தவங்க நிலைதான். எல்லாம் கடவுள் அந்தரத்தில இருந்து தொபுக்கடீர்னு வண்ண வண்ணமா பறக்க விட்டுடுறார்ங்கிற அளவில.

இந்த நேரத்தில வைச்சிப் பார்த்தா எத்தனை விதமான இயற்கை நடத்தும் விந்தைகள்னு நினைச்சு ஆச்சர்யப்படுவோமில்லையா. ஏன்னா, புழுவா இருக்கும் பொழுது சில நேரத்தில குட்டைக் கால்களும், பல கண்கள் மாதிரியுமா இருந்திருக்கும். அடல்டா பார்க்கும் பொழுது நீண்ட கால்கள், கூட்டுப் பார்வை கிட்டக் கூடிய கண்கள், அழகான நிறத்தில் உள்ள இறக்கைகள் அப்படின்னு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விசயங்கள் கூட்டுக்குள்ளர நிகழ்ந்துருச்சே. நம்ம மனுசப் பசங்களும் இப்படித்தானே!

இதில பார்த்தீங்கன்னா இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறோம்ல இவைகளை, ஆனா, இதுகளில் ஒரு சிலது தான் சாப்பிடுதாம். அதுவும் பூக்களில் உள்ள நெக்டார்களை உணவாக. பெரும்பான்மையானது சாப்பிடுறதே இல்லையாம். வந்ததே தன்னோட பார்ட்னரை கண்டுபிடிச்சு இனப்பெருக்கம் பண்ணத்தாங்கிற அளவில பறந்து திரிஞ்சு ஆளையும் கண்டுபிடிச்சு வேலையை ஆரம்பிச்சிடுதுகளாம். கடமையே கண்ணாயிரமா!

இந்த நிலையில இந்த நெக்டார்களை (தேன்) எடுக்குதில்லையா அப்போ அப் பூக்களிலுள்ள மகரந்தத் தூளை போட்டு பொரட்டிக்கிட்டு அடுத்த பூவிற்கு விஜயம் பண்ணும் பொழுது அங்கே கொண்டு போயி அதுகளை விட்டுடுதா அதுனாலே மரங்கள் இனப்பெருக்கம் பண்ண உதவிப் போடுதுகள். எப்படி இயற்கையின் பரிணாம செட் அப்பு. ஒன்றை நம்பி மற்றொன்று.

இந்த நிலையில ஒரு சில பூச்சிகள் கால சுழற்சியை(குளிர் காலத்து) ஈடுகட்ட பல மாதங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தில்(Hibernation) போயிடுரதுமுண்டாம். ஆனா, பல வகை பூச்சிகளில் இதனோட வாழ்க்கை கால அளவோ இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள்ளே முடிஞ்சிடுதாம். என்னே ஒரு வாழ்க்கை சுழற்சி வண்ண வண்ணமா!

Tuesday, March 11, 2008

பூவன் கடவுளாகிப் போனான்: காட்டாறு!

எப்பொழுதும் போலவே அதுவும் ஒரு மழைக்காடுகளின் மழைக்காலம்! சுகமான சுமையாக பூவனும் நானும் ஆளுக்கு ஒரு ஐம்பது அலும்னியத்தாலான எலிப் பொறி பெட்டிகளை ஒரு கட்டாக கட்டி, அக்காமலை (Akkamalai) நோக்கிச் செல்லும் பேருந்தில் வால்பாறையிலிருந்து ஏறிக் கொண்டோம். பேருந்து நிலையம் வரைக்குமாக இருந்த அந்தச் சொந்த சுமையை இப்பொழுது பேருந்து ஏற்றிக் கொண்டது.

அக்காமலையின் கடைசி நிறுத்தத்தில் நாங்கள் இறங்கிக் கொண்ட பிறகு சுமாருக்கு ஒரு ஒண்ணரை கிலோமீட்டர் சரிவான தேயிலைக் காடுகளுக்கிடையேயான அந்தச் சுமையுடன் கால்நடையாக நடந்து அந்தப் பச்சைக் கம்பளத்தை நோக்கிய நடை. தலைக்கு மேலே மூடியாக மேக மூட்டங்கள். மழைக்காடுகளில், அதுவும் அந்த இரண்டு பருவ மழை காலங்களில், எந்த நேரத்தில் மேகம் கருக்கொண்டு, எந்த நேரத்தில் தன் கருக் கொண்ட சூலை இறக்கி வைத்துக் கொள்ளுமென்று அரிதியிட்டு சொல்லி விட முடியா வண்ணம் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாமென்ற சூழ்நிலை.

அன்றும் அது போன்றதொரு நாள்தான். நாங்கள் எப்பொழுதும் அந்தப் பசுங் காடுகளை ஓர் காட்டாற்றை குறுக்காக நடந்தேதான் அணுகுவது வழக்கம். அதிகம் மழையற்ற நாட்களில் கண்ணாடி படிகத்தின் மீது ஓடும் நீராக ஆங்காங்கே பாறைகளின் முகட்டைக் காட்டிக் கொண்டு ஓடுவது நாங்கள் காணும் காட்சி. அப்படியாக இருக்கும் நாட்களில் மிக எளிதாக நீரின் மேல் கால்படாமல் தாவித் தாவி எதிர்த்த கரைக்கு போய்விடுதுண்டு. அன்றும் அப்படியே நடந்தது.

எத்தனையோ அசம்பாவித நிகழ்வுகள் நமக்கு நிகழும் கணம் தோறும் நாம் நினைப்பதுண்டு, இதனை முன்னயே கண்ணுரும் சக்தி நமக்கு கிடைத்திருந்தால் நிகழ்ந்த அந்த நிகழ்வை தவிர்த்திருக்காலமே என்று நினைக்கத் தோன்றினாலும், அது போன்றதொரு சக்தியை எந்த கொம்பனும் வரமீட்டி பெற்று அந் நாளில் தன்னை நிறுபித்துக் கொண்டதாக நாமறிந்திருக்கிறோமா?

ஆனால், அப்படியாக அறியும் பட்சத்திலும் அந்த நிகழ்வின் மூலமாக கிடைத்திருக்கக் கூடிய அரிய பாடங்கள், அனுபவங்கள் நிகழாமல் போனாலே நம் மலரும் சாத்தியங்களும், கதை சொல்லும் திறனும் அற்றுப் போய் தேங்கிய குட்டையாக ஆகக் கூடிய இயற்கையின் வடிவமைப்பை என்னவென்று சொல்வது.

சரி இப்ப விசயம், பூவனும் நானும் இப்பொழுது பச்சைக் கம்பளத்திற்குள் இறங்கி நடக்க ஆரம்பிச்சாச்சி, உள்ளே போய் என்ன செய்வோமென்றால் கொண்டு வந்திருக்கும் 100 எலிப் பெட்டிகளையும் மனித நடமாட்ட பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பார்த்து ஒரு நூறு மீட்டர் நேர்க் கோட்டில் பத்து மீட்டர் இடைவெளியில் ஒரு பெட்டி அமைந்திருக்குமாறு பத்து கோடுகளில் 100 பெட்டிகளையும் பரப்ப வேண்டும். அதுவே எங்களின் அப்பொழுதைய வேலை. அதற்கு குறைந்தப் பட்சம் ஒரு இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும், இருக்கும் தரை அமைப்பினை பொருத்து.

வேலையில் மும்முரமாக இருக்கும் சமயத்தில் இலைகளுக்கு யாரோ நெட்டி எடுத்து விடுவதனைப் போன்றதொரு நொட், நொட் சத்தம். மழைக்காடுகளில் வெயிலும் சரி, மழையும் சரி தரையை வந்து தொடுவதற்கு முன் 50 மீட்டர்களில் உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் குடுமியின்(Canopy) அனுமதியின்றி தொட்டு விட முடியாது. ஏனெனில் குடுமியின் அடர்த்தி அப்படி, அப்படியே கொஞ்சம் விட்டொழிந்தாலும் இரண்டாவது நிலையிலுள்ள தனது சகோதரர்களின் (Secondary growth) அனுமதியும் பெற வேண்டும்.

அந்த இயற்கை குடையமைப்பின் கீழ் லாவகமாக லஞ்ச் கேட்கும் அட்டைகளுக்கு உப்பினைக் கொண்டு பதிலுரைத்து விட்டு உஷ்ஷ் யாப்பாட என்று நிமிரும் பொழுது தட் தட் தட் என குடையை கிழித்துக் கொண்டு விட்டது

மழைக்காடுகளின் சிம்ஃபொனி. இப்பொழுது நம்மால் ஆனதெல்லாம் ஒரு அகன்ற மரத்தின் கீழ் தஞ்சம் புகுவதும் கொஞ்சம் நம் மன சாந்திக்கு அருகில் கிடைக்கும் மலை வாழை ஒன்றின் இலையை திருடி தலைக்கு கவசமாக பிடித்துக் கொண்டு, அந்த நிகழ்வை ரசிப்பது மட்டுமே!

அப்படியாகவே மேலும் ஒரு இரண்டு மணி நேரங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும், அங்கே நேரமென்ற ஒன்று இருப்பதே இருட்டும் தன்மையினைக் கொண்டும், அட்டைகளின் அட்டகாசத்தையும் கொண்டே அறியும் நிலை. அது போன்றதொரு நிலைதான் இப்பொழுதும். மழையின் வீச்சத்தை பின்னால் தள்ளிவிட்டு மெது மெதுவாக அந்த சறுக்கு ஈரப்பதமேறிய மலைத் தரையில் ஒரு கபடி நடை போட்டு காட்டின் விளிம்புக்கு வரும் பொழுது பெரும் காட்டாற்று சத்தம், எட்டிப் பார்த்தால் அங்கே கண்ணாடி படிவ அமைதித் தண்ணீர் அல்ல, சினமுற்ற முகம் சிவந்த சிறு பாறைகளை உருட்டிச் செல்லும் காட்டாறாக அது பரிணமித்திருந்தது.

அப்ப இன்னிக்கு நமக்கு ஆப்புத்தானா, என்று நினைத்துக் கொண்டே கரைகளின் விளிம்பிலேயே நின்றோம் மேலும் சில மணி நேரங்கள். மழையின் மூர்க்கம் ஒழிந்தால் ஆற்றின் வீச்சமும் அதனையொட்டி குறைந்து போகுமென்பது பூவனின் பல வருட அவதானிப்பு. ஆனால், அன்று நேசிக்கு ஒரு காட்டாற்றின் பலமறிய வைக்க அக்காமலை சிம்ஃபொனி எப்பொழுதோ திட்டமிட்டு விட்டது போலவே அது பாட்டுக்கு நிகழ்த்திக் கொண்டிருந்தது. அதில் பூவனின் எதிர்ப்பார்ப்பு புகைந்து போனது.
இப்பொழுது எனக்கு பூவன் கடவுளாகிப் போனான் ஒரு காட்டாறுக்கு முன்னால்! முழுதுமாக அவனின் காடாளும் திறத்தினை நம்பி அவன் எடுக்கும் முடிவிற்கு முழுதுமாக ஒப்பிப் போகும் நிலையில் நான். அங்கே கணினியில் மல்டிவேரியட் அனாலிசிஸ் புள்ளியல் கணக்குப் போடும் என் திறமை நல் ஹைப்போதீசிஸ் ஆகிப் போனது.

"சார், வேற வழியில்லை நமக்குத் தெரிஞ்சி எங்கே பெரிய பாறை முகடுகள் மூழ்கிப் போன நிலையில் நிறைய நீர்ச் சுழிப்பு இல்லாமல் தண்ணீர் ஓடுகிறதோ அங்கேயாகப் பார்த்து இறங்கி மெதுவாக நடந்து கடந்து விடுவதுதான் ஒரே வழி," என்று என் முகத்தை உற்று நோக்கினான், பூவன்.

"உனக்குத் தெரியாத பூவன், அப்படி எங்கே என்று ஒரு இடத்தை பார்த்து இதோ இங்கேதான் என்று சொல்கிறாயோ செய்து விடுவோமென்று," பாடத்தை ஏற்கும் நிலையில் நேசி.


அப்படியாக ஒரு இடத்தை தேடும் உத்தியில் ஆற்றின் கரையோரமாகவே சிறிது நேரம் நடந்து சென்றோம். காட்டாற்றின் மூர்க்கத்தினை கட்டற்ற தரையினூடே நடந்து அறிந்து கொண்ட நாள் அன்றுதான்.

நன்றாக செப்பனிடப் பட்ட பாதையில் அறிந்து கொள்ளும் நோக்கம் அங்கு அற்றிருக்கும் நிலையில் நாம் பயணிக்க நேரும் பொழுது, மனதில் தடம் பதிக்க அத் தடத்தில் ஏதும் மற்றதைப் போல ஒரு பிம்பம் நம் மனதில் பதிவது இயற்கைதானே. ஆனால், இங்கோ ஒரு மரத் துண்டினைப் போலவே இற்று போய்க் கிடக்கும் மனத்திற்குக் கூட உள்வாங்கும் சக்தி பல மடங்கு எகிறுகிறது. காரணம், மனம் அந் நொடியில் லயித்து இலக்கற்ற நீர்ச் சுழிப்பில் கால்கள் இடறிச்செல்வதால் அப்படியே அத் தடமும் அந்த சூழலும் மனத்தினுள் தடத்தினை விட்டுவிட்டுச் செல்வதால் தானோ!

அப்படியாக ஊர்ந்து கொண்டே சரியான ஓர் கடக்கும் இடத்தினை பார்த்துக் கொண்டே வரும் பொழுது பூவனுக்கு மேலும் ஓர் யோசனை, அவன் கடவுளல்லவா, என்னை காக்கும் பொறுப்பு அவனிடத்தில்.

"சார், அந்த தொடைச் சுற்றளவுள்ள மரத்தினை வெட்டி குறுக்காகப் போட்டு விட்டால் நீரின் சுழிப்பிலிரிந்து கொஞ்சம் நம்மை அசுவாசப் படுத்திக் கொள்ள உதவுமே," என்று நிறுத்தினான் பூவன்.

கொண்டு வந்த அருவாளை பயன் படுத்தி வெட்டிச் சாய்த்து படுக்கவும் வைத்துப் பார்த்தால் அடுத்த முனைக் கரையைத் தொட்டுப் பார்க்காமல் ஒரு ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு படுத்துக் கொண்டது. ஆறும் அதனை அசைத்துப் பார்த்து தன் வழியில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், நாங்களும் இறங்கி விட்டோம்.

இப்பொழுது காட்டாறா அல்லது பூவனா? நான் எடுத்து வைத்த இரண்டு அடிகளிலேயே என் முழங்கால் மட்டும் தண்ணீர் சூழ்ந்து, அன்னிச்சையாகவே என் கைகள் பூவனின் தோள்களைப் பற்றிக் கொண்டது. பூவனோ, ஒரு கையில் நீண்ட குச்சியும், மறு கையில் பெட்டி கொண்டு வந்திருந்த பைகள், அருவாள் இத்தியாதிகளைப் பிடித்துக் கொண்டே பாலன்ஸ் செய்தவாறு, குச்சியால் அவ்வப்பொழுது நீரின் ஆழமும், தட்டிச் செல்லும் பாறைகளின் இருப்பையும் உணர முயற்சிக்கும் வேலைப் பளுவிற்குமிடையே என் பளுவையும் ஏற்றிக் கொண்டான்.

என் உடல் எடை அங்கு ஒன்றுமே அற்ற நிலையில் ஒரு மீன் தூண்டிலில் இருக்கும் மிதவைத் தட்டையைப் போலவே என் கணமறிந்தேன், ஒரு காலைத் தூக்கி கீழிறக்கும் கணம் தோறும். அது ஒரு பத்து நிமிட கடப்பே எனினும் ஒவ்வொரு அடியும் நீரின் வேகத்தை விட எனது மனதை பயனிக்கவே வைக்கச் செய்தது. பூவனின் வெற்றுப் பாதங்கள் என் ஷு அணிந்த கால்களை விடவும் நிறையவே தரை உணர்ந்து வழி நடத்த உதவியிருக்கக் கூடும். ஏனெனில், நான் இரு இடங்களில் பாறைகளின் விளிம்பில் தட்டி நெஞ்சளவிற்கு நனைந்தே எழுந்தேன்... மறு கரையின் புற்களை தொட்டப் பொழுது அப் புற்கள் கூறியது என்னைப் போலவே பசுமையாக உன் நெஞ்சில் இந் நிகழ்வு பசுமையுற்று இருக்கட்டும் என்று ஆசிர்வதித்து ஏற்றுக் கொண்டதைப் போல உணரவைத்தது.



பி.கு: அன்று எனக்கு ட்ராக்கராக பணிபுரிந்த "பூவன்" என்ற நண்பன் கடவுளாக எழுந்தருளியது போய், பின் பொரு காலத்தில் நிஜமாக கடவுளாகிப் போனான் தனது 27 வயதில் வரகலியாற்றில், சிறுநீரகப் கோளாறுகளால். அவனுக்காக இந்தப் பதிவினை சமர்பிக்கின்றேன்.



Wednesday, July 25, 2007

ஏன் நமது மூதாதையர்கள் எழுந்து நின்றார்கள்!!

யாராவது இங்க இயற்கை நேசி'ன்னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தாரே எங்கே அவர்ன்னு தப்பித் தவறி தேடியிருந்தீர்கள்னா அவங்களுக்காக, மரத்திலிருந்து சீக்கிரமா இறங்கி வந்து இந்தப் பதிவப் போட்டுட்டு, நான் இன்னமும் சுவாசிச்சுட்டுத்தான் இருக்கேன்னு தெரிவிச்சுட்டு திரும்பவும் மரத்துக்கே போயிடுறேன்.

நேற்று அவசர அவசரமா மூச்சிறைக்க நம்ம சிவபாலன் இருக்கார் இல்லையா அவரு வந்து மரத்துக்கு கீழே நின்று, நேசி, நேசி இந்த மாதிரி 'தி ஹிந்து" பத்திரிகைல ஒரு செய்தி வந்துருக்கு பாத்தீங்களான்னு சுட்டியைக் கொடுத்தார். போயி பார்த்தேன். அதில நம்ம சிம்பன்சி அண்ணன் ஒருதருக்கு சுவாச சம்பந்தமா அளவீடு பண்ற கருவிகளை எல்லாம் மாட்டி விட்டு ட்ரெட் மில்லில் நடக்கிற மாதிரி ஒரு படத்தையும் போட்டு கொஞ்சமா எழுதியிருந்தார்கள்.

அதாவது ஏன் மனித மூதாதையர்கள் நான்கு கால்களில்(quadrupedal) நடந்து திரிந்ததை விட்டுவிட்டு எச் சூழல் அவர்களை இரண்டு கால்களைக் (bipedal) கொண்டு நடக்க உந்துவித்ததுன்னு ஓர் அராய்ச்சிக்கான படம் அந்த பத்திரிக்கைல இருந்துச்சு.

இதில பாருங்க ஆப்ஃரிக்கா சம வெளிகளில் நம் மூதாதையர்கள் தோன்றிய பொழுது சக வாலில்லா குரங்குகளிலிருந்து கொஞ்ச கொஞ்சமாகத்தான் மாற்றங்கள் புற அமைப்பில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஒன்றுதான் இந்த இரு கால்களில் எழுந்து நின்ற தகவமைப்பும்.

இது போன்று குமிந்து knucklewalk பண்ணும் பொழுது ஆரம்ப கால ஆராய்சிகளின் போது பொதுவாக நம்பப் பட்ட கருத்து எழுந்து நின்று நடப்பதின் மூலமாக உணவு தேடுவதற்கு நீண்ட தொலைவு போக முடியும் என்பதற்காகவும், நெருங்கி வரும் அபாயங்களிலிருந்து (பிற விலங்குகளின் மூலமாக) தப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாகவும் இந்த தகவமைப்பு உதவுவதின் பொருட்டாக இருக்கக் கூடும் என்று இருந்தது. இடுப்பு மற்றும், முழங்கால் எழும்புகளின் அமைப்பைக் கொண்டு மற்ற அவ்வாறு நடக்காத சமகால வாலில்லா குரங்களுடன் ஓப்பிடப்பட்டு தீர்மானிக்கப் பட்டது.

ஆனால், வாஷிங்டன் மட்டும் கலிஃபோர்னிய பல்கலை கழங்களில் நடத்தப் பட்ட ஓர் அன்மைய ஆராய்ச்சின் பேரில் புதிதாக ஒன்றும் தெரியவந்திருக்கிறது. அதாவது, இரண்டு கால்களில் எழுந்து நடந்ததின் மூலமாக "நிறைய கலோரிகள் சேமிப்பதற்கெனவும்" என்பதே அவ் ஆராய்ச்சின் கண்டுபிடிப்பு.

இதனை நான்கு கால்களில் நடக்கும் ஜீவராசிகளுக்கும், இரண்டு கால்களில் நடக்க வைக்கக் கூடிய சிம்பன்சிகளுக்கும் உள்ள சக்தி இழப்பை நம்மோடு தொடர்புப் படுத்தி பார்க்கும் பொழுது நாம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அதிக சக்தி சேமிப்பு பண்ணுகிறோமாம், இந்த இரு கால்களை கொண்டு நடப்பதின் மூலமாக.

உடம்பின் இடுப்புப் பகுதிக்கு மேலே பருமனாக இருப்பதை விட இந்த கால்கள் குச்சியாக இருப்பதும் இதன் பொருட்டுத்தானோ (சக்தி சேமிப்பதற்கெனவும், நடையை துரிதப் படுத்தவும்தானா, அப்ப) ???

Thursday, December 14, 2006

125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா?

பறக்கும் அணிலப் பத்தி ஒரு கட்டுரை எழுதணுமின்னு ரொம்ப நாட்களாக திட்டமிட்டிருந்தேன். ஆனா, பாருங்க, 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பே ஒரு பறக்கும் பாலூட்டி இருந்ததாக வந்த ஒரு செய்தியைப் படித்தவுடன் முதலில் ஒரு அறிமுகம் கொடுத்த மாதிரியா இருந்துட்டுப் போகட்டுமின்னு நம்ம அனுபவத்தைப் பத்தி பகிர்ந்துக்கிறதுக்கு முன்னாடி நான் படிச்ச கட்டுரை என்ன சொல்லுதுன்னு படிச்சிடலாம்.

நம்ம தென் இந்தியக் காடுகளில் இரண்டு விதமான பறக்கும் அணில்கள் இருக்கிறது. பெரிய பழுப்பு மற்றும் திருவாங்கூர் பறக்கும் அணில்கள் (Large Brown Flying Squirrel and Travancore Flying Squirrel). இதில இந்த பெரிய பறக்கும் அணிலை கொஞ்சம் சிரமம் பார்க்காம இரவு நேரங்களில் வனத்துனுள் அலைந்தால் எப்படியாவது பார்த்து விடலாம்.

சரி இவைகள் பறக்கின்றனவா என்று கேட்டால், இல்லை. இவைகள் பறப்பது கிடையாது ஒரு பெரிய மரத்திலிருந்து அதனை விட தனிவாக சற்றே உயரம் தாழ்ந்த மரத்திற்கு மிதந்து (gliding) செல்கிறது. பின்னங்காலிருந்து முன்னங்கால்களுடன் இணைக்கும் ஒரு சவ்வு போன்ற முடியுடன் கூடிய அமைப்பை பெற்றிருக்கிறது, அதற்கு patagium என்று பெயர். இதனைக் கொண்டு தனது வாலையும் ஒரு துடுப்பை போல செயலாற்ற வைத்து செல்லும் திசையை மாற்றி அமைக்க பயன் படுத்தி மிதந்து வருகிறது.

சரி அப்படி மிதந்து சென்று வருவதால் என்ன பயன் என்றால், அதிக தூரத்தை தனது எதிரிகளின் கைகளுக்கு அகப்படாமல் சென்று உணவு தேட முடிகிறது, தனது இனப் பெருக்க நேரத்தில் தனது நெருங்கிய சொந்தத்திக்குள்ளேயே இனப் பெருக்கம் (inbreeding) செய்யாமல் (மொத்தத்தில நம்ம மாதிரி இல்லாம), தன்னின மரபணுத்தன்மை விரித்துக் கொள்ள முடிகிறது.

இப்பொழுது செய்திக்குள் போவோம். நானும் நேற்றைய வரைக்கும் நமது பாலூட்டி இனமே தோன்றியது நமது மூஞ்சூரு (Shrew) வகை பூச்சியுண்ணிகளிடமிருந்துதான் என்று நம்பி வந்தேன். ஆனால், இப்பொழுது சைனாவில் விவசாயிகளால் கண்டெடுக்கப் பட்ட இந்த பறக்கும் (மிதக்கும்) பாலூட்டி ஜீவராசியைப் பற்றி அறிந்து கொண்டவுடன், இப்ப பழைய மூஞ்சூரு கோட்பாடு கேள்விக் குறியாக ஆகிப் போச்சு. இருந்தாலும் இப்ப கண்டெடுக்கப்பட்டுருக்கிற பாலூட்டி நவீன பறக்கும் அணிலுடன் கொஞ்சம் கூட ஒப்புமை இல்லையாம்.

இதுகள் டைனோசார்கள் இருந்த மீசோசோயிக் காலத்திலயே கடை பரப்ப ஆரம்பித்திருக்கின்றார்களாம். இதனை கண்டெடுத்த நாளில் இருந்தே, ஆராய்சியாளார்கள் பச்சத் தண்ணி பல்லுள படாம இந்த ஜந்துவை ஒரு தனி வரிசை பாலூட்டிகளின் இனத்தில் சேர்க்காமல் விடமாட்டோமின்னு விரதமிருக்கிறதா கேள்வி ;-)

பாருங்க, பாலூட்டிகளிலேயே நமக்கு தெரிஞ்சு ஒர் 51 மில்லியன் வருஷத்திற்கு முன்பு தான் முதல் பறக்கும் ஜீவராசி இருந்ததா தெரிஞ்சுக்கிட்டு இருந்தோம், இப்ப இவரு அந்த ரிகார்டை உடைச்சுட்டார்.

டைனோசார் இருந்த அதாவது ஊர்வன (Reptiles) காலத்தில மெதுவா வானத்தில எட்டி குதிக்கிற ஆசை வந்து முதல் ஊர்வன-பறப்பன இணைப்பாக இருந்தவர் ஆர்க்கியோப்டெரெக்ஸ் (Archaeopteryx) அப்படிங்கிறவர்தான், 145 மில்லியன் வருஷத்துக்கு முன்னே. இவர்தான் பறவைகளுக்கே பறக்கிறதுக்கு முன்னோடின்னு சொல்லலாம்.

இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இவரும் பறக்கல, மிதந்து செல்லும் வேலையைத்தான் செய்திருக்கிறார். இப்ப இருக்கிற பறவைகளின் இறக்கையைப் போல மேலே கீழேன்னு அடிச்சு பறக்க முடியாது இந்த முன்னோடி தாத்தாவுக்கு.

எனது அடுத்தப் பதிவில நம்மூரு பறக்கும் அணில்களை எப்படி மழைக்காடுகளில் பார்க்க முடியுங்கிறதெ ஒரு தனிப் பதிவா போட்டு நம்ம அனுபவத்தை உங்க கிட்ட பகிர்ந்துக்குவோம். அது வரைக்கும் இதப் படிச்சிட்டு மனசில வைச்சுக்கோங்க, சரியா.


பி.கு: இங்கு இந்த ஆர்க்கியோப்டெரெக்ஸ் பற்றி பேசியதால் கொஞ்சம் குழப்பமாக இருப்பதை போல தோணலாம். அப்படி, ஆர்க்கியைப் பற்றி இங்கு பேசியதற்குக் காரணம், டைனோசார்களின் சம காலத்தில் வாழ்ந்து வந்த பாலூட்டிகளில் எந்த விதமான பறக்கும் பாலூட்டிகள் இது வரையிலும் இருந்ததாக அறியப் படாமல் இருந்து வந்தது. இந்த கண்டெடுப்பின் மூலமாக அது அப்படியல்ல என்று தெரிய வருகிறது.

மேலும் இந்த கண்டெடுக்கப்பட்ட ஜீவராசி பாலூட்டியாக இருந்தாலும், இன்றைய சமகால உயிரினத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பதால் தனி வரிசைக் கிரமத்தில் ஒரு இனமாக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே பெயரும் இடப்படவில்லை.

Sunday, November 26, 2006

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II

இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...


எனது முந்தைய "நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I" என்ற பதிவின் நீளம் கருதி அதனை உடைத்து அதன் முடிவுப் பகுதியாக இந்த பதிவினை வழக்குகிறேன்.

இந்தப் பதிவில் மதங்களின் பங்களிப்பு இயற்கை பலாத்காரத்திற்கு எப்படி துணை போகிறது என்பதனை சற்றே உரசிச் செல்லலாம். இருப்பினும் எந்த ஒரு மதத்தினையும் விரல் நீட்டி அதுவே எல்லாவற்றிர்கும் காரணம் என்ற சொல்ல எத்தனிக்கவில்லை.

அப்படி ஒரு புறத் தோற்றத்தை வழங்கினால், அது படிப்பவரின் புரிந்துணர்வு சார்ந்ததே என்பதனை சொல்லிக் கொள்கிறேன்.

மதத்தை போதிக்கும் எந்தவொரு மதக் காவலர்களும் எப்பொழு எல்லாம் ஏதாவொரு கட்டுக்கடங்க இயற்கை சீரழிவு நடந்தேறுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்கள், கடவுளர்களின் நன் மதிப்பை காப்பாற்றும் அரண்களாக நின்று சாக்கு போக்கு சொல்வது யாவரும் அறிந்ததே. அதற்கான உண்மை காரணத்தை புறம் தள்ளி. இதுவரையிலும் அதுவே நடந்தும் வருகிறது.

ஆனால் எனது பார்வையில் கடவுளும் - இயற்கையும் வேறு வேறாக தோற்றமளிக்கவில்லை. இயற்கையே, நாம் தவறான ஒரு முடிவு எடுத்து அது அவ்வாறு முடிவுறும் பொழுது கண் கூடாக நம் முன் நின்று நம்மை பல் வேறு முறைகளில் தண்டித்தும் விடுகிறது. அல்லது அதற்கு மாறாக நல்லதொரு முடிவை எடுத்து இயற்கையை அரவணைத்து செல்லும் பொருட்டு நம்மை கட்டி அணைத்து மகிழ்விக்கச் செய்கிறது.

எனவே எனது பார்வையில் இவ் இயற்கைதான் நம் கூடவே வாழ்ந்து வரும் கடவுள். கடவுள் வேறு எங்கும் இல்லை.

இவ்வுலகில் வாழும் அத்துனை ஜீவராசிகளும் நாம் செய்கின்ற அடிப்படை விசயங்களையே அவைகளும் செய்து வருகின்றன - உண்ணுதல், இனப்பெருக்கம் செய்தல், உறங்குதல் பிறகு செத்து மடிதல். இதிலிருந்து நமக்கு மட்டும் என்ன விதி விலக்கு, சற்றே விலகி நின்று யோசிக்கும் பொருட்டு, நாமும் அதனையேத்தான் செய்து வருகிறோம், இல்லையா?

சரி விசயம் இப்படியாக இருக்க இந்த இயற்கை-கடவுள் ஏன் மனிதன் என்ற ஒரு விலங்கை மட்டும் சுய-சிந்தனை என்ற ஒர் பரிணாம வழியுனுடே செலுத்தி இங்கே நம்மை முன்னெருத்தி வைத்து பார்க்க வேண்டும்?

இந்த பல இயற்கை சார்ந்த பரிணாம கண் சிமிட்டலுக்கு முன்பு, நம்முடைய இருப்பு இந்த பூமியில் ஒரு விரல் செடுக்கை விட குறைவே என்று பார்க்கும் தருனத்தில் நமக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமே இந்த இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிலைக்கு நம்மை மீண்டும் கொணர்வதற்கு.

அங்கேதான் இந்த ஃப்ரீ வில் என்ற பரிணாம யுக்தியும் இயற்கை நமக்கு வழங்கி ஒரு பரிசோதனை ஓட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது நம்மிடையே.

எங்கோ இல்லாத கடவுள் வந்து இவ்வுலகை காப்பாற்றுவான் என்று கையில் உள்ள கடவுளை கண்ணை கட்டி ஏதோ நடத்துவது போல பலாத்காரங்கள் தொடர்ந்தால்... விளைவுகள் இப்படியாகத்தானே அரங்கேறும்.

நாம் பொறுப்பற்ற செயல்களால் கட்டுக்கடங்காத மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், மனித சந்தோஷங்களுக்காகவுந்தான் இந்த பூமி படைக்கப் பெற்றது என்ற மனோ நிலையில் விசயங்களை அணுகும் பொழுது கிடைப்பது என்னவாக இருக்கும்? ஒரே வீட்டையும் நரகமாக்கி கொள்வதைத் தவிற.

உதாரணமாக, உலக-சூடேற்றத்தினை எடுத்துக் கொள்வோம். பொறுப்பற்ற முறையில் பொருளாதார முன்னேற்றத்தினை மட்டுமே முன்னுருத்தி கார்களின் பெருக்கத்தை பெருக்கி வெளித் தள்ளுவதால் நடைமுறையில் நாம் சந்திக்கும் விளைவு வெப்பச்-சூடேற்றம் (இரண்டாம் பாகம்).

இந்த வெப்பமே கடல் நீர் சூடாவதற்கும் காரணியாகிறது, இந்த கடல் நீர் வெப்பமே வரும் சூறாவளிகளின் பசிக்கு தீனி போட்டு அதன் வேகத்தை இரட்டிப்பாக்கி நம்மை நோக்கி சுழன்று அடிக்க வைக்கிறது. இது போன்ற நேரடி விளைவுகளுக்கு நானும், நீங்களும்தான் காரணமா அல்லது எங்கோ இருக்கும் கடவுளா? எது?

இது போன்ற ஒரு அழிவு வரும் பொழுது இயற்கை சீற்றம் திசை பார்க்கிறதா, மதம் பார்க்கிறதா, ஏழை, பணக்கார நாடு பார்க்கிறதா? எதனையும் பார்பது கிடையாதுதானே. இவைகளனைத்தும் இயற்கையின் முன் சமமே.
இன்று "நாம் என்ற உணர்வுசார்ந்த நிலை (Collective Consciousness)"லிருந்து பல வேறு பட்ட காரணங்களால் மனித இனம் பிளவுப் பட்டு தூர விலகி நிற்பதுவும் கூட, இயற்கையின் மீது நாம் நடத்தும் ஒரு போரின் வெளிப்பாடே அன்றி வேறென்ன.

மதங்கள் இந்த இயற்கை சார்ந்த சீரழிவுகளை மட்டும்படுத்தும் பொறுப்புணர்ந்து, சாக்கு போக்கு ஆருதல் மக்களுக்கு சொல்லுவதை காட்டிலும், உண்மை காரணத்தை எடுத்துக் கூறி நம்முடன் விழித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயற்கை கடவுளை போற்றி, பேணி வாழ்தல் ஒன்றே நாம் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்பதனை எடுத்துயம்புமா?

நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?

நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I


இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...


நாம் "இயற்கை உணர்வுசார்ந்த நிலையிலிருந்து (Nature Consciousness)" தினமும் வெகு தொலைவில் நம்மை நிறுத்தல் கூறி அயாராது உழைத்துக் கொண்டு வருகிறோம். அதற்கான சான்றுகளாக, நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக பல்கிப் பெருகி வரும், கேலிக்கை சாதனங்கள்.

ரேடியோ, ட்டி.வி, கணினி, வால்க் மேன், சிடிமேன், ஐபாட் அப்புறம் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தால் வெளியில் வெயில் அடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா இல்லை எவனும் குண்டு போட்டு விட்டானா என்று கூட தெரியாத அளவிற்கு நம்மை மதி ம(ழு)யக்க வைக்கும், இயந்தரத்தனமான விளையாட்டுக்கள் வேடிக்கைகள்.

இவைகள் எல்லாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் என்ற (அவ)நம்பிக்கையிலேயே புதிது புதிதாக ஏதாவதொன்று சந்தைக்கு வர வைத்து கொண்டே இருக்கிறோம்.

இவைகளைனைத்தும், நம்மை இயற்கையிடமிருந்து வெகு தொலைவில் தொடர்பற்று இருக்க வழிகோணுவதால் நாமும் இயற்கை சார்ந்த உணர்வற்று மேலும் மேலும் தேவையற்ற தீங்குகளை இயற்கைக்கு கோப மூட்டுமளவிற்கு வழங்கிவிடுகிறோம்.

இது இப்படியாக இருக்க, நாம் சற்றே அடித்தளத்தில் நின்று உற்று நோக்கினால் உண்மை இப்படியாக எனக்குப் புலப்படுகிறது. நாம் இயற்கையை வெற்றி கொள்ளவே இது போன்ற செயல்களில் நம்மை ஆட்படுத்தி இயற்கையுடன் போரிட்டு வருகிறோம் என்பது தெரியவருகிறது.

இப் போரின் வெளிப்பாடுதான், அண்மைய காலத்து இயற்கை சீற்றங்களனைத்தும் சற்றே நின்று நிதானித்து பார்க்குமளவிற்கு. வருடந்தோறும் நம் துணைக்கண்டத்தில் பெறும் பருவ மழை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை துவம்ஷம் செய்யுமளவிற்கு மழை கொட்டித் தீர்க்கிறது, அல்லது மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. அங்கு மட்டும்தான அப்படியாயெனில், இல்லை. சற்றே நமது பார்வையை உலகமனைத்திற்கும் திருப்புவோம்.

இப்பொழுது நடந்தேறிய சுனாமிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்த மாபொரும் நில நடுக்கங்கள் அதனையொட்டிய உயிர் மற்றும் பொருட் சேதங்கள். வட அமெரிக்கா நாடுகளில் அதிகரித்து வரும் சூறாவளி, புயல்கள்.

இதில் காட்ரீனா என்றழைக்கப்படும் அண்மைய சூறாவளி அமெரிக்கா நாட்டையே இயற்கை சார்ந்த உணர்வுநிலைக்கு திருப்பி கொணர்ந்தது என்றால் அது மிகையாகது.

அந்த உணர்வு நிலை, முன்பெலாம் ஏதோ மூன்றாம் தர உலக நாடுகளுக்கு மட்டுமே சொந்தமென நினைந்து வந்த அப் மாபொரும் நாடு அந்த ஒரு புயலின் மூலமாக விழித்துக் கொண்டது. இயற்கை சீற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதனை பொருத்து.

நீங்கள் எல்லாம் முனகுவது எனக்குத் கேக்கிறது, சரி, நேசி, அப்ப இது போன்ற இயற்கை சீரழிவுகள் முன்பு நடந்தேறியதே கிடையாது என்றா சொல்லவருகிறீர்கள என்று. சற்றே பொறுமையாக இதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

அக் காலத்திலும் நடந்ததுதான். ஒரு முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இது போன்ற கடுமையான வறட்சியோ அல்லது தண்ணீர் தட்டுப்பாடோ நிலவியாதா? எனக்கு தெரிந்து இவ்வளவு மும்முரமாக பேசிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்றே கருதுகிறேன்.

அப்படியெனில் என்னதான் நடந்து போனது, அன்மைய காலத்தில் என்று சற்று பார்ப்போம்.

சதுப்பு நிலக் காடுகளும் இயற்கை சீற்றமும்:

சுனாமியின் தாக்கம் நாகை ஏரியாவில் மட்டும் சற்றே அதீதப் படியான உயிர் மற்றும் பொருட் சேதங்களுடன் நடந்தேறியதை நாம் அறிவோம் அல்லவா? அதனை கண்டிப்பாக அங்கே இயற்கையிலேயே அமைந்திருந்த சதுப்பு நிலக்காடுகளை அழிக்காமல் வைதிருந்தால், அது ஒரு அரணைப் போல செயல் பட்டு சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி கரைக்கு வந்து சேரும் பொழுது, அதன் தாக்கம் இன்று நாம் பார்த்த அளவிற்கு இருந்துதிருக்காது.

அதுபோலவே, வளர்ந்த நாடு என்று தாவிக் குதிக்கும் அமெரிக்காவில் மட்டும் இந்த இயற்கை வளங்கள் சூரையாடப் படாமலா இருக்கிறது என்றால் அங்கும் இதே கதைதான். அங்கும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியது, காட்ரீனா என்ற சூறாவளி.

அங்கும் இது போன்ற சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டதினால் அந்த சூறாவளியின் முழுவீச்சத்தையும் கரைபரப்பில் காண நேர்ந்தது. இன்னமும் ஒரு சுட்டரிக்கையின் மூலமாக தெரிந்த கொண்ட உண்மை ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு ஏக்கர் அளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதாக அது சொல்லவருகிறது.

சற்று சிந்தித்து பாருங்கள், இயற்கையே நமக்கு வழங்கியிருக்கும் அரண்களை விட்டொழிந்து விட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கடற்கரையோரம் மதிற்சுவர் கட்டுவது என்ன முட்டாள்தனமான அணுகுமுறை.

மக்கட் பெருக்கமும், அழிந்து வரும் பயிர் பன்முகத் தன்மையும், வனங்களும்:

1950-60களில் விவசாயத் துறையில் வந்த பசுமை புரட்சி என்கிற திட்டம் பின்னாலில் மெதுவாக தொழிற்புரட்சியாக மாறிப்போனது விவசாயத்துறையிலும், இயற்கை சார்ந்த உற்பத்தி திறனை பின்தள்ளி. இந்த புரட்சியின் காரணமாக 1950 லிருந்து 80களில், உணவு உற்பத்தி 250 சதவீதமாக உயர்ந்ததாம். சரி இப்படி நடந்து போனதில் என்ன நன்மை, தீமை என்று பார்ப்போம்.

பல்கிப் பெருகிக் கொண்டுவரும் இந்த மக்கட் தொகைக்கு பசியாற்றுகிறேன் என்ற பெயரில் இயற்கையிடமிருந்த அத்துனை செல்வங்களையும் பறித்துக் கொண்டு அவளது கருப்பையில் உள்ள சில முட்டைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றுனுள் நமது உடனடித்தேவைக்கென என்ன தேவையோ அதனை மட்டுமே கருத்தில் கொண்டு அவளின் கருப்பையை சூரையாடி, பணப் பயிர்களாக வெளிக்கொணர்ந்து, ரசாயனங்களை மட்டுமே நம்பியே அவைகளையும் பயிரிட்டு அந்த ரசாயனங்களையும் சேர்த்து உணவுப் பொருளாக மாற்றி நாமும் உண்டு, மற்ற உயினங்களுக்கும் ஊட்டி பார்க்காத வியாதிகள் எல்லாம் பார்த்து வருகிறோம் இன்னாலில்.

இந்த பணப் பயிர்கள் தானியங்களாக குறிப்பிட்ட வகை கோதுமை, அரிசி, சோளம் etc., போன்றவைகளாகவே பயிரடப்பட்டு ஏனையெ வகை அந்த ஊரின் சீதோஷ்ன நிலைக்கே உருவான தானியங்கள் துடைத்தெடுக்கப்பட்டு அத்துடன் சேர்த்து அதனை நம்பியிருந்த பூச்சி பட்டுக்களையும் அழித்து, இயற்கை உரங்களையும் பயன் படுத்த முடியாவண்ணம் எல்லாவற்றையும் இழந்து, மீண்டும் அழிவுப் பாதையில் இயற்கையை நடக்க வழிகோணுகிறோம், அத்துடன் இணைந்து வாழும் நம்மையும் அழித்துக் கொண்டுதான்.

மேற்கு மலைதொடர்கள், ஒரு காலத்தில் உள்ளே புக முடியா வண்ணமிருந்த அடர்ந்த காடுகள் இன்று ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்துகள் மூலைமுடுக்கெல்லாம் சென்று வர. அங்கிருந்த மழைக்காடுகள் நிறைய அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் என்ற ஒன்றை கொண்டுவந்ததின் விளைவு இன்று மழையத்துப் போய், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்றிருந்த சுற்று வட்டார ஊர்களும், மாநிலங்களும் ஏன் உலகம்தழுவிய என்று கூட கூறமுடியும் அதன் விளைவை சந்தித்து வருகிறது.

ஃபாசில் எரிபொருள் திருட்டும், இயற்கையின் பெருமூச்சும்:

இந்த ஃபாசில் எரிபொருட்கள் எங்கிருந்து வருகிறது? பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினுடே பயணித்து இன்று நமக்கு பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.

எனவே மீண்டும் ஞாபகத்தில் நிறுத்த வேண்டிய விசயம், இவைகள் தண்ணீரைப் போல் தோண்டத் தோண்ட ஊறி வருவது கிடையாது, ஏற்கெனவே அவ்வாறு இருப்பதை வெளியே கொண்டுவருகிறோம் அவ்வளவே.

ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து அடி தாவர பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்துருந்தால் நாம் இன்று அழித்து தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கும். நாளை இது போல் நம் சந்ததிக்கு கிடைக்க வாய்புண்டா? விட்டுவைத்திருக்கிறோமா ஏதாவது ஒன்றை?

இதனை வெளிக்கொணர்ந்து முறையற்று பயன்படுத்துவதின் மூலம், (ஒரு அமெரிக்கனுக்கு உணவளிக்க அவருக்குகென ஆகும் எரிபொருளின் செலவு 1600 லிட்டர் பெட்ரோலியமாம் ஒரு வருடத்திற்கு) நமது தலைக்குமேல் இருக்கும் குடையாம் ஒஷொன் திரையையும் கிழித்து மற்ற விளைவுகளையும் விலை கொடுத்தல்லவா வாங்குகிறோம்.

கடல் மாசுபாடு:

எங்குதான் நாம் விட்டுவைத்தோம், கடலுக்குள்ளும் சென்று அணுக் கழிவுகளையும், கொண்டு வந்த பொட்ரோலியம் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து அல்லது அவைகள் வேண்டுமென்றே கடலில் கலக்க வைத்து அங்குள்ள மழைக்காடுகளை போன்று என்றழைக்கப்படும் "பவளப் பாறைகளின்" அழிவிற்கும் ஏனைய கடல் விலங்குகளுக்கும் அழிவினையும், ஒரு சமச்சீரற்ற நிலையில் அந்த வளம் விழ அடிகோலிடுகிறேம்.

இயற்கையின் பதிலடி நமது சுரண்டல் போருக்கு:

இப்படி பல நிலைகளில் நமது போரை இயற்கைக்கு எதிராக நடத்தி வருகிறொம். எதனை மறந்து என்றால் நாம் இயற்கையின் அங்கம் தான், நமக்காக அல்ல இயற்கை என்பதனை முழுவதுமாக மறந்து போரடுவதின் விளைவு; இயற்கை பிரிதொரு நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள, carrying capacity என்ற சமன்பாட்டை பயன்படுத்த நேரிடுகிறது, உயிரனங்களுக்கு எதிராக.

எப்படி, ஒர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட எறும்பின் பெருக்கம் அதிகமுறும் பொழுது அதனை அதற்கெதிரான ஒரு விலங்கினத்திற்கான வளரும் வாய்ப்பை இயற்கையே உற்பத்தித்து அவ் எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.

இது போன்று நமக்கும் அன்மை காலங்களில் இயற்கை இந்த யுக்தியை பயன்படுத்த முற்படுகிறதோ என்று எனக்கு தோன்றச் செய்கிறது. எப்படியெனில்;

அதீதத்து வரும் கணக்கற்ற மக்களின் பெருக்கமும் அதனையொத்த கண்மூடித்தனமான இயற்கை சீரழிப்பும் ஒரு வகையில் இயற்கையே முன் வந்து நம்மை கண்டிப்பதாக உள்ளதுதானோ இந்த சூறாவளி பெருமூச்சுகளும், சுனாமிகளும், பூகம்பங்களும், உடல் வியாதிகளும், வெப்ப சூடேற்றமும் இன்ன பிறவும். யோசிக்கத்தான் வைக்கிறது.

இயற்கையுடனான உணர்வு சார்ந்த நிலை (Nature Consciousness) அற்றுப் போனதே இதற்கெலாம் தலையா காரணமோ?

எனது அடுத்த பதிவில் நம்ம மதக் கடவுளர்களும் இதற்கு எப்படி பொறுப்பாளி ஆகுகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.

இதோ எனது அடுத்தப் பதுவிற்கான சுட்டி: நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II

காட்டிற்குள் ஓர் முதலிரவு...!!!

இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...


இது ஒர் இயற்கை நேசியின் தயாரிப்பு:

எனக்கு இது வாழ்வின் ஒரு மறக்க முடியாத நாள். எதிர் பார்த்து, திட்டமிட்ட படி நடப்பதில் ஒண்ணும் சுவாரசியம் அவ்வளவாக கிடைக்கிறது இல்லை. ஆனா, இது போன்ற எதிர் பாராம நடக்கிற விசயங்கள் தான் மனசில ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி பிறகு அதனை வாழ்க்கை முழுக்கவுமே சுமந்து திரியற மாதிரி அமைச்சுடும் இல்லையா, அது இனிமையான அனுபவமா இருந்தாலும் சரி கசப்பானதாக இருந்தாலும் சரி.

ஆனா, எங்களுக்கு அன்று கிட்டியது ஒரு இனிமையான அனுபவம். இது நடந்தது, புல் மேடுகளில் (Grass Hills). இந்த இடம் டாப்சிலிப் (Top Slip) இருந்து ஒரு 12 லிருந்து 15 கிலோமீட்டர் தூரம், மேலே கீழேன்னு ஏறி இறங்கி நடந்து போன வரகலியார் (Varagaliar) அப்படின்னு ஒரு யானை முகாம் வரும். அங்கிருந்து நின்னு பார்த்த நம் முகத்துக்கு முன்னாடி மழைக்காடுகள் பச்சை கம்பளமாக விரிந்து ஒரு பெரிய, பாதி ஒன்றுமற்ற வழுக்கு பாறையாகவும், பாதி எலுமிச்சை புற்களும் (Lemon Grass) நிரம்பிய மலை ஒன்று எழுந்து நிற்கும்.

அந்த மலைக்கு பேரு, பெருங்குன்று. நல்ல சரிவான மலை. ஏறுவது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும், ஆனா, ஏறி உச்சத்தில நின்னு கீழே தெரியும் ஊர்காடுகளையும், வனத்தையும் பார்த்தால் அத்துனை சோர்வும் காணமல் போயி விடும்.

சரி, அன்னிக்கு நாங்க ஒரு ஆறு பேருங்க, டாப்சிலிப்பிலிருந்து கொஞ்சம் மளிகை சாமான்கள், மெழுகுவர்த்தி எல்லாம் வாங்கிக் கொண்டு வரகலியார் செல்வதாக திட்டம். வரகலியார், போற வழியில கோழிகமுத்தின்னு (அப்படின்னா என்ன பொருள்னு கேக்காதீங்க, தெரியாது) ஒர் இடம், அங்கே ஒரு யானை முகாம் கூட இருக்கு. அங்க நிறைய சுற்றுலா பயணிகள் வந்து போவதைக் காணாலாம்.

ஏன்னா, நிறைய காட்டெருமை (Indian Bison) பார்க்கலாம் அப்படின்னு, ஆனா, ஒண்ணு தெரிஞ்சிக்கிறது இல்லை, அருதப் பழசான எட்டூருக்கு சத்தம் கேக்கிறமாதிரி வண்டிகளை எல்லாம் எடுத்துட்டு வந்து மிருகங்களை துரத்தி தூரத்தில் நிறுத்தி விடுறாங்க அவுங்களே அப்படிங்கிறத.

நம்ம கதைக்கு போவோம். அந்த கோழிகமுத்தி யானை முகாமில நாங்க உக்காருவதில்ல, அதனையும் தாண்டி ஒரு சின்ன ஆறு ஓடுற இடமா பார்த்துத் தான் உட்கார்ந்து, ஏதாவது கொஞ்சம் கடிச்சிகிட்டு, குடிச்சிக்கிடுவோம். இப்ப உட்கார்ந்துகிட்டு இருக்கும் போதே, யாரெல்லாம் என் கூட இருக்காங்க அப்படிங்கிறத பார்த்திடுவோம்.

ஆறு பேருன்னு சொன்னேன் இல்லீய. அதில் எங்களோட குருஷி ஒர் பி.ஹெச்டி கைடு. இவரு காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில டாக்டரேட் வாங்கினவர், நம்ம மேற்கு மலைத்தொடர்களில் வாழும் சிங்கவால் குரங்குகளின் (Lion tailed macaque) மேல் ஆராய்ச்சி செய்து. இவர் கிட்டே இருந்து, எனக்கு வாழ்க்கையை பத்தின பிரக்ஞை நிறைய கிடைச்சுதுங்க.

ஒரு சராசரி இந்திய ஆண் மகனுக்கு இருக்கும் இயல்பிலிருந்து, கொஞ்சம் விலகி வாழ்வின் சூட்சுமங்களை உணர்ந்து, மேற்கத்திய தொடுதலுடன் இந்திய முறையில் எப்படி குடும்பம் சந்தோஷமாக நடத்துவது என்பதனைப் பொருட்டு, சொல்லாமல் வாழ்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவர் கையால் சமைத்து நாங்கள் நிறைய சாப்பிட்டிருக்கிறோம். ஒரு நல்ல நண்பனுக்கு நண்பனாகவும், ஆசிரியனுக்கு ஆசிரியாராகவும் இருந்து வருகிறார். இன்றும்.

அடுத்தது, நம்ம வரகலியார் யானை முகாமில் வாழும் பண்மையாளன், பெயர் எழுதப்படுவதற்காக மாற்றப்பட்டு வேல் முருகன் என்று வைத்துக்கொள்ளுவோம். முருகன் எனக்கு, என்னுடைய பி.ஹெச்டி குரு எப்படியோ அப்படியே இவரும், இன்னொரு வகையில். நேற்று விட்டுவிட்டு வந்த ஒரு படிப்பிற்கான குரங்கு கூட்டத்தை மறுநாள் எங்கு, எத்தனை மணிக்கு சென்றால் பிடிக்கலாம் என்பதிலிருந்து - நடந்து போகும் வழியில் காட்டு யானைகள் நடந்து போயிருக்கிறதா இல்லையா என்பது வரைக்கும் காட்டிற்குள் எல்லாமே அத்துப் படியாக வைத்திருப்பார்.

அதற்கெல்லாம் மேலாக, சார் என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. இவரிடமிருந்தும் நிறைய பணிவு சார்ந்த வாழ்வியல் சூட்சுமங்களை கற்றுக் கொண்டேன். அவன் ஒரு மடையன் என்று தெரிந்தும் எப்படி அவனுக்கு வேண்டியதை கொடுத்து, மடையனை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற மனோத்துவம் முருகனுக்கு அத்துப்படி ;).

சரி, மீதம் உள்ள நான்கு பேர்களும் ஆராய்ச்சி மாணக்கர்கள் என்னையும் சேர்த்து. இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.

அன்று வரகலியார் வந்து சேர்ந்தவுடன், அன்றிரவு பால் வீதியில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை அள்ளிப் பருகிக் கொண்டே (இது எங்களுக்கு ஒரு வாடிக்கை), முகாம் தீ போட்டுக் கொண்டு எங்களது குருவின் அனுபவங்களை கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது, முருகன் அலும்னிய தட்டுக்கள், பாத்திரங்கள் சகிதமாய் தனது மகளுடன் பருப்பு சாம்பாரும், சோறும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இருக்கும் உடம்பு அயர்ச்சியில் எது கொடுத்தாலும் அது அமிர்தமே அங்கு. அதிலும், முகாமில் இருப்பவர்களின் கைவண்ணத்தில் சமைத்ததை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் சமையல் வேறு எங்குமே காண முடியாத சுவையில் அமைந்திருக்கும் :).

மறுநாளும் வந்தது. அன்று மிதமான குளிருடன், நல்ல மிஸ்டியான நாள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மலைகாடுகளுனுடே நடந்து பெருங்குன்று ஏறுவதாக திட்டமிட்டோம். அதன் படி ஒரு நான்கு நாட்கள் அங்கிருந்து விட்டு, திரும்ப வருவதாகவும் திட்டமிடப் பட்டது. அதற்கென தேவையான, ஸ்லிப்பிங் பேக், மெழுகுவர்த்தி, அரிசி, கருவாடு, உருளைக் கிழங்கு அப்புறம் ஓல்டு மாங்க் (அட அது இல்லாமலா :-) எல்லாம் அள்ளிக் கொண்டு. நடுங்கும் குளிரில், தரிசனம் தரும் அத்துனை மிருகங்களையும் தரிசித்துக் கொண்டே பெருங்குன்றின் அடிவாரத்தை அடைந்தாகிவிட்டது.

பெருங்குன்றின் உயரம் 1850 மீட்டர்கள் கடல் மட்டத்திற்கு மேல். ஆனால் அந்த உயரத்தின் உச்சியை அடைவதற்கு நடந்து செல்லும் பாதைதான் அலாதியான சுகம். நெஞ்சு தரையை தொட ஒரு இரண்டு அடி இடைவெளிதான் இருக்கும், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் சரிவை.

நின்று நின்று பறவைகள், தவளைகள் பார்த்து நேரமாகிப் போனதால், காட்டிற்குள்ளேயே பாத்திரத்தை வைத்து கஞ்சி காச்சி, கருவாடு நெருப்பில் சுட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. எப்படியோ, மாலை நேர வாக்கில், மலையின் மீது இருக்கும் குடிலுக்கு சென்றடைந்தோம். அந்த குடில் கட்டப் பட்டது வெள்ளைக்காரன் காலத்தில், கோடையை குளு குளுன்னு கொண்டாட போல.

அங்க போயிட்டா அது தாங்க புல் மேடுகள் (Grass Hills). சும்மா, கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும், உதறிப் போட்ட வெளிர் நிற பச்சை ஜமுக்காளம் போல மேடும் பள்ளமுமாக இருக்கும். நாங்க போன சமயம் பார்த்து குறிஞ்சிப் பூ பூத்திருந்தது. ரொம்ப லக்கிங்க நாங்க. அப்பப்பா, எவ்ளோ அழகு!

ஹும், அன்று இரவு கொஞ்சம் ஓல்ட் மாங்க நாக்கில் தடவிக் கொண்டு வந்த கலைப்பு தெரியாமல், ஒரு 11 மணி வாக்கில் கிடைத்த இடத்தில் சுருண்டாச்சு. மறுநாள் காலையும் புலர்ந்தது, இன்னும் அடர்த்தியான மிஸ்ட்டும், குளிருடனும். எங்கோ இன்னொரு உலகத்தில் இருப்பதை போல ஒரு உணர்வு, இருக்காதா பின்னே. எம்புட்டுத் தூரம் இந்த நாகரிக கோமாளிகளை விட்டு விட்டு, இப்படி அந்ரான காட்டுக்குள்ள வந்து இருக்கோம். ஏதாவது ஒண்ணுன்ன, தன் காலே தனக்கு உதவி இங்கெல்லாம்.

பிறகு ஒரு பதினோரு மணிக்கெல்லாம் மிஸ்ட் கொஞ்சம் மட்டுப்பட்டு, இடங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. வந்தது, நம்ம குருஷிக்கு ஓர் ஐடியா, வரைபடத்தை எடுத்து விரித்தார் எங்கள் முன்னால், இங்கிருந்து மூணாறு (Munnar) எங்கிருக்கிறது என்பதனை சுட்டிக் காமித்து விட்டு, நாம் இன்று அங்குதான் செல்லப் போகிறோம். இப்பொழுது கிளம்பினால் இன்று மாலைக்குள் அங்கு சென்று விடலாமென்று யூகித்து, கையில் இருக்கும் காம்பஸ்-சை நம்பி. போகலாமென்று எலோரும் ஒரு மனதாக ஒத்துக் கொண்டோம். எனக்கு மட்டும், நாளைக்கு போகலாமே என்று உள்ளுக்குள் ஒரு நப்பாசை.

முருகன், ஒரு அலும்னிய பானை, இரண்டுத் தட்டுக்கள், முன்று டம்ளர் அரிசி, கொஞ்சம் கருவாடு, ரெண்டு உருளைக் கிழங்குகள், மட்டும் எடுத்துக் கொண்டார். அதான் நாளைக்கு திரும்ப வந்துடுவோம்லன்னு நினைச்சுக்கிட்டு.

வழியெங்கும் குறிஞ்சி மலர்களை செடிகளோடு பார்த்துக் கொண்டே, புல் வெளி பறவைகளையும், ஓர் இடத்தில் நீலகிரிமலை ஆடு (Nilgiri Tahr) பார்க்கக் கூடிய வாய்ப்புடன் சென்று கொண்டே இருந்தோம். பிறகு ஒரு இரண்டரை மணி வாக்கில் கட்டன் காபி குடிக்கலாமென நினைத்தோம். முருகன், மல மலவென்று கொண்டுவந்ததை இறக்கி வைத்துவிட்டு, ஒரு சின்ன பாறைச் சந்தில் பாத்திரம் உட்காரும் படியாக இடத்தை தேர்வு செய்து தீ போட விறகு குச்சிகளுக்கு அலைந்ததை கவனித்து நானும் கொஞ்சம் உதவி செய்யப் போய், என் அறை மாணக்கன், ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்து, குருஷிக்கு தூபம் போடும் விதமாக, நீயும் ஒரு அஸிஸ்டெண்ட் ஆகிவிட்டாயா என விளித்தார். எல்லோரும் சிரித்தார்கள்... பாடம் எண் 10000023 ;).

அந்த சிரிப்பின் விலை என்ன என்பதனை பின்னால் பார்க்கலாம். மீண்டும் கதைக்கு போகலாம். கட்டன் காபியும் சில பிரட் துண்டுகளும் சாப்பிட்டு விட்டு, ஒரு அரை மணி நேரம் நடந்திருப்போம், எதிர்த்தார்ப் போல ஒரு பெரிய பள்ளத்தாக்கு இறங்கி நடக்க முடியாத வாக்கில் சரிந்து கிடந்தது எங்களின் முன்னால்.

ஆனால், அருகிலேயே ஒரு பசுஞ் சோலை (Shola) இருந்தது. இந்த புல் மேடுகளில் இருக்கும் சோலைகளுக்கும் (Grass Land Sholas) அதனை விட கொஞ்சம் குறைந்த உயரத்தில் இருக்கும் சோலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புல் மேடுகளில் அடிக்கும் காற்று மற்றும் திசை, கொட்டும் மழையளவு, மலையின் உயரம் இவைகளைக் கொண்டு அங்கு வளரும் தாவரங்களின் உயரம், அதன் இலையமைப்பு, பூ, காய்காக்கும் விதம் இவையெல்லாமே வித்தியாசமாக இருக்கும். ரொம்ப அடர்வாக, மரங்கள் குள்ளமாகவும் இருக்கும்.

ஏற்கெனவே, மேகம் திரண்டு மிஸ்டியான சூழலில் சிறிது மழைத் தூரவும் செய்திருந்தது. இந்த நிலையில், வெளிச்சம் மங்க ஆரம்பித்து , பள்ளத்தாக்கின் மேற்புறமாக அதி வேக காற்றை உணர முடிந்தது. அதன் விளிம்பில் நின்று பார்க்கும் பொழுது தூரத்தில் தெரியும் மூணாறு ட்டீ எஸ்டேட்டின் ஃபாக்டரியின் அஸ்பெடாஸ் கூரை அங்கு அடிக்கும் வெயிலில் தகதகத்தது. அதுதான் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு. முடியுமா இன்றைக்கு.

வேறு வழியில்லாமல் அந்த குறைந்த அளவே நம்பகத் தன்மையுடைய திசைகாட்டியை நம்பி அந்த அடர்ந்த சோலைக்குள் இறங்கி விட்டோம். இப்பொழுது மழையும் சற்று கனத்திருந்தது. மழைக்காட்டிற்குள் எப்பொழுதுமே பூமி சற்று ஈரப்பசையுடந்தான் இருக்கும், அதிலும் புதிதாக அண்மையில் மழை பெய்திருந்தால் சறுக்கி விழுவதற்கு சொல்லவே வேண்டியதில்லை.

புதியவர்கள் அந்த ட்ரிக்கை கற்றுக் கொள்ளும் வரைக்கும், கொஞ்சம் கஷ்டம்தான் காட்டினுள் காணக் கூடிய விலங்குகளை அவைகள் நம்மை காண்பதற்கு முன்பு நாம் அவைகளை காண்பது ;-).

சோலைக்குள் அந்த நெலைமைதான் இப்பொழுது. நிறைய அட்டைகள் (Leeches) வெளி வர ஆரம்பித்து விட்டன, காலை வைத்து எடுக்குமிடமெங்கிலும் இரண்டு மூன்று தலையை தூக்கி நாட்டியமாடியபடி தனது பசியை தீர்த்துக் கொள்ள தயாராக இருந்தது. உங்களுக்கு தெரியுமா? அட்டைகள் கடிப்பதற்கு முன்பு ஹிருடின் என்ற சுரப்பை கடிக்கும் வாயிலில் சொலுத்தி விடுவதால் நமக்கு கடிக்கப்பெறுகிறோம் என்ற பிரஞ்கையும் அற்று, அவருக்கு இரத்தமும் தடையில்லாமல் சப்ளை ஆகிக் கொண்டிருக்க அந்த சுரப்பு பயன்படுகிறது. அந்த அட்டையும் இரத்தத்தை தன் வயிறு வெடிக்கும் மட்டும் அருந்தி விட்டு, தானாக விழுந்த பின்னும் இரத்தம் வழிவது நிற்க 5லிருந்து 10 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ளும்.

மீண்டும் விசயத்திற்கு போவோம். அந்த அட்டைகளுக்கு பயந்தும், மேலும் மேலும் வெளிச்சம் மங்கி இருண்டு கொண்டே சென்றதால் இதற்கு மேலும் எந்த திசையில் செல்கிறொம் என்பதனை அறியாது, நடப்பதது உசிதமல்ல என்பதனை கொண்டு வெளியில் வந்துவிடுவது என்று முடிவு கட்டினோம். ஏனெனில், திசைகாட்டி காட்டும் திசையில் சென்று நடக்கும் பொழுது சரிவு மிக மோசமாக நடக்க முடியாத பட்சமாக இருக்கும் பட்சத்தில், திசையை மாற்றி நடக்க வேண்டி வரும், அவ்வாறு அடிக்கடி மாற்றி மாற்றி சுத்தி நடக்கும் பொழுது நேரமும் விரயமாகி, காணமல் போகவும் சாத்தியமுண்டு.

எனவே, வெளியே வந்து விட்டோம். மணியைப் பார்த்தால் மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் தூரலாக மாறி இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த சோலை ஓரத்திலேயே பெரிய பாறை ஒன்றை கண்டோம். அருகிலேயே ஒரு மரமும் கூட, சிறு தூரலிருந்து தப்பித்துக் கொள்ள. பாறையான பகுதி அட்டைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஏனைய மிருகங்களின் அண்மையினை அறிந்து கொள்ளவும்.

இப்பொழுது, தெரிந்து விட்டது. இரவு இங்குதான் கழியப் போகிறது எங்களுக்கென்று. இன்னும் அந்த அரிசியும் ஏனைய பொருட்களும் கைவசம் இருக்கிறது. ஓல்ட் மாங்க்தான் மிஸ்ஸிங். ஒரு உரச் சாக்கும் கைவசம், அது முருகனின் அவசர குடையாக அவாதாரமெடுத்துக் கொள்ளும் அவ்வப்பொழுது. இப்பொழுது அந்த உரச் சாக்கும், எங்களது இரண்டு பேரின் மழை கோட்டும் எங்களுக்கு கேம்பிங்க் கூரையாக ஆகிப் போனது.

முதலில் என்னைப் பார்த்து சிரித்தார்களே ஞாபகம் இருக்கிறதா, காப்பி போடும் பொழுது, சுள்ளி பொருக்குவதில் உதவினேன் முருகனுக்கென்று? இப்பொழுது சுள்ளி கதைக்கு உதாவாது. எரிக்கக் கூடிய வகையில் உள்ள மரக் கிளைகள் வேண்டும். அதுவும் ஒரு பணிரெண்டு மணி நேரத்திற்கு எரிக்கப் படும் விதமாக.

அப்படியானால், எல்லோரும் எழுந்து சென்று முழுதுமாக இருட்டுவதற்கு முன்பு பொருக்கி சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. முருகனுக்கு, கவலைப் படர்ந்த சந்தோஷம், சில மடையன்கள் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து தனக்கு உதவுவதை பார்த்து ;).

ஒரு வழியாக கிடைத்தது. தண்ணீர், தண்ணீருக்கு என்ன பண்ணுவது? அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் பிளவிலிருந்து ஒரு நீண்ட புல்லின் நுனியின் வழியே வடிந்த சொட்டு நீரை, கால் கடுக்க நின்று அரை பாத்திரம் நிரப்பி எடுத்து வந்தோம். சமைப்பதற்கு அது உதவியது. கேம்ப் தீயும் போட்டாகிவிட்டது. நமது கருவாட்டு ப்ரியர் - குருஷிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அடடா, பசங்களுக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம் கிடைச்சுக்கிட்டு இருக்குங்கிறத நினைக்கும் பொழுது.

ஆனா, குளிருதே என்ன பண்ணுவது. இருந்த ஒரு நண்பியையும் நேரமாக நேரமாக ஒரு வட இந்திய நணபர் தனது கூட்டுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். நானெல்லாம் ஒரு ட்யூப் லைட் அப்ப (அந்த காலத்தில...:-)) . சரி அது போகட்டும், அந்த இரவு, சுழற்சி அடிப்படையில் ஒருவர் மாத்தி ஒருவர் கண் விழித்திருந்து (காவலுக்காக), தூங்கி வழிஞ்சு கொண்டே, அந்த மிஸ்ட், அந்த தூரல், அந்த த்ரில் அப்படின்னு ஒரு கலந்த கலைவயா கழிந்தது.

விடிந்ததும் சில காட்டெருமைகள் அருகில் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். பார்த்ததும் எங்களுக்கு தெரிந்த சங்கோதப் பாஷையில் ஒருவருக்கு ஒருவர் தலையாட்டிக் கொண்டு, சாமீ திரும்ப குடிலுக்கு நடையைக் கட்டுவொமென்று, குருஷியை மல்லுக்கட்டி திரும்ப அழைத்தோம். மீண்டும் மழையில் நனைந்த குறிஞ்சு பூக்களினுடே நடந்து மதியம் போல குடில் வந்த்தடைந்தோம்.

அந்த இரவு எல்லா இரவுகளை விடவும், ஒரு சிறந்த இரவு எனக்கு. இப்ப வுடு ச்சூட்... நீங்க என்னா இரவுன்னு நினைச்சுக்கிட்டு படீச்சீங்க இதுவரைக்கும்;-))

இதற்கு முன்னால் எழுதப்பட்ட டாப் ஸ்லிப் தொடர்பான பதிவுகள்:

காதலிக்க நேரமில்லை...!

அபூர்வக் காதல் : சிம்பயொசிஸ்

பிள்ளையார சந்திச்சப்பா: யானை விரட்டு..!

Friday, November 24, 2006

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Image Hosted by ImageShack.us
இந்த பவளப் பாறைகளை (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை என்னையும் சேர்த்துத்தான். ஏனெனில், இவைகள் கடலுனுள் வாழ்கின்றன. பெரும்பாழும் இவைகள் வசிக்கும் பகுதி பூமத்திய ரோகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளில். அதிகமாக சொல்லப் போனால் பசிபிக் மகா சமுத்திரத்தில் என்று கூறலாம். நம்மூரில், அந்தமான் தீவுகளிலும், லக்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் காணலாம்.

அய்யோ! இவன் சொந்தரவு தாங்கலையே. போட்டுக் கொல்லப் போறனேன்னு, அழுக ஆரம்பிச்சுட்டீங்களா, மக்களே! இவனுங்கள பத்தி நாம எல்லோரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும். நான் இங்க, தேவையில்லாத விசயத்தை எடுத்திட்டு வாரது இல்லைன்னு ஒரு மிகப் பெரிய சபதமே எடுத்துருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இந்த பவளப் பாறைகளை பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியமா படுது எனக்கு.

Image Hosted by ImageShack.usபவளப் பாறைகளை நாம் அக்குவாரியங்களில் (Aquariuam) பார்த்திருக்கலாம். இவைகளுக்கெனவே, அங்கு தனி காட்சித் தொட்டிகள் அமைத்திருப்பார்கள். ஒரு முறைப் பார்த்தால் நம் கண்களை விட்டு அகலாமல் இருக்கக் கூடிய பல வண்ன நிறங்களில் பாறையை ஒத்த அமைப்புடன் பல வடிவங்களில் காணலாம் இவைகளை.

அத்தோட, இந்தப் பவளப் பாறைகள் உண்மையிலேயே ஒரு பிராணியா, இல்லை தாவரமா இல்லை அதுவுமில்லை இதுவுமில்லை பல தாதுப் பொருட்களாலான மட்டியா என்று கூட எண்ணத் தோண்டும். அப்படி நம் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு கொள்ளை அழகுடனும், செயற்கைத்தனமாக செய்து வைக்கப் பட்டதைப் போன்ற பிரமையையும் ஏற்படுத்தி விடும்.

Image Hosted by ImageShack.usசரி இவைகள் தான் என்ன? இவைகள் ஒரு பிராணியே! கடலினுள் ஒரு மழைக்காடுகள் என்று அழைக்கப் படுவதற்குக் காரணம் - "மழைக்காடுகள்" இயற்கையாகவே உயிர்-பன்முகத்தன்மைக்கு பெயர் போனது. உலகத்தின் அதிகப் படியான தாவர வகைகளும், விலங்குகளும், மற்ற சிறு ஜீவராசிகளும் அக் காடுகளில்தான் அதிகம் வசிக்கிறது.

Image Hosted by ImageShack.usஅது போலவே, இந்த பவளப் பாறைகளை சுத்தி நிறைய வகை மீன் இனங்களும், மற்ற சிறு கடல் வாழ் ஜீவராசிகளும் தனது பாதுகாப்பிற்கெனவும், உணவுத் தேடலுக்கெனவும் இந்த சூழ் நிலையை சார்ந்து வாழ பழகிக் கொண்டது பரிணாமத்னுடையே.

அது மட்டுமல்லாமல் இந்த பவளப் பாறைகள் சுற்றுச் சூழலுக்கு மற்றொரு வகையிலும் பெரும் பங்கு ஆற்றுகிறது. அது, ஒரு தீவின் அமைப்பும், அதன் சீதோஷ்ன நிலையையும் கூட இந்த பவளப் பாறைகளின் கட்டமைப்பும், எண்ணிக்கையையும் (கூட்டமைப்பும்) பொறுத்தே கூட அமைகிறதாம். அப்படியெனில், இந்த ஜீவராசிகளின் முக்கியத்துவம் சொல்லித் தெரிவதற்கில்லை, இல்லையா?

இந்த பவளப் பாறைகள் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச ஜெல்லி மீன் இருக்கில்ல அந்த வகையை சார்ந்த பேரினமான Cnidaria இனத்தை சேந்ததுகள் தானாம். என்னய்யா, இப்படிச் சொல்லிப் புட்ட ஜெல்லி மீன்களின் வகைதான் இந்தப் பவளப் பாறைகள்னு நின்னைக்கிறீங்களா. அப்படி நினைச்சீங்கன்னா இந்தாங்க இதனையும் பிடிங்க...

இதுகளும் இனப் பெருக்க காலத்தில் உயிரணுவையும், சினை முட்டையையும் தண்ணீரில் விட்டு விடுகின்றன. இந்த ரெண்டும் சந்திச்சுக்கிட்டப்ப டச்சிங் டச்சிங் ஆகி கருவாகி, பிறகு லார்வாவாகிறாய்ங்களாம் இதுக்கு பிளானுலான்னு (Planula) பேராம்.

Image Hosted by ImageShack.usபிறந்து விழுந்தவுடன் பார்த்தாக்க எல்லா பேபிகளும் பார்க்கிறதுக்கு பூமாதிரி பல விரல்களுடன் ஜெல்லி மீன் போன்ற தோற்றத்துடன் ஆடி, அசைஞ்சு, மிதந்து திரியுதுங்களாம், பிறகு நாட்பட நாட்பட ஒரே இடத்தில அசையாம இருக்கிற மாதிரி ஒரு இடத்த தேர்வு செஞ்சுகிட்டு செட்டில் ஆகிடுதுகளாம். அந்த மாதிரி இடம் ஏற்கெனவே கூட்டமா தன் இனத்தை சேர்ந்த ஆட்கள் இருக்கிற இடமாகக் கூட இருக்கலாமாம்.

அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமா தன்னைச் சுத்தி ஒரு ஓடு கட்டிக்கிடுதுகள். அது எப்படிய்யா நேசி, சாத்தியம் அப்படின்னா, இருங்க அந்த டெக்னிக்கல் பகுதியையும் சொல்லிப் புடுறேன். தண்ணீரில் கரைந்துள்ள கரியமிலா வாயுவையும் (C02)) கால்சியத்தையும் (Ca) கிரகித்து அதனை கால்சியம் கார்பனேட் (CaCo3) ஆக மாற்றி கெட்டியான ஒரு சுண்ணாம்பு மட்டி மாதிரி ஆக்கி புடுதுகள் இந்த சமர்த்துகள் தனது வீடாக.

இது பார்க்கிறதுக்கு ஒரு சின்ன பூஞ் ஜாடி மாதிரியோ, மான் கொம்பு மாதிரியோ (ஓன்றின் மேல் மற்றொன்று அடுக்கடுக்காக கட்டுவதால்) அல்லது பல் வேறு வண்ண மற்றும் அமைப்புகளில் காணப் பெறலாம். அந்த மாதிரி அவ அவன் வீட்டுக்குள்ள அவன் அவனும் இருப்பாய்ங்க தான் சாவுற வரைக்கும்.

இப்படித் தனித்தனியா வூடு கட்டி இருந்தாலும், ஒரே இடத்தில கூட்டமா கட்ட ஆரம்பிச்சு அதுவே மிகப் பிரமாண்டமா அமையப் போய் பார்க்கிறதுக்கு, மலை முகடுகள் மாதிரியும், குகைகளோடவும் இருக்கிறதினால மற்ற கடல் ஜீவராசிகளுக்கு இதுவும் ஒரு புகலிடமா அமைஞ்சுடறது போல. அதினாலேதான் பவளப்'பாறைகள் அப்படின்னு பெயர்க் காரணம் போல.

இதோட பிரமாண்ட கட்டமைப்பைப் பற்றி தெரிஞ்சுக்கிடணுமின்னா, இப்ப எல்லோருக்கும் தெரிஞ்ச நம்ம டைடானிக் கப்பல் இருக்கில்ல அது மேல கூடி இவனுங்க குடும்பம் நடத்த ஆரம்பிச்சானுங்கன்னு வைச்சுக்கோங்க, அதோட சைஸ்க்கு சந்து பொந்தெல்லாம் வலைச்சு வலைச்சு பல நிறங்களில், பல அமைப்புகளில்னு கட்டினா எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க...

இவிங்களும் இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் கோஷ்டிதான். இரவில் தன் வீட்டு வாயிலின் அருகே அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டு வரப் போற பிளாங்டான்களை சாப்பிட்டுகிடுவாய்ங்களாம். இதிலென்ன நமக்கும் அதுகளுக்கும் ஒரு வித்தியாசமின்னா, நம்மூரில் இன்னும் சில பேர் பகல் நேரத்திலேயே இப்படி உட்கார்ந்து கொண்டே ஊர அடிச்சி உலையில் போட்டு உயிர் வாழுங்க அதுதான்.

ஏற்கெனவே சொன்னேன் இல்லையா, நீரில் கலந்துள்ள கரியமிலா வாயுவைக் கொண்டு ஓடுகள் தயார் பண்ணுகின்றனன்னு; அப்படிங்கும் பொழுது, இந்த கடல் வாழ் ஜீவராசிகளனைத்தும் தண்ணீரில் கரைந்துள்ள பிராணவாயுவை உட் கொண்டு, கரியமிலா வாயுவாக வெளித் தள்ளும் பட்சத்தில், அதில் ஒருத்தர் இந்த கரியமிலா வாயுவை பயன் படுத்தி நீரில் சமநிலைப் படுத்துவது எவ்ளோ அவசியம் பார்த்தீங்களா. அடிச்சேன் சிக்ஸர் இப்போ... :-) இன்னொரு சிக்சரும் அடிசுடறேன் கையோட, கடல் பொங்கி வரும் பட்சத்தில் பெரும் அலைகள் கிளம்பினால் அது பேரலைகளாக கரைக்கு வந்து சேரமல் அடக்கி வாசிக்க வைக்கும் ஒரு சுவர் போலவும் வேலை செய்தாங்கோ...

ஆனா, பாருங்க மக்கா இந்த பவளப் பாறைகளின் மேல் நம்மால் கொண்ட அதீதக் காதல் இதன் நிறத்திர்கெனவும், அமைப்பிற்குகெனவும் அங்கு சென்று திருடியும், மீன்களை வெடி போட்டு பிடிக்கிறேன் என்று இவைகளுக்கும் வெடி வைத்து கட்டமைப்பையே உடைப்பதாலும், மற்றும் சுற்றுப் புறச் சீர்கேடுகளை உற்பத்தித்தும், இந்த கடல் மழைக்காடுகளை மிக வேகமாக அழித்து வருகிறோம்.

அதன் பொருட்டு ஒரு விழிப்புணர்வேற்று படலமாகவே இந்த நேசிப்'புலம்பல்ஸ் இங்கே.

ஆமா, நாம எங்குதான் விட்டுவைச்சோம் திருடாம, உருப்படாததுகள்.

Thursday, November 09, 2006

*அந்திம காலம்* ஆசிரியரின் கேள்வி எல்லோரின் பார்வைக்கும்

அன்பு நண்பர்களே, திரு ரெ. கார்திகேசு *அந்திம காலத்தின்* கதையாசிரியர் மேலும் இங்கு சில விபரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அத்துடன் ஒரு கேள்வியையும் நம் முன்னால் வைத்திருக்கிறார். அந்த கடிதம் ஒரு பின்னூட்டமாக வந்திருப்பதால் நம்மில் நிறைய பேர் அதனை தவற விட்டுவிடலாம், அதனால்தான் இந்த பதிவினை இங்கு தனியாக இடுகிறேன்.

அவரின் கடிதம் இதோ:

ரெ.கா. said...

அன்புள்ள பிரபாகர்,

இதுவரை நான் எழுதியுள்ள நூல்கள்: நாவல்கள்: வானத்து வேலிகள்" (1981); தேடியிருக்கும் தருணங்கள் (1993);அந்திம காலம் (1998); காதலினால் அல்ல(1999); "சூதாட்டம் ஆடும் காலம்" (2006)

சிறுகதைத் தொகுப்புகள்: புதிய தொடக்கங்கள் (1974); மனசுக்குள் (1995); இன்னொரு தடவை (2001); ஊசி இலை மரம்(2003)

கட்டுரைத் தொகுப்பு: "விமர்சன முகம்" (2004)

பெரும்பாலான நூல்கள் சென்னை மித்ர பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்டவை.

Thiru S. Ponudurai (ESPO)

Mithra Publications
375/8-10 Arcot Road
Chennai 600024
India.
Tel: 00-91-44-23723182 or 24735314
Fax: 33733160

இவற்றுள் "அந்திம காலம்" என மனதுக்கு அணுக்கமானது. ஆனால் அது விரிவான வாசக கவனிப்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மலேசியாவில் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு "தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது. மலாயாப் பல்கலைக் கழகத் திறனாய்வாளர்கள் அது பற்றி எழுதியிருக்கிறார்கள்.

Gabriella Eichinger Ferro-Luzzi என்பவர் (பெண்) ஒரு இத்தாலியத் தமிழ் ஆய்வாளர். லா.ச.ரா.விடம் நெருக்கமாக இருந்து அவர் கதைகள் பற்றி இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுதிப் பதிப்பித்துள்ளார். இவர் என்னைப் பற்றிக் கேள்விப் பட்டு என்னிடம் தொடர்பு கொண்டு என் நூல்களை அஞ்சல் மூலம் பெற்றார். பின்னர் ஒரு முறை (நான்காண்டுகளுக்கு முன்) என்னைக் காண மலேசியா வந்தார். நாங்கள் சந்தித்த போது அழகிய எழுத்துத் தமிழில் பேசினார். என்னை ஆங்கிலம் பேச விடவே இல்லை.

எனக்கு அன்பளிப்பாக ஒரு படப் போஸ்கார்டைக் கொடுத்தார். ரோமில் உள்ள மைக்கல் ஏஞ்சலோவின் Creation என்னும் கூரை ஓவியத்தின் படம் அது. எங்கும் கிடைக்கும். யூரோ 50 காசுக்கு வாங்கலாம். ரொம்ப சாதாரணமான பரிசு எனினும் மரியாதையுடன் வாங்கி வைத்துக் கொண்டேன். சந்திப்பின் முடிவில் சொன்னார்: "இந்தப் பரிசு நான் உங்கள் அந்திம காலத்தைப் படித்ததன் நினைவாக!"


எனக்கு இது புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. புரிந்தவுடன் இது எவ்வளவு அர்த்தச் செழுமையுள்ள பரிசு என்றும் புரிந்தது.


நாவலைப் படித்துள்ள உங்களில் யாருக்காவது இது புரிந்தால் சொல்லுங்கள். யாரும் சொல்லவில்லை என்றால் நானே பிறகு சொல்லுகிறேன்.
அந்த வருகையின் போது கேப்ரியெல்லா மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் பகுதியில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு தமிழிலேயே ஒரு செமினார் நடத்தினார். "நவீனத் தமிழ் இலக்கியத்தில் மரணம்" என்பது அதன் தலைப்பு. அதில் "அந்திம காலம்" பற்றியும் பேசினார்.


இறுதியாக ஓராண்டுக்கு முன்னர் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் (அவர் மின்னஞ்சல் வைத்துக் கொள்ளவில்லை) தனக்கும் இரத்தப் புற்றுநோய் கண்டிருப்பதாகவும் சுந்தரத்தைப் போல் தமக்கு அவ்வளவு துயரங்கள் ஏற்படக் கூடாது என வேண்டிக் கொள்வதாகவும் எழுதியிருந்தார். அதன் பின் தொடர்பு விட்டுப் போயிற்று.

Gabriella Eichinger Ferro-Luzziயின் எழுத்துக்கள் (அல்லது reference) இணையத்தில் அகப்படும்.

ரெ,கா

Thursday, November 02, 2006

மூளை மாற்றுச் சிகிச்சை முடிந்தால் என்னவாகும்...

இன்று எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. உடலின் எல்லா பாகங்களிலும் உள்ள உடலுறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக, மற்றொரு பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் மாற்றி வைக்கக் கூடிய சாத்தியம் மருத்துவத் துறையில் வளர்ந்து வருகிறது.

இந்த பின்புலத்தில், கையே வைக்க முடியாத (அட கத்தியைத்தாங்க அப்படிச் சொன்னேன்) ஒரு உடல் பாகமுன்னா அது மூளையாகத்தான் இருக்க முடியும். எசகுபிசகா எங்காவது தொட்டுவைச்சா பிறகு அதில கோளாறு இதில கோளாறுன்னு மனிதனின் மற்ற பாகங்களில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிச்சுடும், இல்லையா.

இப்ப சும்மானாச்சுக்கும் யோசிப்போம். கொஞ்ச காலங்களுக்கு பிறகு அப்படியே அலேக்கா, மூளையையும் பெயர்த்து (donor) இன்னொரு ஆளுக்கு (மூளையில கட்டி வந்த ஒருவருக்கு) மாற்று அறுவை சிகிச்சை (transplantation) மூலமா வைச்சு தைக்க முடிந்தால் என்னவாகும் அந்த புது மூளையை பெற்றவருக்கு (receipient), அப்படிங்கிறதுதான் என்னோட கேள்வி.
Image Hosted by ImageShack.us
அப்படி கேட்டவுடன் அட என்னங்க நேசி, ஒரு சிறுநீரக மாற்றுச் சிகிச்சையில என்ன நடக்குமோ அதுதான் நடக்கப் போகுது இங்கேயும் அப்படிங்கிறவங்களுக்கு, கொஞ்சம் பொருங்க.

சிறுநீரகம் பெற்றவுடன், சிறுநீரகம் செய்ய வேண்டியதான இரத்தத்தை சுத்திகரித்து அதிலுள்ள அதீத வேதியப் பொருட்களை கழிவுகளாக நீக்கப்பெற்று சமச்சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது இல்லையா? சிறுநீரகம் யோசிப்பது கிடையாது, மற்ற உடல் உறுப்புகளை இயக்குவது கிடையாது, மூளையைப் போல, இல்லையா?

அப்படியானால், மூளையை இந்த பெறுநர் பெற்றவுடன் அவருடைய பழைய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே போயே போய், எவரிடமிருந்து அந்த மூளை பெறப்பெற்றதோ அவருடைய குண நலன்கள் பாதுகாக்கப் பட்ட பழைய நினைவுகள் ஏனைய பிறவும் அத்துடனே வரச் செய்யும் இல்லையா?

அப்படிப் பார்க்கும் பொழுது, எண்ணங்களைக் கொண்டு அதனை செயல் முறை படுத்தும் பொழுதுதான் அதற்கு பிரதி பலன்களாக நன்மை தீமைகளை நாம் அடையப் பெறுகிறோம். மதங்ககளுக்கும் இந்த மூளைக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. இந்த கர்மா (Karma) வினைகள் அகற்றப் பெறுகின்றனவா? ஆத்மா என்ற விசயம் இன்னும் அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப் படாத பட்சத்தில், மூளைதான் எல்லாமே என்று அறிவியல் அரிதியிட்டு கூறியிருக்கும் பட்சத்தில், கீழே கேட்கப் பட்ட சில சிந்தனைகளுக்கு உங்களின் கண்ணோட்டத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

உதாரணமாக, ஒரு கொலைகாரரின் மூளையை அகற்றி விட்டு, ஒரு புனிதரின் (அல்லது நமது பரிமாணத்தில் நிரம்ப நல்லவனாக வாழ்ந்த;) மூளையை மாற்றுச் செய்தால், அங்கு கொலைகாரரின் பாவங்கள் எல்லாமே பதிவேட்டிலுருந்து நீக்கப் பெற்று, இப்பொழுது கொலைகாரர் புனிதரானார் என்று கொள்ள முடியுமா?



பி.கு: இது ஒரு Frankenstein தனமான கேள்வி தெரியும். ரொம்ப நாளாச்சு நேசியில பதிவு போட்டு அப்படியே அமெரிக்காவில ஹாலோவின் விழா வேற, கொஞ்சம் பயம்மா கேள்வி கேட்போமின்னு... ஹி..ஹி..ஹி.

Tuesday, September 26, 2006

அம்மா லூசியும், பெண் கயல்விழியும் - படக் கதை!!!

போன வாரத்தில் போட்ட இந்த பதிவில் பாலியோ-ஆன்ந்ரோபாலாஜி துறையைபற்றியும் அதன் கடினமான அணுகுமுறையும் பற்றிம் சொல்லியிருந்தேன். இருப்பினும் அவர்கள் அவ்வாறு இந்த இணைக்கும் பாலங்கள் (missing link) என்று அழைக்கப்படும் மனித மூதாதையர்களை கண்டெடுக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு நம் வழித்தோன்றல் பற்றி அறிந்து கொள்ள எக்கச்சக்கமான வழி வகைகள் பிறப்பதாக கருதுகிறார்கள்.

அன்மையில் லூசியும், அவரின் குழந்தையை ஒத்த கயல்விழியும் ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் என்ற இன வகை மனித மூதாதைகள் என்பதும் ஒரே ஏரியாவிலிருந்து அவர்களின் எலும்பு மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிந்து கொண்டோம்.

இப்பொழுது எப்படி இந்த லூசியும், கயல்விழியும் மரத்திலிருந்து இறங்கி இருகால்களை மட்டுமே நம்பி சமவெளியில் நடந்திருக்கக் கூடும் என்பதனைப் பற்றி சிறு கண்ணொட்டத்துடன், சில படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றுதான் இந்தப் பதிவு.

ஒரு 6லிருந்து8 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் காடுகளில் வசித்த விலங்குகள் தடாலென ஒரு பேரழிவை சந்தித்தாம் (mass extinction). அதனையொட்டி மிச்சம் மீதியிருந்த விலங்கினங்களின் தகவமைப்பு திறனும் இருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பரிணமித்ததாம்.

அதன்பொருட்டே இந்த லூசியும், கயல்விழியும் மரங்களில் வாழ்ந்தவர்கள் வேறு வழியில்லாமல், சமவெளிகளில் வாழ நேரிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எழுந்து நடந்தால்தான் எதிர் வரும் எதிராளியை காணமுடியும் அப்படி காணும் பொருட்டு தூரத்திலேயே கண்டுணர்ந்து தப்பிப்பதற்கு ஏதுவாகும் என்பதற்கினங்க கண்களின் நேர் கொண்ட பார்வையும், இடம் பெயர்வுக்கென இரு கால்களில் எழுந்து நின்று நடக்கும் திறனும், மற்றவைகளும் காலத்தினூடையே கைவரப் பெற்றிக்ககூடுமென அறியப்படுகிறது.

இவர்களே பின்னாலில் ஹோமோ சாபியன்ஸ் என்கிற 'நாம்' உப கிளையாக பரிணமிக்க உந்துதலாக அமைந்ததாம்.

சரி இப்பொழுது லூசியும் அவரது கணவரும் எப்படி ஒரு மாலை நேர நடை பயில சென்றிக்கக் கூடும்... நீங்களே பாருங்கள், எப்படி கூலாக எந்த டிஸ்-ஆர்டர்ஸ், டிவர்ஸ் கோர்ட் பற்றிய பிரஞைகளுமில்லாமல், காலில் ஆடிடாஸ் கூட இல்லாமல் பனியில் ஓர் நடை :-)...

Image Hosted by ImageShack.us

லூசியின் பாஸ்போர்ட் சைஸ் படம் அமெரிக்கா வருவதற்கு விசா எடுக்கும் நிமித்தமாக எடுத்தது... :-))...

Image Hosted by ImageShack.us

லூசியின் குழந்தை கயல்விழியின் பாஸ்போர்ட் சைஸ் படம் வெள்ளத்தில் அடித்து செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்தது ;-((

Image Hosted by ImageShack.us

வயசாகிப் போன லூசி...

Image Hosted by ImageShack.us

Thursday, September 21, 2006

3ல் மரணித்த 3 மில்லியன் வருட பரிணாமக் கயல்விழி...

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈத்தியோப்பியாவில் ஒரு ஏரி போன்ற அமைப்பிற்கு அருகே சில சிதைந்து போன மனித மண்டையோடு மற்றும் இதர உடல் பாக எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. பிறகு கார்பன் தேதி குறிப்பிட்டின்படி (Carbon Dating) அது ஒரு பெண்ணின் எலும்புகள் எனவும் சுமார் ஒரு 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆஃப்ரிகா கண்டத்தில் வாழ்ந்த ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் (Australopithecus afarensis) எனும் வகை மனித மூதாதைகள் இனத்தை சேர்ந்தது எனவும் கண்டறியப்பட்டது.

அதற்கு லூசி எனவும் பெயரிடப்பட்டது.லூசி ஒருநாள் நோய் வாய் பட்டிருக்கும் பொழுது ஏரிக்கு நடந்து வரும் பட்சத்தில் ஏரிக்கு அருகிலேயே தடுமாறி மாண்டிருக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டது.

Image Hosted by ImageShack.us

இப்பொழுது அந்த ஏரியாவிற்கு மிக அருகிலேயே ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க கைக்குழந்தையின் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்ப நாமே இந்த குழந்தைக்கு ஒரு பெயர் கொடுத்திடுவோம். கயல்விழி. சுலபமாக இருக்கும் பேசுவதற்கு என்பதற்காக. கயல்விழியும், லூசியின் இனத்தை சார்ந்தவராம். இவர்கள் சுமாருக்கு 3 லிரிந்து 3.7 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையர்கள்.

சொல்லப்போனால், இந்த பாலியோஆன்ந்ரோபாலாஜி (தமிழ் மொழிபெயர்ப்பு - தேவை ) துறை ஒரு கடினமான ஏரியா. ஒரு சின்ன சில்லு எலும்பு துண்டு கிடைக்கிறதுக்கே மாத கணக்கில் பொறுமையாக மண்தோண்டு கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டாமல், மிக மென்மையாக முட்டிக்கால் தேய அங்குலம் அங்குலமாக கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் துழாவ வேண்டும்.

அப்படியே ஒரு பல்லு கிடைத்தாலும், மண்ணு மாதிரியே நிறத்தோட சின்ன ஒரு கல்லு மாதிரி கூட இருக்கலாம், அப்பன்ன எவ்ளோ கவனத்தோட பார்க்கணும் பாருங்க.

அது அப்படி இருக்கும் பொழுது இப்படி சுளையாக, ஒரு கபாலம் கண்டெடுக்கிறது, அதுவும் நமக்கு மிக நெருங்கிய சொந்தம் ஒண்ணு ரொம்ப ரொம்ப அபூர்வங்க.

இந்த கண்டெடுப்பில் என்ன ஒரு சிறப்புன்னா, இது போன்ற கயல்விழி ஒத்த கைக்குழந்தைங்களோட எலும்புங்க கிடைக்கிறது ரொம்ப அரிதாம். அதுவும் மண்டையோடு சிந்தமா, சிதையாமல் கிடைத்தது இதுவே முதல் முறையாம். அதினால கண்டெடுத்தவங்களுக்கு பம்பர் லாட்டரி சீட்டு விழுந்த கணக்க ஏகப்பட்ட சந்தோஷமாம்.

இதற்கு முன்னால் நம்மோடு சமகாலம் வரையிலும் வாழ்ந்த நியான்டர்தால் வகை குழந்தை மண்டையோடு சிரியாவில் கண்டெடுக்கப்பட்டது, இருப்பினும் கயல்விழி வாழ்ந்த வருடங்களோட ஒப்பிடும் பொழுது நியாண்டர்தால் கிடைத்ததில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறதாம்.

கயல்விழி மண்டையோடு மற்றும் இதர உடல் எலும்புகளை கொண்டு பார்க்கும் பொழுது, கயல் நம்மைப் போலவே இருகால்களை (Bipedal walk) கொண்டு நிமிர்ந்து நடந்து திரிந்திருப்பதாகவும், கைவிரல்களை கொண்டு பார்க்கும் பொழுது மரம் நிறைய ஏறியிருக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது.

கயல்விழி எப்படி தொல்பொருளாக ஆகிப்போனால் என்பதற்கு கண்டெடுத்த இடத்தின் நிலவரத்தை கொண்டு, அவள் ஒரு வெள்ள நேரத்தில் மரணித்து, மணல்படுகையில் கற்களை கொண்டு புதைக்கப்பட்டிருக்கலாமென்று கருதப்படுகிறது.

கிடைத்த எலுப்புகளை கொண்டு அம்மாவைப் போன்ற லூசிக்கும், குழந்தை கயலுக்கும் வளர்ச்சி அடிப்படையில் சில வேறுபாடுகளை கண்டறிவதோடு, நமக்கும் அவர்களுக்கும் மிடையே தொடர்புகள் இப்படி பல விசயங்களை கண்டறிய உதவுமாம்.

கயல்விழியின் அத்மா சாந்தியடைய எல்லோரும் ஒரு நிமிடம் மானிட்டர்களுக்கு முன்னால் கண் மூடி மொளன அஞ்சலி சொலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.



பி.கு: இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே...ஷேம், ஷேம் பப்பி ஷேம்...
Related Posts with Thumbnails